உங்கள் வருகைக்கு நன்றி

பல்பாதுகாப்பு லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி
பல்பாதுகாப்பு லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி

விதிவிலக்காக நிற்கிறார் டாக்டர் வித்யா.

செவ்வாய், 16 ஏப்ரல், 2013


பெரும்பாலான மருத்துவர்களும் வசூல் ராஜாக்களாக, ராணிக்களாக மாறிக் கொண்டிருக்கிற காலமிது. மருத்துவத்தை சேவையாகப் பார்த்தமனோபாவம்  மாறி, இன்று அது மாபெரும் பிசினஸ்! 

தேவையற்ற பரிசோதனைகள், அனாவசிய மருந்துகள், அவசியமே இல்லாத கன்சல்ட்டேஷன் என மக்களின் பணத்தைப் பறிப்பதிலேயே பல  மருத்துவர்களும் குறியாக இருக்க, சென்னை முகப்பேர் டாக்டர் வித்யா, விதிவிலக்காக நிற்கிறார். பல் மருத்துவரான வித்யாவின் வித்தியாசமான  அணுகுமுறை வியக்க வைக்கிறது. வயதான மற்றும் உடல்நலமில்லாதவர்களின் பல் மருத்துவத்துக்காக அவர்களது இருப்பிடத்துக்கே போய் சிகிச்சை  செய்து வருகிறார் வித்யா!

Mobile Clinic!

மருந்து, மாத்திரைகள், உபகரணங்கள் அடங்கிய சின்னப் பெட்டி, வெள்ளை கோட், கழுத்தைச் சுற்றிய ஸ்டெத்தஸ்கோப் என வித்யாவின் தோற்றம்,  பழைய கருப்பு-வெள்ளை சினிமாக்களில் வரும் மருத்துவ முகங்களை ஞாபகப்படுத்துகின்றன. டாக்டருக்கான எந்த அலட்டலும் இல்லாமல், தனது டூ  வீலரிலோ, தேவைப்பட்டால் மட்டுமே காரிலோ, சிகிச்சைக்காக சென்னையை வலம் வருகிறார் வித்யா.

‘‘நர்ஸா இருந்த எங்கம்மா கலிங்கராணிதான் எனக்கு முதல் இன்ஸ்பிரேஷன். மருத்துவத்தை சேவையா பார்க்கக் கத்துக் கொடுத்தவங்க அவங்கதான்.  விருப்பப்பட்டுதான் பல் மருத்துவம் படிச்சேன். என்னைப் பொறுத்தவரை அது ஒரு கலை. ரொம்ப ரொம்ப கவனமா, அக்கறையா, அன்போட அணுக  வேண்டிய ஒரு துறை. பல் மருத்துவம்கிறது இன்னிக்கு மிகப்பெரிய பிசினஸா வளர்ந்திட்டிருக்கு. 

ஆஸ்பத்திரியோட பிரமாண்டம், அங்கே உபயோகிக்கப்படற பெரிய பெரிய மெஷின், வைத்திய செலவுன்னு எல்லாமே மக்களை பயமுறுத்துது.  அதுக்குப் பயந்து, பல் ஆரோக்கியத்தை அலட்சியப்படுத்தறவங்களும், சுய மருத்துவம் செய்துக்கிறவங்களும்தான் நிறைய பேர்...  பணம்  பிரச்னையில்லைங்கிற நம்பிக்கையைக் கொடுக்கத்தான், ரொம்ப ரொம்ப குறைஞ்ச கட்டணத்துல சிகிச்சை கொடுக்க, 10 வருஷங்களுக்கு முன்னாடி  கிளினிக் தொடங்கினேன். 

என்னோட கிளினிக்ல ஏழை, பணக்காரங்கன்னு எல்லோருக்கும் ஒரே மாதிரியான ட்ரீட்மென்ட்தான். ஒரு முறை இலங்கையைச் சேர்ந்த பேஷன்ட்,  தன்னோட மாமியாரைப் பத்திச் சொன்னாங்க. படுத்த படுக்கையா இருந்த அவங்களுக்கு, பல் எல்லாம் விழுந்திருந்தது. பல் இல்லாததால சரியா  சாப்பிட முடியலை. ரொம்ப பலவீனமா இருந்தாங்க. நோயாளிங்கிறதால ஆஸ்பத்திரிக்கு கூட்டிட்டுப் போய் பல் செட் கட்டவும் முடியாத நிலையில,  ‘அவங்களுக்கு ஏதாவது செய்ய முடியுமா’ன்னு கேட்டாங்க. 

அவங்க வீட்டுக்குப் போய், அந்தம்மாவுக்கு பல் செட் கட்டறதுக்கான 5 கட்ட சிகிச்சைகளையும் வீட்லயே செய்து, நல்லபடியா கட்டி விட்டேன்.  அதுக்குப் பிறகு அவங்க நல்லா சாப்பிட ஆரம்பிச்சு, உடம்பும் மனசும் தேறினாங்க. அந்த வாழ்த்தும் அதுல கிடைச்ச மன திருப்தியும்தான் என்னோட  ‘மொபைல் கிளினிக்’ ஐடியாவுக்கு அஸ்திவாரம்...” பின்னணி சொல்கிற டாக்டர் வித்யா, ரொம்பவும் வயதானவர்கள், நடமாடவே முடியாத  நோயாளிகள், மனநலம் சரியில்லாதவர்கள் ஆகியோருக்கு வீட்டுக்கே சென்று சிகிச்சை தருகிறார். 

மற்றவர்களுக்கு தனது கிளினிக்கில். வீட்டுக்குச் சென்று சிகிச்சையளிப்பதற்காக உபரிக் கட்டணமெல்லாம் வாங்குவதில்லை!  பற்களை சுத்தம்  செய்வது, எடுப்பது, கட்டுவது, கிளிப் போடுவது, வேர் சிகிச்சை உள்ளிட்ட 90 சதவிகித சிகிச்சைகளை வீட்டிலேயே செய்யலாம் என்கிறார் வித்யா. ‘‘பெரும்பாலும் நான் தனியாவே போயிடுவேன். கொஞ்சம் பெரிய ட்ரீட்மென்ட்டுன்னா மட்டும்தான் அசிஸ்டென்ட்ஸ் கூட்டிட்டுப் போவேன். 

வயசானவங்களுக்கும், மனநலம் சரியில்லாதவங்களுக்கும் ட்ரீட்மென்ட் கொடுக்கிறப்ப, அசாத்திய பொறுமை வேணும். தன்னையறியாம  கடிச்சிடுவாங்க. வாந்தி எடுப்பாங்க. முரட்டுத்தனமா நடந்துப்பாங்க. மனநலம் பாதிக்கப்பட்ட குழந்தைங்களுக்கு சிகிச்சை கொடுக்கிறது அதைவிடக்  கஷ்டம். அத்தனை சுலபத்துல நம்மகிட்ட வரவே மாட்டாங்க. 

முதல் ரெண்டு விசிட் சும்மா அவங்களோட பேசிப் பழகுவேன். கிஃப்ட் கொடுப்பேன். மூணாவது விசிட்லதான் ட்ரீட்மென்ட் ஆரம்பிப்பேன். சிகிச்சை  முடியறபோது, அவங்கக்கிட்டருந்து கிடைக்கிற அந்த அன்பும் வாழ்த்தும், கோடி ரூபாய் கொட்டிக் கொடுத்தாலும் கிடைக்காதது...’’ - அன்பொழுகப்  பேசுகிற டாக்டருக்கு, குடிசைவாழ் மக்களிடம் பல் ஆரோக்கியம் பற்றிய விழிப்புணர்வைப் பிரபலப்படுத்துவதே அடுத்த திட்டமாம்! (தொடர்புக்கு - 9941664635)  


நன்றி -தினகரன் 

Read more...

பற்களை பராமரிப்பது என்பது மிகவும் முக்கியமானது.

புதன், 6 மார்ச், 2013


பற்களை பராமரிப்பது என்பது மிகவும் முக்கியமானது. அதிலும் பற்கள் நன்கு சுத்தமாக இருக்க, ஒரு நாளைக்கு இரண்டு முறையாவது பிரஷ் பண்ண வேண்டும். இதனால் வாயில் ஏற்படும் துர்நாற்றம், பற்களுக்கிடையே உணவுப் பொருட்கள் மாட்டிக் கொள்ளுதல், சொத்தை பற்கள் ஏற்படுதல் போன்றவை ஏற்படாமல் இருப்பதோடு, பற்களும் வெள்ளையாக பளிச்சென்று இருக்கும். 

பொதுவாக பற்களில் பிரச்சனை ஏற்படுவதற்கு உண்ணும் உணவுகளே காரணங்களாகின்றன. அதிலும் அவற்றை உண்பதால், பற்கள் மஞ்சள் நிறத்தில் மாறுவதோடு, பற்களுக்கிடையே உணவுப் பொருட்கள் சிக்கிக் கொண்டு, பற்களை சொத்தையாகவும், துர்நாற்றம் உள்ளதாகவும் மாற்றுகிறது.

ஆகவே அத்தகைய உணவுகளை உண்ட பின், பற்களில் மாட்டிக் கொள்ளும் உணவுப் பொருட்களை நீக்க டூத் பிக் அல்லது டென்டல் ப்ளாஸ் பயன்படுத்துவது நல்லது. அசைவ உணவு சாப்பிடுபவர்கள் இறைச்சியை நன்கு கடித்து இழுக்கும் போது, அதில் உள்ள சிறிய பகுதி கண்டிப்பாக பற்களில் மாட்டிக் கொள்ளும்.

அவ்வாறு மாட்டிக் கொள்வதை நீக்க முடியாமல் இருக்கும். மேலும் அவை பற்களில் இருப்பதால், அதிக எரிச்சலை ஏற்படுத்தும். ஆகவே எப்போது அதனை சாப்பிட்டாலும், டென்டல் ப்ளாஸை பயன்படுத்துவது நல்லது. 

உணவுகளில் வித்தியாசமான சுவைக்காக சேர்க்கும் பால் பொருட்களில் ஒன்று தான் சீஸ். சீஸை சாப்பிடும் போது, அவை பற்களில் சிக்கிக் கொண்டு, பற்களை சொத்தை ஆக்குவதோடு, வாய் துர்நாற்றத்தையும் உண்டாக்குகிறது. 

அனைவருக்குமே சாக்லேட் மிகவும் பிடிக்கும். சாக்லேட் சாப்பிட்டால், இதயம் ஆரோக்கியமாக இருக்கும். ஆனால் அதில் உள்ள இனிப்பு பற்களில் கிருமிகள் மற்றும் பாக்டீரியாக்களை தங்க வைக்கும். ஆகவே அதனை தொடர்ந்து அடிக்கடி சாப்பிடுவதை தவிர்க்க வேண்டும். மேலும் அதை சாப்பிட்டப் பின் பற்களை மறக்காமல் பிரஷ் செய்துவிட வேண்டும்.

Read more...

சாப்பிட்டவுடன் ஒவ்வொரு முறையும் பல் துலக்குவது சரியா ?

வியாழன், 7 ஜூன், 2012


சாப்பிட்டவுடன் ஒவ்வொரு முறையும் பல் துலக்குவது பற்களுக்கு கேடு விளைவிக்கும் என்று ஆராய்ச்சியாளர்கள் எச்சரித்துள்ளனர்.  பொதுவாக காலையிலும் இரவிலும் 2 வேளை அவசியம் பல் துலக்க வேண்டும் என்பது மருத்துவ பரிந்துரை. ஆனால் உணவு, ஸ்னாக்ஸ், ஸ்வீட்ஸ், குளிர்பானங்கள் போன்றவற்றை உட்கொண்ட பின் பல் துலக்குவதை பலர் வழக்கமாகவே கொண்டுள்ளனர். இது ஆரோக்கியத்துக்கு பதில் பற்களுக்கு பாதிப்பை ஏற்படுத்தும் என்கின்றனர் ஆராய்ச்சியாளர்கள். பல முறை பல் துலக்குவது பற்களுக்கு வலுசேர்க்கும் என்று அறிவுறுத்தப்படும் நிலையில் இத்தகவல் வெளியாகி உள்ளது.

குறிப்பாக அமில தன்மை கொண்ட உணவுகளை உட்கொண்டவுடன் பல் துலக்குவது பற்களுக்கு ஆபத்தை விளைவிக்கும் என்கின்றனர். அமெரிக்காவில் உள்ள அகடமி ஆஃப் டென்டிஸ்ட்ரி அமைப்பின் தலைவர் டாக்டர் ஹோவர்ட் கேம்பிள் தலைமையில் இந்த ஆய்வு நடைபெற்றது. ஆய்வுத் தகவல் குறித்து கேம்பிள் கூறியதாவது: அடிக்கடி பல் துலக்குவது, உணவு உட்கொண்ட பின்னர் பல் துலக்குவது பற்களின் ஆரோக்கியத்தை பாதிக்கும். குறிப்பாக அமிலத்தன்மை உள்ள உணவுகளை உட்கொண்ட பின்பும், நுரை ததும்பும் பானங்களை அருந்தியவுடனும் பல் துலக்குவதை தவிர்க்க வேண்டும்.

இவற்றை உட்கொண்ட பின் பல் துலக்கினால் பல்லின் பாதுகாப்புக்கு அரணாக இருக்கும் எனாமல் படிமம் அதற்கு உள்ளிருக்கும் ‘டென்டின் பகுதி ஆகியவை முற்றிலும் பாதிக்கும். இதனால் உணவின் அமிலத்தன்மை பற்களின் உட்பகுதிகளில் எளிதாக ஊடுருவி உட்பகுதிகளுக்கும் கேடு விளைவிக்கும். எனவே பற்களை பாதுகாத்து கொள்ள உணவு உட்கொண்டவுடன் பல் துலக்குவதை தவிர்க்க வேண்டியது அவசியம். ஆனால் வெறும் தண்ணீரால் வாய் கொப்பளிப்பது நல்லது. இவ்வாறு கேம்பிள் கூறியுள்ளார்.

Read more...

பல் பாதுகாப்பு முறை

புதன், 18 ஏப்ரல், 2012


பல் போனால் சொல் போச்சு என்பது பழமொழி. அதுவும் சிறு வயதில் பல் போனால் சாப்பிடுவதில் சிரமம் ஏற்படும், முக அழகும் கெட்டுப் போய்விடும். பல் சொத்தையைக் கண்டு கொள்ளாமல் விட்டால் அது பல்லின் வேரை பலம் இழக்க செய்து பல்லை இழக்கும் நிலைக்கு தள்ளப்படும். தற்பொழுது உள்ள சிகிச்சை முறைகளின் மூலம் பல்லின் வேர்ப்பகுதியை பாதுகாத்து பல்லை விழாமல் காத்துக் கொள்ள முடியும். சொத்தைப் பல்லுக்கு ஆரம்பத்திலேயே வேர் சிகிச்சை செய்வதன் மூலம் 20 ஆண்டுகள் வரை பல்லை பாதுகாக்க முடியும் என்கிறார் பல் டாக்டர் கைலின். 
சிறு வயதில் இருந்தே பல்லை ஆரோக்யமாக வைப்பதில் கவனம் செலுத்த வேண்டும். பிரச்னை வந்து, வலிக்க ஆரம்பித்த பின்னர் தான் மருத்துவரைப் பார்க்க வேண்டும் என்ற எண்ணமே பலருக்கும் உள்ளது. குழந்தைகளுக்கு பல் முளைக்க ஆரம்பித்ததில் இருந்தே தினமும் இருமுறை பல்துலக்க வேண்டும். பல்லின் இடுக்குகளில் உணவுப் பொருள்கள் படியாமல் பார்த்துக் கொள்ள வேண்டும். அவ்வாறு சிக்கிக் கொண்டால் வாய் கொப்பளித்து உடனடியாக பல்லை சுத்தம் செய்ய வேண்டும். 

சத்துக் குறைபாடான உணவுகள் மற்றும் உடலில் ஏற்படும் சர்க்கரை உள்ளிட்ட மற்ற நோய்களின் காரணமாகவும் பல் ஆரோக்யம் விரைவில் கெட்டுவிட வாய்ப்புள்ளது. எச்சிலில் உள்ள ஏசிட் மற்றும் உணவில் உள்ள கார்போஹைட்ரேட்டும் சேர்ந்து பல்லில் சொத்தையை உருவாக்குகிறது. பல் சொத்தை பெரிதாக வளர்ந்து பல்லின் வேரை தாக்கும் போது தான் வலி ஏற்படுகிறது. இந்த வலியை கண்டு கொள்ளாமல் விட்டுவிட்டால் பல்லின் வேர்ப்பகுதி முழுவதும் பாதிக்கப்பட்டு பல்லை முழுமையாக இழக்கும் நிலை ஏற்படும்.

 
பல்லில் சொத்தை ஏற்படாமல் பார்த்துக் கொள்ள வேண்டும். அல்லது பல் சொத்தை வாயில் தொந்தரவை ஏற்படுத்தும் போதே பல் மருத்துவரிடம் காட்டி வேர் சிகிச்சை மூலம் பாதுகாத்துக்   கொள்ள லாம். வேரின் தன்மையைப் பொறுத்து பல்லின் ஆயுள் கூடும். பல்லின் வேர்ப்பகுதியில் பாதிப்பு ஆரம்பித்த உடன் கண்டறிந்தால் செயற்கை வேர் வைத்து பல்லை உறுதியாக்கி அதன் மீது உரை போட்டு பல்லை உயிருடன் காப்பாற்றி விட முடியும். இந்த வேர் சிகிச்சையின் மூலம் 20 ஆண்டுகள் வரை பல்லை காப்பாற்றலாம். வேர் சிகிச்சை என்பது எந்த வயதினருக்கும் செய்யலாம். சிறு வயது குழந்தைகளுக்கு கடைவாய்ப்பல் சொத்தை ஏற்பட்டால் அந்தப் பல் 12 வயது வரை அவர்களுக்குத் தேவைப்படும். அதற்கும் வேர் சிகிச்சை உள்ளது. 

பொதுவாக வயதானவர்கள் மற்றும் சர்க்கரை, ரத்த அழுத்தம் உள்ளிட்ட நோய் ஏற்கனவே உடலில் உள்ளவர்களுக்கும் அதற்கான அடிப்படை பரிசோதனைகள் செய்யப்பட்ட பின்னர் வேர் சிகிச்சை செய்யப்படும். வேர் சிகிச்சையின் பின்னர் பல்லில் வலி மற்றும் சேதம் எதுவும் இன்றி நார்மலான பல் போலவே பயன்படுத்தலாம். இதே போல் பல்லில் ஏற்படும் பல் கூச்சம்,   ஈறு வீக்கம், பல் சொத்தை, வாய் நாற்றம் உள்ளிட்ட எந்தப் பிரச்னையாக இருந்தாலும் உடனடியாக பல் மருத்துவரை அணுகி சிகிச்சை செய்து கொள்வதன் மூலம் பல்லின் ஆரோக்யத்தையும், முகத்தில் அழகையும் பாதுகாக்க முடியும். 

பாதுகாப்பு முறை: சிறு வயதில் இருந்தே குழந்தைகளுக்கு பல்லை சுத்தமாக வைத்துக் கொள்வது பற்றிய விழிப்புணர்வை ஏற்படுத்த வேண்டும். தினமும் இரண்டு முறை கட்டாயம் பல் துலக்க வேண்டும். மாதம் ஒரு முறை பிரஷ்ஷை மாற்ற வேண்டும். பல்லின் தன்மைக்கு தகுந்த பிரஷ்ஷை தேர்வு செய்வதும் அவசியம். பல் இடுக்குகளில் உணவுப் பொருட்கள் சேராமல் பாதுகாக்க வேண்டும். குளிர்ச்சியான பதார்த்தங்கள் அடிக்கடி சாப்பிடுவதை தவிர்க்கவும். மவுத் வாஷ் பயன்படுத்தியும் பல்லை சுத்தமாக வைத்துக் கொள்ளலாம். இனிப்புகள் சாப்பிட்டால் கண்டிப்பாக பல்லை சுத்தம் செய்ய வேண்டும். பிரச்னையே இல்லாவிட்டாலும் ஆறு மாதங்களுக்கு ஒரு முறை பல் மருத்துவரிடம் காண்பித்து பல் ஆரோக்யத்தை பாதுகாக்க வேண்டும். கால்சியம் உள்ள உணவு முறையை பின்பற்றுவதன் மூலம் பல்லின் வலி மையை பாதுகாக்க முடியும். -ஸ்ரீதேவி

பாலக்கீரை சூப்: ஒரு கட்டு பாலக்கீரை, பெரிய வெங்காயம்- 1, தக்காளி- 1, பூண்டு-2ஆகியவற்றை பொடியாக நறுக்கிக் கொள்ளவும். ஒரு டீ ஸ்பூன் அளவுக்கு சீரகம், மிளகு அரைத்துக் கொள்ளவும். குக்கரில் எண்ணெய் விட்டு தாளித்து தக்காளி, வெங்காயம், பூண்டு சேர்த்து வதக்கி, சீரகம் - மிளகுத்தூள் சேர்க்கவும். இத்துடன் கீரை, மஞ்சள் தூள் மற்றும் சிறிதளவு தண்ணீர், உப்பு சேர்த்து குக்கரில்  ஒரு விசில் நேரத்திற்கு வேக வைத்து, பின் கடைந்து சூப்பாக அருந்தலாம். இதில் வைட்டமின், மினரல் சத்துகள் உள்ளன. 

வெண்டை பிரை: வெங்காயம், தக்காளி, ஒரு டேபிள் ஸ்பூன் பூண் டுத் துருவல் ஆகியவற்றை எண் ணெயில் வதக்கி மசித்துக் கொள் ளவும். இத்துடன் மஞ்சள் தூள், மிளகாய்த்தூள், உப்பு சேர்த்து பேஸ்ட் போல பிசைந்து, 10 வெண்டைக்காயை நீளவாக்கில் நறுக்கி உள்ளே ஸ்டப் செய்யவும். தோசை கல்லில் எண்ணெய் விட்டு மிதமான தீயில் வெண்டைக்காய் பிரை செய்யலாம். இதில் வைட்டமின் சி சத்து உள்ளது. 

காலிபிளவர் கட்லட்: ஒரு காலிபிளவர் பூ கட் செய்து உப்புத் தண்ணீரில் போட்டு சுத்தம் செய்யவும். அரை கப் முட்டைக்கோசை பொடியாக நறுக்கிக் கொள்ளவும். இவற்றை எண்ணெயில் வதக்கிக் கொள்ளவும். இத்துடன் தேவையான அளவு உப்பு, கரம்மசாலாத் தூள், மிளகாய்த்தூள் சேர்த்து வதக்கி உருண்டை பிடித்துக் கொள்ளவும். கான்பிளவர் மாவு, ரொட்டித்தூள் ஆகியவற்றில் உருட்டி தட்டி தோசைக்கல்லில் எண்ணெய் விட்டு வேகவைத்து எடுக்கவும். இந்த கட்லட்டில் நோய் எதிர்ப்பு சக்தி அதிகம் உள்ளது.

டயட்

பொதுவாக 30 வயதுக்கு மேல் பல காரணங் களால் பல் பாதிப்பு அதிகரிக்கிறது. மேலும் சிறு வயது முதல் கால்சியம், அயோடின் மற்றும் பாஸ்பரஸ் ஆகிய சத்துக் குறைபாட்டினால் பற்கள் விரைவில் வலுவிழக்கின்றன. இவற்றை தடுக்க பழங்கள், காய்கறிகள் அதிகம் சாப்பிட வேண்டும். வைட்டமின்-சி சத்து அதிகம் உள்ள ஆரஞ்சு, சாத்துக்குடி , எலுமிச்சை, பப்பாளி,திராட்சை இவ ற்றில் ஏதாவது ஒன்றை தினமும் சாப்பிட வேண்டும். கேழ்வரகு, மீன், கீரை வகைகள், முட்டைக்கோஸ், காளிபிளவர், அடிக்கடி சேர்க்கவும். தினமும் இரண்டு டம்ளர் பால் அவசியம். தண்ணீர் நிறைய குடிக்க வேண்டும். இனிப்பு, உப்பு, காரம் குறைத்து கொள்ளவும். சூடாகவும், காரமாக சாப்பிடுவதை தவிர்க்கவும். அப்படி சாப்பிட நேர்ந்தால் உப்புத் தண்ணீரால் வாய் கொப்பளிக்கவும். இனிப்பு சாப்பிட்ட பின் கண்டிப்பாக பிரஷ் செய்யவும். வயதாகும் போது எதிர்ப்பு சக்தி குறைபாட்டின் காரணமாகவே பல் தேய்மானம் மற்றும் பல் இழப்புகள் ஏற்படும். பல்லை சுத்தமாகப் பராமரித்தல், சத்தான உணவு ஆகியவையே பல் ஆரோக்யத்தை பாதுகாக்க உதவும், என்கிறார் உணவு ஆலோசகர் சங்கீதா. 
வைத்தியம்

*  
பூண்டு, வெங்காயத்தை நெய்யில் வதக்கி சாப்பிட்டால் நோய் எதிர்ப்பு சக்தி அதிகரிக்கும்.  
*  
ஆலமர விழுதுகளை சிறு சிறு துண்டுகளாக நறுக்கி காய வைக்கவும். இத்துடன் படிகாரம் சேர்த்து அரை த்து வைத்து கொண்டு, அதில் பல் துலக்கினால் பல் தொடர்பான பாதிப்    புகள் குறையும். 
*  
ஆலமர பட்டையில் கஷாயம் வைத்து வாய் கொப்பளித்தால் பல் வலி குறையும். 
*  
நல்லெண்ணெய் 20 மிலி அளவுக்கு வாயில் ஊற்றி அடக்கி இருபது நிமிடம் கழித்து வாய் கொப்பளித்து துப்பினால் வாயில் ஏற்படும் கிருமித் தொற்று குணமாகும். 
*  
கிராம்பு, கொட்டைப்பாக்கு இரண்டையும் சம அளவில் எடுத்து பொடி செய்து பல் துலக்கினால் பல்வலி குணமாகும். ஈறுகள் பலப்படும். 
*  
கொய்யா இலையை மென்று தின்று வெந்நீரில் வாய் கொப்பளித்தால் பல் கூச்சம் விலகும். 
*  
கொய்யா இலை, கருவேலம்பட்டை, உப்பு மூன்றையும் சம அளவில் எடுத்து பொடி செய்து பல் துலக்கி வந்தால் பல் வலி உள்ளிட்ட அனைத்து நோய்களும் விலகும்.

Read more...

  © Blogger template Leaving by Ourblogtemplates.com 2008

Back to TOP  

Blogger Widgets