உங்கள் வருகைக்கு நன்றி

வயதான பின் வருந்துவதில் பயனில்லை.

செவ்வாய், 27 ஜூலை, 2021

ஓய்வுபெற்ற பின் நிம்மதியாக இருக்க, இளமையிலேயே முதலீடு செய்ய வேண்டும். ஓய்வு என்பதற்கு என்ன அர்த்தம் தெரியுமா? பாதுகாப்பான இடத்திற்கு நகர்வது என்பது தான். அலைந்து, திரிந்து வருகிறீர்கள். சற்று ஓய்வெடுக்க வேண்டும் என விரும்புகிறீர்கள். ஒரு கட்டடத்தின் கீழ் அமர்கிறீர்கள். அந்த கட்டடம் எப்போது வேண்டுமானாலும் விழும் அளவில் உள்ளது. அங்கே நீங்கள் நிம்மதியாக ஓய்வெடுக்க முடியுமா? அதுமாதிரி தான், ஒவ்வொரு மனிதரின் ஓய்வுகாலமும். ஆணோ அல்லது பெண்ணோ, 60 வயதுக்கு பிறகு தங்கள் வாழ்க்கையில் பொருளாதார கஷ்டங்களை அனுபவிக்காமல், பாதுகாப்பான மனநிலையில் இருப்பது தான் நிம்மதியான ஓய்வு காலத்திற்கு அடிப்படை.ஆனால், ஓய்வு காலத்தை நெருங்குபவர்களின் நிலையும், இன்னும் சில ஆண்டு களில் ஓய்வுபெறப் போகிறவர்களின் நிலையும் அப்படியா இருக்கிறது? அரசுத்துறை ஊழியர்களுக்காவது 'பென்ஷன்' கிடைத்து விடுகிறது. ஆனால், தனியார் நிறுவனங்களில் வேலை பார்ப்பவர்களுக்கு, பென்ஷன் என்று எதுவும் கிடையாது. பி.எப்.,பில் சேர்த்து வைத்த சில லட்சங்களை, வாரிசுகளின் திருமணத்திற்கு அல்லது பிற குடும்ப செலவுகளுக்கு செலவழித்து விட்டு, வெறும் கையுடன் தான் பெரும்பாலானோர் இருப்பர். வயதான காலத்தில், மருத்துவ செலவுகள் அதிகரிக்கும் நேரத்தில் மனைவியுடன், கையில் சொற்ப பணத்துடன், மனதுக்கு பிடிக்காத வேலையுடன் தான் எஞ்சிய காலத்தை ஓட்ட வேண்டிய நிலை இருக்கும்.வாழ்நாள் முழுக்க, குடும்பத்திற்காக உழைத்து விட்டு, 60 வயதுக்கு பின் தனக்கும், தன் மனைவிக்கும் போதிய பணமில்லாமல், வாரிசுகளை நம்பி பிழைக்க வேண்டிய நிலை தான் பெரும்பாலானோருக்கு ஏற்படுகிறது. அப்போது தான் புரியும், 'இளம் வயதிலேயே, கை நிறைய சம்பாதிக்கும் காலத்திலேயே, ஓய்வுக்கு பிறகு நிம்மதியாக இருக்க, போதிய பணத்தை முதலீடு செய்திருக்காமல் விட்டு விட்டோமே' என்று. அந்த எண்ணம், 60 வயதுக்கு பிறகு, 60ஐ நெருங்கும் போதோ வந்து பயனில்லை. இளம் வயதிலேயே வர வேண்டும்; ஓய்வு காலத்திற்காக முதலீடு செய்ய வேண்டும். ஓய்வு காலத்திற்கான பணத்தை கொஞ்சம் கொஞ்சமாக சேர்க்க வேண்டும். பொதுவாக இளம் வயதில் தான் நாம் அதிகமாக சம்பாதிப்போம். அப்போதே ஒரு குறிப்பிட்ட தொகையை ஓய்வுக்கு பிறகு தேவைப்படும் செலவுகளுக்காக ஒதுக்க வேண்டும். இதை மொத்தமாக செலவு செய்ய முடியாது; சிறுக சிறுக செய்ய வேண்டும். ஓய்வுக்கு பின், எவ்வளவு பணம் மாதந்தோறும் தேவைப்படும் என்பதை கணக்கிட்டு, அதற்கேற்ப சேமிப்பு, முதலீடு போன்றவற்றை செய்யவேண்டும்.இப்படி செய்தால், முதிய காலத்தில் பணத்திற்காக, பிறரிடம் போய் நிற்க வேண்டிய தேவை ஏற்படாது!

Read more...

எதுவாக இருந்தாலும் யோசிக்கனும்!.

வியாழன், 8 ஜூலை, 2021

ஒரு பொருளை வாங்குவதற்கு முன், அதை வாங்கணுமா என்று பல முறை யோசிப்பது சிக்கனத்திற்கான முக்கியமான வழி. ஆனால், அந்த யோசனை நம்மை வாங்க விடாமல் செய்யுமா என்பது சந்தேகம் தான்.

நாம் வாங்க விரும்பும் பொருட்கள் தொடர்பான தகவல்களும், விளம்பரங்களும் நம் ஆசையை தொடர்ந்து துாண்டிக் கொண்டே இருக்கும். 'ஆசையை, இன்னும் ஏழு நாட்களுக்கு தள்ளிப் போடுவோம்' என மனதில் உறுதியாக நினைத்து தள்ளி போட வேண்டும். ஒரு வாரத்திற்கு அப்படி தள்ளிப் போடும் போது, நாம் விரும்பிய, அதிக தேவையற்ற பொருள் மீதான ஆசை குறைந்திருக்கலாம் அல்லது மிகவும் அதிகரித்திருக்கலாம்.
மிகவும் அதிகரித்திருக்கும் பட்சத்தில், அந்த பொருளை வாங்கிக் கொள்ளலாம். பெரும்பாலான நேரங்களில் நாம் வாங்க நினைத்த பொருள், அதிக முக்கியத்துவம் இல்லாத பொருளாக இருந்தால், அந்த ஏழு நாட்களில் நம் ஆசை குறைந்து விடும். இந்த முறை அறிவியல்பூர்வமாக நிரூபிக்கப்பட்ட முறை. எனவே, பொருட்களை வாங்கிக் குவிக்க வேண்டாம் என நினைப்பவர்கள், இந்த முறையை பின்பற்றலாம்.ஆசைப்பட்ட பொருளை ஏழு நாட்கள் கழித்து வாங்கலாம் என்று முடிவெடுத்து விட்டால், அந்த இடைவெளி நாட்களில், கிரெடிட் கார்டை இந்த பொருள் வாங்க பயன்படுத்தி தான் ஆக வேண்டுமா;  இ.எம்.ஐ., கட்ட சிரமமாக இருக்குமே என்பன போன்ற மன ஓட்டங்கள் அதிகரித்து, ஏழு நாட்கள் முடிவில், அந்த பொருள் மீதான ஆசையை அறவே துண்டித்து விடும்.அதுபோல, மற்றொரு பொருள் மீதான ஆசை, அதன்பின் வர வாய்ப்பு உள்ளது. முந்தைய பொருளை, கையில் பணம் கிடைக்கும் போது வாங்கிக் கொள்ளலாம் என தள்ளிப் போடவும் வாய்ப்பு உள்ளது. இப்படி நாட்களை தள்ளிப் போடுவதால், நல்ல பொருட்களை தேர்ந்தெடுக்கவும் வாய்ப்பு கிடைக்கும். உதாரணமாக, பிரபலமான பிராண்ட் ஒன்றின் பொருளை, அதிக விலைக்கு வாங்க முடிவு செய்திருப்பீர்கள். அதுபோன்ற பொருள், விலை குறைவாகவும் கிடைக்கும். இப்படி தள்ளிப் போடுவதால், விலை குறைந்த பொருளை வாங்கவும் நம்மால் முடியும். இதனால் வீணாக கூடுதல் பணம் கொடுப்பது குறைந்து விடும்.முக்கியமாக, 'ஆபர்' போட்டுள்ளனர் என்பதற்காக, பார்த்த உடனே வாங்க துடிக்க கூடாது. அந்த எண்ணத்தை தள்ளிப் போட்டால், ஏழு நாட்களில் அந்த ஆபர் மீதான ஆர்வம் நம்மிடம் குறைந்திருக்கும். இதுபோன்ற 'டெக்னிக்'குகளை பயன்படுத்தி, வீணான பொருட்களை வீட்டில் சேர்க்காமல் இருக்க முடியும்!

Read more...

  © Blogger template Leaving by Ourblogtemplates.com 2008

Back to TOP  

Blogger Widgets