உங்கள் வருகைக்கு நன்றி

வாழ்நாள் முழுவதும் ஆசிரியராக இருக்கவேண்டும் என்பதே ஆசை.

புதன், 15 பிப்ரவரி, 2012


மாணவருடன் உறவு எப்படி இருக்க வேண்டும் என்பதற்கு முன்னுதாரணமாக திகழ்பவர் ஆசிரியர் வெங்கட்ராமன்(70). தஞ்சை மாவட்டம் திருவையாறை சேர்ந்தவர். கடந்த 10 நாள் முன்பு திடீரென உடல்நலம் பாதிக்கப்பட்டு கோவையில் தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். இதய கோளாறை சரிசெய்ய அறுவைசிகிச்சை செய்ய டாக்டர்கள் கூற, வெங்கட்ராமன் மறுத்துவிட்டார். அவரிடம் எஸ்எஸ்எல்சி படித்துவரும் 20க்கும் அதிகமான மாணவர்கள், தேர்வு எழுதுவதற்கு தான் அளித்து வரும் பயிற்சி தடைபடக்கூடாதே என்பதே, இதற்கு காரணம். முன்னாள் மாணவர்கள் உருக்கமாக வேண்டுகோள் விடுக்க, நிராகரிக்க முடியாமல் அறுவை சிகிச்சைக்கு ஒப்புக்கொண்டார். அறுவைசிகிச்சை முடிந்து தற்போது மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார். 1964ல் மேட்டுப்பாளையத்தில் உள்ள ஒரு பள்ளியில் வணிகவியல் ஆசிரியராக பணிக்கு சேர்ந்தார். ஆசிரியர் என்பதை தாண்டி மாணவர்களுக்கு நட்புக்கரம் நீட்ட துவங்கினார். வகுப்பு முடிந்த பின்னரும் மாணவர்களுக்கு இவர் கல்வி கற்றுக்கொடுத்தார். இதை பள்ளி நிர்வாகம் விரும்பவில்லை. ஒரே ஆண்டில் பெட்டி படுக்கையுடன் மீண்டும் சொந்த ஊர் செல்ல ரயில் நிலையம் சென்றவரை மாணவர்கள் சிலர் பின்தொடர்ந்து சென்று, ‘நீங்க போனீங்கன்னா எங்களோட எதிர்காலமே பாழாயிடும்Õ என கதறினர்.

மேட்டுப்பாளையத்திலேயே ரெயின்போ கல்வியகம் என்ற தனி பயிற்சி பள்ளியை துவக்கினார். சமூக அக்கறை உள்ளவர்களின் உதவியுடன், அனைவருக்கும் இலவசமாக கல்வியை கற்றுக்கொடுத்தார். தனக்கென ஒரு குடும்பம் உருவான பின்புதான் கட்டணம் வாங்க துவங்கினார். அதுவும், ஏழை மாணவர்களுக்கு இல்லை. தற்போது, அவரை நலம் விசாரிக்க வருபவர்களில் பெரும்பாலானோர் முன்னாள் மாணவர்கள். பலர் இவரது மையத்தில் படித்து பட்டம் பெற்று 25 ஆண்டுக்கு மேல் அரசின் பல்வேறு துறைகளில் வேலை பார்ப்பவர்கள். மின் வாரிய மேற்பார்வையாளராக பணியாற்றி ஓய்வு பெற்ற ஜெகநாதன் கூறுகையில், ‘‘நான் உயர காரணமே சார்தான். காசு கொடுத்து படிக்கவேண்டிய பல படிப்புகளை இலவசமாக சொல்லி கொடுத்ததால் அஞ்சல் வழியிலேயே பட்டப்படிப்பு முடித்தேன்’’ என்றார். மின்வாரிய ஊழியர் சந்திரன், ‘‘எஸ்எஸ்எல்சி படிக்கறப்ப நான் ரொம்ப சுமாரான மாணவன். சாதாரண கணக்கு கூட போட தெரியாமல் இருந்த என்னை இன்று அக்கவுன்டன்டாக மாத்தினது சார்தான்’’ என்றார் நெகிழ்ச்சியுடன்.  மருத்துவ சிகிச்சைக்காக கடந்த 40 ஆண்டுகளில் சிறுக, சிறுக சேர்த்த தொகை முழுவதும் இழந்தபோதும் வைராக்கியம் மட்டும் மாறவில்லை. முன்னாள் மாணவர்கள் பலர் சிகிச்சைக்கான செலவை முழுமையாக ஏற்க முன்வந்தபோதும் அதை நிராகரித்து விட்டார்.

புனிதமான நேசம்

மருத்துவமனையில் இருந்த வெங்கட்ராமன் கூறியதாவது: மாணவர்களுடனான நேசம் புனிதமானது. இப்போது மாறி விட்ட வாழ்க்கை சூழலும், மாணவர்களிடம் பெருகிவரும் மன அழுத்தம்தான் இந்த உறவை சீர்குலைக்கிறது. பள்ளிக்கு வரும் 40 மாணவர்களும் ஒரே மாதிரியாக இருக்கவேண்டும் என எதிர்பார்க்கக்கூடாது. அவர்களது பிரச்னையை அறிந்து கொள்வதில் பெற்றோரை காட்டிலும் ஆசிரியருக்கு தான் பங்கு அதிகம். சென்னையில் ஆசிரியை மாணவனால் கொல்லப்பட்டது போன்ற சம்பவம் இனிமேல் எங்கும் நடக்கக்கூடாது. எனக்கு வாழ்நாள் முழுவதும் ஆசிரியராக இருக்கவேண்டும் என்பதே ஆசை. உயிர் உள்ளவரை என் கையில் சாக்பீஸ் இருக்கும்.

கருத்துரையிடுக

  © Blogger template Leaving by Ourblogtemplates.com 2008

Back to TOP  

Blogger Widgets