உங்கள் வருகைக்கு நன்றி

தேர்வுக்கு தயாராவதற்கான சில வழிகள்:

சனி, 18 பிப்ரவரி, 2012



+2 மற்றும் 10th வகுப்பு மாணவர்கள், பொதுத்தேர்வை நோக்கி படித்துக்கொண்டு இருப்பார்கள். முறையாக படித்தால் அதிக மதிப்பெண்கள் எடுத்து வெற்றி பெறலாம். தேர்வுக்கு தயாராவதற்கான சில வழிகள்:
மாணவர்கள் அனைத்து பாடங்களையும், முழுவதுமாக படிக்கும் திறனை வளர்த்துக்கொள்ள வேண்டும். புத்தகத்தில் உள்ள அனைத்து பக்கங்களையும் படிப்பது நல்லது. ஏனெனில், பெரும்பாலும் அனைத்து பாடங்களிலும், புத்தகங்களில் இருந்தே கேள்விகள் கேட்கப்படுகின்றன. முந்தைய ஆண்டு வினாத்தாள்களை கொண்டு, ஒவ்வொரு பாடத்துக்கும் குறைந்தது மூன்று முறையாவது சுயமாக தேர்வு எழுதிப் பார்க்க வேண்டும்.
உடல் ஆரோக்கியத்திற்கு அதிக முக்கியத்துவம் அளிக்க வேண்டும். முறையான உணவு பழக்க வழக்கத்தை கடைபிடிக்க வேண்டும். தினமும் குறைந்தபட்சம் 7 மணி நேரமாவது தூங்க வேண்டும். இரவில் நீண்டநேரம் கண்விழித்து படிப்பது உடலுக்கு நல்லதல்ல. அதிகாலையில் எழுந்து படியுங்கள். அப்போது தான் ஆழ்மனதில் பதியும்.
அனைத்துக் குழந்தைகளின் ஞாபகத்திறனும் ஒரே மாதிரி இருப்பதில்லை. சிலருக்கு ஒருமுறை படித்தாலே மனதில் பதிந்து விடும். சிலருக்கு பலமுறை படித்தாலும் ஞாபகத்தில் நிற்பதில்லை. இதற்கு கவனச் சிதறலும் ஒரு காரணம். எனவே, முழு கவனத்தையும் ஒருமுகப்படுத்தி, ஆர்வத்துடனும், மகிழ்ச்சியாகவும் படிக்க கற்றுக்கொள்ள வேண்டும்.
தேர்வுக்கு தயாராகும் போது, டிவி பார்ப்பதை முற்றிலும் தவிர்த்து விட வேண்டும். மேலும், படிக்கும்போது முக்கியமானவற்றை குறிப்பு எடுத்துக்கொள்ள வேண்டும். படித்த பிறகு, அந்த குறிப்புகளை பார்த்து மீண்டும் நினைவு படுத்திக்கொள்ளலாம். பிறகு அதனை பார்க்காமல் எழுதிப் பார்த்துக்கொள்ள வேண்டும். இவற்றை முறையாக கடைபிடித்தால், ஞாபகசக்தி அதிகரிக்கும்.
அதிக மதிப்பெண்கள் எடுப்பதால் கிடைக்கும் நன்மைகள்:
மாணவர்களே தற்போது தேர்வு நெருங்கிக்கொண்டு இருக்கிறது. அரசு நடத்தும் பல்வேறு போட்டித்தேர்வுகள், 10 மற்றும் 12ம் வகுப்பு தேர்வுகள் இன்னும் சில மாதங்களில் நடைபெற உள்ளது.
இத்தேர்வுகளில் நல்ல மதிப்பெண்கள் எடுத்தால் தான் நாம் விரும்பிய படிப்பை, விரும்பிய கல்லூரிகளில் தேர்வு செய்து படிக்க முடியும். நமது நாட்டை பொறுத்தவரை, நாம் எடுக்கும் மதிப்பெண்கள் தான் அறிவுத்திறனை தீர்மானிக்கும் அளவுகோலாக உள்ளதால், அதிக மதிப்பெண்கள் எடுப்பது கட்டாயமாகிறது.
1. நல்ல மதிப்பெண்கள் பெறுவதினால் நல்ல கல்லூரிகளில் இடம் கிடைக்கின்றது. அதுமட்டுமில்லாமல் அரசு கல்லூரிகளிலும் குறைந்த கட்டணத்தில் இடம் கிடைக்கிறது. குறைந்த மதிப்பெண் வாங்கும் போது, லட்ச கணக்கில் பணம் செலவு மற்றும் தரம் குறைந்த கல்லூரிகளில் இடம் கிடைக்கின்றது.
2. நல்ல கல்வியை பெற சிறந்த கல்லூரிகளில் இடம் கிடைப்பதால், தகுதி வாய்ந்த ஆசிரியர்கள் மூலம் தரமான கல்வி, மற்றும் ஆழ்ந்த அறிவு கிடைக்கிறது. தரமற்ற கல்லூரிகளில் சேர்வதால் பாடங்களில் தேர்ச்சி பெறுவதே கடினமாகிறது.
3. தரமான கல்வி கிடைப்பதால் வேலைவாய்ப்பிற்கு செல்லும் போது பல்வேறு திறன்களை வளர்த்துக் கொள்ள உதவி புரிகிறது. மேலும் ஆங்கில பேச்சாற்றல், குழுவிவாதம் போன்றவற்றில் ஈடுபடுவதால், எளிமையாக வேலைவாய்ப்பை பெற முடிகிறது.
4. சிறந்த கல்லூரிகளில் சேர்வதனால், மற்ற கல்லூரிகளில் நடைபெறும், நாம் படிக்கும் துறை சார்ந்த போட்டிகளில் கலந்து கொள்ள வாய்ப்பு கிடைகின்றது. இதனால் போட்டிகளில் வென்று சான்றிதழ்கள் பெறுவதால் வேலைவாய்ப்பில் சேருவதற்கு உதவியாக இருக்கின்றது. தரமற்ற கல்லூரிகளில், தேர்ச்சி பெறுவதே கடினமாக இருப்பதால் பிற திறன்களை வளர்ப்பதற்கு வாய்ப்புகள் குறைகிறது.
5. அதிக மதிப்பெண்கள் பெறுவதால் கல்வித்தொகை எளிதில் கிடைக்கின்றது. உதாரணமாக பிளஸ் 2வில் 80 சதவீதத்திற்கு மேல் மதிப்பெண்கள் எடுக்கும் மாணவர்களுக்கு பல்வேறு உதவிகளை அரசு வழங்குகிறது.
இவ்வாறு மாணவர்கள் தேர்ச்சி பெற்றால் போதும் என்று நினைக்காமல், நல்ல மதிப்பெண் பெற வேண்டும் என்று நினைவில் கொண்டு முழு கவனத்தை செலுத்தி படித்தால் எளிதில் வெற்றி பெற்றலாம்.

கருத்துரையிடுக

  © Blogger template Leaving by Ourblogtemplates.com 2008

Back to TOP  

Blogger Widgets