உங்கள் வருகைக்கு நன்றி

ஆரோக்கியம் என்பது எதில் உள்ளது ?.

வெள்ளி, 29 நவம்பர், 2019


* பல் பாதுகாப்பிற்கு முக்கியத்துவம் ஏன்
எண்சாண் உடம்புக்கு தலையே பிரதானம் என்றாலும், அந்த தலைக்கே வாய் தான் கண்ணாடியாக திகழ்கிறது. வாயின் ஆரோக்கியம் என்பது பற்களை பராமரிப்பதில் இருக்கிறது. ஆரோக்கியமான பற்களே உடலுக்கு நல்லது. வாயிலும், பற்களிலும் ஏற்படும் நோய்களால் ஒட்டு மொத்த உடம்பும் பாதிக்கப் படுகிறது. எனவே வாயையும் பற்களையும் துாய்மையாக வைத்துக்கொள்ள வேண்டும்.

*
குழந்தைகள் எந்த வயதில் பல் துலக்க தொடங்க வேண்டும்
குழந்தைகளுக்கு பிறந்த ஆறு மாதத்தில் பல் முளைக்கத் துவங்கும். அப்போதிருந்தே பல் துலக்கி விடுவதை துவங்க வேண்டும். ஐந்து வயது வரை பெற்றோர் உதவியுடன் பல் துலக்க வேண்டும்.

*
வாய்ப்புண் ஏற்பட காரணம் என்ன
பீடி, சிகரெட் பிடித்தல், புகையிலை, பாக்கு போடுதல் போன்ற பழக்கத்திற்கு அடிமையானவர்களுக்கு வாய்ப்புண் ஏற்படும். இதனால் உதடு, கன்னம் தசைகளில் நெகிழித்தன்மை குறைந்து வாய் திறக்க முடியாமலும் போகும். அதிகமான காரம், புளிப்பு உணவுகளாலும் வாயில் எரிச்சல் தன்மை கூடி வாய்ப்புண் ஏற்பட வழிவகுக்கும்.

*
வாய் துர்நாற்றம் ஏற்பட காரணம்
வாயில் உள்ள அழுக்குகளே காரணம். வாயிலும், பற்களிலும் உணவு துகள் தங்குவதால் ஏற்படும் பாக்டீரியாக்கள், உணவு துகள்களுடன் சேர்ந்து கெட்டுப்போய் துர்நாற்றம் ஏற்படுகிறது. வாய் துர்நாற்றம் ஏற்படாமல் இருக்கதினமும் இரண்டுமுறை பல் துலக்குவதுடன் நாக்கை நன்றாக சுத்தம் செய்ய வேண்டும். வாய் எப்போதும் ஈரப்பதத்துடன் இருக்குமாறு நிறைய தண்ணீர் குடிக்கவேண்டும்.

*
தெத்துபற்களால் பாதிப்பு உண்டா
தெத்துப்பற்கள், பற்களுக்கு இடையில் இடைவெளி அதிகம் உள்ள பல் அமைப்பு, நெருங்கிய பற்கள் ஆகியவற்றால் பல் ஈறு நோய் ஏற்படும். வாய் திறந்தபடி துாங்குதல், உதடு கடித்தல், நாக்கு மூலம் பற்களை தள்ளுதல், கீழ் உதடை உள்ளிழுத்து கடித்தல், ஆகியவற்றாலும் மரபு ரீதியாகவும் தெத்துப்பற்கள் உருவாகும். இதனால் பல் மற்றும் முக அமைப்பு மாறிவிடும். எனவே வளரும் பருவத்திலேயே இவற்றை சரிசெய்து கொள்ளவேண்டும்.
*
சொத்தை பற்களை எடுக்காமல் விடலாமா
கெட்டுப்போன சொத்தைப்பற்களை எடுக்காமல் விட்டால் தோல் நோய்கள், மூட்டு, இடுப்பு வலி, மூட்டுகளில் வீக்கம், கண்களில் புரை மற்றும் இருதய நோய் கூட ஏற்படலாம்.

*
பல் சொத்தை வராமல் முன்கூட்டியே தடுக்கலாமா
பற்களின் மேலே படியும் காரை அல்லது உணவு படலத்தின் மீது நுண்ணுயிரிகள் உண்டாக்கும் அமிலம் பற்களை பாதித்து பல்சொத்தை எற்படுகிறது. பற்களில் சொத்தை வருவதை தடுத்தல் என்பது கடினமான செயல். ஏனெனில் நமது பற்களின் அமைப்பு, உணவுமுறை, துலக்கும் முறைகளை பொறுத்தே பல் சொத்தை ஏற்படுவதால் அதை துல்லியமாக முன்கூட்டியே வராமல் தடுக்க முடியாது.

*
செயற்கை பல் கட்டுவது பற்றி...
விபத்தால் பல் உடைதல் உள்ளிட்ட காரணங்களால் பற்களை இழக்க நேரிடும் போது பல் கட்டுதல் அவசியமாகிறது. இரண்டு முறைகளில் பல் கட்டப்படுகிறது. தேவைக்கேற்ப அகற்றக்கூடிய அளவிலும் அல்லது நிரந்தமாக பொருத்தியும் பல் கட்டப்படுகிறது.

*
பற்களை பாதுகாப்பது எப்படி

காலை, இரவு பல் துலக்க வேண்டும். பல் இடுக்குகளில் சிக்கியுள்ள உணவு துகள்களை குச்சி, ஊசிகளை கொண்டு எடுக்கக்கூடாது. பிரஷ்களையே பயன்படுத்த வேண்டும். உணவில் நார்ச்சத்து அதிகம் உள்ள பொருட்களை சேர்த்துக்கொள்ள வேண்டும், ஒட்டும் தன்மை கொண்ட மாவுச்சத்து பொருட்களை தவிர்க்க வேண்டும். குழந்தைகளுக்கு பல் முளைக்க ஆரம்பித்ததில் இருந்து ஆண்டுக்கு ஒருமுறையாவது பல் மருத்துவரிடம் காண்பித்து ஆலோசனை பெற்றால் பல் நோய்கள் வராமல் தடுக்கலாம்.
டாக்டர். மா.ஆறுமுகம்
பல் மருத்துவர்
திருப்புத்துார்
98426 56617

Read more...

முயல் வளர்ப்பில் வருமானம்

ஞாயிறு, 17 நவம்பர், 2019


முயல் வளர்ப்பில் வருமானம் பார்த்து, தன் சொந்தக் காலில் நிற்கும், மதுரை மாவட்டம், கொட்டாம்பட்டி சத்யா: பட்டப்படிப்பு படித்துள்ளேன். ஆசிரியை ஆக விருப்பம். பள்ளி ஒன்றில், சில காலம் பணியாற்றினேன்.அப்பா திடீரென இறந்ததால், திருமணம் செய்து வைத்தனர். ஆசிரியர் வேலை பார்ப்பதாக கூறி, திருமணம் செய்த கணவர், ஏமாற்றி திருமணம் செய்தது பின்னர் தெரிய வந்தது.அதையும் சகித்துக் கொண்டு வாழ்ந்தேன். கொஞ்ச நாட்களிலேயே, வரதட்சணை கொடுமை துவங்கியது. பணம் வாங்கி வா என, என்னை அடிக்கடி, அம்மா வீட்டுக்கு அனுப்பி வைப்பார். எவ்வளவு கொடுத்தாலும், அவருக்கு போதாது.ஆண் குழந்தை பிறந்தது. அவனுக்கு இதயத்தில் கோளாறு. அதை தெரிந்ததும், நிரந்தரமாக என்னை அம்மா வீட்டுக்கு அனுப்பி விட்டார். கிடைத்த வேலைகளைப் பார்த்தேன். இதய ஆப்பரேஷனுக்கு பின், குழந்தைக்கு சரியானது.தற்செயலாக ஒரு பெரியவரைப் பார்த்தேன். 'ஐந்து குழந்தைகளை பெற்ற பிறகும், சோறு போட ஆளில்லை' என வருந்தினார். முயல் வளர்ப்பில், வருமானம் கிடைப்பதாகவும், அதை வைத்தே காலம் கழிப்பதாகவும் கூறினார். அவர் வழியை நானும் பின்பற்றினேன். முதலில், நான்கைந்து முயல்கள் வளர்த்தேன். தொழில் நுணுக்கங்கள் தெரிய வந்தன.அண்ணன் உதவியுடன், தனியாக இடம் பார்த்து, கொஞ்சம் கொஞ்சமாக, முயல்கள் எண்ணிக்கையை அதிகரித்தேன். இப்போது, என்னிடம், 300 முயல்கள் உள்ளன. ஒரு முயல், மாதத்திற்கு, அதிகபட்சம், 10 குட்டிகள் வரை போடும். அடுத்த, 30 நாட்களில் இனப்பெருக்கத்திற்கு தயாராகி விடும்.விற்பனைக்கு பிரச்னையில்லை. திருச்சி, நாமக்கல், கரூர் வியாபாரிகள் வாங்கிக் கொள்கின்றனர். 1 கிலோ முயல், 300 - 400 ரூபாய்க்கு விற்கிறேன். வளர்ப்பு முயல், 600 - 800 ரூபாய். முயல் விற்பனையால், மாதம், 80 ஆயிரம் ரூபாய் வருமானம் கிடைக்கிறது. செலவு, 20 ஆயிரம் ரூபாய் தான். மீதி எல்லாம் லாபம்.முயல் விற்பனை மூலம் கிடைக்கும் வருமானம் தான், என்னை தன்னம்பிக்கை பெண்ணாக மாத்தியிருக்குது. என்னைப் போல கஷ்டப்படுவோருக்கு, என்னால் முடிந்த உதவிகள் செய்கிறேன். தெரிந்தவர்களுக்கு, முயல் பண்ணை வைத்துக் கொடுக்கிறேன். பலருக்கு, இந்த தொழில் குறித்து ஆலோசனை வழங்கி வருகிறேன்.இந்த தொழில் செய்யலாம் என, விரும்பும் பெண்களுக்கு, என் பண்ணையிலேயே இலவசமாக பயிற்சி அளிக்கிறேன். என்னிடம் பயிற்சி எடுத்து, முயல் வளர்ப்போர், அவற்றை விற்க விரும்பினால், அதற்கான உதவியையும் செய்கிறேன்!
தொடர்புக்கு 98432 55495

Read more...

  © Blogger template Leaving by Ourblogtemplates.com 2008

Back to TOP  

Blogger Widgets