உங்கள் வருகைக்கு நன்றி

வயதான பின் வருந்துவதில் பயனில்லை.

செவ்வாய், 27 ஜூலை, 2021

ஓய்வுபெற்ற பின் நிம்மதியாக இருக்க, இளமையிலேயே முதலீடு செய்ய வேண்டும். ஓய்வு என்பதற்கு என்ன அர்த்தம் தெரியுமா? பாதுகாப்பான இடத்திற்கு நகர்வது என்பது தான். அலைந்து, திரிந்து வருகிறீர்கள். சற்று ஓய்வெடுக்க வேண்டும் என விரும்புகிறீர்கள். ஒரு கட்டடத்தின் கீழ் அமர்கிறீர்கள். அந்த கட்டடம் எப்போது வேண்டுமானாலும் விழும் அளவில் உள்ளது. அங்கே நீங்கள் நிம்மதியாக ஓய்வெடுக்க முடியுமா? அதுமாதிரி தான், ஒவ்வொரு மனிதரின் ஓய்வுகாலமும். ஆணோ அல்லது பெண்ணோ, 60 வயதுக்கு பிறகு தங்கள் வாழ்க்கையில் பொருளாதார கஷ்டங்களை அனுபவிக்காமல், பாதுகாப்பான மனநிலையில் இருப்பது தான் நிம்மதியான ஓய்வு காலத்திற்கு அடிப்படை.ஆனால், ஓய்வு காலத்தை நெருங்குபவர்களின் நிலையும், இன்னும் சில ஆண்டு களில் ஓய்வுபெறப் போகிறவர்களின் நிலையும் அப்படியா இருக்கிறது? அரசுத்துறை ஊழியர்களுக்காவது 'பென்ஷன்' கிடைத்து விடுகிறது. ஆனால், தனியார் நிறுவனங்களில் வேலை பார்ப்பவர்களுக்கு, பென்ஷன் என்று எதுவும் கிடையாது. பி.எப்.,பில் சேர்த்து வைத்த சில லட்சங்களை, வாரிசுகளின் திருமணத்திற்கு அல்லது பிற குடும்ப செலவுகளுக்கு செலவழித்து விட்டு, வெறும் கையுடன் தான் பெரும்பாலானோர் இருப்பர். வயதான காலத்தில், மருத்துவ செலவுகள் அதிகரிக்கும் நேரத்தில் மனைவியுடன், கையில் சொற்ப பணத்துடன், மனதுக்கு பிடிக்காத வேலையுடன் தான் எஞ்சிய காலத்தை ஓட்ட வேண்டிய நிலை இருக்கும்.வாழ்நாள் முழுக்க, குடும்பத்திற்காக உழைத்து விட்டு, 60 வயதுக்கு பின் தனக்கும், தன் மனைவிக்கும் போதிய பணமில்லாமல், வாரிசுகளை நம்பி பிழைக்க வேண்டிய நிலை தான் பெரும்பாலானோருக்கு ஏற்படுகிறது. அப்போது தான் புரியும், 'இளம் வயதிலேயே, கை நிறைய சம்பாதிக்கும் காலத்திலேயே, ஓய்வுக்கு பிறகு நிம்மதியாக இருக்க, போதிய பணத்தை முதலீடு செய்திருக்காமல் விட்டு விட்டோமே' என்று. அந்த எண்ணம், 60 வயதுக்கு பிறகு, 60ஐ நெருங்கும் போதோ வந்து பயனில்லை. இளம் வயதிலேயே வர வேண்டும்; ஓய்வு காலத்திற்காக முதலீடு செய்ய வேண்டும். ஓய்வு காலத்திற்கான பணத்தை கொஞ்சம் கொஞ்சமாக சேர்க்க வேண்டும். பொதுவாக இளம் வயதில் தான் நாம் அதிகமாக சம்பாதிப்போம். அப்போதே ஒரு குறிப்பிட்ட தொகையை ஓய்வுக்கு பிறகு தேவைப்படும் செலவுகளுக்காக ஒதுக்க வேண்டும். இதை மொத்தமாக செலவு செய்ய முடியாது; சிறுக சிறுக செய்ய வேண்டும். ஓய்வுக்கு பின், எவ்வளவு பணம் மாதந்தோறும் தேவைப்படும் என்பதை கணக்கிட்டு, அதற்கேற்ப சேமிப்பு, முதலீடு போன்றவற்றை செய்யவேண்டும்.இப்படி செய்தால், முதிய காலத்தில் பணத்திற்காக, பிறரிடம் போய் நிற்க வேண்டிய தேவை ஏற்படாது!

கருத்துரையிடுக

  © Blogger template Leaving by Ourblogtemplates.com 2008

Back to TOP  

Blogger Widgets