சொத்து ஆவணங்கள் தொலைந்து விட்டால்
வெள்ளி, 18 செப்டம்பர், 2020
பத்திரம் பத்திரம்! சொத்து ஆவணங்கள் தொலைந்து விட்டால், செய்ய வேண்டியது குறித்து கூறும், 'ட்ரைஸ்டார் ஹவுசிங் அண்டு டெவலப் மென்ட்ஸ்' நிர்வாக இயக்குனர், ஜார்ஜ் பீட்டர் ராஜ்: சொத்து ஆவணங்கள் தொலைந்து போனால், முதலில், வழக்கறிஞர் மூலம், தமிழ் மற்றும் ஆங்கில நாளிதழில், பத்திரம் காணாமல் போனது பற்றிய, பொது அறிவிப்பு கொடுக்க வேண்டும். அதில், சர்வே எண், விஸ்தீரணம், பட்டா எண், அதன் நான்கு எல்லைகள், பத்திரப்பதிவு எண் உட்பட, அனைத்து விபரங்களும் இருக்க வேண்டும். அசல் பத்திரத்தை வைத்து, தவறான வழியில், அடமானம், கடன் பெறுதல் போன்றவை செய்யக் கூடாது என்றும், இது சம்பந்தமாக ஏதேனும் ஆட்சேபனை இருந்தால், ஏழு நாட்களுக்குள் தெரிவிக்குமாறும், அதில் குறிப்பிட வேண்டும்.பொது அறிவிப்பு வெளியான ஏழு நாட்களுக்கு பின், 20 ரூபாய் பத்திரத்தாளில், உறுதிமொழிப் பத்திரம் தயார் செய்ய வேண்டும். அதில், அந்தப் பத்திரம் எங்கு, எப்படி தொலைந்தது என்ற தகவலையும், சொத்து விபரங்களையும் குறிப்பிட்டு, பத்திர எண், பதிவு செய்த சார்பதிவாளர் அலுவலகத்தின் விபரம், யாரிடமிருந்து வாங்கினோமோ, அவருடைய பெயரையும் குறிப்பிட வேண்டும். அந்த உறுதிமொழிப் பத்திரத்தில், நாம் கையொப்பம் இடுவதோடு, 'நோட்டரி பப்ளிக்' ஒருவரிடமும் கையொப்பம் பெற வேண்டும். பின், நாம் எந்தப் பகுதியில், அசல் பத்திரத்தை தொலைத்தோமோ, அந்தப் பகுதி காவல் நிலைய, குற்றப்பிரிவு காவல் ஆய்வாளரிடம், ஆவணங்களின் நகல்களை இரண்டு தொகுப்பு இணைத்து, புகார் அளிக்க வேண்டும்.நாம் புகார் கொடுக்கும் இடம், மாநகராட்சியின் எல்லைக்குள் அமைந்தால், அது, குற்ற ஆவணக் காப்பகத்துக்கும், மற்ற இடங்களில் அமைந்தால், மாவட்ட குற்ற ஆவணக் காப்பக அலுவலகத்துக்கும் அனுப்பப்படும். நாம் அனுப்பிய ஆவணங்களை பரிசீலித்து, உண்மை தன்மையை கண்டறிந்து, குற்றம் மற்றும் நிகழ்வுத்தாளில் பதிவு செய்து, அதற்கு ஓர் இலக்கம் கொடுத்து, திரும்பவும் நாம் புகார் கொடுத்த காவல் நிலை யத்துக்கு அனுப்புவர். காவல் நிலையத்தின் காவல் ஆய்வாளர், நமக்கு ஒரு சான்றிதழ் கொடுப்பார். அந்த சான்றிதழை வைத்து, சொத்து பதிவு செய்த சார்பதிவாளர் அலுவலகத்தில், நாம் -தொலைத்த, தவறவிட்ட பத்திரத்தின் நகலுக்கு விண்ணப்பம் செய்து, நகலைப் பெற்று கொள்ளலாம். முக்கியமாக, பத்திரம் தொலைந்து விட்டாலும் நகலைப் பெற, சொத்து சம்பந்தமான விபரம் நமக்கு தெரிய வேண்டும். அதற்கு, சொத்துப் பத்திரத்தின் நகல், நம்மிடம் கட்டாயம் இருக்க வேண்டும். அதனால் சொத்துப் பத்திரங்களை ஒரு நகல் எடுத்து, அதை அசல் பத்திரங்களுடன் வைக்காமல், தனியாக வைக்க வேண்டும்.