உங்கள் வருகைக்கு நன்றி

சர்க்கரை நோயும், பார்வை பறிப்பும்

செவ்வாய், 28 ஏப்ரல், 2015

இன்ஸ்பெக்டர் குமரேசனுக்கு அன்றும் வி..பி. எஸ்கார்ட் டூட்டி. காலை பத்தாகியும், காலை உணவைப் பற்றி நினைத்துப் பார்க்கக் கூட நேரமில்லை. நேற்றிரவோ, அண்ணா சிலைக்கருகே நடந்த தர்ணாவின் பாதுகாப்புப் பணி. எல்லா வேலைகளும் முடிந்து வீடு திரும்பும் போது இரவு மணி பன்னிரெண்டு. சாப்பிட்டோமா , இல்லையா என்றே நினைவு வைத்துக்கொள்ளமுடியாத அளவு வேலைப் பளுவில், சர்க்கரை நோய் [ஷுகர்]க்கான மாத்திரைகளை சரியான நேரத்தில் எப்படி எடுத்துக் கொள்வது?. என்றைக்காவது நினைவு வரும் போது முழுங்குவார்.
கடைசியாக, அவர் சர்க்கரை அளவைப் பரிசோதித்து கிட்டத்தட்ட ஒரு வருடம் இருக்கும். அப்போதே 300க்க அருகில் பயமுறுத்தியிருந்தது. மாத்திரைகளை மாற்றிக்கொடுத்த டாக்டர், பதினைந்து நாட்களில் மறுபரிசோதனைக்கு வரச் சொன்னார். இன்னும் செல்வதற்கு நேரமில்லை.
 ஆமாம், எவ்வளவு சர்க்கரை இருந்தால் என்ன, சுறுசுறுப்பாகத்தானே இருக்கிறோம், எந்த வேலையில் என்ன குறை வைத்தோம்”, என்று திருப்திபட்டுக் கொண்டார். நோயென்று தெரிந்தும் மெத்தனம் காட்டினார். ஒரு அறிகுறியும் இல்லாமலே,கட்டுப்பாடு இல்லாத சர்க்கரை நோய், அவருடைய, ரத்த நாளங்களின் சுவர்களை, கரையான் போல் அரித்துக் கொண்டிருப்பதை, பாவம் , அவர் அப்போது அறியவில்லை.
ட்யூட்டியில் இருந்தபபோது திடீரென்று பின்னால் யாரோ கூப்பிடுவது போல் இருக்கவே, தலையை வேகமாகத் திருப்பினார். கண்ணில் மின்னல் வெட்டியது போல பளிச்சென்றது. கண் முன்னே, ஒரு சிவப்புப் புள்ளி தோன்றி பின்னர் சிவப்புக்கோடு போல் நீண்டு அப்புறம் ஒட்டடை மாதிரி தெரிந்தது. கண் முன்னே ஏதோ பூச்சி பறக்கிறதோ என்று கண்ணுக்கு முன்னால் கையை அசைத்து விலக்கிப் பார்த்தார். அவர் பார்க்கும் இடத்திலெல்லாம், அதுவும் கூடவே நகர்ந்ததே தவிர, பார்வையிலிருந்து மறையவில்லை. கலவரமடைந்தார். ஆஹா, இது, நம் கண்ணுள்ளிருந்து ஏதோ தெரிகிறது போல, என்ற சந்தேகம் குமரேசனுக்கு உண்டாயிற்று.
கண்பரிசோதனை என்பதாக, எந்தக் கண் டாக்டரிடமோ அல்லது கண் மருத்துவமனையை படியையோ இதுவரை அவர் மிதித்ததில்லை. எப்போதும் அவசரம், நேரமின்மை. கால் மணி நேரத்தில் பரிசோதித்துக் கண்ணாடி கொடுக்க, கம்ப்யூட்டர் கண் பரிசோதனை வசதியோடு, கண்ணாடிக்கடைகள் திறந்து கிடக்கும்போது, எதற்குப்போய் மணிக்கணக்கில் டாக்டரிடம் உட்காருவது, என்பது அவர் எண்ணம். அவ்வாறு, தான் நினைத்துக் கொண்டிருப்பது சரிதானா, என்று இப்போது தோன்றியது.
இரண்டு நாட்கள் கழித்து வேலையெல்லாம் முடிந்து ஒழிந்த நேரத்தில், குமரேசன் என்னிடம் வந்தார். ஒரு கண், முற்றிலும் கறுப்பாக மறைத்து விட்டிருந்தது.  விட்ரியஸ் ஹெமரேஜ், அதாவது, கண்ணுக்குள், இரத்தக்கசிவு என்றேன். அதிர்ந்து போனார்.
ஒழுங்கான கட்டுப்பாடு இல்லாத சர்க்கரை நோயாளிகளுக்கு, டயபடிக் ரெடினோபதி ஏற்படுகிறது. இதை, பல ஸ்டேஜுகளாகப் பிரிக்கலாம். ஆரம்ப நிலையில், சிறுசிறு இரத்தப் புள்ளிகளும், இரத்தக்குழாயில் மைக்ரோ விரிவுகளும், கொழுப்புக் கசிவுகளும் ஏற்படும். நீரிழிவு நோய் கட்டுக்குள் இல்லாத பட்சத்தில், இவை அதிகமாகிக் கொண்டே செல்லும். இந்த நிலை வரை, எந்த அறிகுறியும் இருக்காது. அடுத்ததாக, மாக்குலா எனப்படும், விழித்திரையின் நடுப் பகுதியில் நீர் கோர்த்துக் கொள்ளும் போது தான், பார்வை மங்கலாகத் தெரியும், சிலருக்கு, முற்றிய நிலையான, ப்ரோலிஃபரேடிவ் ரெடினோபதி ஏற்படும் வரை, எந்த அறிகுறியும் இருப்பதில்லை.
நீரிழிவு நோய், கட்டுக்குள் இல்லாதபோது உடலில் உள்ள கண், சிறுநீரகம் போன்ற உறுப்புகளில் உள்ள, சிறு இரத்தக் குழாய்களின் சுவர்களை, கரையான் போல் அரிக்கத் துவங்குகிறது. நாளடைவில், கண்ணும், சிறுநீரகமே முற்றிலும் பாதிக்கப்படுகின்றன. கண் பார்வைக் குறைவு, கால்வீக்கம் ஆகிய அறிகுறிகள், முற்றிய நிலையிலேயே தோன்றுகின்றன.
சர்க்கரை நோய் உள்ளவர்கள், கண்டறிந்ததிலிருந்து சீரிய இடைவெளியில் கண்பரிசோதனை செய்து கொள்ள வேண்டும். லேஸர், கண்ணுக்குள் செலுத்தப்படும் ஊசி மருந்துகள், என சொஸ்தப்படுத்த நிறைய முறைகள் உள்ளன. இந்தத் துறை இன்று பெரும் வளர்ச்சியடைந்துள்ளது. இருப்பினும் தாமதமாக செய்யப்படும் சிகிச்சை முறைகள், முழுப் பார்வையையும் மீட்டுக் கொடுக்க இயலாது.
சர்க்கரைநோயை ஆரம்பம் முதலே, சரியாகப் பரிசோதித்துக் கட்டுக்குள் வைத்திருத்தல் அவசியம். கண்களையும், சீரான இடைவெளியில் பரிசோதனை செய்து கொள்ள வேண்டும். உங்களுடைய சர்க்கரை நோயின் தாக்குதலுக்குத் தக்கவாறு எவ்வளவு மாதங்களுக்கு ஒருமுறை பரிசோதனை தேவை என்பதை உங்கள் கண் மருத்துவர் கூறுவார்.  வருமுன் காத்தலே நலம்!


கருத்துரையிடுக

  © Blogger template Leaving by Ourblogtemplates.com 2008

Back to TOP  

Blogger Widgets