உங்கள் வருகைக்கு நன்றி

முன்னேற பல விஷயங்கள் இருக்கின்றன.

புதன், 22 பிப்ரவரி, 2012

பள்ளித் தேர்வு நெருங்க நெருங்க, மாணவர்களுக்கும் பெற்றோருக்கும் இனம் புரியாத பதட்டம் தொற்றிக் கொள்ளும். எதைப் படிப்பது, தினமும் எத்தனை மணி நேரம் படிப்பது என மாணவர்களுக்கும் என்ன சாப்பிடக் கொடுப்பது, பையன் எவ்வளவு மார்க் எடுப்பான் என பெற்றொருக்கும் குழப்பம் ஆரம்பித்து விடும். திட்டமிட்டு படிப்பதும் பாசிட்டிவான சிந்தனையை வளர்த்துக் கொள்வதும்தான் தேர்வு நேரங்களில் பெரிதும் கைகொடுக்கும்.

நம் பிள்ளைகளை பற்றி ஆசிரியர்களை விட நமக்கு நன்றாகத் தெரியும். மாநிலத்திலேயே முதன் மாணவனாக வர வேண்டும் என்ற ஆசை இருந்தாலும் அதெல்லாம் சாத்தியமா என்பதை மனதில் வைத்துக் கொண்டு பிள்ளைகளை படிக்கச் சொல்ல வேண்டும். இரவு நேரத்தில் அதிக நேரம் கண் விழித்து படிப்பதும் சரியான நேரத்துக்கு சாப்பிடாமல் இருப்பதும் மாணவர்களின் உடல் நலத்தை பெரிதும் பாதிக்கும். அதுபோன்ற நேரத்தில் அவர்களை திட்டுவது, 

அடிப்பது, மன உளைச்சலை ஏற்படுத்தும் வகையில் நடந்து கொள்வது ஆகியவற்றை பெற்றோர் தவிர்க்க வேண்டும். இது ஏற்கனவே படித்ததை திரும்ப படிக்கும் நேரம். எனவே, புதுப் பாடங்களை படிக்காமல் படித்ததை மட்டும் திரும்ப படிக்க வேண்டும். திருப்புதல் தேர்வுகளில் எடுக்கும் மார்க்தான் ஏறக்குறைய இறுதித் தேர்வுகளில் கிடைக்கும். அந்த தேர்வுகள்தான் இறுதித் தேர்வுக்கு ஒத்திகை.

பள்ளியில் ரெகுலர் வகுப்புகள் போக, தனியார் பள்ளிகளில் கோச்சிங் என்ற பெயரில் காலையிலும் மாலையிலும் வகுப்புகள் எடுப்பார்கள். அதுபோக, வீட்டிலும் இரவு நேரத்திலும் அதிகாலையிலும் படிக்க வேண்டியிருக்கும். ஏறக்குறைய தூங்கும் நேரம் தவிர மற்ற நேரம் அனைத்திலும் படிப்பு படிப்பு என இருந்தால் சோர்வு வந்துவிடும். அதைப் போக்க, அவ்வப்போது விளையாட்டு, பிரார்த்தனை, தொழுகை, உடற்பயிற்சி என மனமாற்றம் இருக்க வேண்டும். படிப்பில் கவனம் செலுத்துவதற்கு இது புத்துணர்ச்சி தரும்.

வாழ்க்கையில் முன்னேற்றத்துக்கு படிப்பு அவசியம். ஆனால் படிப்பு மட்டுமே வாழ்க்கை கிடையாது. அதையும் தாண்டி முன்னேற பல விஷயங்கள் இருக்கின்றன. இதை பெற்றோர் அறிந்து கொள்ள வேண்டியது அவசியம். தேர்வு டென்ஷனில் இருக்கும் மாணவனை மற்றவர்களோடு ஒப்பிட்டு பேசாமல், தன்னம்பிக்கை ஊட்ட வேண்டிய நேரம் இது.

கருத்துரையிடுக

  © Blogger template Leaving by Ourblogtemplates.com 2008

Back to TOP  

Blogger Widgets