உங்கள் வருகைக்கு நன்றி

நவீன காலத்தில் கண்களை பாதுகாக்கும் வழிமுறைகள்.

வெள்ளி, 18 செப்டம்பர், 2020

கண் மற்றும் உடல் சூடு பிரச்னை, இளம் தலைமுறையினருக்கு அதிகரிப்பதற்கு காரணம், மொபைல் போனும், அதனால் மாறி இருக்கும், நம் வாழ்க்கை முறையும் தான். வயது வித்தியாசம் இல்லாமல், பெரும்பாலானோர், மொபைல் போனில் மூழ்கிக் கிடக்கின்றனர்.'டிவி'யைக் கூட, 3 மீட்டர் தள்ளி இருந்து பார்க்க வேண்டும் என்பதை அறிந்த நாம், அதிக சக்தி வாய்ந்த மொபைல் போன்களை, கண்களுக்கு அருகில் வைத்து, நீண்ட நேரம் பார்க்கிறோம். இதனால், கண்கள் பாதிப்படைய வாய்ப்பு உள்ளது. 'கண்ணுக்கு மிக அருகில் ஒளியை கூர்ந்து பார்க்கக் கூடாது; மிகப் பிரகாசமான ஒளியை, துாரத்திலிருந்தும் பார்க்கக் கூடாது; இருளான பகுதியில் இருந்தபடி, குறுகிய ஒளியில் கண்ணை சுருக்கி, கூர்ந்து கவனித்தாலும், கண்ணில் பிரச்னை வரும்' என, ஆயுர்வேதம் கூறுகிறது. மேலும், தொடர்ந்து உஷ்ணமான பொருட்களை சாப்பிடுவது, வெயிலில் சுற்றுவது, தொடர்ந்து வெப்பமான சூழலில் வேலை பார்ப்பது உள்ளிட்ட செயல்களும், கண்களைப் பாதிக்கும். இது, உடலின் வெப்பத்தை பாதித்து,  மலச் சிக்கலை உருவாக்குகிறது; சத்து குறைபாடும் ஏற்படுகிறது. இந்த பிரச்னையிலிருந்து கண்களை பாதுகாப்பது அவசியம். எனவே, மொபைல் போன்களை கண்களுக்கு நெருக்கமாக, அதிக நேரம் பார்ப்பதை குறைக்க வேண்டும். தேவையான அளவு மட்டும் பயன்படுத்துவது, கண்களுக்கும், மனதுக்கும் நல்லது. மேலும், மொபைல் போன்களைப் பார்ப்பவர்கள், தினமும், இரவில் படுக்கப் போகும் போது, உள்ளங்காலிலும், தலையிலும் சிறிதளவு நல்லெண்ணெய் அல்லது தேங்காய் எண்ணெய் வைத்துக் கொள்வது நல்லது. உள்ளங்காலில் எண்ணெய் தேய்க்கும் போது, அதன் பலன் தலையை சென்றடைகிறது; தலையில் எல்லா நரம்புகளும் சீராக இயங்கும். பெரிய நெல்லிக்காய் ஒன்றை, தினமும் சாப்பிட வேண்டும். ஒரு டீஸ்பூன் திரிபலாதி சூரணத்தை, இரவு துாங்கச் செல்லும் முன், தேனுடன் கலந்து சாப்பிட வேண்டும். அகத்திக்கீரை, சிறுகீரை உள்ளிட்ட கீரைகளை, வாரம் இரு முறையாவது உணவில் சேர்த்துக் கொள்ள வேண்டும். ஒரு கேரட்டை, தினமும் அப்படியே பச்சையாக சாப்பிட வேண்டும். கொத்தமல்லித் தழையை இதமான வென்னீரில் அலசி, அரைத்து, அந்தச் சாறுடன், ஒரு ஸ்பூன் சீரகத்துாள், தேவையான அளவு தண்ணீர் சேர்த்து குடிக்கலாம். இதனால், கண்களுக்கு தேவையான சத்துகள் உடலுக்கு கிடைக்கும்; கண்கள் பாதுகாக்கப்படும்!

 

கருத்துரையிடுக

  © Blogger template Leaving by Ourblogtemplates.com 2008

Back to TOP  

Blogger Widgets