உங்கள் வருகைக்கு நன்றி

அனைத்து தீமைகளுக்கும், நிச்சயம் இதற்கு பங்கு உண்டு

வெள்ளி, 24 பிப்ரவரி, 2012

வெறும் பொழுதுபோக்கிற்காகவும், மக்கள் தங்களது அன்றாட கவலையிலிருந்து சற்று நேரம் ஓய்வுபெற்று, கேளிக்கைகளின் மூலம் மன அமைதி பெறுவதற்காகவும் மட்டுமே துவக்கப்பட்டது சினிமா. நாளடைவில் மக்கள் மனதில் கொஞ்சம் பக்தி, சமூக அக்கறையை வளர்க்கும் விதமாக, புராண பக்திப் படங்களும், சமூக சீர்திருத்தக் கருத்துக்கள் கொண்ட படங்களும், மனதில் பதிய வைக்கும் கதையம்சம் மற்றும் கருத்தாழமிக்க பாடல்களுடன் வெளிவரத்துவங்கின.

மேடை நாடகங்களில் நன்கு தேர்ச்சி பெற்ற நடிகர் மட்டுமே, சினிமாக்களில் ஹீரோக்களாக வலம் வந்தனர். நாடக அனுபவம் இல்லாதவர்கள், சினிமாவில் அடியெடுத்து வைக்க முடியாது. ஒரு ஹீரோவுக்கோ, நகைச்சுவை நடிகனுக்கோ, இன்னின்ன அம்சங்கள் இருக்க வேண்டும் என்று வரையறுக்கப்பட்டது. நகைச்சுவை நடிகர்களும் கொடிகட்டிப் பறந்தனர். கதையம்சத்துடன், ஆடல் பாடல்களுக்கும் அதிக முக்கியத்துவம் கொடுத்து எடுக்கப்பட்ட அன்றைய சினிமாக்கள், ரசனையுடனும், ஆரோக்கியமான பொழுதுபோக்கு அம்சங்களுடனும், நாகரிகமான கேளிக்கைகளுடனும் மக்கள் மனங்களில் நீங்கா இடம் பிடித்தன. காலம் செல்லச் செல்ல, மக்கள்   ரசனை மாற்றத்திற்கு ஏற்ப, திரைப்படங்களில் ஆடல், பாடல் காட்சிகள் குறைக்கப்பட்டன.
ஆனால், இப்போது வருகிற 95 சதவீத தமிழ் சினிமாக்களில், வன்முறையில் எப்படி இறங்குவது, கொலை, கொள்ளை எப்படி திட்டம் தீட்டி செய்வது, மேஜர் கூட ஆகாத பெண்ணை,  எப்படி மயக்கி காதல் செய்வது,  பெற்றோரை எப்படி ஏமாற்றுவது, பெற்றோரையும், பெரியவர்களையும் எப்படி அநாகரிகமாக அழைப்பது என சொல்லிக் கொடுக்கின்றன. உதாரணமாக,   பெரியவர்களை, யோவ்,  பெரிசு'   என்றும், தாய், தந்தையை, "கிழவன், கிழவி' என்றும் அழைப்பது போன்ற காட்சிகள் அதிகம் இடம் பெறுகின்றன. இது போன்று, தமிழ் கலாசாரத்திற்கு சற்றும் ஏற்புடையதாக இல்லாத காட்சியமைப்புகளும், வசனங்களும், பாடல்களும் இடம் பெற்று குடும்பத்துடன் சினிமா பார்ப்பவர்களை முகம் சுளிக்க செய்கின்றன.
வளர்ந்துவரும் இளம் தலைமுறை கவிஞர் ஒருவர், நல்ல அழகு தமிழில், இலக்கிய நடையுடன் எழுதித் தந்த பாடலை பார்த்து தயாரிப்பாளர், "என்னய்யா இது, இந்தக் காலத்திற்கு தகுந்த பாடலா கேட்டால், ஏதோ சங்க காலத்து பாட்டையல்லவா எழுதித் தருகிறாய்' என்று கடிந்து கொண்டார். அந்தப் பாடல் வரிகளிலுள்ள கலைநயம், இலக்கிய நடை, இலக்கண வார்த்தைகள் ஆகியவற்றை எடுத்துவிட்டு, ஆங்கிலச் சொற்களுடன் ஆபாசமான வார்த்தைகளையும் புகுத்தி எழுதச் சொன்னார். தன்மானமும், தமிழ் பற்றுமுள்ள அந்த கவிஞர், அதற்கு மறுக்கவே அவருடைய வாய்ப்பு பறிபோனது. இன்றைய சினிமாக்களும் அவற்றில் வரும் காட்சியமைப்புகளும்வசனங்களும், பாடல்களும் இன்றைய இளைய சமுதாயத்திற்கு எந்த வகையில் உபயோகமாக இருக்கிறது என, எந்த தயாரிப்பாளர் அல்லது இயக்குனரால் சொல்ல முடியுமா? நிச்சயமாக முடியாது.அன்றைக்கு கெட்டுப் போனவர்களும், சினிமாவைப் பார்த்து திருந்தி வாழ நினைத்தனர். இன்றைக்கு திருந்தி வாழ நினைப்பவர்களும், திசைமாறிப் போகும் படியாகத்தான், இக்கால சினிமாக்கள் பெரும்பாலானவை அமைகின்றன.
என்னதான் கடைசி காட்சியில், ஒரு நல்ல முடிவையோ, ஒரு நல்ல செய்தியையோ சொன்னாலும், அதற்குமுன் இரண்டு மணி நேரம் உட்கார்ந்து பார்த்த வன்முறை காட்சிகளும், விரச காட்சிகளும், ஆபாச நடனங்களுமே இளம் தலைமுறை, இளவயது நெஞ்சங்களில் ஆழமாகப் பதியும். நாளுக்கு நாள் பெருகி வரும் கள்ளக்காதலுக்கும், அது தொடர்பான கொலைக்கும், இக்கால சினிமாவின் பங்கும் நிச்சயம் உண்டு என்பதை யாரும் மறுக்க மாட்டார்கள். இக்கால சினிமாக்கள் இளம் தலைமுறையினருக்கு தேசப்பற்றையோ, தெய்வ பற்றையோ உணர்த்தாவிட்டால் பரவாயில்லை; சகித்துக் கொள்ளலாம். ஆனால், குறைந்தபட்சம் தனிமனித ஒழுக்கத்தைக் கூட உணர்த்துவதில்லை.
மீசை கூட முளைக்காத பள்ளி மாணவன், தனக்கு பாடம் சொல்லித்தரும் டீச்சரையோ அல்லது சக மாணவியையோ எப்படி வசியம் செய்வது, இழுத்துக் கொண்டு ஊரைவிட்டு ஓடுவது, பெற்றோரை எப்படி ஏமாற்றுவது, ஆசிரியரை எப்படி கொலை செய்வது போன்ற ஒழுக்க நெறியில்லாத கதைகளையும், காட்சிகளையும்தான் இக்கால சினிமாக்கள் இளைய தலைமுறைக்கு சொல்லித் தருகின்றன.
 சென்னை தனியார் பள்ளியில் 9ம் வகுப்பு படித்த மாணவன், தன் ஆசிரியையை கத்தியால் குத்தி கொலை செய்துள்ள சம்பவம் ஒன்றே, இக்கால சினிமா, தொலைக்காட்சி தொடர்களால் ஏற்படும் விளைவுகளுக்கு உதாரணமாக சொல்லலாம். "அக்னிபாத்' என்ற இந்தி சினிமாவை 30க்கும் மேற்பட்ட முறை பார்த்து, அதன் மூலம் ஆசிரியையை கொலை செய்ய திட்டம் தீட்டினேன்' என அந்த மாணவன் கூறியுள்ளான். "ஒய்திஸ் கொலை வெறி?' பாடலை முணுமுணுக்காத குழந்தைகளே தமிழகத்தில் இல்லை. சினிமா பாடல்களும், காட்சிகளும் பள்ளிக்குழந்தைகள் முதல் கல்லூரி மாணவர்கள் வரை எந்த அளவுபாதிப்பை ஏற்படுத்தியுள்ளது என்பதற்கு இதுவே சாட்சி. மொத்தத்தில், இக்கால சினிமாக்களும், தொலைக்காட்சித் தொடர்களும் ஒன்றுக்கொன்று போட்டி போட்டு, இன்றைய இளம் தலைமுறையினரை கெடுப்பது என கங்கணம் கட்டிக் கொண்டிருப்பதில் சந்தேகமில்லை. இதற்கு முற்றுப்புள்ளி வைக்கப்போவது யார் என்ற கேள்விக்குத்தான் விடை இல்லை.  

கருத்துரையிடுக

  © Blogger template Leaving by Ourblogtemplates.com 2008

Back to TOP  

Blogger Widgets