தவறாகப் பயன்படுத்திக் கொள்ளும் மனிதனின் குற்றம்
வியாழன், 16 பிப்ரவரி, 2012
தன்னுடைய செயலால் அடுத்தவரைக் கவரும் ஆசை, நம்மில் ஒவ்வொருவருக்கும் இருக்கத்தான் செய்கிறது. ஆனால், ஒவ்வொருவரும் அதற்காக கையாளும் முறைகள் தான், நபருக்கு நபர் வேறுபடுகின்றன. இந்த ஆசையை வாலிப இயற்கை, சற்று அதிகமாகவே கொடுத்திருக்கிறது. அது இயற்கையின் குற்றமில்லை; அதைத் தவறாகப் பயன்படுத்திக் கொள்ளும் மனிதனின் குற்றம். நல்லதுக்கு பயன்படுத்துபவர்கள், தானும் உயர்ந்து, இந்த சமுதாயத்தின் முன்னேற்றத்துக்கும் வழிவகுக்கின்றனர். ஆசை, தவறான வழியில் பணம் சேர்த்து, சட்டத்தின் பிடியில் சிக்கி, சிறைக் கம்பிகளை எண்ணிக் கொண்டிருக்கும் சில முக்கிய பிரமுகர்களிடமும் இருந்திருக்கிறது. ஓடும் பஸ்சில் தொங்கியபடி பயணம் செய்யும் மாணவன், அதிலுள்ள ஆபத்தை உணராததற்கு காரணம், அவன் கண்ணை மறைத்துள்ள, அடுத்தவரைக் கவரும் ஆசைதான். சமீபகாலமாக பிரபலங்கள் மீது, காலணியை தூக்கி வீசி, தங்களைப் பிரபலப்படுத்திக் கொண்ட சில அதிசய மனிதர்களையும், இந்த சமுதாயம் சந்தித்து நொந்திருக்கிறது. இவர்கள் யாருமே, தங்கள் செயலின் பின்விளைவைப் பற்றி சிந்திப்பதே இல்லை. இவர்கள் சிந்திக்கத் துணியாத கோழைகள்; சிந்திக்க மறுக்கும் பிடிவாதக்காரர்கள் என்பதை, நல்லவர்கள் சமுதாயம் கண்டுகொள்ள வேண்டும். ஒரு பள்ளி மாணவனுக்கு, அவன் பெற்றோர், தேவைக்கதிகமாக வசதிகளைச் செய்து கொடுக்கின்றனர். அதன் காரணமாக, அவனுடன் பள்ளியில் படிக்கும் அனைத்து மாணவர்களின் கவனமும், அவன் மீது படர்கிறது. இது, அம்மாணவனுக்கு ஒருவித போதையை ஏற்படுத்த, அவனுடைய படிப்பின் மீதான சிந்தனை சிதைந்து போகிறது. படிப்பில் பின்தங்கியிருப்பதைப் பொறுக்க இயலாத ஆசிரியையின் அறிக்கை, பெற்றோருக்குப் போக, வழங்கப்பட்டு வந்த வசதிகள், பெற்றோரால் நிறுத்தப்படுகின்றன. எல்லாருடைய கவனத்தையும் ஈர்த்துவந்த மாணவன், அவர்களின் கேலிக்கு ஆளானபோது, அவனால் அதைப் பொறுத்துக் கொள்ள முடியவில்லை. மாறாக, இதற்கெல்லாம் காரணமான ஆசிரியை மீது, அவனது கோபம் திரும்பியது. கொலை வெறியைத் தூண்டிவிட்டது. அனைத்துக்கும் காரணம், காண்போரைக் கவர நினைக்கும் ஆசைக்கு, தவறாகத் தேர்வு செய்த வழிமுறை.
பதினைந்து வயது மாணவன் தனது வகுப்பு ஆசிரியையைக் கொலை செய்திருக்கும் சம்பவம், தமிழக மக்கள் அனைவரையும் பெரும் அதிர்ச்சியிலும் கலக்கத்திலும் ஆழ்த்தியிருக்கிறது.
சரியாகப் படிக்கவில்லை என்று மாணவனைக் கண்டித்ததும், மாணவர் குறிப்பேட்டில் எழுதியதும், பெற்றோரை அழைத்துப் பேசியதும்தான் இந்தக் கொலை வெறிக்குக் காரணம் என்று கூறப்படுகிறது.
ஆனால், இது மட்டும்தான் காரணமா? ஒவ்வொரு பெற்றோரும் ஆசிரியர்களும், ஏன் சமூகத்தின் ஒவ்வோர் அங்கத்தினரும் தங்களுக்குள்ளாகவே இந்தக் கேள்வியைக் கேட்டு, பாரபட்சமில்லாத பதிலைத் தேட வேண்டியது இந்த வேளையில் அவசியமாகிறது. அப்படிச் செய்யும்போது, மூன்று விஷயங்களை அடிப்படையாகக் கொள்வது முறையாக இருக்கும்.
முதலாவதாக, கொலையுண்ட ஆசிரியை உமா மகேஸ்வரி திறமையானவர். அர்ப்பணிப்புள்ளவர். வங்கிப் பணி கிடைத்தும் அதை ஏற்காமல், ஆசிரியை பணியை விரும்பி ஏற்றவர். கடந்த எட்டு ஆண்டுகளுக்கும் மேலாக, அறிவியல் மற்றும் ஹிந்தி வகுப்புகளை நடத்தி வருபவர்.
தனது ஆசிரியர் பணி அனுபவத்தில் நன்கு படிக்கும் மாணவர்களையும், படிப்பில் கவனம் செலுத்த முடியாத மாணவர்கள் பலரையும் பார்த்திருக்கக்கூடியவர். அத்தகைய மாணவர்களின் குறிப்பேட்டிலும் அவர் இதே கருத்துகளைப் பதிவு செய்யவும், பெற்றோரை அழைத்துப் பேசியிருக்கவும் கூடும். இதைவிட மென்மையான அணுகுமுறை வேறு ஏதும் இருக்க வாய்ப்பே இல்லை. அவருக்கு நிச்சயம் மாணவர்களின் கோபம், பெற்றோரின் பாச எதிர்வினை புரிந்தே இருந்திருக்கும்.
இரண்டாவதாக, இந்த மாணவன் இதே பள்ளியில் கடந்த ஐந்து ஆண்டுகளாகப் படித்து வருவதாகவும், அவர் படிப்பில் கவனம் செலுத்தாததால், தேர்வுகளில் குறைந்த மதிப்பெண்களே பெற்றுவந்தார் என்றும் பள்ளி நிர்வாகம் கூறியுள்ளது. மற்றவர்களுடன் அதிகம் பழகாதவர் என்று உடன் பயிலும் மாணவர்கள் கூறுகின்றனர்.
மூன்றாவதாக, கொலைசெய்த மாணவனின் குடும்பம் மிகவும் வசதியானது என்றும்,அவருக்கு நாள்தோறும் கைச்செலவுக்காக ரூ.100 வழங்கப்பட்டது என்றும்கூட கூறப்படுகிறது.
இந்த அடிப்படையுடன், கடந்த பதினைந்து ஆண்டுகளில் கல்வி-பள்ளி-சமூக மாற்றங்களையும் பார்க்க வேண்டும்.
ஒரு வகுப்பறையில் குறைந்தபட்சம் 30 விழுக்காடு மாணவர்கள் படிப்பில் கவனம் செலுத்த முடியாமல், மதிப்பெண் குறைவாகப் பெறுபவர்களாக, ஆசிரியர்களிடம் திட்டு வாங்குபவர்களாகவே இருப்பார்கள். "நீ லாயக்கே இல்லாதவன்', "மாடு மேய்க்கத்தான் போகிறாய்' என்றெல்லாம் மாணவர்களை ஆசிரியர்கள் திட்டி, பிரம்பால் அடித்த காலம் இன்றில்லை. "என் மகன் படித்தால் போதும், கண்ணை மட்டும் விட்டுட்டு உடம்புத் தோலை உரித்தாலும் பரவாயில்லை, அவனது வருங்காலமும் நல்லொழுக்கமும்தான் முக்கியம்'' என்று பெற்றோரே உரிமம் வழங்கிய நிலை, "நாம் இருவர் நமக்கு இருவர்'வந்தபிறகு மாறிவிட்டது.
ஆசிரியர் மீதான கோபத்தை அவருடைய இரு சக்கர வாகனத்தின் காற்றைப் பிடுங்கிவிடுதல், மாணவர்கள் சூட்டிய கேலிப்பெயரை மறைவில் நின்று கத்திவிட்டு ஓடி மறைதல் போன்ற பயம் கலந்த எதிர்வினைகள் முன்பும் இருந்தன. அதைச் செய்வோர் ஓரிருவராக இருந்தனர். ஆனால், இதுபோன்ற வன்முறை இருக்கவில்லை. பள்ளிக் கழிவறைச் சுவரில், சுற்றுச்சுவரில் ஆசிரியரை விமர்சனம் செய்யும் மனவெளிப்பாடுகளும்கூட இன்று மிக அரிதாகிவிட்டன. இப்போது வரையப்படும் படங்கள் வேறானவை. அவற்றுக்கு முகங்கள் தேவைப்படுவதில்லை.
ஆசிரியர்- மாணவர் உறவின் விரிசல் முதலில் தொடங்கியது ட்யூஷன் கலாசாரம் தோன்றிய பிறகுதான். தன்னிடம் ட்யூஷன் படிக்கும் மாணவனிடம் கனிவு, மற்ற மாணவர்களிடம் கடுமை, ட்யூஷன் வருமானத்தில் ஆசிரியர்களிடையே போட்டாபோட்டி,தலைமையாசிரியருக்கு கமிஷன் என்றானபோது, ஆசிரியர்கள் மீது மாணவர்களுக்கு இருந்த பயம் போனதோடு, நம்பிக்கையும் போனது. இந்த உறவின் விரிசலை மெட்ரிகுலேசன் பள்ளிகள் பயன்படுத்திக்கொண்டன. வகுப்பறைகளையே ட்யூஷனாக மாற்றினர். அதிக மாணவர்களைக் கவர்ந்தனர்.
மாணவர்-ஆசிரியர் உறவின் புனிதம் கெட்ட நிலையில், மாணவ, மாணவிகளிடம் ஆசிரியர் தவறாக நடந்துகொண்டதாக ஆண்டுக்கு ஐந்தாறு புகார்கள் கிளம்புகின்றன. அது உண்மைதான். ஆனால், மாணவர்கள் எப்படி நடந்துகொள்கிறார்கள்?
இன்று எல்லா மாணவர்களிடமும், இணையதளத்தில் நுழைவு பெறும் வசதிகளுடன் அதிநவீன செல்போன்கள் உள்ளன. கர்நாடக சட்டப்பேரவையில் மட்டும்தான் நீலப்படங்களை செல்போன்களில் பார்க்கிறார்கள் என்றில்லை. வகுப்பறைகளிலும் செல்போன்களில் படம் பார்க்கிறார்கள் என்றால் நம்ப முடியுமா?
தங்கள் குழந்தைகளுக்கு செல்போன் வாங்கிக் கொடுத்து, கைச்செலவுக்குப் பணமும் கொடுத்து, கணக்கே கேட்காமல் இருக்கும் பெற்றோர் இதை மிகைக்கூற்று, கற்பனைப்பேச்சு என்று சொல்லக்கூடும். ஆனால், பழைய சமூக மதிப்பீடுகளைப் புரட்டிப்போட்ட தகவல் தொழில்நுட்பம், தங்கள் குழந்தைகளையும் புரட்டிப்போட்டுவிட்டன என்பதை ஏற்றுக்கொள்ள பெற்றமனம் தயங்குகிறது.
ஒரு மேனிலைப் பள்ளி மாணவியும் மாணவரும் இயல்புக்கு மீறிப் பழகியதை நேரில் பார்த்த வகுப்பு ஆசிரியர், அந்தப் பெண்ணைக் கண்டித்து, "உன் பெற்றோரை அழைத்து வா' என்றபோது, அந்த மாணவி, "என் பர்சனல் மேட்டர். தேவையில்லாம பிரச்னை பண்ணிங்க... என்ன சொன்னா உங்களை வேலையைவிட்டு தூக்குவாங்கன்னு எனக்கும் தெரியும்'' என்று மிரட்ட, அந்த ஆசிரியர் விலகிச் செல்ல நேர்ந்தது என்பதை அறியவந்தபோது அதிர்ச்சியாக இருந்தது. ஒழுக்கக்கேடான ஆசிரியர்கள் மிகச் சிலராக இருக்க, இப்படிப்பட்ட மாணவ, மாணவியர்கள் அதிகரித்துக்கொண்டே இருக்கிறார்கள்.
காதல், காமம், வன்முறை எல்லாவற்றையும் நாளுக்குநாள் கூட்டிக் கூட்டி, உச்சபட்சமாக வீட்டுக்குள்ளேயே கொண்டுவந்து மனங்களைக் குப்பையாக்கும் பத்திரிகைகள்,ஊடகங்கள், இணையதளம் ஒருபுறம்.
அதற்குத் தேவைப்படும் அனைத்து வசதிகளையும் ஏற்படுத்தி, குழந்தைகள் கையில் பணமும் கொடுத்து, குடும்ப சகிதமாக குத்துப்பாட்டும் பார்த்துக்கொண்டு, அதேசமயம், பிள்ளை கெட்டுப்போகாமல் அதிக மதிப்பெண்ணுடன் தேர்ச்சி பெற நேர்ந்துகொள்ளும் பெற்றோர் ஒருபுறம்.
பிளஸ் டூ-ல நிறைய மதிப்பெண் வாங்கினால்தான், நல்ல கல்லூரியில் இடமும் நல்ல வேலையும் கிடைக்கும். நாலு வருஷம் கஷ்டப்பட்டா போதும்பா, நாப்பது வருஷம் ஜாலியா லைப்ப என்ஜாய் (?) பண்ணலாம்''-இப்படிச் சொல்லிச் சொல்லி நெருக்கடி தரும் ஊரும் உற்றாரும் ஒருபுறம்.
ஆசிரியர்-மாணவர் உறவின் புனிதம் கெட்டதோடு, தமிழையே எழுத்துக்கூட்டி படிக்கத் தெரியாவிட்டாலும் எட்டாம் வகுப்புவரை பாஸ் போடும் கல்விமுறை ஒருபுறம்.
9-ம் வகுப்புக்கு வந்தவுடன் திடீரென "படி படி, இல்லாவிட்டால் நீ ஃபெயில், நிச்சயமாக ஃபெயில்தான்' என்று சொல்கின்ற டீச்சர் ஒருபுறம். அவன் எதிரே இருந்தது ஆசிரியை மட்டும்தான்!