அழகுக்கு ஆசைப்படலாம், அபாயத்துக்கு ஆசைப்படலாமா?
புதன், 22 பிப்ரவரி, 2012
இன்றைய இளைய தலைமுறையினரின் வாழ்வில், "மேக்-அப்' தவிர்க்க முடியாத அங்கமாகி விட்டது. திருமணம், பார்ட்டி, அலுவலகம் ஆகியவற்றுக்கு செல்லும் போது, எப்படி,வித்தியாசமாக மேக்-அப் போட்டுக் கொள்வது என, தங்களை அலங்கரித்துக் கொள்ளும் நடைமுறை அதிகரித்துள்ளது.
ஐநூறு முதல், 50 ஆயிரம் ரூபாய் வரை, விதவிதமான பேக்கேஜ்களில்,அழகுபடுத்துவதற்காகவே, நகரின் மூலை முடுக்குகளில் எல்லாம், டீக்கடைகளை விட, பியூட்டி பார்லர்கள் அதிகம் முளைத்துள்ளன. இதுபோன்ற பியூட்டி பார்லர்களுக்கு சென்றால்,சமையலுக்கு பயன்படுத்தப் படும் உணவுப் பொருட் களில், கடலை மாவு முதல், காய்கறிகள் வரை, ஒன்று விடாமல் முகத்தில் தேய்த்து, " சான்சே இல்ல. கத்ரீனா கயீப், ஹிருத்திக் ரோஷன் போல் சும்மா, தக, தகன்னு மின்னுகிறீர் கள்...' என, அளந்து விடு வதோடு, பர்சையும் காலி செய்து விடுவர்.
தங்களை அழகுபடுத்திக் கொள்ள வேண்டும் என்பதில், ஒரு சிலருக்கு ஆர்வம் இருக்கும். சிலருக்கு, இதில், சாதாரண வெறி அல்ல, கொலை வெறியே வந்து விடும்.
அப்படிப்பட்டவர் தான், பயே டால்மி வயது 20. தென் கொரியாவைச் சேர்ந்த இவருக்கு, 14வயதிலேயே, மேக்-அப் மீது காதல் வந்து விட்டது. ஆரம்பத்தில் வீட்டிலேயே தன்னை அழகுபடுத்திக் கொண்டவர், படிப்படியாக, பியூட்டி பார்லர்களுக்கு போகத் துவங்கினார். நாளடைவில், தினமும் பியூட்டி பார்லர்களிலேயே தவம் கிடந்தார்.
தூங்கும்போது கூட, மேக்-அப் போட்டுத்தான் தூங்குவார் என்றால் பார்த்துக் கொள்ளுங்கள். ஒரு சில நாட்களிலேயே, இவருக்கு ஒரு வித்தியாசமான எண்ணம் தோன்றியது. "தினமும்,மேக்-அப் போட்டு நேரத்தை செலவழிப்பதற்கு பதிலாக, நிரந்தரமாக, மேக்-அப் போட்டுக் கொள்ளலாமே. முகம் கழுவினால் கூட, போகாத அளவுக்கு மேக்-அப் போட்டுக் கொள்ளலாம்...' என, நினைத்து, ஒரு பியூட்டி பார்லருக்கு சென்றார்.
"நிரந்தர மேக்-அப் தானே, இதற்கான ஸ்பெஷல் பேக்கேஜ் எங்களிடம் இருக்கிறது...'எனக் கூறி,ஏதேதோ, சில பொருட்களை முகத்தில் பூசி, கிட்டத்தட்ட முகமூடி போட்டது போன்ற ஒரு மேக்-அப்பை போட்டு விட்டனர். இந்த மேக்-அப்பை சாதாரணமாக களைத்து விட முடியாது. பியூட்டி பார்லருக்கு சென்று தான் கலைக்க முடியும். இந்த மேக்-அப்பை கலைக்க, பயே டால்மிக்கு மனது வரவில்லை. ஒரு மாதம், இரண்டு மாதம் அல்ல இரண்டு ஆண்டுகள், இந்த மேக்-அப்பை கலைக்காமலேயே வலம் வந்தார்.
இரண்டு ஆண்டுகளுக்கு பின், முகத்தில் அரிப்பு ஏற்படத் துவங்கியது. அலறியடித்து,டாக்டரிடம் ஓடினார். "உடனடியாக <<மேக்-அப்பை கலைத்து விடுங்கள். இல்லையெனில்,விஷயம் விபரீதமாகி விடும்...' என கூறினார் டாக்டர். வேறு வழியில்லாமல், மேக்-அப்பை கலைத்தார். இதன்பின், தன் முகத்தை கண்ணாடியில் பார்த்த பயே டால்மி , அதிர்ச்சியில் உறைந்து விட்டார்.
அவரின் உண்மையான வயதை விட, இரண்டு மடங்கு அதிக வயதானவர் போல், அவரது முகம் காணப்பட்டது. வெளியில் சென்றால், கேலி, கிண்டல் செய்வர் என பயந்து,வீட்டுக்குள்ளேயே முடங்கிக் கிடக்கிறார்.
நம் நாட்டில் கூட சிலர், தங்களுக்கு இலியானா போல், "ஜீரோ'சைஸ் இடுப்பு அமைய வேண்டும் என ஆசைப்பட்டு, பல்லில் பச்சை தண்ணீர் கூட படாமல், பல நாட்களாக பட்டினி கிடந்து, கடைசியில் பரலோகம் போய்ச் சேர்ந்த சம்பவங்களும் நடந்து வருகின்றன.
அழகுக்கு ஆசைப்படலாம்; அழகு படுத்திக் கொள்கிறோம் என்ற பெயரில், அபாயத்துக்கு ஆசைப்படலாமா?