உங்கள் வருகைக்கு நன்றி

ஆரோக்கியம் லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி
ஆரோக்கியம் லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி

கோதுமைப் புல்லின் பயன்கள்!

ஞாயிறு, 23 ஜனவரி, 2022

இயற்கை மருத்துவத்தில் பல நோய்களுக்கு அருகம்புல் பரிந்துரைப்பர். அதற்கு இணையான மருத்துவ குணம் கொண்டதே கோதுமைப்புல். இதுகுறித்த விழிப்புணர்வு நம்மில் பலரிடம் இல்லை.அது என்னங்க கோதுமைப்புல் என கேட்கிறீர்களா?கோதுமைப்புல் சாற்றை இயற்கை மருத்துவர்கள் 'பச்சை ரத்தம்' என்கின்றனர். இதில், உடலுக்கு தேவையான 19 அமினோ அமிலங்கள், 92 தாதுக்கள் உள்ளன. கால்சியம், இரும்பு சத்து, மக்னீசியம், விட்டமின்கள், புரோட்டீன்கள், என்சைம்கள் என, ஏராளமான சத்துக்கள் உள்ளன.செரிமானம், உடலில் உள்ள நச்சுக்கள் வெளியேற்றவும், நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கவும், ஹீமோகுளோபின் அதிகரித்தல், மலச்சிக்கலுக்கு தீர்வு, சர்க்கரை அளவை கட்டுப்படுத்துதல் என இதன் பலன்கள் ஏராளம். எளிய முறையில் வீட்டிலேயே தயாரித்து, பயன்படுத்தலாம். பெரிய மருத்துவ நிறுவனங்கள், உடல் பருமன் கட்டுப்படுத்தும் நிறுவனங்கள் இதனை பொடியாக்கி, மருந்துகளில் பயன்படுத்தி வருகின்றனர் என, மருத்துவர்கள் தெரிவிக்கின்றனர். கோதுமையை சுத்தமான நீரில், 12 மணி நேரம் ஊற வைத்து வடிகட்ட வேண்டும். அதை, ஈரத்துணியில் இறுக்க முடிந்து தொங்க விட்டு, 12 மணி நேரம் கழித்து எடுத்தால் முளைக்கட்டி விடும். பூ தொட்டியிலோ, வீட்டில் உள்ள பிளாஸ்டிக் பாத்திரத்தில் சிறிது மண் இருந்தால் போட்டு லேசாக விதைத்தால், எட்டு நாட்களில் அறுவடைக்கு தயாராகி விடும். அதை அரைத்து காலையில் வெறும் வயிற்றில் பருக வேண்டும். சுவைக்காக சிறிது தேன் கலந்துகொள்ளலாம். இதுபோன்று வீட்டிலேயே விதைத்து தேவைக்கு ஏற்ப அறுவடை செய்து கொள்ளலாம்.

 

Read more...

வருமானம் தரும் கோதுமைப் புல் பொடி!

வெள்ளி, 31 டிசம்பர், 2021

வீட்டுத் தோட்டம் அமைத்து கொடுப்பது, பசுமைக் குடில் போட்டுத் தர்றது, பூங்கா உருவாக்குறது, சொட்டு நீர்ப் பாசனம் அமைப்பது என, பல வேலைகளைப் பார்த்தேன்.ஒரு கட்டத்தில், மனதில் வெறுப்பு ஏற்பட்டது. இந்த வருமானத்தை நம் ஊரிலேயே சம்பாதிக்கலாம் என தோன்றி, வேலையைத் துாக்கிப் போட்டு விட்டு ஊருக்கு வந்து விட்டேன்.இங்கு வந்ததும், விவசாயம் செய்யப் போறேன்னு சொன்னதும், வீட்டுல கொலை வெறியாகிட்டாங்க; நண்பர்கள், உறவினர்கள் எல்லாரும் கேலி பண்ண ஆரம்பிச்சுட்டாங்க. எதையும் கண்டுக்காம என் முடிவில் தெளிவாக இருந்தேன்.திண்டுக்கல்லை விட்டு வெளியேறி, வட மாநிலங்களுக்குப் போயிட்டேன். ராஜஸ்தான், பஞ்சாப் மாநிலங்கள்ல இருக்கிற மக்கள், கோதுமை ஜூஸ் குடிப்பதைப் பார்த்தேன்; அது எனக்கு ஆச்சர்யமாக இருந்தது.

அவர்களிடம் விசாரித்ததில், நம் ஊரில் டீ குடிப்பது போல, அங்கு கோதுமைப் புல் ஜூஸ் குடிப்பது வழக்கம் என தெரிந்தது. உடனே அதைப் பற்றிய தகவலைத் தேட ஆரம்பித்ததில், அது உடம்பு ஆரோக்கியத்துக்கு நல்லது என்று தெரிந்தது.

இரண்டு கிலோ கோதுமை விதையுடன் திண்டுக்கல் திரும்பினேன். கோதுமைப் புல் வளர்த்து, அதைப் பொடி செய்து, பாட்டிலில் அடைத்து விற்கப் போறேன்னு சொன்னதும், மறுபடியும் சிரிக்க ஆரம்பிச்சுட்டாங்க. கோதுமைப் புல் சாகுபடி செய்வதில் முனைப்பாக இறங்கினேன். எங்களுக்குச் சொந்தமான, 50 சென்ட் நிலத்தை உழுது பாத்தி பாத்தியாகத் தயார் செய்தேன். ௧ கிலோ கோதுமையை விதைத்தால், 3 கிலோ புல் கிடைக்கும்.
அதை வெட்டி, காய வைத்து அரைத்து பொடியாக்கினால், 100 முதல் 150 கிராம் வரை கிடைக்கும். மறுபடியும் அந்தப் பொடியை காய வைத்து பாட்டிலில் அடைத்து, விற்பனைக்கு அனுப்புகிறேன்.தினமும், 30 முதல் 40 பாட்டில் வரை விற்பனையாகிறது. சராசரியாக, 30 பாட்டில் வீதம், 10 ஆயிரத்து 470 ரூபாய் வருமானம் கிடைக்கும். சில சமயம் விற்பனையாகாமலும் இருக்கும்.
அந்த வகையில் மாதக் கணக்குப் பார்த்தால், 20 நாட்களுக்கு, 2 லட்சத்து 9 ஆயிரத்து 400 ரூபாய் கிடைக்கும். அதில், செலவு 70 ஆயிரம் ரூபாய் ஆகி விடும். அதுபோக, 1 லட்சத்து 39 ஆயிரத்து 400 ரூபாய் லாபமாக கிடைக்கும்.நாம் அருகம்புல் ஜூஸ் குடிப்பது போல், வட மாநிலத்தில் கோதுமை புல் ஜூஸ் குடிப்பது நமக்கு லாபத்தை ஏற்படுத்துகிறது.தொடர்புக்கு:97878 87288

கோதுமைப் புல் வளர்த்து அதை அரைத்துப் பொடியாக்கி, 'அமேசான்' வாயிலாக விற்பனை செய்து வரும், திண்டுக்கல்லைச் சேர்ந்த ராஜ்குமார்:

Read more...

தயிரை விட மோர் நல்லதா?.

வெள்ளி, 18 செப்டம்பர், 2020

தயிர் நல்லதா, மோர் நல்லதா என்பதை கூறும், இயற்கை மருத்துவர், ஒய்.தீபா: பாலில் இருந்து கிடைத்தாலும், மோர், தயிருக்கு தனித்தனி குணாதிசயங்கள் உள்ளன. தயிரை, தண்ணீர் கலந்து, மோராக மாற்றும் போது, 'அல்கலைன்' உணவாக மாறுகிறது; எளிதாக ஜீரணமாகிறது. இரண்டும், ஒரே மாதிரியான ஊட்டச் சத்துகளையே கொண்டுள்ளன. ஆனால், கலோரி கணக்கு பார்த்தால், ௧௦௦ கிராம் தயிரில், ௯௦ கிராம் கலோரி இருக்கும்; ௧௦௦ கிராம் மோரில், ௪௦ கிராம் கலோரிகள் தான் இருக்கும். இரண்டிலும் கால்சியம் இருந்தாலும், தயிரை விட, மோரில் உள்ள கால்சியம் தான், உடல் கிரகித்துக் கொள்ள ஏதுவாக உள்ளது. மோரில், விட்டமின் பி ௧௨, ஜிங்க், புரதம் போன்றவை, உடலை வலுப்படுத்தும். தயிரில் கொழுப்புச் சத்து அதிகம் உள்ளது. தயிர் சேர்த்த உணவுகளை, தினமும் உண்ணும் போது, செரிமான சக்தி வெகுவாகக் குறைந்து, உடலில் கபம் அதிகமாகும். கொழுப்பாக, உடலில் தங்கி விடும். தயிர் அதிகமாக எடுத்துக் கொண்டால், மலச்சிக்கல் கூட ஏற்படலாம். நாம் சாப்பிடும் உணவு, அமிலத் தன்மையோடு இருந்தாலும், நம் உடலில் உள்ள சோடியம், நாம் சாப்பிட்ட உணவை, அல்கலைனாக மாற்றும். அதிகமாக அமிலத் தன்மை உள்ள உணவை எடுத்துக் கொள்ளும் போது, நம் உடலில் உள்ள சோடியம் தீர்ந்து போகும். அப்போது, எலும்பில் சேர்ந்திருக்கும் கால்சியம் தான், நம் உணவை, அல்கலைனாக மாற்றும்; உடல் பலமற்று இருக்கும்.இதை சரி செய்ய, அதிகமாக மோர், காய்கறி, பழங்களை சாப்பிட வேண்டும். இதன் மூலம், அசிட்டிக்கை, அல்கலைனாக மாற்றக் கூடிய சோடியம், கால்சியம் உடலில் அதிகரிக்கும். தயிரை அதிகமாக எடுத்துக் கொண்டால், உடலானது, அசிட்டிக்காக மாறும். அதே நேரத்தில், மோர் அதிகம் சாப்பிட வேண்டும் என்பதற்காக, தயிரை புறக்கணிக்கக் கூடாது. எடுத்துக் கொள்ளும் அளவை குறைத்துக் கொள்ள வேண்டும். உணவுக்கு பின், மோர் எடுத்துக் கொள்வதால், செரிமான சக்தி அதிகரிக்கும். உடலில் உள்ள தேவையில்லாத கெட்ட கொழுப்புகளை நீக்கும். உடல் எடையை அதிகரிக்க நினைப்பவர்கள், மோருக்குப் பதில், தயிரை அதிகம் சேர்த்துக் கொள்ள வேண்டும். வெயில் நேரங்களில், தயிரை தவிர்த்து, மோர் அதிகமாக சாப்பிட வேண்டும். இந்த காலத்தில், நம் உடலில் உள்ள நீர்ச்சத்துகள் குறையும். அப்போது மோர் குடிப்பதால், உடலில் நீர் வறட்சி ஏற்படாது; உடலும் புத்துணர்ச்சியாக இருக்கும். மோரில் கறிவேப்பிலை, பச்சை மிளகாய், இஞ்சி, கொத்தமல்லித் தழை, உப்பு சேர்த்து அருந்தினால், அமிர்தமாக இருக்கும்; உடலுக்கும் மிக நல்லது; பசியின்மை சரியாகும்.

Read more...

நவீன காலத்தில் கண்களை பாதுகாக்கும் வழிமுறைகள்.

கண் மற்றும் உடல் சூடு பிரச்னை, இளம் தலைமுறையினருக்கு அதிகரிப்பதற்கு காரணம், மொபைல் போனும், அதனால் மாறி இருக்கும், நம் வாழ்க்கை முறையும் தான். வயது வித்தியாசம் இல்லாமல், பெரும்பாலானோர், மொபைல் போனில் மூழ்கிக் கிடக்கின்றனர்.'டிவி'யைக் கூட, 3 மீட்டர் தள்ளி இருந்து பார்க்க வேண்டும் என்பதை அறிந்த நாம், அதிக சக்தி வாய்ந்த மொபைல் போன்களை, கண்களுக்கு அருகில் வைத்து, நீண்ட நேரம் பார்க்கிறோம். இதனால், கண்கள் பாதிப்படைய வாய்ப்பு உள்ளது. 'கண்ணுக்கு மிக அருகில் ஒளியை கூர்ந்து பார்க்கக் கூடாது; மிகப் பிரகாசமான ஒளியை, துாரத்திலிருந்தும் பார்க்கக் கூடாது; இருளான பகுதியில் இருந்தபடி, குறுகிய ஒளியில் கண்ணை சுருக்கி, கூர்ந்து கவனித்தாலும், கண்ணில் பிரச்னை வரும்' என, ஆயுர்வேதம் கூறுகிறது. மேலும், தொடர்ந்து உஷ்ணமான பொருட்களை சாப்பிடுவது, வெயிலில் சுற்றுவது, தொடர்ந்து வெப்பமான சூழலில் வேலை பார்ப்பது உள்ளிட்ட செயல்களும், கண்களைப் பாதிக்கும். இது, உடலின் வெப்பத்தை பாதித்து,  மலச் சிக்கலை உருவாக்குகிறது; சத்து குறைபாடும் ஏற்படுகிறது. இந்த பிரச்னையிலிருந்து கண்களை பாதுகாப்பது அவசியம். எனவே, மொபைல் போன்களை கண்களுக்கு நெருக்கமாக, அதிக நேரம் பார்ப்பதை குறைக்க வேண்டும். தேவையான அளவு மட்டும் பயன்படுத்துவது, கண்களுக்கும், மனதுக்கும் நல்லது. மேலும், மொபைல் போன்களைப் பார்ப்பவர்கள், தினமும், இரவில் படுக்கப் போகும் போது, உள்ளங்காலிலும், தலையிலும் சிறிதளவு நல்லெண்ணெய் அல்லது தேங்காய் எண்ணெய் வைத்துக் கொள்வது நல்லது. உள்ளங்காலில் எண்ணெய் தேய்க்கும் போது, அதன் பலன் தலையை சென்றடைகிறது; தலையில் எல்லா நரம்புகளும் சீராக இயங்கும். பெரிய நெல்லிக்காய் ஒன்றை, தினமும் சாப்பிட வேண்டும். ஒரு டீஸ்பூன் திரிபலாதி சூரணத்தை, இரவு துாங்கச் செல்லும் முன், தேனுடன் கலந்து சாப்பிட வேண்டும். அகத்திக்கீரை, சிறுகீரை உள்ளிட்ட கீரைகளை, வாரம் இரு முறையாவது உணவில் சேர்த்துக் கொள்ள வேண்டும். ஒரு கேரட்டை, தினமும் அப்படியே பச்சையாக சாப்பிட வேண்டும். கொத்தமல்லித் தழையை இதமான வென்னீரில் அலசி, அரைத்து, அந்தச் சாறுடன், ஒரு ஸ்பூன் சீரகத்துாள், தேவையான அளவு தண்ணீர் சேர்த்து குடிக்கலாம். இதனால், கண்களுக்கு தேவையான சத்துகள் உடலுக்கு கிடைக்கும்; கண்கள் பாதுகாக்கப்படும்!

 

Read more...

அல்சர் எதனால் வரும், நிவாரன வழிகளும்.

செவ்வாய், 4 ஆகஸ்ட், 2020



வயிறு எரிவதுபோன்று பயங்கர வலி. அலட்சியமாக இருந்ததன் விளைவு, எது சாப்பிட்டாலும் வாந்தி, வயிற்றை யாரோ இழுத்துப் பிடிப்பது போன்ற உணர்வு. அடிக்கடி  ஹோட்டலில் சாப்பிடுவதும், மசாலாக்கள் நிறைந்த உணவுகளை வெளுத்துக் கட்டியதும், கூல்டிரிங்ஸ் குடித்து வந்ததும் தான் இதற்குக் காரணம். அல்சர் நோய் வயிற்றைப் பதம் பார்த்துவிட்டது.  
வயசு வித்தியாசமின்றி இன்று அனைவருமே எதிர்கொள்ளும் பிரச்னையாக இருப்பது அல்சர்தான். நேரத்துக்கு உணவு எடுத்துகொள்ளாதது உள்பட பல காரணங்களால் அல்சர் ஏற்படுகிறது''  பலரது வயிற்றைப் பிசையவைக்கும் அல்சர் நோய் வருவதற்கான காரணங்கள், எப்படி தவிர்க்கலாம்.

அல்சர் என்றால் என்ன?'
'தொண்டையில் இருந்து இரைப்பை வரை உணவு செல்ல உதவும் உணவுக் குழாய், இரைப்பை, சிறுகுடல் போன்றவற்றில் ஏற்படும் புண்களை வயிற்றுப் புண் அல்லது பெப்டிக் அல்சர் (Peptic ulcer) என்கிறோம். காரமான உணவை எடுத்துக்கொள்வதாலும், மனஅழுத்தம் காரணமாகவும் வயிற்றுப் புண் ஏற்படுவதாகக் கூறப்பட்டுவந்தது. ஆனால் தற்போது வயிற்றில் வாழும் கெடுதலை ஏற்படுத்தும் பாக்டீரியா காரணமாக வயிற்றுப் புண் ஏற்படுவதாக ஆய்வுகள் தெரிவிக்கின்றன.'
'அல்சர் ஏன் ஏற்படுகிறது?'
'நாம் உட்கொள்ளும் உணவு செரிப்பதற்காக, இரைப்பையில் ஹைட்ரோகுளோரிக் அமிலம்உள்ளிட்ட அமிலங்கள் சுரக்கின்றன. இந்த அமிலங்கள் அதிகமாகச் சுரக்கும்போது இரைப்பையின் சுவரைப் பாதித்து, புண்ணை ஏற்படுத்திவிடும். காலை, மதியம், மாலை நேரத்தில் அமில சுரப்பு அதிகமாக இருக்கும். இந்த நேரத்தில் உணவைத் தவிர்க்காமல், சரியான நேரத்தில் எடுத்துக்கொள்வது வயிற்றுப் புண்ணுக்கான வாய்ப்பைத் தவிர்க்கும். ஆஸ்பிரின், ப்ரூஃபின் உள்ளிட்ட வலி நிவாரண மாத்திரைகளை எடுத்துக்கொள்வதும் வயிற்றுப் புண்களை ஏற்படுத்தலாம்.' பெரும்பாலும் இது 20 வயதுக்கு மேற்பட்டவர்களை அதிகமாகப் பாதிக்கிறது. 
முதல் அறிகுறி வலிதான். பற்றி எரிவது போன்ற கடுமையான வலி வயிற்றில் ஏற்படும். புண் ஏற்பட்ட இடத்தில் அமிலம் படுவதால் இந்த வலி ஏற்படுகிறது. அடி வயிறு முதல் நெஞ்சுக்கூடு வரையிலான இடத்தில் வலி ஏற்படலாம். வெறும் வயிறாக இருக்கும் நேரத்தில் வலி இன்னும் அதிகரிக்கும். வலி தொடர்ந்து இருக்கும் என்று இல்லை, ஒரு நாள் இருக்கலாம், அடுத்து சில நாட்களுக்கோ, வாரத்துக்கோ வலி இல்லாமல் இருக்கும். பிற்கு, மீண்டும் வலி ஏற்படும். தவிர, வாந்தியில் ரத்தம் கலந்து வெளியேறுவது, மலத்தில் ரத்தம் வெளியேறுவது, குமட்டல் அல்லது வாந்தி, காரணமின்றி உடல் எடை குறைவது, பசியில் மாறுபாடு போன்றவை ஏற்படலாம்''.
மேலே சொன்ன அறிகுறிகள் இருந்தால் தாமதிக்காமல் உடனே வயிறு இரைப்பை மருத்துவரை அணுகி ஆலோசனை பெற வேண்டும். என்டோஸ்கோப்பி மூலமாக இரைப்பையில் புண் உள்ளதா என்று பரிசோதனை செய்யப்படும். ரத்தப் பரிசோதனை மூலமாகவும் உறுதிப்படுத்தப் படும். மாத்திரை, மருந்துகளை சரியாக எடுத்துக்கொள்வதன்மூலம் 90 சதவிகித வயிற்றுப் புண்ணைக் குணப்படுத்திவிடலாம். சிலருக்கு மாத்திரை மருந்துகள் பயனளிக்காதபோது அறுவைசிகிச்சை பரிந்துரைக்கப்படுகிறது.
சிறுகுடலின் முன்பகுதியில் அல்சர் பாதிப்பு உண்டானவர்களில் சிலருக்கு குடல் அடைப்பு ஏற்பட்டு அடிக்கடி வாந்தி ஏற்படும். அவர்களுக்கு அறுவைசிகிச்சை தேவைப்படும். இது மிகவும் கடைசி நிலையில்தான் மேற்கொள்வார்கள். மிகவும் அரிதாக சிலருக்கு இந்த கிருமியால் இரைப்பையில் ஓட்டை விழுந்து அமிலம் வெளியேறிவிடும். இவர்களுக்கு உடனடியாக அறுவைசிகிச்சை செய்யாவிட்டால், மரணம் ஏற்படும்.
வயிற்றுப் புண் பாதிப்பு உள்ளவர்கள் காரமான உணவைத் தவிர்க்க வேண்டும். மருத்துவரின் ஆலோசனைப் படி மாத்திரைகளை தவறாமல் தினமும் எடுக்கவேண்டும்.
எல்லா உணவுகளையும் சரியான வேளையில் சரியான முறையில் சாப்பிட்டு வந்தாலே, அல்சரை சமாளிக்கலாம்.'
அல்சருக்கு ஆகவே ஆகாதது காரம். காரமான உணவுகளும் அதிக மசாலா சேர்த்த உணவுகளும் அமிலத்தின் அளவை அதிகரிக்கும். எதுக்களிப்பை ஏற்படுத்தும். அதனால் வயிற்றின் ஓரங்கள் எல்லாம் பாழாகும். ஏற்கெனவே அல்சர் இருப்பவர்களின் நிலை இன்னும் மோசமாக மாறிவிடும். எனவே, அதிகம் மிளகாய்த்தூள், மிளகாய் சேர்த்த உணவுகளைத் தவிர்ப்பது நல்லது. 
நீங்கள் ஒரு காபி பிரியரா? கண்டிப்பாக நீங்கள் இதைத் தெரிந்துகொள்ள வேண்டும். ‘தொடர்ந்து காபி குடிப்பதாலும் பெப்டிக் அல்சர் ஏற்படும்’ என்கிறது நவீன மருத்துவம். காபிக்குப் பதிலாக, வயிற்றுக்கு இதம் தரும் மாதுளை ஜூஸ், ஆப்பிள் ஜூஸ் போன்ற வேறு ஏதேனும் பானங்களை அருந்தலாம். இவற்றால் வயிற்றுப் புண் ஆறவும் வாய்ப்புள்ளது. 
சிவப்பு இறைச்சி வயிற்றுப் புண்ணுக்கு பெரிய காரணமாக இருக்காது என்று பலரும் நினைக்கிறார்கள். அது தவறு. இந்த இறைச்சி, வயிற்று ஓரங்களைப் பழுதடையச் செய்யும். இதில் உள்ள அதிக அளவிலான புரதச்சத்தும் கொழுப்புச்சத்தும் செரிமானமாவதற்கு அதிக நேரம் எடுத்துக்கொள்ளும். அதனால் வயிற்றிலேயே அதிக நேரம் இறைச்சி உணவு தங்கிவிடும். இதனாலும் வயிற்றில் அமிலம் அதிகம் சுரக்க நேரிடும். இதுவும் அல்சரை அதிகரிக்கச் செய்யும்
காபி குடிப்பவராய் இல்லாமல் இருந்தாலும், அதற்குப் பதிலாக விதவிதமான குளிர்பானங்கள் குடிப்பவராக இருந்தாலும் அதுவும் பிரச்னையே. சோடாவிலும் குளிர்பானங்களிலும் இருக்கும் சிட்ரிக் அமிலம், வயிற்றின் அமிலத் தன்மையை அதிகரிக்கக்கூடியது. இது செரிமானத்திலும் பிரச்னையை ஏற்படுத்தும். அல்சர் இருப்பவர்கள் சோடாவையோ, குளிர்பானங்களையோ அருந்துவதைத் தவிர்க்க வேண்டும். 
அல்சர் உள்ளவர்கள் பால் மற்றும் பால் உணவுகளைத் தவிர்ப்பது நல்லது. சிலர் பாலைக் குடித்தால் அல்சர் குணமாகும் என நினைக்கிறார்கள். ஆனால், பாலில் இருக்கும் புரதச்சத்தும் கொழுப்புச்சத்தும் வயிற்றுப் புண்ணுக்கு ஆபத்தைத்தான் ஏற்படுத்தும். பால், வயிற்றின் அமிலத் தன்மையை அதிகரிக்கச் செய்யும். 
எவற்றை எல்லாம் சாப்பிடக் கூடாது என்று பார்க்கும்போதே, எந்த உணவையெல்லாம் அதிகமாக உட்கொள்ளலாம் என்பதையும் பார்க்க வேண்டும். முதலில் அல்சர் உள்ளவர்கள் நேரத்துக்குச் சாப்பிடவேண்டியது அவசியம். நார்ச்சத்துள்ள காய்கறிகள், பழங்கள் செரிமானத்தை சீராக வைத்திருந்து, அல்சரில் இருந்து காக்கும். முட்டை, தயிர், மீன், பீன்ஸ் ஆகியவற்றை அதிகமாக உட்கொள்ளலாம். உணவில் புதினாவைச் சேர்த்துக்கொள்ளலாம். தேங்காய்ப்பால், மணத்தக்காளிக்கீரை ஆகியவை வயிற்றுப் புண்ணை ஆற்றும். தானியங்கள், பழங்கள், காய்கறிகள் ஆகியவற்றைச் சேர்த்துக்கொள்ளலாம். தேவையற்ற உணவுகளைத் தவிர்ப்பது விரைவில் அல்சர் பிரச்னையிலிருந்து மீள உதவும்.
 


Read more...

துாங்கும் போது வியர்ப்பது.

வியாழன், 5 மார்ச், 2020


உடல் உழைப்பில் ஈடுபட்ட பின், வியர்ப்பது இயல்பு. உடல் வெப்பம் அதிகமாகும் போது, நரம்பு மண்டலத்தின் துாண்டுதலால், வியர்வை சுரப்பிகள், தங்கள் பணியை செய்ய துவங்கும்; அதைத்தான், 'வியர்க்கிறது' என்கிறோம். ஆனால், உடல் உழைப்பில்லாமல் ஓய்வில் இருக்கும்போது வியர்வை அதிகரிக்கிறது என்றால், அது இயல்பானதல்ல. குறிப்பாக, சிலருக்கு இரவில் உறங்கும்போது, அதிகமாக வியர்வை வெளியேறும். இப்படி, தவறான நேரத்தில் உடல் வெப்பம் அதிகரிப்பது, ஆரோக்கிய குறைபாடின் அறிகுறி. உடலில், 'ஹார்மோன்' மாற்றம் நிகழ்பவர்களுக்கு, அதன் காரணமாக வியர்வை வெளியேற்றம் அதிகரிக்கும். பூப்பெய்திய துவக்க காலம், கர்ப்பிணிகள் மற்றும் 'மெனோபாஸ்' நிலையிலிருக்கும் பெண்களுக்கு, ஹார்மோன் சமச்சீரின்மை ஏற்படும் வாய்ப்பு அதிகம் என்பதால், அவர்களுக்கும் இந்தப் பிரச்னை ஏற்படலாம். பொதுவாக, காய்ச்சலோடு தொடர்புடைய நோய்த்தொற்று பாதிப்புகள், அதிக வியர்வைக்கு காரணமாக இருக்கும். தொற்று பாதிப்புகள் ஏற்படும்போது, உடல் வெப்பம் அதிகரிக்கத் தொடங்கும். இயல்பை விட, இரவில் தான் அது அதிகமாக இருக்கும். காசநோய், எலும்பு அழற்சி போன்றவை இருந்தால், துாக்கத்தின்போது அதிகம் வியர்க்கும்.ஒருவர் உறங்கும்போது, உடலில் ரத்தச் சர்க்கரை அளவு குறையத் துவங்கினால், வியர்வை அதிகம் வெளியேறும். ஒவ்வாமை உள்ள மருந்துகளை உட்கொண்டால், பக்கவிளைவாக, வியர்வை வெளியேறுவது அதிகமாகும். உடலில் அமிலத் தன்மை அதிகரிக்கும்போது, செரிமானக் கோளாறு ஏற்பட்டு, நெஞ்செரிச்சல் உண்டாகும். அதோடு துாங்க சென்றால், எரிச்சல் அதிகரித்து வியர்க்க ஆரம்பிக்கும்.
ஏற்கெனவே நரம்பு சார்ந்த பிரச்னை இருப்பவர்கள், அடிக்கடி பதற்றமடைவர். பக்கவாதம் இருப்பவர்களுக்கு, அது தீவிரமடைந்தால், உறக்கத்தில் வியர்ப்பது அதிகரிக்கும். இந்த பாதிப்பு உள்ளவர்கள், உடல்நலச் சிகிச்சையோடு சேர்ந்து, உளவியல் சிகிச்சையும் எடுக்க வேண்டும். முறையான மருத்துவ ஆலோசனையைக் கட்டாயம் பெற வேண்டும்.


Read more...

  © Blogger template Leaving by Ourblogtemplates.com 2008

Back to TOP  

Blogger Widgets