வீட்டை இப்படி பாதுகாக்க
வெள்ளி, 31 டிசம்பர், 2021
மழைக் காலத்தில் வீட்டின் உட்புற சுவர்களில் ஈரப்பதம் மற்றும் பூஞ்சை ஏற்படுவதற்கு நிறைய காரணங்கள் இருக்கலாம். வெளிப்புறச் சுவர் நேரடியாக மழை நீரில் நீண்ட நேரம் படும்போது, அது சுவர்களில் ஈரப்பதத்தை ஏற்படுத்தும். வெளிப்புற பூச்சு வேலை, பெயின்டிங்கின் தரம் மற்றும் வேலைப்பாடு மோசமாக இருந்தால், அது உள்சுவர்களின் ஈரப்பதத்துக்கு வழிவகுக்கும்.
நீரைத் தடுக்கும் பூச்சு செய்யப்படாவிட்டால், தண்ணீர் கசியும்; இது சுவர்களிலும் ஈரப்பதத்தை
ஏற்படுத்தும்.ஒரு வீடு; அதனுள்ளே
தண்ணீர் தேங்கவில்லை; ஆனால், வெளியே வீட்டைச் சுற்றி ஓரடிக்கு
தண்ணீர் தேங்கியிருக்கிறது என வைத்துக் கொள்வோம். அந்நிலையில், அந்த வீட்டின் அடித்தளத்தில் உள்ள
செங்கற்களில் நீர் ஊறும். அதன் தொடர்ச்சியாக அதன் மேலுள்ள செங்கற்களிலும் நீர் ஏறி, ஊறும்; இதை, 'கேப்பிலரி' என்கிறோம்.
இந்தப் பிரச்னையை எதிர்கொள்ளாமலிருக்க, அடித்தளத்தில் கான்கிரீட்டுடன், 'வாட்டர் ப்ரூபிங்' ரசாயனத்தைக் கலந்து, செங்கற்கள் இருக்கும் இடங்களில்
எல்லாம் போடுவதன் வாயிலாக, ஈரப்பதம்
தங்குவதைத் தவிர்க்கலாம். வெளிப்புறச் சுவரில் சிறிய விரிசல்கள் இருந்தாலும், அது சுவரில் ஈரப்பதத்துக்கு
வழிவகுக்கும்; இதுவும்
பூஞ்சையை உருவாக்கும்.
ஈரப்பதம் காரணமாக உருவான பூஞ்சையை, மழைக்காலம் முடிந்த பின் உப்புத்
தாள் பயன்படுத்தி தேய்க்கலாம்; அதன்பின்
மறுபடியும் பெயின்ட் அடித்துக் கொள்ளலாம். வெளிப்புறச்சுவரில், 'டேம்ப் ஷீத் ப்ரைமர்' என்ற பூச்சை, முதல் பூச்சாக பூச வேண்டும். கட்டடம்
கட்டி முடித்ததும், வெளிப்புறத்தில்
'ஒயிட் சிமென்ட்'டால் பூசுவர். அதற்கு பதில் டேம்ப்
ஷீத் ப்ரைமரை அடித்தால், கட்டடத்தை
ஈரம் ஊடுருவாமல் பாதுகாக்கும்
இன்று பெரும்பாலான வீடுகளின் சுவர்களில்
விரிசல்களைப் பார்க்கிறோம். அந்த விரிசல்களின் வழியே தண்ணீர் ஊடுருவி, சுவர்களில் ஈரப்பதம் தேங்கும்.
ஹார்டுவேர் கடைகளில், 'க்ராக்
பில்லிங் பேஸ்ட்' என்றே
பிரத்யேகமாக கிடைக்கும்; சிறிய
விரிசல்களில் இந்த பேஸ்ட்டை வைத்து நிரப்புவர். சற்றே பெரிய விரிசல் என்றால், சிமென்ட்டும், நீரும் கலந்த கலவையான சிமென்ட் பால்
கலவையை சிறிய குழாய் வழியே விரிசலுக்குள் செலுத்துவர். அது உள்ளே பயணித்து நிரம்பி, விரிசல்களை மூடும். வீட்டை இப்படி
பாதுகாக்கலாம்!
சென்னையைச் சேர்ந்த கட்டடக் கலை நிபுணர் எஸ்.சதீஷ்குமார்