உங்கள் வருகைக்கு நன்றி

மகளீர்க்காக லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி
மகளீர்க்காக லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி

கரு வளர்ச்சி முதல், குழந்தை பிறப்பு வரை

புதன், 20 ஜூன், 2018


கருத்தரித்தவுடன் ஓய்வு தேவையில்லை! கரு வளர்ச்சி முதல், குழந்தை பிறப்பு வரை கூறும், சென்னையை சேர்ந்த குழந்தைகள் நல மருத்துவர் தனசேகர் கேசவலு: கருவில் முதுகுத்தண்டு வளரத் துவங்கும் முதல் மாதத்தில், அதற்கு தேவையான, 'போலிக் ஆசிட்' சத்து, அம்மாவின் உடலில் இருந்து கிடைக்க வேண்டும். கர்ப்பிணிக்கு அந்த சத்து குறைபாட்டை நீக்க, கருத்தரித்தல் உறுதி செய்யப்பட்ட உடனேயே மருத்துவர், போலிக் ஆசிட் மாத்திரையை பரிந்துரைப்பர்.உடனடியாக குழந்தை பெறும் முடிவில் இருந்தால், மருத்துவ ஆலோசனையுடன், திருமணமான உடனும்; ஓர் இடைவெளிக்குப் பின், குழந்தை பெறும் முடிவில் உள்ளோர், கருத்தரிப்பதற்கு முன்னரே மருத்துவ ஆலோசனையுடன் இந்த மாத்திரையை எடுக்கலாம். கருவுற்ற முதல் மூன்று மாதங்கள், தாம்பத்யத்தை தவிர்க்க வேண்டும். அந்த நேரத்தில் உறவு கொண்டால், வயிற்றின்மீது அழுத்தும் கனம் காரணமாக, ரத்தப்போக்கு ஏற்பட வாய்ப்பிருக்கிறது. சில பெண்களுக்கு, கருவின் நஞ்சுக்கொடி, கருப்பை வாயின் பின்பக்கமே இருக்கும். இவர்கள் உறவு கொள்ளும் போது, ரத்தப்போக்கு ஏற்பட அதிக சாத்தியங்கள் இருக்கின்றன.அதேபோல், கருத்தரித்தவுடன் ஓய்வு தேவையில்லை. அசவுகரியமாக உணரும் வேலைகளையும், வயிற்றை அழுத்தும்படியான வேலைகளையும் மட்டும் தவிர்த்தால் போதுமானது. 30களின் ஆரம்பத்தில் திருமணம் செய்து, 30களின் மத்தியில் கருத்தரிக்கிற பெண்களை, 'ஹை ரிஸ்க் கேட்டகரி'யில் வகைப்படுத்தலாம். காய்ச்சாத பச்சை பாலில், கிருமிகள் இருக்கும் என்பதால், கர்ப்ப காலத்தில் அருந்தக் கூடாது. முன் தினம் சமைத்த உணவை, மறுநாள் சாப்பிடக் கூடாது. அசைவ உணவுகளை, சமைத்த நான்கு மணி நேரத்துக்குப் பின், சாப்பிடக் கூடாது. பிரிஜ்ஜில் வைத்த உணவுகளை தவிர்க்க வேண்டும். புளித்த தயிரை உணவில் சேர்க்கக் கூடாது.கருத்தரித்த முதல் ஆறு மாதங்களில், கருவின் உடல் பாகங்கள் உருவாகும். அப்போது அம்மாவுக்கு நோய் தாக்கினால், குழந்தையின் வளர்ச்சியை பாதிக்கும் என்பதால் தான், கருத்தரித்த உடனே, தடுப்பூசி போடப்படுகிறது.சுகப் பிரசவத்தின் போது, குழந்தையின் தலை சற்று பெரிதாகவோ, அம்மாவின் ஜனன பாதை சிறியதாக இருந்தாலோ, 'போர்செப்ஸ்' பயன்படுத்தி, குழந்தை வெளியே எடுக்கப்படும்.அதேபோல், நஞ்சுக்கொடி கருப்பையின் வாய்க்கு பின்புறத்தில் இருப்பது, அம்மாவின் இடுப்பு எலும்பு சிறியதாக இருப்பது, செயற்கை முறை கருத்தரிப்பில் குழந்தைகளை பத்திரமாக எடுக்க வேண்டிய தேவை. தாய்க்கு நீரிழிவு இருப்பது, குழந்தையின் இதய துடிப்பு குறைவது அல்லது அதிகரிப்பது போன்ற மருத்துவ காரணங்களால், சிசேரியன் செய்யப்படும்.

Read more...

சிசேரியன் பிரசவத்தில் இருந்து எப்படி தப்பிக்கலாம்?

திங்கள், 20 மே, 2013


கடந்த ஐந்து ஆண்டுகளை விட தற்போது சிசேரியன் மூலம் குழந்தை பெற்றுக்கொள்ளும் முறை இரண்டு மடங்காக அதிகரித்துள்ளது என்கிறது ஒரு புள்ளிவிபரம். இதற்குக் காரணம் சுகப்பிரசவத்தை விட சிசேரியன் மூலம் குழந்தை பெற்றுக்கொள்ளலாம் என்ற எண்ணம் தீவிரமடைந்து வருவதே காரணம்.
பிரசவ வலி என்பது ஒவ்வொரு பெண்ணும் உணரவேண்டிய ஒன்று. இது பெண்ணிற்கு ஏற்படும் உச்சக்கட்டவலி. மாதவிடாய் காலத்தில் வலிப்பதைப் போல இல்லாமல் அதீத வலியுடன் உயிர்போய் உயிர் வரும். அதனால்தான் பிரசவத்தை மறுஜென்மம் என்கின்றனர். இந்த வலிகளை பொறுக்க முடியாமல் அஞ்சியே பெரும்பாலான பெண்கள் சிசேரியன் பிரசவத்தை பிரும்புகின்றனர்.
பிரசவவலி என்பது அதிகபட்சம் 12 மணிநேரம் தான், அதனை பொறுத்துக்கொண்டால் ஆண்டு முழுவதும் மகிழ்ச்சியாய் நடமாடலாம் என்கின்றனர் நிபுணர்கள். ஆனால் வலிக்கு பயந்து சிசேரியன் மூலம் குழந்தை பெற்றுக்கொள்ளும் பெண்கள் அதற்கான பின் விளைவுகளை அனுபவிக்க வேண்டும் என்கின்றனர் நிபுணர்கள். சிசேரியன் பிரசவத்தை தவிர்க்க என்ன செய்யலாம் என்று நிபுணர்கள் ஆலோசனை கூறியுள்ளனர்.
கர்ப்ப காலத்தில் சிலருக்கு கை, கால் வீக்கம் வருவது இயல்புதான். இவர்கள் நெல்லிக்காய், முருங்கைக்காய், முள்ளங்கி சாப்பிடலாம். ஒரு டேபிள் ஸ்பூன் சோம்பு எடுத்து அதை சட்டியில் வறுத்து வெடிக்கும் போது தண்ணீர் விட்டு காய்ச்சி குடிக்கலாம் இது கால் வீக்கத்தை குறைக்கும்.
கர்பினிகள் தங்கள் கர்ப்பகாலத்தில் உடலுக்கு குடைச்சல் தரும் வாய்வு உணவுப் பொருட்களை உண்ணக்கூடாது. முக்கியமாக வாழைக்காய், உருளைக்கிழங்கு, இறால்மீன் போன்றவைகளை சாப்பிடுவதை தவிர்க்கவேண்டும்.
மூன்றாவது மாதம் தொடங்கி பிரசவ காலம் வரை வெந்தையக்கஞ்சி சாப்பிடுவது சுகப்பிரசவத்திற்கு வலி வகுக்கும். 5 வது மாதத்தில் இருந்து ஒரு டம்ளர் அரிசி கொதி நீர் எடுத்து அதில் சிறிதளவு வெண்ணெய் கலந்து மதியம் நேரத்தில் சாப்பிடலாம். கர்ப்பகாலம் முதல் பிரசவகாலம் வரைக்கும் சின்னவெங்காயம், சீரகம் சேர்த்து முருங்கைக் கீரை சூப் வைத்து சாப்பிடலாம் இதனால் பிரசவம் சுலபமாகும்.
பிரசவ நாள் நெருங்கும் சமயத்தில் சிலருக்கு அடிக்கடி வயிறு வலி வரும். அப்பொழுது வெற்றிலை, ஓமம், பூண்டு சேர்த்த கசாயம் வைத்து சாப்பிடலாம். சாதாரண வலி என்றால் நின்றுவிடும். அதே பிரசவ வலி என்றால் மருத்துவமனைக்கு செல்ல வேண்டிய நேரம் வந்தாச்சு என்கின்றனர் நிபுணர்கள்.

Read more...

நெயில்பாலிஷ் பயன்படுத்தும் பெண்களுக்கு

வெள்ளி, 20 ஜூலை, 2012

அமெரிக்காவின் பாஸ்டன் நகரில் உள்ள ப்ரிகாம் மருத்துவமனையின் பெண்கள் நலப்பிரிவு சார்பில் டாக்டர் தமரா ஜேம்ஸ் டாட் தலைமையில் சமீபத்தில் ஒரு ஆய்வு நடந்தது. தேசிய ஊட்டச்சத்து மற்றும் சுகாதாரம் என்ற பெயரில் ஒரு சர்வே மற்றும் அதனுடன் இணைந்து ஆய்வும் நடத்தப்பட்டது. ஆய்வு முடிவில் கூறப்பட்டுள்ளதாவது:


2,350 பெண்கள் சிறுநீர் தொற்றால் அவதிப்படுவது முதல்கட்ட ஆய்வில் கண்டுபிடிக்கப்பட்டது. தாலேட்ஸ் வகை ரசாயனம் அவர்களது சிறுநீரில் அதிக அளவில் இருந்ததே இதற்கு காரணம் என்பது பல்வேறு பரிசோதனைகளில் உறுதிப்படுத்தப்பட்டது. தாலேட்ஸ் ரசாயனம் அதிக அளவில் இருந்தவர்கள் சர்க்கரை நோய் தாக்குதலுக்கு ஆளாகியிருந்தனர். நாளமில்லா சுரப்பிகளை பாதிக்கும் தாலேட்ஸ் ரசாயனப் பொருள் மாயிஸ்சரைசர், சோப்புகள், ஹேர் ஸ்பிரே ஆகியவற்றில் உள்ளது. மேலும், நாம் அதிகம் பயன்படுத்தும் பசைப் பொருட்கள், எலக்ட்ரானிக் பொருட்கள், விளையாட்டு சாதனங்களில்கூட இந்த ரசாயனம் அதிக அளவில் உள்ளது. நெய்ல்பாலிஷ், பாடி ஸ்பிரே, சென்ட் உள்ளிட்ட பர்ப்யூம்களில் அதிகமாக உள்ளது. தாலேட்ஸ் வகைகளான மோனோ பென்சைல் தாலேட் மற்றும் மோனோ ஐசோபியூட்டைல் தாலேட் ஆகியவை சிறுநீரில் அதிகரிக்கும் போது சர்க்கரை நோய் தாக்கும் வாய்ப்பு அதிகம். தாலேட்ஸ் அதிகம் உள்ள ரசாயன பொருட்களை நாம் அதிகம் பயன்படுத்தினால், நம் உடலில் இவை அதிகம் ஊடுருவும். நாள்பட பயன்படுத்தும்போது சர்க்கரை நோய்க்கு ஆளாகும் அபாயம் உண்டாகும். எனவே, முடிந்தவரை இந்த வகை பொருட்களை பயன்படுத்துவதை தவிர்க்கலாம். அவ்வப்போது முழு உடல் பரிசோதனைகள் மேற்கொண்டால், நோய்களை ஆரம்ப கட்டத்திலேயே கண்டறிந்து கட்டுப்படுத்த உதவும். இவ்வாறு ஆய்வு முடிவில் கூறப்பட்டுள்ளது.

Read more...

பெண்ணாகப் பிறந்துவிட்டாலே இந்த உலகில் பல பிரச்சினைகள்

சனி, 9 ஜூன், 2012


என்னதான் பெண்கள் படித்துவிட்டு வேலைக்குப் போய் ஆண்களுக்கு நிகராகச் சம்பாதித்தாலும் அவர்கள் ஆண்களைப் போல சுதந்திரமாக நடமாட முடிவதில்லை. வீட்டை விட்டு வேலைக்காகவோ, படிப்பதற்காகவோ வெளியே செல்லும் பெண்ணாகட்டும், வீட்டுக்குள்ளேயே இருக்கும் பெண்ணாகட்டும் அவர்களுக்கு ஆண்களால் எப்போது வேண்டுமானாலும் தாக்குதல் ஏற்படலாம்.

தங்களைப் பாதுகாத்துக் கொள்ள எப்போதும் அவர்கள் விழிப்புடன் இருக்க வேண்டும். பெண்ணாகப் பிறந்துவிட்டாலே இந்த உலகில் பல பிரச்சினைகளை அவர்கள் எதிர்கொள்ள நேரிடுகிறது. ஆண்களால் பலாத்காரம் செய்யப்படுதல், ஈவ் டீசிங் செய்யப்படுதல் என்று எந்தப் பெண்ணுக்கு வேண்டுமானாலும், எப்போது வேண்டுமானாலும் தாக்குதல் நிகழலாம்.

அவர்கள் தங்களைப் பாதுகாத்துக் கொள்ளும் எச்சரிக்கை உணர்வுடன் எப்போதும் இருக்க வேண்டியது அவசியமாகிறது. ஆனால் இன்றைய பல கல்லூரி மாணவிகள், இளம் பெண்கள் பலரும் "எங்களுக்கு அப்படியெல்லாம் ஒன்றும் நடக்காது" என்ற நம்பிக்கையுடனேயே இருக்கிறார்கள். அதனால் அவர்கள் எந்த ஆபத்தைப் பற்றியும் கவலைப்படாமல் இருக்கிறார்கள்.

இப்படி இருப்பதனால் அவர்களுக்கு உண்மையிலேயே ஆபத்து நேரக்கூடிய சந்தர்ப்பங்களில் எதுவும் செய்ய முடியாமல் அதிர்ச்சியால் உறைந்து போகிறார்கள். இந்த நிலையை மாற்ற பெண்கள் எப்போதும் தங்களைப் பாதுகாத்துக் கொள்ளும் எச்சரிக்கை உணர்வுடன் இருக்க வேண்டும். ஆபத்துகளைச் சமாளிக்கத் தயாராக இருக்க வேண்டும்.

* முதலில் பெண்கள் யாருமில்லாத இடங்களில் இருப்பதைத் தவிர்க்க வேண்டும். சில நூலகங்கள் மிகப் பெரியவையாக அதிக ஆள் நடமாட்டம் இல்லாததாக இருக்கும். அப்படிப்பட்ட இடங்களுக்கு எல்லாம் பெண்கள் தனியாகப் போகக் கூடாது.

* அதுபோல அலுவலகத்திலும் கூட தனியாக இருக்கும் சந்தர்ப்பங்களைத் தவிர்க்க வேண்டும்.

* ஷாப்பிங் போகும் போது இருசக்கர வாகனத்தை, காரை மிக தூரமான இடத்தில் நிறுத்திவைத்துவிட்டுச் செல்லக் கூடாது.

* பொது இடங்களில், பார்ட்டிகளில் பெண்கள் தாங்கள் குடிக்க இருக்கிற குளிர்பானத்தை உடனே குடித்துவிட வேண்டும். மேஜையில் வைத்துவிட்டுச் சற்று எழுந்து போனால்கூட அதில் மயக்க மருந்தோ, வேறு எதையோ பிறர் கலந்து வைத்துவிட வாய்ப்புண்டு.

* இப்போது கால்சென்டர், பிபிஓ போன்றவற்றுக்கு பெண்கள் வேலைக்குப் போக வேண்டியிருக்கிறது. நள்ளிரவில் கூட நிறுவனம் ஏற்பாடு செய்யும் வாகனத்தில் வேலைக்குப் போக வேண்டியிருக்கிறது. அல்லது அலுவலகத்தில் வேலை முடிந்து நேரம் கழித்து வீட்டிற்கு வர வேண்டியிருக்கிறது. அப்போது காரில் ஏறும் முன்பு பெண்கள் டிரைவரை முதலில் கவனிக்க வேண்டும்.

அவர் குடித்திருக்கிறாரா என்பதை அவர் கண்களைப் பார்த்துத் தெரிந்து கொள்ளலாம். காரில் டிரைவருக்குப் பக்கத்தில் சம்பந்தமில்லாத ஆள் யார் உட்கார்ந்திருந்தாலும் காரில் ஏறக் கூடாது. அந்த ஆள் காரில் இருந்தால் நான் காரில் வரமாட்டேன் என்று உறுதியாகச் சொல்லிவிட வேண்டும். காரில் ஏறி உட்கார்ந்தவுடன் செல்போனைக் கையில் எடுத்துப் பேச ஆரம்பிக்கக் கூடாது.

இடையில் யார் காரில் ஏறுகிறார்கள் என்பதையும் கவனிக்க வேண்டும். புதியதாக யாரும் காரில் ஏறுகிறார்களா என்பதை கவனிக்க வேண்டும். கார் செல்லும் பாதையை நன்கு தெரிந்து வைத்திருக்க வேண்டும். வேறுபாதையில் கார் செல்லுமானால் அதை உரிய நேரத்தில் போன் மூலம் பிறருக்குத் தெரிவிக்க வேண்டும். காரில் செல்லும் போது தூங்கக் கூடாது.

* பஸ்ஸில் போகும் போது ஆண்களின் பால்ரீதியான தொந்தரவுக்குள்ளாக நேரிடுகிறது. இதைச் சண்டை போடாமல் சமயோசிதமாகச் சமாளிக்க முடியும். உதாரணமாக பெண்ணின் பக்கத்தில் உட்கார்ந்திருக்கும் ஆண் தொந்தரவு கொடுக்கும் போது வாந்தி வருவது போல நடித்தால் அந்த ஆண் தள்ளி உட்கார்ந்து கொள்வான்.

இவ்வாறு அந்தந்த இடத்திற்கு ஏற்ப பெண்கள் சாமர்த்தியமாக தங்களை பாதுகாத்துக்கொள்ள வேண்டும்.

Read more...

பெண்களே எல்லையை தாண்டாதீங்க


குடும்ப வாழ்க்கையில் தம்பதிகளுக்குள் ஏற்படும் பலவீனங்களைப் புரிந்து கொண்டு `ப்ளாக் மெயில்' செய்யும் பாய்பிரண்டுகளும் இருக்கவே செய்கிறார்கள். பணத்தை வாரி இறைத்து பெண்களை வளைக்கும் பாய்பிரண்டுகளும் பெருகி வருகிறார்கள். வெறும் பொழுதுபோக்கிற்காக பழகும் பாய்பிரண்டுகளும் அனேகம்.

நல்ல நட்புடன் இருப்பவர்கள் கொஞ்சமே கொஞ்சப்பேர் தான். மனைவி இயல்பாகவே தன் பாய்பிரண்டை கணவனிடம் அறிமுகப்படுத்தினாலும், அவர்களுடன் பழகநேர்ந்த தருணங்களை நினைவுபடுத்தினாலும் கணவருக்கு உள்ளுர சந்தேகம் வலுத்துக் கொண்டே போகிறது.

இதற்குப்பிறகு கணவன்-மனைவிக்குள் ஏதாவது பிரச்சினை ஏற்பட்டால், முதலில் கணவன் ஆரம்பிப்பது பாய்பிரண்ட் பற்றிய பேச்சைத்தான்.   அடிக்கடி நடக்கும் இதுபோன்ற பிரச்சினை நேரங்களில் எல்லாம் கூசாமல் மனைவி மீது சந்தேகஅம்பை வீசி விடுகிறான் கணவன். இதனால் ஏராளமான பெண்களின் வாழ்க்கை பாழாகி இருக்கிறது. இப்படிப்பட்ட சந்தேகப் பிரச்சினைகளால் தகராறு ஏற்பட்டு விவாகரத்துக்குச் செல்பவர்கள்தான் ஏராளம்.

எனவே ஆண்-பெண் நட்பு என்பது நிச்சயம் எல்லைக்குட்பட்டது என்பதை பெண்கள் நினைவில் வைக்க வேண்டும். அந்த எல்லையைத் தாண்டினால் அளவுக்கு மீறிய பிரச்சினைகளையும், தொல்லைகளையும் சந்திக்க வேண்டியதிருக்கும் என்பதை மறந்து விடக்கூடாது.

Read more...

தைய்ராடு சுரப்பியின் முக்கிய பணி!

புதன், 30 மே, 2012


நமது உடலில் பல்வேறு சுரப்பிகள் சுரக்கின்றன. ஒவ்வொன்றும் ஒவ்வொரு பணிகளை சிரமேற்று செய்து வருகிறது. இதில் பலரும் அறிந்த சுரப்பிகளில் முதல் இடத்தில் இருப்பது தைராய்டு சுரப்பியாகும்.

இது கழுத்தின் முன் பக்கம் ஒரு பட்டாம்பூச்சி வடிவத்தில் அதாவது, கழுத்தின் இரு பக்கத்திலும் அமைந்துள்ளது. இது பொதுவாக ஒரு அவுன்ஸ் (28.5 கிராம்) எடை கொண்டதாக உள்ளது.
உடலின் வளர்ச்சிதை மாற்றத்தை நிர்ணயிக்கும் பொறுப்பு தைராய்டு சுரப்பிக்கு உள்ளது. தைராய்டு சுரப்பிக்கு அடிப்படையாக இருப்பது அயோடின் எனப்படும் ரசாயனம். இது பொதுவாக நாம் உண்ணும் உணவின் மூலம் உடலுக்குக் கிடைக்கும். ஒவ்வொரு மனித உடலிலும் 50 மில்லி கிராம் அளவிற்கு அயோடின் இருக்கும். இதனை சேமித்து வைத்து உடலுக்குத் தரும் பணியைச் செய்வது தைராய்டு சுரப்பிதான்.
தைராய்ட் சுரப்பி சுரந்ததும், அது ரத்தத்தின் மூலம், உடலின் அனைத்து செல்களுக்கும் செல்கிறது.
இதன் மூலம் நமது உடலின் வளர்ச்சி, எலும்புகளின் அமைப்பு, பாலுறுப்புகளின் வளர்ச்சி மற்றும் பல்வேறு பணிகளை நடைபெறுகிறது.
எனவே, தைராய்டு சுரப்பியில் ஏதேனும் பாதிப்பு ஏற்பட்டால், மனிதனுக்கு பல்வேறு உடல் நலக் கோளாறுகள் ஏற்படும்.
தைராய்டு சுரப்பியில் அதிகமாக சுரந்தால் ஒருவித பிரச்சினையும், குறைவாக சுரந்தால் வேறுவித பிரச்சினைகளும் ஏற்படுகிறது.
பல்வேறு பிரச்சினைகள் ஏற்படும் போது மருத்துவர்கள் கூறுவது தைராய்டு டெஸ்ட் எடுங்கள் என்பதுதான். எனவே, தைராய்டு பிரச்சினையை சரி செய்தால், உடல் நலப் பாதிப்புகள் கட்டுப்படும்.
சிலருக்கு வெளிப்படையாக தைராய்ட் சுரப்பியில் ஏற்படும் பாதிப்பு தெரியும். அதாவது கழுத்துப் பாகம் சற்று வீங்கியபடி காணப்படும். இதனை வைத்தே தைராய்டு பிரச்சினையை அறிந்து கொள்வார்கள்.
எனினும், காலையில் சாப்பிடுவதற்கு முன்பு ரத்த பரிசோதனை எடுத்து அதன் மூலமே தைராய்டு பிரச்சினையை அறிந்து கொள்ள முடியும். ஒரு சில மருந்துகளே இதற்குத் தீர்வாக உள்ளது. சிலர் வாழ்நாள் முழுவதும் மருந்து சாப்பிட வேண்டிய நிலையில் உள்ளனர். சிலருக்கு உணவுக் கட்டுப்பாட்டிலேயே இதனை சரி செய்து விட இயல்கிறது. சில பெண்களுக்கு குழந்தைப் பேறு தள்ளிப்போகவும் தைராய்டு சுரப்பி காரணமாக அமைகிறது.


Read more...

பெண் வீட்டு விருந்து ஒரு வரதட்சணையே!


பணமாக பாத்திரமாக நகையாக நிலமாக வீடாக வாங்குவது மட்டும் தான் வரதட்சணை என்று மக்கள் விளங்கி வைத்துள்ளார்கள்.
ஆனால் உணவாக வாங்குவது அதாவது பெண் வீட்டில் போய் விருந்து சாப்பிடுவது அல்லது பெண் வீட்டில் விருந்து சமைத்து அண்டா குண்டாக்களில் வரவழைத்து மாப்பிள்ளை வீட்டில் உணவு பரிமாறுவது அல்லது மண்டபத்தில் நடக்கும் விருந்தில் பெண் வீட்டார் பகிர்ந்து கொள்வது இது போன்ற செயல்களும் வரதட்சணை தான் என்பது உணரப்படுவதில்லை.அது ஒரு சமூகக் கொடுமையாகக் கருதப்படுவதில்லை. இந்த விஷயத்தில் தவ்ஹீதுவாதிகளும் தடம் புரண்டு விடுகின்றனர். பெண் வீட்டு விருந்துக்குப் பக்காவாக வக்காலத்து வாங்குகின்றனர்.
உண்மையில் பெண் வீட்டு விருந்து ஒரு கொடிய வரதட்சணையும் மாபெரும் சமூகக் கொடுமையும் ஆகும்.
வரதட்சணைக்குரிய அனைத்து விளைவுகளும் இதற்கும் பொருந்தும்.
கருவிலேயே இனம் கண்டு பெண் குழந்தைகளைக் கருவறுப்பது பெண் சிசுக் கொலை பெண் வீட்டுக்காரன் வீடு வீடாகப் பிச்சை எடுப்பது பெண்கள் விபச்சாரத்தில் இறங்குவது பிற மதத்தவருடன் ஓடிப் போவது போன்ற அனைத்து தீய விளைவுகளுக்கும் இந்தப் பெண் வீட்டு விருந்து காரணமாக அமைகின்றது. அதனால் இது ஒழித்து ஓய்த்துக் கட்டப்பட வேண்டிய மிகப் பெரிய சமூகக் கொடுமையாகும்.
தவ்ஹீத் ஜமாஅத்தின் சமூகப் புரட்சி:-
பெண் வீட்டிலிருந்து மாப்பிள்ளை வீட்டிற்குக் கப்பம் கட்ட முடியாமல் வரதட்சணை வரி செலுத்த முடியாமல் தற்கொலை செய்தவர்களை அல்லது தற்கொலை செய்யப் போகிறேன் என்று சொல்பவர்களைக் கண்டிருக்கிறோம். ஆனால் பெண் வீட்டில் விருந்து வைத்தே தீருவோம்; இல்லையேல் தற்கொலை செய்து கொள்வோம் என்று மிரட்டுபவர்களை இப்போது சமுதாயம் கண்டு கொண்டிருக்கின்றது.
ஒரு காலத்தில் பெண் வீட்டிலிருந்து வாரி வழித்து சுருட்டி சுரண்டிக் கொண்டிருந்த வரதட்சணை என்ற பெயரில் கொள்ளையடித்துக் கொண்டிருந்த இளைஞர் படை இன்று வேண்டாம் வரதட்சணை வேண்டாம் பெண் வீட்டு விருந்து என்று சொல்கின்ற இந்த சகாப்தத்தைப் புரட்சி என்று தான் சொல்ல வேண்டும்.
உண்மையில் ஓர் ஏகத்துவ இளைஞன் தான் பெண் பேசிய வீட்டில் பெண் வீட்டு விருந்து கூடாது என்று கூறியுள்ளார். அதற்குப் பெண்ணின் தந்தை விருந்து வைத்தே தீருவேன்; இல்லையேல் தற்கொலை செய்து உயிரை மாய்ப்பேன் என்று மிரட்டியுள்ளார்.
ஏகத்துவ இளைஞன் விருந்து வேண்டாம் என்று மறுப்பது ஒரு புரட்சி! அதே சமயம் பெண்ணின் தந்தை விருந்து வைக்கா விட்டால் செத்து விடுவேன் என்று சொல்வது ஒரு சமூகக் கொடுமையும் சாபக் கேடுமாகும். இந்த சமூகக் கொடுமையையும் சாபக் கேட்டையும் எதிர்த்துத் தான் தவ்ஹீத் ஜமாஅத் போர் முரசு கொட்டிக் கொண்டிருக்கிறது.
புறக்கணிப்பு:-
இன்று தவ்ஹீது வட்டத்தில் உள்ள ஒரு சிலர் நான் வேண்டாம் என்று எவ்வளவோ சொல்லி விட்டேன்; அவர்கள் கேட்கவில்லை என்று கூறி நழுவுகின்றனர். ஆனால் பெண் வீட்டு விருந்தில் போய் கலந்து கொள்கின்றனர். வேறு சிலர் அந்த விருந்தில் கலந்து கொள்வதில்லை. நாங்கள் என்ன அங்கு போய் சாப்பிடவா செய்தோம்? என்ற மழுப்பலைப் பதிலாக்குகின்றனர். இவ்விரு சாராரும் பெண் வீட்டுச் சாப்பாட்டை சாபக் கேட்டை சமூகச் சீர்கேட்டை வாழ வைக்கின்றனர்; வளர விடுகின்றனர். இதற்குரிய பாவங்களைச் சம்பாதிக்கின்றனர்.
இந்த சமூகக் கொடுமையை ஒழிக்க ஒரே வழி புறக்கணிப்பது தான். புறக்கணிப்பது என்றால் எதை? பெண் வீட்டு விருந்தை மட்டுமல்ல பெண்ணையும் சேர்த்தே புறக்கணிப்பது தான்.
ஒரு காலத்தில் வரதட்சணை தரவில்லை என்றால் உன் பெண் வேண்டாம் என்று சொல்வதற்குத் தெம்பும் திராணியும் கொண்டிருந்தார்கள். இன்று தவ்ஹீதுக்கு வந்த பின் பெண் வீட்டு விருந்து ஒரு பித்அத் அது ஒரு சமூகக் கொடுமை என்ற கண்ணோட்டத்தில் இந்த விருந்தை நிறுத்தவில்லை என்றால் உன் வீட்டுப் பெண்ணே வேண்டாம் என்று கூறுவதற்குத் தெம்பும் திராணியும் அற்றவர்களாகி விட்டனர்.
அன்று ஒரு தீமைக்காக நிமிர்ந்து நின்றவர்கள் இன்று ஒரு தீமையை ஒழிப்பதற்காக அதுவும் ஏகத்துவவாதிகளாக இருந்து கொண்டு திராணியற்றவர்களாக ஆகி விட்டனர். சத்தியவாதிகளாக இருக்கும் போது தான் இந்தத் தெம்பு தேவை. ஆனால் இப்போது தெம்பில்லாமல் ஒரு ஜடம் போல் காட்சியளிப்பது தான் வேதனையாகும்.
இப்படிப் பெண் வேண்டாம் என்று சொல்வது எந்த அடிப்படையில்?:-
“
நன்மையிலும் இறையச்சத்திலும் ஒருவருக்கொருவர் உதவிக் கொள்ளுங்கள்! பாவத்திலும் வரம்பு மீறலிலும் ஒருவருக்கொருவர் உதவிக் கொள்ளாதீர்கள்!” (அல்குர்ஆன் 5:2)
“உங்களில் ஒருவர் ஒரு தீமையை (மார்க்கத்திற்கு முரணான ஒரு செயலை)க் கண்டால் அவர் அதைத் தமது கரத்தால் தடுக்கட்டும். முடியா விட்டால் தமது நாவால் (சொல்லித் தடுக்கட்டும்). அதுவும் முடியாவிட்டால் தமது உள்ளத்தால் (அதை வெறுத்து ஒதுக்கட்டும்). இந்த (இறுதி) நிலையானது இறை நம்பிக்கையின் பலவீனமா(ன நிலையா)கும் என்று அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூற நான் கேட்டுள்ளேன்.”
அறிவிப்பவர்: அபூஸயீத் அல்குத்ரீ (ரலி)
நூல்: முஸ்லிம் (தமிழாக்கம் எண்: 78)
இந்த ஹதீஸின் அடிப்படையில் பெண் வீட்டு விருந்து என்ற சமூகத் தீமையைத் தடுப்பது ஈமானில் உள்ளதாகும்.
அதிலும் குறிப்பாக திருமணம் முடிக்கும் ஆண்கள் நபி (ஸல்) அவர்கள் குறிப்பிடும் முதல் தரத்திலேயே இந்தத் தீமையைத் தடுத்து விடலாம். அதாவது கையாலேயே தடுத்து விடலாம். கை என்பது மாப்பிள்ளையின் முழு அதிகாரத்தைக் குறிப்பிடுகின்றது. தன் பெண்ணைக் கட்டிக் கொடுப்பதற்காக மாப்பிள்ளையின் ஆட்காட்டி விரலின் அசைவுகள் அத்தனைக்கும் அசையும் நிலையில் பெண்ணின் தந்தை இருக்கின்றார். அதனால் இந்த வாய்ப்பைக் கூடப் பயன்படுத்த முன்வராத மாப்பிள்ளை கொள்கைவாதியல்ல! கடைந்தெடுத்த கோழை!
சப்பைக்கட்டும் சாக்குப்போக்குகளும்:-
பெண் வீட்டாரின் விருந்து வைக்கும் பிடிவாதம் அது சமூகத்தில் புரையோடிப் போன தீமை என்பதையே காட்டுகின்றது. சமூகத்தின் கோரப் பிடியாகவே காட்சியளிக்கின்றது. இதைத் தொடர்வதற்காகப் பெண் வீட்டாரும் மாப்பிள்ளை வீட்டாரும் பல்வேறு சாக்குப் போக்குகளைக் கூறி வருகின்றனர்.
வெளியூரிலிருந்து விருந்தாளிகள் வந்து விட்டனர்; அவர்களுக்கு விருந்து கொடுக்கும் போது அக்கம்பக்கத்தவர்களுக்கும் அண்டை வீட்டாருக்கும் சொந்த பந்தங்களுக்கும் அப்படியே சேர்த்து விருந்து வைக்கிறோம் என்று சால்ஜாப்பு கூறுகின்றனர்.
அக்கம்பக்கத்தவர் மீது தான் எத்தனை ஆதரவு? அண்டை வீட்டார் மீது தான் எத்தனை அரவணைப்பு? உண்மையில் மெய்சிலிர்க்க வைக்கின்றது; மேனி புல்லரிக்கின்றது.
மருத்துவம் பொறியியல் போன்ற தொழிற்கல்விகளுக்காக சொந்த பந்தங்களில் அக்கம் பக்கங்களில் ஒரு பத்தாயிரம் ரூபாய் உதவி கேட்டால் உதவி செய்ய முன்வராதவர்கள் எள்ளளவுக்கும் ஈயாதவர்கள் கல்யாணப் பந்தலிலே பல லட்சங்களைக் கொட்டி விருந்து என்ற பெயரில் பாழாக்குவார்கள். சொந்த பந்தங்கள் நோயில் மாட்டி விட்டால் கூட கடனில் சிக்கி விட்டால் கூட இவர்கள் உதவ முன்வர மாட்டார்கள். இத்தனைக்கும் இதுபோன்ற வகைகளுக்காக உதவி செய்வது மார்க்க அடிப்படையில் கடமையாகும். ஆனால் இதைச் செய்ய மாட்டார்கள். இந்த விருந்து வைப்பதற்காக மட்டும் சொந்தம் பந்தம் அக்கம் பக்கம் என்ற சால்ஜாப்புகள் சமாளிப்புகள்.
இந்த சமாளிப்புகளில் ஒன்று தான் வெளியூர்க்காரர்கள் பெயரைச் சொல்லி இப்படி ஒரு விருந்தளிப்பதாகும். இந்த விருந்து எதை முன்னிட்டு? திருமணத்தை முன்னிட்டுத் தான். திருமணம் இல்லாமல் இப்படி ஒரு விருந்தை வைக்க முன்வருவார்களா? நிச்சயமாக முன்வர மாட்டார்கள்.
அன்பளிப்பின் அடிப்படை:-
“
அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் (அஸ்த் எனும் குலத்தைச் சேர்ந்த) ஒருவரை (ஸகாத் வசூலிக்கும்) அதிகாரியாக நியமித்தார்கள். அந்த அதிகாரி தமது பணியை முடித்துக் கொண்டு நபியவர்கடம் திரும்பி வந்து அல்லாஹ்வின் தூதரே! இது உங்களுக்குரியது; இது எனக்கு அன்பப்பாக வழங்கப்பட்டது என்று கூறினார். நபி (ஸல்) அவர்கள் அவரிடம் உம் தந்தையின் வீட்டில் அல்லது தாயின் வீட்டில் உட்கார்ந்து கொண்டு உமக்கு அன்பப்பு வழங்கப்படுகிறதா இல்லையா என்று பாரும்! என்று கூறினார்கள்.”
அறிவிப்பவர்: அபூஹுமைத் அஸ்ஸாஇதீ (ரலி)
நூல்: புகாரி 6636
இந்த ஹதீஸில் அன்பளிப்பு குறித்து அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் விளக்கமளிக்கின்றார்கள். இந்த அன்பளிப்பின் அடிப்படையே ஜகாத் தான். ஜகாத் வசூலுக்குச் செல்லவில்லையானால் இவருக்கு இந்த அன்பளிப்பு கிடைத்திருக்காது. சென்றது ஜகாத் வசூலுக்கு என்பதால் வந்த அன்பளிப்பு ஜகாத்திற்காக என்று நபி (ஸல்) அவர்கள் தீர்ப்பளிக்கின்றார்கள்.
இது போன்று பெண் வீட்டில் நடத்தப்படும் விருந்து அந்த வீட்டில் நடைபெறும் திருமணத்தை ஒட்டித் தான். இந்த விருந்துக்கு வெளியூர்காரர்களை ஒரு கேடயமாகப் பயன்படுத்திக் கொண்டு நடத்துகின்றனர். வெளியூர்காரர்கள் வந்தால் அவர்களுக்கு உணவளிப்பது எப்போதும் உள்ள ஒன்று!
திருமணத்திற்காக வெளியூர்காரர்களை அழைப்பது என்பதே மார்க்கத்தில் இல்லை. அப்படி அழைத்து வந்தால் அந்த விருந்து அவர்களுடன் மட்டும் தான் நிற்க வேண்டுமே தவிர அதைச் சாக்கிட்டு உள்ளூரில் ஒரு பெரிய பட்டியலாக நீளக் கூடாது.
பொதுவாகத் திருமணம் பேசி முடிக்கும் போது பெரும்பாலும் வெளியூர்களில் பெண் அல்லது மாப்பிள்ளை பேசி முடிப்பதில்லை. உள்ளூரிலேயே மாப்பிள்ளை பெண் பார்த்து திருமணம் முடித்துக் கொள்கின்றனர். ஆனால் இன்று அல்லாஹ்வின் அருளால் ஏகத்துவக் கொள்கைச் சகோதரர்கள் கொள்கையுள்ள பெண் வேண்டும் என்பதற்காக வெளியூரில் பெண் பேசி முடிக்கின்றனர்.
இதுபோன்ற கட்டங்களில் சம்பந்த வழிகள் மாப்பிள்ளை வீட்டார் பெண் வீட்டிற்கு வரும் போது விருந்தாளிகள் என்ற அடிப்படையில் பெண் வீட்டார் அவர்களுக்கு உணவு ஏற்பாடு செய்வதில் தவறில்லை. ஆனாலும் அதைக் காரணம் காட்டி பெண் வீட்டார் தங்களது சொந்த பந்தங்களுக்கும் தெருவாசிகளுக்கும் விருந்துக்கு ஏற்பாடு செய்கின்றனர். இப்படியே பெண் வீட்டு விருந்து என்ற சமூக நிர்ப்பந்தம் உருவாகி லட்சக்கணக்கில் பணம் செலவழிக்கப்படுகின்றது. இந்த நிலை ஏற்பட்டு விடக் கூடாது.
எனவே இதைக் கவனத்தில் கொண்டு ஆண்கள் வெளியூருக்குச் சென்று மணம் முடிக்கும் நிலை ஏற்பட்டால் அங்கு ஏற்படும் திருமணச் செலவுகள் விருந்துச் செலவுகளை மாப்பிள்ளை வீட்டாரே ஏற்றுக் கொள்ள வேண்டும்.
மாப்பிள்ளை வீட்டார் தங்களுக்குள்ள அதிகாரத்தைப் பயன்படுத்தி பெண் வீட்டு விருந்தை நிறுத்த வேண்டும். பெண் வீட்டாரும் இதற்கு முழு ஒத்துழைப்பு கொடுக்க வேண்டும்.
ஒரு சில இடங்களில் பெண்ணின் உறவினர்களே நிர்ப்பந்தித்து ஒரு விருந்து வைத்தால் என்ன? என்று பெண் வீட்டாரிடம் கேட்கின்றனர். இது தான் அவர்களைக் கடன் வாங்கி வட்டிக்கு வாங்கி விருந்து வைக்கத் தூண்டுகிறது. அப்படிச் செய்தால் அந்தப் பாவத்தில் இவ்வாறு தூண்டி விட்ட உறவினர்களுக்கும் பங்குண்டு என்பதைக் கவனத்தில் கொண்டு பாவத்திற்குத் துணை போகாமல் பார்த்துக் கொள்ள வேண்டும்.
நன்றி:
ஷம்சுல் லுஹா (ரஹ்மானி) 
தீன்குலப் பெண்மணி

Read more...

அழகுக்கு ஆசைப்படலாம், அபாயத்துக்கு ஆசைப்படலாமா?

புதன், 22 பிப்ரவரி, 2012

இன்றைய இளைய தலைமுறையினரின் வாழ்வில், "மேக்-அப்' தவிர்க்க முடியாத அங்கமாகி விட்டது. திருமணம், பார்ட்டி, அலுவலகம் ஆகியவற்றுக்கு செல்லும் போது, எப்படி,வித்தியாசமாக மேக்-அப் போட்டுக் கொள்வது என, தங்களை அலங்கரித்துக் கொள்ளும் நடைமுறை அதிகரித்துள்ளது.
ஐநூறு முதல், 50 ஆயிரம் ரூபாய் வரை, விதவிதமான பேக்கேஜ்களில்,அழகுபடுத்துவதற்காகவே, நகரின் மூலை முடுக்குகளில் எல்லாம், டீக்கடைகளை விட, பியூட்டி பார்லர்கள் அதிகம் முளைத்துள்ளன. இதுபோன்ற பியூட்டி பார்லர்களுக்கு சென்றால்,சமையலுக்கு பயன்படுத்தப் படும் உணவுப் பொருட் களில், கடலை மாவு முதல், காய்கறிகள் வரை, ஒன்று விடாமல் முகத்தில் தேய்த்து, " சான்சே இல்ல. கத்ரீனா கயீப், ஹிருத்திக் ரோஷன் போல் சும்மா, தக, தகன்னு மின்னுகிறீர் கள்...' என, அளந்து விடு வதோடு, பர்சையும் காலி செய்து விடுவர்.
தங்களை அழகுபடுத்திக் கொள்ள வேண்டும் என்பதில், ஒரு சிலருக்கு ஆர்வம் இருக்கும். சிலருக்கு, இதில், சாதாரண வெறி அல்ல, கொலை வெறியே வந்து விடும்.
அப்படிப்பட்டவர் தான், பயே டால்மி வயது 20. தென் கொரியாவைச் சேர்ந்த இவருக்கு, 14வயதிலேயே, மேக்-அப் மீது காதல் வந்து விட்டது. ஆரம்பத்தில் வீட்டிலேயே தன்னை அழகுபடுத்திக் கொண்டவர், படிப்படியாக, பியூட்டி பார்லர்களுக்கு போகத் துவங்கினார். நாளடைவில், தினமும் பியூட்டி பார்லர்களிலேயே தவம் கிடந்தார்.
தூங்கும்போது கூட, மேக்-அப் போட்டுத்தான் தூங்குவார் என்றால் பார்த்துக் கொள்ளுங்கள். ஒரு சில நாட்களிலேயே, இவருக்கு ஒரு வித்தியாசமான எண்ணம் தோன்றியது. "தினமும்,மேக்-அப் போட்டு நேரத்தை செலவழிப்பதற்கு பதிலாக, நிரந்தரமாக, மேக்-அப் போட்டுக் கொள்ளலாமே. முகம் கழுவினால் கூட, போகாத அளவுக்கு மேக்-அப் போட்டுக் கொள்ளலாம்...' என, நினைத்து, ஒரு பியூட்டி பார்லருக்கு சென்றார்.
"நிரந்தர மேக்-அப் தானே, இதற்கான ஸ்பெஷல் பேக்கேஜ் எங்களிடம் இருக்கிறது...'எனக் கூறி,ஏதேதோ, சில பொருட்களை முகத்தில் பூசி, கிட்டத்தட்ட முகமூடி போட்டது போன்ற ஒரு மேக்-அப்பை போட்டு விட்டனர். இந்த மேக்-அப்பை சாதாரணமாக களைத்து விட முடியாது. பியூட்டி பார்லருக்கு சென்று தான் கலைக்க முடியும். இந்த மேக்-அப்பை கலைக்க, பயே டால்மிக்கு மனது வரவில்லை. ஒரு மாதம், இரண்டு மாதம் அல்ல இரண்டு ஆண்டுகள், இந்த மேக்-அப்பை கலைக்காமலேயே வலம் வந்தார்.
இரண்டு ஆண்டுகளுக்கு பின், முகத்தில் அரிப்பு ஏற்படத் துவங்கியது. அலறியடித்து,டாக்டரிடம் ஓடினார். "உடனடியாக <<மேக்-அப்பை கலைத்து விடுங்கள். இல்லையெனில்,விஷயம் விபரீதமாகி விடும்...' என கூறினார் டாக்டர். வேறு வழியில்லாமல், மேக்-அப்பை கலைத்தார். இதன்பின், தன் முகத்தை கண்ணாடியில் பார்த்த பயே டால்மி , அதிர்ச்சியில் உறைந்து விட்டார்.
அவரின் உண்மையான வயதை விட, இரண்டு மடங்கு அதிக வயதானவர் போல், அவரது முகம் காணப்பட்டது. வெளியில் சென்றால், கேலி, கிண்டல் செய்வர் என பயந்து,வீட்டுக்குள்ளேயே முடங்கிக் கிடக்கிறார்.
நம் நாட்டில் கூட சிலர், தங்களுக்கு இலியானா போல், "ஜீரோ'சைஸ் இடுப்பு அமைய வேண்டும் என ஆசைப்பட்டு, பல்லில் பச்சை தண்ணீர் கூட படாமல், பல நாட்களாக பட்டினி கிடந்து, கடைசியில் பரலோகம் போய்ச் சேர்ந்த சம்பவங்களும் நடந்து வருகின்றன.
அழகுக்கு ஆசைப்படலாம்; அழகு படுத்திக் கொள்கிறோம் என்ற பெயரில், அபாயத்துக்கு ஆசைப்படலாமா?

Read more...

  © Blogger template Leaving by Ourblogtemplates.com 2008

Back to TOP  

Blogger Widgets