உங்கள் வருகைக்கு நன்றி

சர்க்கரை நோய் லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி
சர்க்கரை நோய் லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி

சர்க்கரை நோயாளிகள் தெரிந்துகொள்ள வேண்டியவைகள்.

செவ்வாய், 25 டிசம்பர், 2018


ஒரே ஒரு ஸ்பூன் சர்க்கரை, டீ அல்லது காபியில் அதிகமாகி விட்டால், சர்க்கரை நோய் வந்துவிடும் என்பதும், சர்க்கரை உள்ள உணவுகளை அதிகம் சாப்பிடுவதால், நீரிழிவு வரும் என்பதும் உண்மை இல்லை.ஆனால், நீங்கள் கூடுதலாக சாப்பிடும் ஒவ்வொரு கலோரியும் தான், சர்க்கரையை இருகரம் கூப்பி வரவேற்கிறது.அதிகம் சாப்பிட சாப்பிட, உடலில் கொழுப்பு சேர ஆரம்பிக்கும். கொழுப்பு, 'இன்சுலினை' ஒழுங்காக வேலை செய்யவிடாமல் தடுக்கும். இன்சுலின் வேலை தடைபடுவதால், சர்க்கரை தாறுமாறாக கூடும். எதையும், அளவுக்கு மீறி சாப்பிட்டாலே கொழுப்பு சேரும். அதனால், சர்க்கரை வரக்கூடும். இதைத் தடுக்க, வெளிநாடுகளில், சாப்பிடும் ஒவ்வொரு பொருளிலும் கலோரியின் அளவு குறித்து வைக்கப்பட்டிருக்கிறது. இப்படி செய்வதால், ஒரு நாளுக்கு எவ்வளவு கலோரி சாப்பிடுகிறோம் என்பதை கணக்கிட்டு, அதிகமாகாமல் பார்த்துக் கொள்ளலாம். குளிர்பானம், கேக், எண்ணெயில் பொரித்த உணவு,  இறைச்சி மற்றும் இனிப்பு வகை ஆகியவை, கலோரி அதிகமுள்ள உணவுகள். பச்சைக் காய்கறி, கீரை, பழம், பருப்பு வகை, முளைகட்டிய தானியம், புரதம் நிறைந்த உணவு, சிறிய மீன் வகை ஆகியவை, கலோரி குறைவான உணவுகள்.இளநீர், மோர், டீ, காபி, பழம், கீரை வகை, காய்கறி, 50 கலோரிக்கும் குறைவான உணவுகள். பால், தயிர், சட்னி வகை, சுண்டல் வகை, கிழங்கு வகை, 51 - 100 கலோரி வரை உள்ள உணவுகள். இட்லி, தோசை, சப்பாத்தி, மீன், முட்டை, கலவை சாத வகை, 101 - 200 கலோரி உள்ள உணவுகள்.கோழிக்கறி, வறுத்த இறைச்சி, ஆட்டுக்கறி, ஐஸ்க்ரீம், பூரி, பரோட்டா, லட்டு, பப்ஸ், இனிப்பு வகை, 201 - 400 கலோரி உள்ள உணவுகள். அல்வா, இறைச்சி உள்ளுறுப்புகள், நெய், மிக்சர், முறுக்கு ஆகியவை, 400 கலோரிக்கும் மேல் உள்ளவை. நாம் சாப்பிடும் உணவுப் பொருட்களில் சேர்க்கப்படும் பொருட்களைப் பொறுத்து, கலோரியின் அளவு மாறுபடலாம்.ஒருவரின் வயது, பாலினம், எடை, உயரம், வேலைத்தன்மை, உடற்பயிற்சி ஆகியவற்றை வைத்து தான், ஒரு நாளுக்கு, எவ்வளவு கலோரி தேவை என்பதை கணிக்கிட முடியும். www.freedieting.com என்ற இணையதளத்தில், தகவல்களை அளித்து, தேவையான கலோரியை கணக்கிட்டுக் கொள்ளலாம்.சர்க்கரை வராமல் தடுக்க, கலோரியைக் கணக்கிட்டு சாப்பிடு வது நல்லது. தினமும், குறைந்தபட்சம் அரைமணி நேரம், உடலுக்கு பயிற்சி கொடுத்தே ஆகவேண்டும்.

நீரிழிவு நோய் சிறப்பு மருத்துவர், கருணாநிதி:

Read more...

கட்டுக்குள் இல்லாத நீரிழிவு?

புதன், 8 நவம்பர், 2017

பொருளாதார வளர்ச்சி,  நம் வாழ்க்கை முறையை முற்றிலும் மாற்றி விட்டது. தினசரி வாழ்க்கையில், நாம் அதிகம் சிரமப்பட தேவை இல்லா வகையில், எல்லா வேலைகளும் எளிதாகி விட்டன; இதனால், உடல் உழைப்பு வெகுவாகக் குறைந்து விட்டது. துரித உணவு கள், மென் பானங்கள், செயற்கை உணவுகள், அதிக அளவில் அரிசி, சர்க்கரை சாப்பிடுவது, எண்ணெயில் பொரித்த, வறுத்த உணவுகள், என, இவையெல்லாம், 'ஒபிசிட்டி' எனப்படும், உடல் பருமனை ஏற்படுத்தி, முடிவில், நீரிழிவு கோளாறை ஏற்படுத்துகின்றன.
வயதானவர்களுக்கு மட்டுமே வந்த நீரிழிவு பிரச்னை, நடுத்தர வயதினருக்கு வந்தது. தற்போது, இளம் வயதினர்கள் மற்றும் டீன் - ஏஜ் பருவத்தில் இருப்பவர்கள் என்று பாதிக்கப்பட்டு, தற்போது, குழந்தைகளையும் அது பாதிக்கிறது. 
நீரிழிவு கோளாறு வந்தால், அது சிக்கலான உடல் பிரச்னையாக மாறுவதற்கு, 20 ஆண்டுகள் ஆகும். இளம் வயதிலேயே இந்தப் பிரச்னை வரும்போது, நடுத்தர வயதை நெருங்கும்போது, நீரிழிவு பல சிக்கலான உடல் பிரச்னைகளை ஏற்படுத்தும்.

இதனால், அவரின் சுய முன்னேற்றத்தையும், பொருளாதார வளர்ச்சியையும் பாதிக்கும்.
உங்கள் வயது, தினமும் உடற்பயிற்சி செய்பவரா, உங்கள் பெற்றோருக்கு நீரிழிவு உள்ளதா, என்ற எளிமையான கேள்விகளுக்கு கிடைக்கும் பதில், நீரிழிவு நோயாளியா, இல்லையா என்பதை சொல்லி விடும். ஆண்களுக்கு, இடுப்பின் சுற்றளவு, 90 செ.மீ,க்கு குறைவாகவும், பெண்களுக்கு, 80 செ.மீ.,க்கு கீழேயும் இருந்தால், நீரிழிவு வருவதற்கான வாய்ப்பு, 50 சதவீதத்திற்கும் குறைவு.

அதிக தாகம், களைப்பு, ஆறாத புண், பாதங்கள் மரத்து போதல், எரிச்சல், கால்களில் காயம் மற்றும் கட்டி போன்றவை நீரிழிவு வருவதற் கான அறிகுறிகள்.புகை பிடிப்பதோ, மது அருந்துவதோ கூடாது. முடிந்த அளவு அரிசி உணவைத் தவிர்ப்பது அல்லது குறைவாக சாப்பிடுதல் நல்ல பலனை தரும். ஒரே இடத்தில், அதிக நேரம் அமர்ந்து வேலை செய்வது தவறான பழக்கம். 

செயற்கை குளிர் பானங்களை தவிர்ப்பது; குறைந்தது, தினமும், 350 கிராம் பழங்கள் சாப்பிடுவது; தினமும் நடைப்பயிற்சி, போதிய துாக்கம் மற்றும் உடற்பயிற்சி செய்வது போன்றவற்றை பின்பற்றினால், நீரிழிவு வருவதை தடுக்கலாம்!

Read more...

சர்க்கரை அதிகரிக்க காரணம்

புதன், 19 ஜூலை, 2017

தவறான உணவுப் பழக்கங்களாலேயே இந்தியாவில் சர்க்கரை நோயாளிகளின் எண்ணிக்கை அதிகரித்து வருவதாக ஆய்வில் கண்டறியப்பட்டுள்ளது. 8 நகரங்களில் உள்ள 4000 சர்க்கரை நோயாளிகளிடம் நடத்தப்பட்ட ஆய்வில் இது தெரிய வந்துள்ளது.
உணவு, மசாலா மற்றும் சர்க்கரை என்ற தலைப்பில் ஆய்வு ஒன்று நடத்தப்பட்டுள்ளது. இதில், இந்தியர்கள் உட்கொள்ளும் சாதம், மாவுப் பொருட்கள் அல்லது உப்புமா என அனைத்து உணவுப் பொருட்களிலும் கார்போஹட்ரேட்களே அதிகம் நிறைந்துள்ளது, அதிக கலோரிகளை கொண்ட உணவுகள், குறைந்த அளவிலான நார்சத்து கொண்ட உணவுகளை உட்கொள்வதே இந்தியாவில் சர்க்கரை நோயாளிகள் அதிகரித்து வருவதற்கு முக்கிய காரணம் என தெரிய வந்துள்ளது.
பெரும்பாலான இந்தியர்கள் தினமும் 48 சதவீதம் அரிசி பொருட்களை எடுத்துக் கொள்வதாகவும், வெள்ளை அரிசி, ரத்த சர்க்கரை அளவை வேகமாக அதிகரிப்பதாகவும் சென்னைச் சேர்ந்த டாக்டர் வி.மோகன் தெரிவித்துள்ளார்.

நகர்ப்புறங்களில் உள்ள 10ல் 7 பேருக்கு தாங்கள் எதை, எந்த அளவில் உண்கிறோம் என்ற கவனம் சிறிதளவேனும் உள்ளது. இதனால் 60 சதவீதம் கார்போைஹட்ரேக்களை சேர்த்துக் கொள்கிறார்கள். மும்பைவாசிகள் 70 சதவீதமும், சென்னை வாசிகள் 84 சதவீதமும் தங்களின் உணவில் கார்போைஹட்ரேட்களை எடுத்துக் கொள்கின்றனராம்.

இந்தியர்களின் சர்க்கரை நோய் அதிகரிப்பிற்கு மற்றொரு முக்கிய காரணம், அவர்கள் உணவு உட்கொள்ள எடுத்துக் கொள்ளும் நேரம். பெரும்பாலான இந்தியர்கள் வேகமாக சாப்பிடும் பழக்கம் கொண்டிருப்பதால் அவர்களின் கணையம் போதுமான அளவு இன்சுலீனை சுரப்பதில் சிரமப்படுகிறது. இதனால் அதிகப்படியாக சர்க்கரை ரத்தத்தில் கலக்கிறது என இந்திய சர்க்கரை நோய் கழகத்தின் தலைவர் டாக்டர்.ஷாஷன்க் ஜோஷி தெரிவித்துள்ளார். இந்திய சர்க்கரை நோயாளிகள் போதிய கால இடைவெளியில் உணவு எடுத்துக் கொள்வதில்லை என டாக்டர்.ஜோஷி தெரிவித்துள்ளார்.

ஆய்வு அடிப்படையில், தூங்கி எழுந்த பிறகு காலை உணவு எடுத்துக் கொள்ள மும்பைவாசிபேர் இரண்டே முக்கால் மணிநேரமும், ஐதராபாத் வாசிகள் 3 மணி நேரத்திற்கு அதிகமாகவும் எடுத்துக் கொள்வது தெரிய வந்துள்ளது. 80 சதவீதம் மக்கள் ஒரு நாளைக்கு 3 முதல் 4 முறை உணவு உட்கொள்கிறார்களாம். முதலில் உட்கொண்ட உணவு முழுமையாக செரிப்பதற்குள் அடுத்த வேளை உணவை எடுத்துக் கொள்வதும் இந்தியர்களுக்கு சர்க்கரை நோய் அதிகம் வருவதற்கு முக்கிய காரணம் என தெரிய வந்துள்ளது. விழாக்கள் மற்றும் பண்டிகை காலங்களில் அளவில்லாத உணவை எடுத்துக் கொள்வதும் இந்தியர்களுக்கு சர்க்கரை அதிகரிக்க காரணம் என ஆய்வு அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Read more...

சர்க்கரை நோயும், பார்வை பறிப்பும்

செவ்வாய், 28 ஏப்ரல், 2015

இன்ஸ்பெக்டர் குமரேசனுக்கு அன்றும் வி.ஐ.பி. எஸ்கார்ட் டூட்டி. காலை பத்தாகியும், காலை உணவைப் பற்றி நினைத்துப் பார்க்கக் கூட நேரமில்லை. நேற்றிரவோ, அண்ணா சிலைக்கருகே நடந்த தர்ணாவின் பாதுகாப்புப் பணி. எல்லா வேலைகளும் முடிந்து வீடு திரும்பும் போது இரவு மணி பன்னிரெண்டு. சாப்பிட்டோமா , இல்லையா என்றே நினைவு வைத்துக்கொள்ளமுடியாத அளவு வேலைப் பளுவில், சர்க்கரை நோய் [ஷுகர்]க்கான மாத்திரைகளை சரியான நேரத்தில் எப்படி எடுத்துக் கொள்வது?. என்றைக்காவது நினைவு வரும் போது முழுங்குவார்.
கடைசியாக, அவர் சர்க்கரை அளவைப் பரிசோதித்து கிட்டத்தட்ட ஒரு வருடம் இருக்கும். அப்போதே 300க்க அருகில் பயமுறுத்தியிருந்தது. மாத்திரைகளை மாற்றிக்கொடுத்த டாக்டர், பதினைந்து நாட்களில் மறுபரிசோதனைக்கு வரச் சொன்னார். இன்னும் செல்வதற்கு நேரமில்லை.
 “ஆமாம், எவ்வளவு சர்க்கரை இருந்தால் என்ன, சுறுசுறுப்பாகத்தானே இருக்கிறோம், எந்த வேலையில் என்ன குறை வைத்தோம்”, என்று திருப்திபட்டுக் கொண்டார். நோயென்று தெரிந்தும் மெத்தனம் காட்டினார். ஒரு அறிகுறியும் இல்லாமலே,கட்டுப்பாடு இல்லாத சர்க்கரை நோய், அவருடைய, ரத்த நாளங்களின் சுவர்களை, கரையான் போல் அரித்துக் கொண்டிருப்பதை, பாவம் , அவர் அப்போது அறியவில்லை.
ட்யூட்டியில் இருந்தபபோது திடீரென்று பின்னால் யாரோ கூப்பிடுவது போல் இருக்கவே, தலையை வேகமாகத் திருப்பினார். கண்ணில் மின்னல் வெட்டியது போல பளிச்சென்றது. கண் முன்னே, ஒரு சிவப்புப் புள்ளி தோன்றி பின்னர் சிவப்புக்கோடு போல் நீண்டு அப்புறம் ஒட்டடை மாதிரி தெரிந்தது. கண் முன்னே ஏதோ பூச்சி பறக்கிறதோ என்று கண்ணுக்கு முன்னால் கையை அசைத்து விலக்கிப் பார்த்தார். அவர் பார்க்கும் இடத்திலெல்லாம், அதுவும் கூடவே நகர்ந்ததே தவிர, பார்வையிலிருந்து மறையவில்லை. கலவரமடைந்தார். ஆஹா, இது, நம் கண்ணுள்ளிருந்து ஏதோ தெரிகிறது போல, என்ற சந்தேகம் குமரேசனுக்கு உண்டாயிற்று.
கண்பரிசோதனை என்பதாக, எந்தக் கண் டாக்டரிடமோ அல்லது கண் மருத்துவமனையை படியையோ இதுவரை அவர் மிதித்ததில்லை. எப்போதும் அவசரம், நேரமின்மை. கால் மணி நேரத்தில் பரிசோதித்துக் கண்ணாடி கொடுக்க, கம்ப்யூட்டர் கண் பரிசோதனை வசதியோடு, கண்ணாடிக்கடைகள் திறந்து கிடக்கும்போது, எதற்குப்போய் மணிக்கணக்கில் டாக்டரிடம் உட்காருவது, என்பது அவர் எண்ணம். அவ்வாறு, தான் நினைத்துக் கொண்டிருப்பது சரிதானா, என்று இப்போது தோன்றியது.
இரண்டு நாட்கள் கழித்து வேலையெல்லாம் முடிந்து ஒழிந்த நேரத்தில், குமரேசன் என்னிடம் வந்தார். ஒரு கண், முற்றிலும் கறுப்பாக மறைத்து விட்டிருந்தது.  விட்ரியஸ் ஹெமரேஜ், அதாவது, கண்ணுக்குள், இரத்தக்கசிவு என்றேன். அதிர்ந்து போனார்.
ஒழுங்கான கட்டுப்பாடு இல்லாத சர்க்கரை நோயாளிகளுக்கு, டயபடிக் ரெடினோபதி ஏற்படுகிறது. இதை, பல ஸ்டேஜுகளாகப் பிரிக்கலாம். ஆரம்ப நிலையில், சிறுசிறு இரத்தப் புள்ளிகளும், இரத்தக்குழாயில் மைக்ரோ விரிவுகளும், கொழுப்புக் கசிவுகளும் ஏற்படும். நீரிழிவு நோய் கட்டுக்குள் இல்லாத பட்சத்தில், இவை அதிகமாகிக் கொண்டே செல்லும். இந்த நிலை வரை, எந்த அறிகுறியும் இருக்காது. அடுத்ததாக, மாக்குலா எனப்படும், விழித்திரையின் நடுப் பகுதியில் நீர் கோர்த்துக் கொள்ளும் போது தான், பார்வை மங்கலாகத் தெரியும், சிலருக்கு, முற்றிய நிலையான, ப்ரோலிஃபரேடிவ் ரெடினோபதி ஏற்படும் வரை, எந்த அறிகுறியும் இருப்பதில்லை.
நீரிழிவு நோய், கட்டுக்குள் இல்லாதபோது உடலில் உள்ள கண், சிறுநீரகம் போன்ற உறுப்புகளில் உள்ள, சிறு இரத்தக் குழாய்களின் சுவர்களை, கரையான் போல் அரிக்கத் துவங்குகிறது. நாளடைவில், கண்ணும், சிறுநீரகமே முற்றிலும் பாதிக்கப்படுகின்றன. கண் பார்வைக் குறைவு, கால்வீக்கம் ஆகிய அறிகுறிகள், முற்றிய நிலையிலேயே தோன்றுகின்றன.
சர்க்கரை நோய் உள்ளவர்கள், கண்டறிந்ததிலிருந்து சீரிய இடைவெளியில் கண்பரிசோதனை செய்து கொள்ள வேண்டும். லேஸர், கண்ணுக்குள் செலுத்தப்படும் ஊசி மருந்துகள், என சொஸ்தப்படுத்த நிறைய முறைகள் உள்ளன. இந்தத் துறை இன்று பெரும் வளர்ச்சியடைந்துள்ளது. இருப்பினும் தாமதமாக செய்யப்படும் சிகிச்சை முறைகள், முழுப் பார்வையையும் மீட்டுக் கொடுக்க இயலாது.
சர்க்கரைநோயை ஆரம்பம் முதலே, சரியாகப் பரிசோதித்துக் கட்டுக்குள் வைத்திருத்தல் அவசியம். கண்களையும், சீரான இடைவெளியில் பரிசோதனை செய்து கொள்ள வேண்டும். உங்களுடைய சர்க்கரை நோயின் தாக்குதலுக்குத் தக்கவாறு எவ்வளவு மாதங்களுக்கு ஒருமுறை பரிசோதனை தேவை என்பதை உங்கள் கண் மருத்துவர் கூறுவார்.  வருமுன் காத்தலே நலம்!


Read more...

மாரடைப்பை தவிர்க்கும் வழிகள்

சனி, 4 மே, 2013


* நீரிழிவு நோய் உடையவர்கள் சர்க்கரையின் அளவை கட்டுப்பாட்டுக்குள் வைப்பது.

* சரியான சர்க்கரையின் அளவு: சாப்பிடுவதற்கு முன்பு: 70-லிருந்து 110 மி.கி./ டெ.லி வரை சாப்பிட்ட இரண்டு மணிகளுக்குப் பிறகு: 100-லிருந்து 140 மி.கி./ டெ.லி. வரை.

* அதிக எடை உள்ளவராயின் உடல் எடையை கட்டுக்குள் வைத்தல்.

* கொழுப்பு சத்தின் அளவை கட்டுப்பாட்டுக்குள் வைக்க வேண்டும்.மொத்த கொழுப்பின் அளவு 200-க்கும் குறைவாக இருப்பது நல்லது.கெட்ட கொழுப்பின் அளவு 130-ம் குறைவாக இருப்பது நல்லது. நல்ல கொழுப்பின் அளவு 35-க்கு மேல் இருப்பது நல்லது.

* புகைப்பிடித்தலை அறவே நிறுத்தி விட வேண்டுëம்.புகைப்பதை விடுவதுடன் மற்றவர் விடும் புகையை சுவாசிப்பதையும் தவிர்த்தல் வேண்டும்.

* மன அழுத்தத்தை கட்டுப்பாட்டுக்குள் வைக்க வேண்டும். மன அழுத்தத்தை முழுமையாக கட்டுப்படுத்த முடியாவிட்டாலும் சிலவற்றை அதாவது  யோகா, தியானம், இசை, சிரிப்பு பயிற்சி மற்றும் நண்பர்கள் ஆகியவற்றில் அதிக கவனம் செலுத்த வேண்டும்.

* தினமும் உடற்பயிற்சி மற்றும் நடைபயிற்சிகளை மேற்கொள்வது சிறந்தது. இன்றைய குழந்தைகள் கணினி, தொலைக்காட்சி பெட்டி முன் அமரும் நேரத்தை விட விளையாடும் நேரம் மிக மிகக்குறைவு. பெற்றோர்கள் தங்கள் குழந்தைகளை விளையாட செய்ய வேண்டும். சிறார்கள் கொழு கொழு என்று இருப்பது நல்லதல்ல. தினமும் குறைந்தது அரை மணி நேரம் முதல் ஒரு மணி நேரம் வரை உடல் பயிற்சி மற்றும் வேகமான நடை பயிற்சிகளை (அல்லது மெதுவாக ஓடுதல், நீந்துதல், மிதிவண்டி பயிற்சி) மேற்கொள்ள வேண்டும்.

* சமச்சீரான, நல்ல ஆரோக்கியமான உணவு முறைகள் தேவை. உணவை மருந்தைபோல் சாப்பிட்டால் பின்னாளில் மருந்தை உணவாக சாப்பிட வேண்டியது இல்லை.

*கொழுப்பு குறைந்த, உப்பு குறைந்த, எண்ணை குறைந்த, பழங்கள் நிறைந்த, பச்சை காய்கறிகள் உணவே ஆரோக்கியமானது.

* மஞ்சள் கரு இல்லாத முட்டை, வேகவைத்த மீன், தோல் உரித்த கோழி அவ்வப்போது சேர்த்துக் கொள்ளலாம்.மேலும் 30 வயதுக்கு மேற்பட்டவர்கள் ஆண்டுக்கு ஒருமுறையாவது முழு உடல் பரிசோதனை செய்து கொள்வது நல்லது.

Read more...

  © Blogger template Leaving by Ourblogtemplates.com 2008

Back to TOP  

Blogger Widgets