முயற்சிகள் தவறலாம், முயற்சிக்கத் தவறலாமா?
வெள்ளி, 17 பிப்ரவரி, 2012
நம்ம கிட்ட நாலு காசுகூட இல்லை, ஒரு சொத்துகூட இல்லை, நம்மெல்லாம் என்னைக்குத்தான் முன்னேறப் போகிறோம்'' என்று சிலர் புலம்புவது உண்டு. ஒரு சிலர், நம்மாலும் நாலு எழுத்தாவது படிச்சிருந்தாவாவது முன்னேற முடியும்'' என்றும் சொல்லுவது உண்டு.
பல அரசியல் தலைவர்கள் என்போர், கவிஞர்கள் மற்றும் தொழிலதிபர்கள் சாதாரண பள்ளிப் படிப்பை முடித்தவர்கள்தான். ஆனால், இவர்களால் மக்களின் மனங்களை வெல்ல முடிந்தது எப்படி? எந்தக் கல்லூரியிலும் போய் படிக்காத சிலர் நூற்றுக்கும் மேற்பட்ட நூல்களை எழுத முடிந்தது எப்படி? சிலர் உலத்திற்கு பல கண்டுபிடிப்புகளை வழங்கியவர்கள் படிக்காமலும் முன்னேற முடியும் என்பதற்கு இவர்கள் என்றுமே அழிக்க முடியாத சரித்திரச் சான்றுகள்.
சல்லிக்காசுகூட கையில் இல்லாமலும், உறவினர்கள், நண்பர்களின் உதவியும் இல்லாமலும், முயன்று முன்னேறி வெற்றிக்கனியைப் பறித்தவர்களும் ஏராளம். தோல்விகளின் குழந்தை என்று வர்ணிக்கப்பட்ட ஆப்ரகாம் லிங்கன் மிக மிகச் சாதாரண குடும்பத்தில் பிறந்தவர். ஆனால், இவரோ அமெரிக்க நாட்டின் அதிபராகி, வெள்ளை மாளிகைக்குள் நுழைந்தது எப்படி?
அங்கு ஏன் போவானேன், இந்தியாவின் பாதுகாப்புக்கு வானத்தில் வேலி கட்டிய அப்துல் கலாம், மிக ஏழ்மையான குடும்பத்தில் பிறந்தவர். படிக்கக்கூடப் பணமில்லாமல் தட்டுத்தடுமாறிப் படித்து முன்னேறி விஞ்ஞானியாகி, இந்தியத் திருநாட்டின் குடியரசுத் தலைவராகவும் முடிசூட முடிந்தது எப்படி? இன்றும் இவரால் இளசுகளின் இதயங்களில் இடம்பிடிக்க முடிகிறதே, அது எப்படி?
பணமே இல்லாமல் இருந்து, இன்று ஆண்டுக்கு பல கோடி ரூபாய் வருமான வரி செலுத்தும் அளவுக்கு உயர்ந்த பல தொழிலதிபர்களின் பட்டியல் வளர்ந்துகொண்டே போகிறதே, அது எப்படி? உயரத்தின் உச்சியைத் தொட்ட எவரும் சாதாரணமாகப் படைக்கப்பட்டவர்களாக இருந்தும், இவர்களால் மட்டும் பலரும் பாராட்டும்படி உயர முடிந்தது எப்படி? இப்படி எத்தனையோ எப்படிகள் உள்ளன.
இவர்கள் தங்களது திறமைகளை நன்றாக உணர்ந்திருந்தார்கள். சிறிது நேரத்தைக்கூட வீணாக்காமல் கடுமையாக உழைத்தார்கள். கிடைத்த வாய்ப்புகளைக் கோட்டைவிடாமல் பயன்படுத்திக் கொண்டார்கள். அவர்களது சேவைகளையும், செயல்பாடுகளையும் கண்டு உலகமே அவர்களை உயர்த்தியுள்ளது.
எனவே, இவர்கள் படிப்பும் இல்லாமலும், பணமும் இல்லாமலும் முன்னேற முடியும் என்பதற்குச் சிறந்த உதாரணங்கள்.
உலகைப் படைத்த இறைவன் ஒவ்வொன்றுக்கும் ஏதேனும் ஒரு சக்தியை வைத்துத்தான் படைத்திருக்கிறான். இனிய குரலுடைய குயில்கள், தோகை விரித்தாடும் மயில்கள், வானில் திரியும் பறவைக்குக் கடலுக்குள் இருக்கும் மீனைச் சரியான நேரத்தில் கொத்தித் தூக்கும் திறன், மானுக்கு விரைந்து ஓடும் சக்தி இப்படியாக இதன் வரிசைப் பட்டியல் நீண்டு கொண்டே போகிறது.
காலில் மிதிபடும் மண்ணில்கூட எத்தனேயோ வகைகள். மண்பானை செய்ய ஒருவகை மண், கட்டடங்கள் கட்ட ஒருவகை மண், தாவரங்களை விளைவிக்க ஒருவகை மண், மனிதர்களின் நோய்களைக் கூட தீர்த்து வைக்கும் ஒருவகையான மண், இப்படியாக மண்ணுக்கே இறைவன் பல சக்திகளை வைத்துப் படைத்திருக்கிறபோது, மனிதர்களை மட்டும் எதற்கும் அருகதை அற்றவர்களாகப் படைத்திருப்பானா?
பட்டுப்பூச்சி ஒன்று முதன்முதலாக முட்டைக் கூட்டை விட்டு வெளிவர முயற்சித்தது. முட்டைக் கூட்டை சிறிதளவு உடைத்து விட்டு, சிறிது நேரம் ஓய்வு எடுத்தது. இதைப் பார்த்துக் கொண்டிருந்த இரக்க குணம் மிகுந்த ஒருவர், அதற்கு உதவ நினைத்து, சிறிய கத்தரிக்கோலால் அம்முட்டைக் கூட்டை சிறிதளவு மட்டும் வெட்டி அது வெளியே வர உதவினார். கூட்டை விட்டு வெளியே வந்த பட்டுப்பூச்சிக்கோ சிறகுகளை அசைத்துப் பறக்கத் தெரியவில்லை.
அதற்குக் காரணம் என்னவென்று அவர் விசாரித்தபோது, முட்டைக் கூட்டினை முதலாவதாக உடைத்து வெளி வர அது செய்யும் முயற்சியே இறக்கைகளுக்குப் பலமாக அமைந்து, பறக்க உதவுகிறது எனத் தெரியவந்ததாம்.
பட்டுப்பூச்சி தனது சுயமுயற்சியால் முட்டைக் கூட்டிலிருந்து வெளியில் வராமல் போனதால், இறக்கைகளுக்கு சுயபலமின்றி, அதற்கு நிரந்தரமாகவே பறக்கத் தெரியாமல் போனதாம்.
உலகமே வியந்து பார்க்கும் அளவுக்கு சிறந்த தன்னம்பிக்கைப் பேச்சாளராக இருந்து வருபவர் நிக்விய்ஜெசிக். ஆஸ்திரேலிய நாட்டில் மெல்பர்ன் நகரில் பிறந்த இவருக்கோ இரு கைகளும் இல்லை, இரு கால்களும் இல்லை. ஆனால், இவர் எழுதிய நூலின் பெயர் என்ன தெரியுமா, இரு கையும் இல்லை, இரு கால்களும் இல்லை, ஒரு கவலையும் இல்லை என்பதுதான்.
உள்ளம் ஊனமில்லாமல், உடல் மட்டும் ஊனமாக இருந்த இவர், இன்று எத்தனையோ உள்ளம் ஊனமானவர்களை தனது தன்னம்பிக்கைப் பேச்சால் குணப்படுத்தும் சக்தி படைத்தவராக இருக்கிறார். படிக்கவில்லையே, பணமில்லையே, முன்னேற முடியவில்லையே என்ற தாழ்வு எண்ணங்கள் உடலோடு ஒட்டிக்கொண்டு இருந்தால், அதைப் பிய்த்து எறிந்துவிட்டு சோதனைகளைச் சாதனைகளாக்குவோம். முயன்றால் முடியாதது எதுவுமில்லை. முயற்சிகள் தவறலாம், முயற்சிக்கத் தவறலாமா?