கோதுமைப் புல்லின் பயன்கள்!
ஞாயிறு, 23 ஜனவரி, 2022
இயற்கை மருத்துவத்தில் பல நோய்களுக்கு அருகம்புல் பரிந்துரைப்பர். அதற்கு இணையான மருத்துவ குணம் கொண்டதே கோதுமைப்புல். இதுகுறித்த விழிப்புணர்வு நம்மில் பலரிடம் இல்லை.அது என்னங்க கோதுமைப்புல் என கேட்கிறீர்களா?கோதுமைப்புல் சாற்றை இயற்கை மருத்துவர்கள் 'பச்சை ரத்தம்' என்கின்றனர். இதில், உடலுக்கு தேவையான 19 அமினோ அமிலங்கள், 92 தாதுக்கள் உள்ளன. கால்சியம், இரும்பு சத்து, மக்னீசியம், விட்டமின்கள், புரோட்டீன்கள், என்சைம்கள் என, ஏராளமான சத்துக்கள் உள்ளன.செரிமானம், உடலில் உள்ள நச்சுக்கள் வெளியேற்றவும், நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கவும், ஹீமோகுளோபின் அதிகரித்தல், மலச்சிக்கலுக்கு தீர்வு, சர்க்கரை அளவை கட்டுப்படுத்துதல் என இதன் பலன்கள் ஏராளம். எளிய முறையில் வீட்டிலேயே தயாரித்து, பயன்படுத்தலாம். பெரிய மருத்துவ நிறுவனங்கள், உடல் பருமன் கட்டுப்படுத்தும் நிறுவனங்கள் இதனை பொடியாக்கி, மருந்துகளில் பயன்படுத்தி வருகின்றனர் என, மருத்துவர்கள் தெரிவிக்கின்றனர். கோதுமையை சுத்தமான நீரில், 12 மணி நேரம் ஊற வைத்து வடிகட்ட வேண்டும். அதை, ஈரத்துணியில் இறுக்க முடிந்து தொங்க விட்டு, 12 மணி நேரம் கழித்து எடுத்தால் முளைக்கட்டி விடும். பூ தொட்டியிலோ, வீட்டில் உள்ள பிளாஸ்டிக் பாத்திரத்தில் சிறிது மண் இருந்தால் போட்டு லேசாக விதைத்தால், எட்டு நாட்களில் அறுவடைக்கு தயாராகி விடும். அதை அரைத்து காலையில் வெறும் வயிற்றில் பருக வேண்டும். சுவைக்காக சிறிது தேன் கலந்துகொள்ளலாம். இதுபோன்று வீட்டிலேயே விதைத்து தேவைக்கு ஏற்ப அறுவடை செய்து கொள்ளலாம்.