உங்கள் வருகைக்கு நன்றி

கல்வி லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி
கல்வி லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி

திட்டமிட்டு செய்ததால் வெற்றி,

ஞாயிறு, 28 பிப்ரவரி, 2021

காஞ்சிபுரம் மாவட்டம், உத்திரமேரூர் தாலுகா, விண்ணமங்கலம் கிராமத்தில், ஒருங்கிணைந்த விவசாய பண்ணை நடத்துவது பற்றி ஜெகன் வின்சென்ட்: அமெரிக்கா வில், மென்பொருள் துறையில், வேலை பார்த்துக் கொண்டு இருந்தேன். அங்கே, கொஞ்ச விவசாய நிலத்தில், நிறைய லாபத்தை விவசாயிகள் பார்த்தனர். குறிப்பாக, சிறிய இடத்தில், மீன் குட்டை போட்டு, அதில் மீன் வளர்ப்பர்; அதன் மேல் தொட்டிகள் கட்டி, செடிகள், பயிர்களை வளர்ப்பர்.இது போன்ற விவசாயத்தை, 'அக்வாபோனிக்ஸ்' என்றும், 'ஹைட்ரோபோனிக்ஸ்' என்றும் அழைக்கின்றனர். 2003ல், நாடு திரும்பியதும், இந்த, 1.25 ஏக்கர் இடத்தை வாங்கி, நவீன விவசாயம் செய்யத்

துவங்கினேன்.முதலில், 1 லட்சம் லிட்டர் தண்ணீர் கொள்ளளவு கொண்ட, மீன் தொட்டி அமைத்தேன். அதன்மேல், கான்கிரீட் இணைப்புகளை ஏற்படுத்தி, அதில் சிறிய தொட்டிகள், பிளாஸ்டிக் வாளிகளில் செடிகள், பூக்கள், பயிர்களை வளர்க்கத் துவங்கினேன்.அப்படியே படிப்படியாக, மீன் தொட்டியின் அளவை, 70 லட்சம் லிட்டராக அதிகரித்துள்ளது போல, அதன் மேல் உள்ள வாளிகளின் எண்ணிக்கையையும் அதிகரித்து உள்ளேன். மேலும், உயர் மட்டத்தில் வளரும் செடிகள், கொடிகள் போன்ற வற்றை வளர்த்து, அதன் மூலம் காய்கறிகளை பயிரிடுகிறேன்.
கட்லா, ரோகு, மிர்கால், திலேப்பியா என, ஒன்பது வகையான மீன்களை வளர்க்கிறேன். அது போல, தக்காளி, கத்தரி, மிளகாய் போன்ற காய்கறிகளையும் பயிரிடுகிறேன். தரையில் கிடைக்கும் மகசூலை விட, பக்கெட்டில் வளரும் செடிகள் மூலம், கூடுதல் மகசூல் கிடைக்கிறது.
இதில் பல நன்மைகள் உண்டு. ஒரு பக்கெட்டில் வளரும் செடியில் நோய் தாக்கினால், அந்த பக்கெட்டை மட்டும் அப்புறப்படுத்தி வைத்து விட முடிகிறது; இதனால், பிற செடிகளுக்கு நோய் பரவல் கட்டுப்படுத்தப்படுகிறது.
இது போன்ற, பல நவீன தொழில்நுட்பங்களை பயன்படுத்தி, நல்ல விளைச்சல் மட்டும் லாபம் சம்பாதிக்கிறேன். இந்த பண்ணையை துவக்க, இதுவரை, 35 லட்சம் ரூபாய் வரை, செலவு செய்து உள்ளேன். ஆனால், ஆண்டுதோறும், அந்த தொகையை விட, அதிக லாபம்
சம்பாதிக்கிறேன்.ஆண்டிற்கு, 30 டன் மீன் கிடைக்கிறது. இதிலிருந்து மட்டுமே, 54 லட்ச ரூபாய் கிடைக்குது. அது போல, மாதம், 3 டன் காய்கறிகளும் உற்பத்தியாகின்றன. அந்த லாபம் தனி. இது போக, கடக்நாத் கோழிகளையும் வளர்க்கிறேன்.
இப்படி ஒவ்வொன்றையும் திட்டமிட்டு செய்வதால், 7 ஏக்கர் நிலத்தில் கிடைக்கும், விளைச்சல் மற்றும் லாபத்தை, 1.25 ஏக்கரில் எடுக்கிறேன்!

Read more...

தேர்வு எழுத போறீங்களா?.

வெள்ளி, 1 மார்ச், 2019


இடைவிடாமல் விழுந்து விழுந்து படிக்கும் மாணவர்களை விட, இடையிடையே ஓய்வு எடுத்து படிக்கும் மாணவர்களால் தான், அதிகம் ஞாபகம் வைத்திருக்க முடிகிறது...' என்கின்றனர், ஜப்பான், 'பிசியலாஜிக்கல் சயின்ஸ்' நிறுவன ஆராய்ச்சியாளர்கள்.
* துாக்கம் குறைந்தால், கற்றுக்கொள்ளும் திறன், நோய் எதிர்ப்பு சக்தி, உணர்ச்சிகளை கட்டுப்படுத்தும் திறன் போன்ற முக்கிய அம்சங்கள் பாதிக்கப்படும்.

* 'தேர்வு நேரத்தில், விடிய விடிய கண் விழித்து படிப்பது, தேர்வில் எதிர்மறையான பயனை கொடுக்கவும் வாய்ப்பு உள்ளது...' என, எச்சரிக்கின்றனர், ஆராய்ச்சியாளர்கள்.

* மாணவர்களே... ஆண்டு இறுதி தேர்வில், சிறப்பான மதிப்பெண் பெற வேண்டுமா? தேர்வு நடைபெறும் வாரத்தில், 'போதுமான நேரம் துாங்கி எழுங்கள்...' என்கின்றனர்.

* தேர்வு சமயங்களில், இரவு, 8:00 மணி நேரம் ஆழ்ந்து துாங்கி எழுந்த மாணவர்கள், தேர்வுகளில் நல்ல மதிப்பெண் பெற்றிருப்பது அமெரிக்காவின், 'பேய்லர்' பல்கலை கழக ஆய்வில் தெரிய வந்துள்ளது.

* உடலின் நீர்சத்துக்கும், அறிவாற்றலுக்கும் நெருங்கிய தொடர்பு இருப்பதாக, 'ஜியார்ஜிய இன்ஸ்டிடியூட் ஆப் டெக்னாலஜி' ஆய்வில் கண்டறிந்துள்ளனர்.

* 'உடலில் நீர்ச்சத்து குறைந்தவர்களுக்கு, அடிக்கடி கவனச் சிதறல் ஏற்படுவதால், தேர்வு காலங்களில், தினசரி, தேவையான அளவு தண்ணீர் குடிக்க தவறாதீர். தேர்வுக்கு செல்லும் முன், ஒரு டம்ளர் தண்ணீர் குடித்து சென்றால், அது, மூளையில், 'ஆல்பா' அலைகளை அதிகரிக்க செய்து, நினைவாற்றல் குறையாமல் இருக்க உதவுகிறது...' என்கின்றனர்.

* தேர்வுகளில் நல்ல மதிப்பெண் பெற வேண்டுமா... 'காலை உணவை தவிர்க்காதீர்... தேர்வு காலங்களில் எடுத்துக் கொள்ளும் உணவுகள் எளிமையானதாகவும், ஆரோக்கியமானதாகவும் இருக்க வேண்டும்... காலை உணவை தவிர்க்கும் மாணவர்களுக்கு, தேர்வு நேரத்தில், கவனச் சிதறல் ஏற்படும்...' என, கண்டறிந்துள்ளனர், இங்கிலாந்து நாட்டு ஆராய்ச்சியாளர்கள்.

* மேலும் சில குறிப்புகள்: மேலும், 'கீரை வகைகள், 'ஒமேகா - 3' சத்துள்ள பருப்பு வகைகள் சிகப்பு நிற காய்கறிகள், பெர்ரி மற்றும் ஆரஞ்சு பழங்கள் ஆகியவை மூளையை இளமையாக வைக்க உதவுகிறது...' என்கின்றனர்.

* எப்போதும் காற்றோட்டமான இடத்தில் அமர்ந்து படிக்கவும். உங்கள் இடப்புறம், மின்விளக்கு இருக்கும்படி அமைப்பது நல்லது. நீங்கள் படிக்கும் இடத்தில், தேர்வு அட்டவணையை கண்ணில் படும்படி ஒட்டி வையுங்கள்

* தொடர்ந்து படிக்காமல், ஒரு மணி நேரத்திற்கு ஒருமுறை சற்று அமைதியாக, 10 நிமிடம் கண்களை மூடி, படித்ததை நினைவுபடுத்திய பின், மீண்டும் படிக்க ஆரம்பித்தால், மூளை சுறுசுறுப்பாகும். ஞாபகத்துக்கு வராத பகுதியை மறு வாசிப்பு செய்து, புதிய பகுதிக்கு சென்று படிக்கலாம்

* துாக்கம் வருவது போல் இருந்தால், தோப்புக்கரணம் போட்டால், துாக்கம் போய், மூளை சுறுசுறுப்பாகி விடும். தண்ணீரை சிறிது சிறிதாக பருகுவதால், அதிக சக்தி பெற முடியும் 

* அடிக்கடி மாதிரி தேர்வுகள் எழுதி பயிற்சி பெறுவது, எழுதும் வேகத்தையும், தன்னம்பிக்கையையும் அதிகரிக்கும்

* தேர்வு எழுத துவங்கும் முன், கேள்விகளை ஒருமுறைக்கு இருமுறை நன்கு படித்து, எதை எழுத போகிறீர்கள் என்பதை தீர்மானித்து, ஒரு பக்கத்திற்கு, 20 வரிகளாக, அழகான கையெழுத்துடன், தலைப்புகள் கொடுத்து, அடித்தல் திருத்தலின்றி எழுதவும்

* முக்கியமானவற்றிற்கு அடிக்கோடிட்டு, மதிப்பெண்ணுக்கு ஏற்றவாறு தேவையான படங்கள், 'க்ராப்ட்' போன்றவற்றோடு, சரியான கேள்வி எண்ணுடன் எழுதவும்


பெண்களின் உணர்வுகளை புரிந்துக்கொள்வதை விட பெண்களுக்கும் உணர்வுகள் உண்டு என்று புரிபவனே சிறந்தவன் 

Read more...

'சாக்லேட் பொக்கே' தயாரிப்புத் தொழில்

ஞாயிறு, 2 டிசம்பர், 2018


 'சாக்லேட் பொக்கே' தயாரிப்பதை முழு நேர தொழிலாக்கி, லாபம் ஈட்டி வரும், சென்னையைச் சேர்ந்த மாலதி: சிறு வயது முதலே, கலைப் பொருட்கள் செய்வதில் ஆர்வம் அதிகம். திருமணத்திற்குப் பின், வீட்டில் இருந்தே வேலை பார்க்க நினைத்தேன். அதன்படி, கலைப் பொருட்கள் மற்றும் நகைகள் செய்து, விற்று வந்தேன்.என் குழந்தைகளுக்காக, வீட்டிலேயே சாக்லேட் செய்து வந்த நான், விழாக்கள், விசேஷங்களுக்கு, அதை பரிசாக கொடுக்க ஆரம்பித்தேன். இதையே கொஞ்சம் வித்தியாசமாக செய்ய நினைத்ததில், 'சாக்லேட் பொக்கே' யோசனை வரவே, உடனே களத்தில் இறங்கினேன்!பயிற்சிக்குச் செல்லாமல், ஒரு பொக்கே வாங்கி, அதை எப்படி செய்துள்ளனர் என, பிரித்து பார்த்தேன். பிறகு, என்னென்ன வகைகளில் வித்தியாசமாக செய்யலாம் என, பல கடைகளில் இருந்த மாடல்களை பார்த்துக் கற்றுக் கொண்டேன். ஒரு விசேஷத்துக்கு, நான் செய்த சாக்லேட் பொக்கேயை பரிசாக கொடுத்தேன். அதுவே, இப்போது தொழிலாக மாறிவிட்டது.பொதுவாகவே, சாக்லேட்டில், 'கோக்கோ'வை தான், அனைவரும் அதிகமாக சேர்ப்பர். ஆனால் நான், 'நட்ஸ்' வகைகளை தான் அதிகமாக சேர்த்து செய்வேன். ஆரோக்கியமும், சுவையும் உடையது, நட்ஸ் என்பதால், நான் செய்த சாக்லேட், அனைவருக்கும் பிடித்து போனது.வெறும் காகிதப்பூ பொக்கே, நமக்கு பயன் தராது; அசல் பூக்களில் செய்யும் பொக்கே, குறிப்பிட்ட நேரத்துக்கு பின் வாடிவிடும் என்பதால், அதனாலும் பயனில்லை. ஆனால், 'சாக்லேட் பொக்கே'வைப் பொருத்தவரை, 'வேஸ்ட்' இருக்காது! அதனால், தொடர்ந்து எனக்கு, 'ஆர்டர்கள்' வர ஆரம்பித்தன. சில கடைகளிலும் கேட்டனர்.'இதை செய்வது குறித்து, எங்களுக்கு பயிற்சி தர முடியுமா...' என, பலர் கேட்க, வகுப்பும் எடுத்தேன். அதன் மூலமாக வந்த, 'ஆர்டர்'களையும் செய்து கொடுத்தேன். இதனால் என்னிடம் பயிற்சி எடுத்தவர்களுக்கும், நல்ல வருமானம் கிடைத்து வருகிறது!இது தவிர, இப்போது, கலைப் பொருட்களையும் செய்து கொடுக்கிறேன். நகை செய்வது மற்றும் கோடை வகுப்பும் எடுக்கிறேன். இவை எல்லாவற்றுக்கும் அரசு சான்றிதழ்கள் வாங்கி, ஒரு, 'பிராண்ட்' ஆக மாற்ற முயற்சி செய்து வருகிறேன். என் எதிர்கால திட்டமே, இதன் மூலம், பெண்கள் பலருக்கும் வேலைவாய்ப்பை ஏற்படுத்தி, அவர்களின் வருமானத்துக்கு வழி செய்வது தான்!தொடர்புக்கு: 98407 08153

Read more...

சென்னை பல்கலை, தனியார் கல்லுாரிகளில் இலவச கல்வி வழங்கப்படுகிறது.

புதன், 4 ஜூலை, 2018

பிளஸ் 2வில் அதிக மதிப்பெண் பெற்ற மாணவர்களுக்கு, சென்னை பல்கலை சார்பில், தனியார் கல்லுாரிகளில் இலவச கல்வி வழங்கப்படுகிறது. இந்த திட்டம், மாணவர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றுள்ளது. பிளஸ் 2வில் அதிக மதிப்பெண் பெறும், பொருளாதாரத்தில் பின்தங்கிய மாணவர்களுக்கும், அவர்களின் குடும்பத்துக்கும் வழிகாட்டும் வகையில், சென்னை பல்கலை நடத்தும், இலவச மாணவர் சேர்க்கை, எட்டாம் ஆண்டில் அடியெடுத்து வைத்துள்ளது.பல்கலையின் பெரும் முயற்சியால், 80க்கும் மேற்பட்ட முன்னணி
கல்லுாரிகள், இலவச கல்வி திட்டத்தில் மாணவர்களை சேர்க்க முன்
வந்துள்ளன.சென்னை பல்கலையின் துணைவேந்தர் துரைசாமி, பதிவாளர் சீனிவாசன் மேற்பார்வையில், பேராசிரியர் ஜோதி சிவஞானம் தலைமையிலான இலவச மாணவர் சேர்க்கை கமிட்டியினர், இலவச திட்டத்துக்கு மாணவர்களை தேர்வு செய்கின்றனர். இந்த திட்டத்தில், 2017ம் ஆண்டில், 200 மாணவர்கள் சேர்க்கப்பட்டனர். இந்த ஆண்டு, 600 பேர் விண்ணப்பித்துள்ளனர். அவர்களுக்கு, ஜூன், 29 முதல், சென்னை பல்கலையில் நேர்முகத் தேர்வு நடத்தப்பட்டு, மாணவர் தேர்வு நடந்து வருகிறது. நேர்முகத் தேர்வு முடிந்து, இந்த வார இறுதியில் இலவச கல்விக்கு தேர்வு செய்யப்பட்ட மாணவர்களின் பட்டியல் வெளியிடப்பட உள்ளது.இத்திட்டத்தில் தேர்வு செய்யப்படும் மாணவர்கள், மூன்று ஆண்டுகளும், கல்விக் கட்டணம் செலுத்த தேவை இல்லை. கட்டண சுமையை, அவர்கள் படிக்கும் அந்தந்த தனியார் கல்லுாரிகளே ஏற்றுக்கொள்கின்றன.மற்ற பல்கலைகளும், இந்த திட்டத்தை, தங்கள்இணைப்பு கல்லுாரிகளில் செயல்படுத்தினால், மாநிலம் முழுவதும், பிளஸ் 2வில் அதிக மதிப்பெண் பெறும், பொருளாதாரத்தில் பின்தங்கிய மாணவர்கள், தரமான உயர் கல்வியை இலவசமாக பெற முடியும் என்பது குறிப்பிடத்தக்கது.

கட்டணம் திரும்ப கிடைக்கும் : இலவசக் கல்வி திட்டத்தில், லயோலா கல்லுாரி, ஸ்டெல்லா மேரீஸ், விவேகானந்தா, எத்திராஜ், டி.ஜி.வைஷ்ணவா, குருநானக், ஏ.எம்.ஜெயின் என, முன்னணி கல்லுாரிகளில், பி.காம்., - பி.எஸ்சி., என, முன்னணி படிப்புகளில் மாணவர்கள் சேர்க்கப்படுகின்றனர். இந்த திட்டத்தில் தேர்வாகும் மாணவர், ஏற்கனவே ஒரு கல்லுாரியில், ஒரு பாடப்பிரிவில் சேர்ந்திருந்தால், அவர் இலவச கல்வி திட்டத்தில் தேர்வாகும் போது, அந்த கல்லுாரி இடத்தைவிரும்பினால் அவருக்கு ஒதுக்கப்படும். அந்தகல்லுாரியில், அவர் செலுத்திய கட்டணமும் திரும்ப வழங்கப்படும் என்பது குறிப்பிடத்தக்கது.

'வெளிப்படைத்தன்மை' : இலவசக் கல்வி திட்டத்தில், மிக வெளிப்படைத் தன்மையுடன், எந்த சிபாரிசுக்கும் இடமின்றி, மாணவர்களை தேர்வு செய்கிறோம். அதனால், இந்த திட்டம் நல்ல வரவேற்பை பெற்றுள்ளது. நாங்கள் நிர்ணயித்துள்ள தகுதிக்கு உரியவர்களே, பெரும்பாலும் விண்ணப்பிக்கின்றனர். மற்ற வசதியுள்ள மாணவர்கள், தாங்களாகவே விண்ணப்பிப்பதில்லை. இந்த திட்டத்தின் வெற்றிக்கு அதுவும் முக்கிய காரணம்

துரைசாமி, துணைவேந்தர், சென்னை பல்கலைக்கழகம்

Read more...

திட்டமிட்டு செயல்படுத்தினால் நேரத்தை கட்டுப்படுத்தலாம்.

திங்கள், 2 ஏப்ரல், 2018


மண்ணில் மனிதன் பிறந்ததிலிருந்து நேரத்தின் பங்கு முக்கியமானது. நேரத்தை பொறுத்து தான் அனைத்து செயல்களும் அரங்கேறுகின்றன. ஒன்றை நாம் அடைய வேண்டு மெனில்,நேரத்தின் போக்கிற்கேற்ப ஓடிக் கொண்டிருக்கிறோம். ஏதாவது ஒரு நேரத்தில் வாழ்க்கை வாழ்வதை மறந்துவிட்டு ஓடுகிறோமே என்று தோன்றும். இதற்கு காரணம் நேரத்தை முறையாக திட்டமிட்டு பயன்படுத்தாமல் இருப்பது தான். 
சமநிலைப்படுத்துங்கள்
சமநிலை என்பது எல்லாவற்றிலும் இருப்பதால் இப்பூவுலகம் அன்றாடம் இயங்கிக் கொண்டிருக்கிறது. நாம் வேலை செய்வதில் துவங்கி வேடிக்கை விளையாட்டுகளில் ஈடுபடுவது முடிய அனைத்து செயல்களுக்கும் இது பொருந்தும். ஒரு குறிப்பிட்ட நேரத்தில் ஒரு செயலை எந்த அளவு முடிக்க முடியும் என திட்டமிட்டு அதன் படி, நேரத்தை சமநிலைப்படுத்துங்கள். பின் அந்த செயலை துவங்கி வெற்றிகரமாக முடியுங்கள். 
உங்களை அறியுங்கள்
நேர மேலாண்மையில் மிகவும் முக்கியமான ஒன்று இது தான். உங்களை நீங்கள் முழுமையாக அறிந்திருந்தால் மட்டுமே நேரத்தை உரிய முறையில் கட்டுப்படுத்தி நிர்வகிக்க முடியும். ஒரு காரியத்தை உங்களால் செய்ய முடியுமா? செய்வதற்கான திறமை உள்ளதா? செயல் திறம் உள்ளதா? உள்ளிட்டவற்றை நீங்கள் அறிந்தால் மற்றவர்களின் புத்திமதியோ, உதவியோ உங்களுக்கு தேவையில்லை. உங்கள் நேரத்தை தரமாக நிர்ணயித்து காரியத்தை வெற்றிகரமாகவும் குறித்த நேரத்திலும் முடிப்பீர்கள். 
எதார்த்தமாக பழகுங்கள்
எதார்த்தமான விஷயங்களை உங்களிடம் இருந்து எதிர்பார்க்க கற்றுக்கொள்ளுங்கள். நீங்கள் செய்யும் செயல்களை உங்கள் திறமை மற்றும் செயல்திறம் ஆகியவற்றுடன் ஒப்பிட்டு பாருங்கள். கடினமான செயல்களை உங்கள் மீது சுமத்திக் கொள்ளாதீர்கள். 
செயலை பிரித்துக் கொள்ளுங்கள்
பெரிய அளவிலான ஒரு காரியத்தை செய்யத் துவங்கும் முன் அதை சிறு சிறு பாகங்களாக பிரித்துக் கொள்ளுங்கள். இல்லையெனில் வேலைப்பளு மற்றும் மனஅழுத்தம் உங்களை மூழ்கடித்து விடும். நேரத்திற்கு தகுந்தவாறு சிறு பாகங்களாக செயலை பிரித்து செய்தால் அதை முழுமையாகவும், பதட்டம் இல்லாமலும் பார்க்கலாம். 
திட்டமிட கற்றுக்கொள்ளுங்கள்
உங்களுடைய வேலைகளையும் அவற்றை தகுந்த நேரத்தில் முடிப்பதற் கான வழிகளையும் திட்டமிட கற்றுக் கொள்ளுங்கள். ஏனெனில் மேற்கூறியது போல், திட்டமிடும் பொழுதே ஒரு செயலுக்கான நேரமும், செயலை பாகங்களாக பிரித்து முடிப்பதற்கான முயற்சிகளும் நமக்கு தெரிந்துவிடும். இது போல் நாம் மேற்கொள்ளும் ஒவ்வொரு காரியத்தையும் திட்டமிட்டு செயல்படுத்தினால் நேரத்தை கட்டுப்படுத்தலாம்.         -     தினமலர்

Read more...

பள்ளிக்கு போகாமலே, 'பாஸ்' ஆகும், மாற்று முறை

செவ்வாய், 12 செப்டம்பர், 2017

இன்றைய கல்வி முறை, மனப்பாடத்தை மட்டுமே ஊக்குவிக்கும் முறையாக மாறி விட்டது. பல பள்ளிகளில் பாடங்களைச் சரிவர நடத்தாமலே, கேள்வி-- பதில்களை மனப்பாடம் செய்து, மதிப்பெண் பெற வைக்கின்றனர். விளையாட்டு, வேடிக்கை எதுவும், இன்றைய குழந்தைகளின் வாழ்வில் இல்லை. குழந்தைகளை மதிப்பெண் வாங்கும் இயந்திரமாக மாற்ற, முயற்சிக்காதீர்கள்    மத்திய அரசின் மனிதவள துறையின் கீழ் இயங்கும், தன்னாட்சி பெற்ற நிறுவனமான, தேசிய திறந்த நிலை பள்ளி நிறுவனம். இங்கு, ஆரம்ப, அடிப்படை கல்வி, 8ம் வகுப்புக்கு சமமானது. உயர்நிலை, மேல்நிலை கல்வியை, வீட்டில் இருந்தவாறே படிக்கலாம். இதில், நமக்கு பிடித்த பாடங்களை தேர்ந்தெடுக்கும் வசதி உள்ளது. 10ம் வகுப்பிலேயே ஆங்கிலம், தமிழ், ஹிந்தி முதலான, 17 மொழிகளில் விருப்பப்பட்ட ஒன்று அல்லது இரண்டு மொழிகளை தேர்வு  செய்யலாம். கணிதம், அறிவியல், பொருளியல், வணிகவியல், ஓவியம், கணக்குப் பதிவியல் போன்ற, 11 பாடங்களில், 3 - 5 வரை தேர்ந்தெடுத்து படிக்கலாம். மேல்நிலையில் ஒன்பது மொழிகளும், 33 பாடத் துறைகளும் உள்ளன. உயர்நிலை மற்றும் மேல்நிலை வகுப்பில், நம் விருப்பத்திற்கும், ஆர்வத்திற்கும் ஏற்ற வகையில், 5 - 7 பாடங்களில் தேர்வு எழுதலாம்.  இந்த முறை படிப்பால் நேரம், தாங்கள் விரும்பியவற்றை கற்கும் வசதியும், சுதந்திரமும் இருக்கிறது. இந்திய மெடிக்கல் கவுன்சில், ஐ.ஐ.டி., முதலான பொறியியல் கல்லுாரிகளுக்கான குழுமம், அனைத்துப் பல்கலைக்கழகங்கள் எல்லாவற்றிலும் அங்கீகாரம் பெற்ற அமைப்பு இது. எனவே, இங்கு, 10ம் வகுப்பு முடித்தவர்கள், எந்த மாநிலத்தில் உள்ள பள்ளியிலும், பிளஸ் 1 சேர முடியும். மேல்நிலைப் படிப்பை முடித்தவர்கள், தாங்கள் தேர்ந்தெடுத்த விருப்ப பாடத்திற்கேற்ப, மருத்துவமோ, பொறியியலோ, வணிகவியல் சார்ந்த படிப்புகளையோ தொடர முடியும். இந்தாண்டு, சென்னையில் இருந்து, ஐ.ஐ.டி., நுழைவுத் தேர்வில் முதலிடம் பிடித்தவர், தேசிய திறந்தநிலை பள்ளி மாணவர் தான். தங்கள் பிள்ளைகளுக்கு சமூகத்தில் பழக வாய்ப்பு தர வேண்டியது பெற்றோரின் பொறுப்பு.   குழந்தைகளை வீட்டில் இருந்தே படிக்க வைக்கலாம். பெற்றோர் இருவரும் வேலைக்கு சென்று, தனிமையில் இருக்க நேரும் குழந்தைகளுக்கு, இந்த முறை கொஞ்சம் கடினம் தான். இல்லையெனில், இதற்காக தனி வகுப்புகள் ஏற்பாடு செய்ய நேரிடும்.  

Read more...

நீங்கள் நிர்வகிக்க வேண்டியது எதை ?

வியாழன், 20 ஜூலை, 2017

அடிக்கடி டைம் மேனேஜ்மெண்ட் பற்றி என்னிடம் ஒரு கேள்வி எழுப்பப் படும்.‘நேரத்தை நிர்வகிப்பது எப்படி?’நேரத்தை நீங்கள் எதற்காக நிர்வகிக்க வேண்டும்? தன் சுழற்சி, சூரியனை வலம் வரும் பாதை என்று எல்லாவற்றையும் வைத்து நேரத்தை பூமி அல்லவா நிர்வகித்துக்கொண்டு இருக்கிறது? 24 மணி நேரம், 30 நாட்கள், 365 நாட்கள் என்பதை எல்லோருக்கும் பொதுவாக பூமியல்லவா கவனித்துக்கொள்கிறது?எந்த நேரத்தில் எதைச் செய்து முடிப்பது என்று இருக்கும் நேரத்தைப் பங்கிட்டுப் பயன்படுத்தும் எளிதான வேலைதான் உங்களுடையது. தேவையில்லாமல் அதை ஏன் சிக்கலாக்கிக் கொள்கிறீர்கள்?
கவனியுங்கள்
பெரும்பாலான வேலைகளை நீங்களாகத்தான் விரும்பி ஏற்றிருக்கிறீர்கள். யாரும் உங்கள் மீது திணிக்கவில்லை.சிலர், வாரம் ஒருமுறை பார்ட்டிக்குச் செல்வர். வேறு சிலர் தினமும் கோயிலுக்குச் செல்வர். இப்படி ஒவ்வொரு தனி நபரும் எதை அவசியம் என்று கருதுகிறார், எதற்கு முக்கியத்துவம் தர விரும்புகிறார் என்பதை வைத்துத்தான் இருக்கும் நேரத்தைப் பங்கிட முடியும்.
பெரிய நிறுவனங்களின் அதிபர் அவர். வேலைகள் முடிந்து வீடு திரும்ப தினமும் தாமதமாகிவிடும். ஓர் இரவு வீடு திரும்பியபோது, அவருடைய ஆறு வயது மகன் உறங்காமல் அவருக்காக விழித்திருப்பதைக் கண்டார்.
“என்ன மகனே?”
“அப்பா, ஒரு மணி நேரத்தில் நீங்கள் எவ்வளவு சம்பாதிப் பீர்கள்?”சிறு வயதிலேயே வியாபாரத்தில் ஆர்வம் காட்டும் மகனை அதிபர் மகிழ்ச்சியுடன் பார்த்தார். சில கணக்குகள் போட்டார். “பத்தாயிரம் ரூபாய் வரை சம்பாதிப்பேன். ஏன் கண்ணா?”மகன் தன் பிஞ்சுக் கைகளை அவரிடம் நீட்டினான். “எனக்கு ஐந்தாயிரம் ரூபாய் கடனாகக் கொடுப்பீர்களா அப்பா? வளர்ந்து வேலைக்குப் போனதும் திருப்பித் தருகிறேன்”.
தந்தை அதிர்ந்தார். “உனக்கு எதற்கு ஐந்தாயிரம் ரூபாய்?”
“உங்களுடைய நேரத்தில் அரை மணி நேரத்தை வாங்கு வதற்காக அப்பா!” என்றான் மகன்.
எதற்கு முக்கியத்துவம் தர வேண்டும், எதை இரண்டாம் பட்சமாகக் கருத வேண்டும் என்று ஒவ்வொருவரும் ஒவ்வொரு விதமாகத் தங்கள் வாழ்க்கை முறையை அமைத்துக்கொள்கிறார்கள்.
நேரத்தை வீணாக்காதீர்கள்
எல்லோருக்கும் ஒரே விதி பொருந்தாது. எல்லோருக்கும் 24 மணி நேரம்தான். கிடைத்த நேரத்தில் உங்கள் திறமையை முழுமையாகப் பயன்படுத்த வேண்டுமானால், அதற்கு உங்கள் உள்சூழ்நிலை பதற்றமில்லாமல் அமைதியாக இருக்க வேண்டும். ஒரு வேலையைச் செய்யும்போது, கவனமின்றி சிந்தனை அலை பாய்ந்துகொண்டிருந்தால், களைப்பு, அமைதியின்மை, மன அழுத்தம் எல்லாம் வரும். உங்கள் செயல்திறன் கணிசமாகக் குறைந்துவிடும். உங்கள் உடலும், மனமும், சக்தியும் எந்த அளவு ஒருங்கிணைந்து செயல்படுகின்றன என்பதைப் பொறுத்துதான், குறிப்பிட்ட நேரத்தில் உங்களால் எதையும் முழுமையாகச் செய்து முடிக்க இயலும் என்பது தீர்மானமாகும்.ஒன்றைப் புரிந்துகொள்ளுங்கள். வீட்டு வேலையானாலும் சரி, தொழில் நடத்துவதானாலும் சரி, உடற்பயிற்சி செய்வதானாலும் சரி, நேரம் கடந்து செய்யும் பல வேலைகள் அர்த்தமற்றுப் போய்விடுகின்றன. வேறு எதைத் தொலைத்தாலும் திரும்பப் பெற வாய்ப்பு உண்டு. தொலைந்துபோன விநாடிகளை எப்பேர்ப்பட்டவராலும் மீட்க இயலாது.
நேரம் தவறாமை
ஒவ்வொரு கணத்திலும், கரைந்துகொண்டு இருப்பது நேரமல்ல. உங்கள் வாழ்க்கை. இது தத்துவம் அல்ல. வேடிக்கைப் பேச்சும் அல்ல. சத்தியமான உண்மை. நேரத்தின் மதிப்பைப் பற்றித் தெளிவான கவனத்துடன் இருந்தால், வாழ்க்கையைப் பற்றியும் தெளிவாக இருப்பீர்கள். அது கண்ணாடியை விடவும் சுலபமாக நொறுங்கக்கூடியது என்பதை உணர்ந்தால், நேரத்தைக் கவனமாகக் கையாள்வீர்கள்.நேரம் மதிப்பு மிக்கது என்பதால்தான், ஈஷா யோகா வகுப்புகளில் நேரம் தவறாமைக்கு முக்கியத்துவம் கொடுக்கிறோம். இது ஏதோ ஒழுக்கத்தைக் கடைப்பிடிப்பதற்காக அல்ல. நேரத்தின் மதிப்பை அறிந்திருப்பது அடிப்படையான கண்ணியம் என்று நினைக்கிறேன்.
யாரையாவது காத்திருக்க வைப்பது பெருமை என்று நினைப்பவர்களைப் பார்த்துப் பரிதாபப்படுகிறேன்.எனக்கு ஒருபோதும் இதில் சம்மதம் இல்லை. என் நேரம் எப்படி, என் வாழ்க்கையோ. அப்படி அவர்கள் நேரம் அவர்களுடைய வாழ்க்கை. மற்றவர் வாழ்க்கையை வீணடிப்பதற்கு யாருக்கும் உரிமை இல்லை. சில சமயம் குறிப்பிட்ட நேரத்தில், குறிப்பிட்ட இடத்தில் இருப்பதற்காக, என் வாழ்க்கையைப் பணயம் வைத்து, வேகமாகப் பயணங்களில் ஈடுபட்டிருக்கிறேன்.
கால இயந்திரம்
என் கண்களை மூடித் தியானத்தில் ஆழ்ந்துவிட்டால் மட்டும் நேரம் என்ற பிரக்ஞையே எனக்கு இல்லாது போய்விடுகிறது. இதை விளக்கிச் சொல்வது கடினம். நீங்களே ஒரு கால இயந்திரம்தான். இறந்தகாலமும், எதிர்காலமும் உங்களுக்குள் இக்கணத்தில் பொதிந்திருக்கின்றன. இந்தக் கணத்தில் பிரம்மாண்டத்தை அனுபவிக்கத் தெரியாதபோதுதான், நீங்கள் இல்லாத ஏதோ வேறு ஒரு கணத்தில் இருக்கப் பார்க்கிறீர்கள்.
ஓய்வின் அவசியம்
நேரத்தின் அருமை புரியாதவர்கள்தான், வேலைகளைத் தள்ளிப்போடுவதே சரியான தீர்வு என்று பழக்கமாக்கிக்கொள்வார்கள். அதே சமயம், இடைவெளியே இல்லாமல் உழைப்பதும் தவறு. உடலுக்கும், மனதுக்கும் அவ்வப்போது ஓய்வு கொடுத்தால்தான், முழுமையான திறமை வெளிப்படும். முறையான யோகா இதற்கு உதவும்.யோகாவுக்கு ஏது நேரம் என்று கேட்பவர்களும் இருக்கிறார்கள். யோகாவை முறையாகப் பயிற்சி செய்தால், தூக்கத்தின் தேவை குறைந்துவிடும். விழித்திருக்கும் நேரம் கூடிவிடும். உங்கள் உடலும், மனமும் இன்னும் சிறப்பான ஓர் ஓழுங்கமைப்புக்குள் வந்துவிடும்.நீங்கள் விழிப்புணர்வுடன் செயல்பட்டால், உங்கள் உடல் பல தேவையற்ற அசைவுகளைக் கவனமில்லாமல் செய்வதைத் தவிர்த்துவிடும். தேவையற்ற சிந்தனைகள், தேவையற்ற வார்த்தைகள் இவை காணாமல் போகும். ஆறு வாரங்களில் உங்கள் செயல்திறன் கூடும். எட்டு மணி நேரத்தில் செய்யக்கூடியதை மூன்று, நான்கு மணி நேரத்தில் செய்து முடித்துவிடுவீர்கள்.நீங்கள் எவ்வளவு மணிநேரம் செயல்படுகிறீர்கள் என்பது முக்கியமல்ல. அதில், நீங்கள் எவ்வளவு நேரம் உங்கள் திறமையை முழுமையாகப் பயன்படுத்திச் செயல்படுகிறீர்கள் என்பதுதான் உங்கள் வெற்றியைத் தீர்மானிக்கிறது.உங்கள் வாழ்க்கையில் எதுவும் சிறப்பாக நடைபெற வேண்டும் என்பதில், நீங்கள் 100 சதவிகிதம் உறுதியாக இருந்தால், அந்தத் தெளிவே அதற்கான நேரத்துக்கு முன்னுரிமை கொடுத்துவிடும். போராட்டம் இருக்காது. பதற்றம் இருக்காது. குழப்பம் வராது. களைப்பு தாக்காது.
நீங்கள் நிர்வகிக்க வேண்டியது நேரத்தை அல்ல... உங்களை!


Read more...

  © Blogger template Leaving by Ourblogtemplates.com 2008

Back to TOP  

Blogger Widgets