உங்க வாழ்க்கை உங்க கையில்.
வியாழன், 23 பிப்ரவரி, 2012
இது தேர்வு நேரம். மாணவர்களின் கவனம் முழுவதும் அதிலேயே ஒரு முகப்படுத்தப்பட்டு, பாடப்புத்தகங்களில் மூழ்கும் காலம். உடல் மற்றும் மனதின் ஆற்றல் முழுவதும் தற்போது படிப்பில்தான் செலவிடப்படும். படிப்பதில் அதிக நேரம் செலவழிப்பதும், அதனால் உடல் மற்றும் மனம் சோர்ந்து போய் தேர்வு பயத்திலேயே, அதிக மதிப்பெண் பெற வேண்டும் என்றஏக்கத்திலேயே நமது சக்தி முழுவதையும் விரயமாக்குவது புத்திசாலித்தனமல்ல. எவ்வளவு படிக்கிறோம் என்பதைவிட, எவ்வாறு படிக்கிறோம் என்பதே முக்கியம். குறைவான உழைப்பில் அதிக பலனை பெறுவதே புத்திசாலித்தனம். திறமையான மற்றும் அதிகம் மனஉளைச்சலுக்கு ஆளாகாத வகையில் எளிதாக படித்து, அதன்மூலம் அதிக மதிப்பெண்களைப் பெறுவதற்கு இங்கே பல அரிய ஆலோசனைகள் வழங்கப்பட்டுள்ளன.
படிப்பிற்கான அட்டவணை:
படிப்பதற்கான முறையான அட்டவணை என்பது மிகவும் முக்கியம். முறையான அட்டவணையானது நம்மை குழப்பத்திலிருந்து விடுவிக்கிறது. அதன்மூலம் நாம் என்ன செய்ய வேண்டும் மற்றும் என்ன செய்யக்கூடாது என்ற தெளிவுகிடைக்கிறது. இந்த அட்டவணையை முறையாக, இடைவிடாது பின்பற்றும் வகையில் நம் மனதை நாம் தயார் படுத்திக் கொள்ள வேண்டும். இந்த அட்டவணையில் சூழலுக்கு தகுந்தவாறு சில மாற்றங்களையும் நாம் செய்து கொள்ளலாம்.
படிக்கும் இடம்:
கவனம் சிதறாமல் நன்றாக படிப்பதற்கு ஏற்ற இடம் என்பது மிகவும் அவசியம். நீங்கள் பொதுவாக வணிக நிறுவனங்களில் கவனித்தால் மேலாளர் அறையானது, இரைச்சலிலிருந்து விடுபட்டும், அனைத்து வசதிகளுடனும் இருப்பதைப் பார்க்கலாம். ஏனெனில் முக்கிய மற்றும் உயர்ந்த பொறுப்பில் இருப்பவர்கள் கவனம் சிதறாமல், முக்கிய பணியை செய்யவும், முடிவுகள் எடுக்கவும் அதுபோன்ற சூழல்கள் முக்கியம். அதுபோலத்தான் தேர்வு நேரங்களில் மாணவர்கள் நிலையும். படிப்பதற்கு
நீங்கள் தேர்ந்தெடுக்கும் இடமானது, அங்கே சென்றவுடன் படிக்க உங்களை தூண்டும் வகையில் இருக்கவேண்டும். படுக்கையில் படுத்துக்கொண்டு படிக்கக்கூடாது.சிலவகை வசதி வாய்ப்புகள் குறைவாக இருந்தாலும், படிப்பதற்கான சூழலை(அது மரத்தடி நிழலாக இருந்தாலும் கூட) மனம் அலைபாயாதபடி அமைத்துக் கொள்வதே புத்திசாலித்தனம்.
படிப்பதற்கான உபகரணங்கள்:
மாணவர்களின் படிக்கும் செயல்பாட்டில் மேசை, நாற்காலிஉள்ளிட்ட சில உபகரணங்களும் முக்கியப் பங்கு வகிக்கின்றன.ஒருவர் ஒரு சரியான நாற்காலியில் சரியான முறையில்அமரும்போது அவரின் முதுகெலும்பு நேராகி அவருக்கு புத்துணர்வு ஏற்படுகிறது. இதனால் படிப்பதற்கேற்ற வகையில்மனம் நன்கு ஒருமுகப்படுகிறது. கட்டிலில் படுத்துக்கொண்டோ,தொய்வாக சாய்ந்து அமர்ந்துகொண்டோ படிக்க முயலும்போதுமனம் எளிதில் ஒருமுகப்படுவதில்லை. நீங்கள் பயன்படுத்தும் நாற்காலிக்கு இணையாக நல்லமேசையும்(டேபிள்) இருக்க வேண்டும். அப்போதுதான் உடலுக்கு சரியான சமநிலை கிடைக்கும். அதேசமயம் இத்தகைய வசதிகள் சிலருக்கு இல்லையெனினும், இருக்கும் இடத்தில் நன்றாக அமர்ந்து கொண்டு, புத்துணர்ச்சியுடன் படிக்கவும்.
வெளிச்சம்/விளக்கு வசதிகள்:
பொதுவாக சாதாரண வேலைகளுக்கே நல்ல வெளிச்சம் என்பது ஒரு முக்கிய தேவையாக இருக்கையில், படித்தல் போன்றநுண்ணிய அதேசமயம் மிக முக்கியமான பணிக்கு நல்லவெளிச்சம் எந்தளவிற்கு அவசியம் என்பதை நாம் உணரமுடியும். பல மாணவர்கள் தலைவலி மற்றும் கண் பிரச்சினைகளுக்கு உள்ளாகிறார்கள். இதற்கு அடிப்படை காரணம் அவர்கள் சரியான வெளிச்சத்தில் படிக்காததுதான். துரதிஷ்டவசமாக பல பள்ளிகள் மற்றும் கல்லூரிகளின் வகுப்பறைகளில் முறையான வெளிச்ச வசதிகள் இல்லை. இந்தநிலையில் நமது வீட்டிலாவது முறையான வெளிச்ச சூழ்நிலை இருப்பது நமக்கு நல்லதுதானே. விளக்கு வெளிச்சமானது நமது புத்தகத்தில் நேரடியாக விழும்வகையில் இருக்க வேண்டும். அதேசமயம் வெளிச்சம் நேரடியாக உங்களின் முகத்தில் அடிப்பதுபோல் இருக்கக்கூடாது. வெளிச்சம் உங்களின் பின்புறமிருந்து புத்தகத்தில் படும்படி இருந்தால் மிகவும் நல்லது. உங்களுடைய கண்களின் ஆரோக்கியம், மனதை ஒருமுகப்படுத்தல் போன்ற முக்கிய அம்சங்கள் வெளிச்சத்தை சார்ந்துதான் இருக்கின்றன என்பதை மறந்துவிட வேண்டாம்.
இடையூறுகள்:
நீங்கள் படிக்கும்போது நண்பர்கள் அல்லது குடும்ப உறுப்பினர்கள் ஆகியோரின் இடையூறுகளிலிருந்து விடுபட வேண்டியது மிகவும்முக்கியம். அதற்கேற்ப உங்களின் படிக்கும் நேரத்தை திட்டமிட்டு வைத்துக்கொள்ளவும். வீட்டிற்கு வரும் தொலைபேசி அழைப்பைஏற்றல் மற்றும் வருபவர்களுக்கு வாசல் கதவை திறந்து விடுதல் போன்ற இடையூறான வேலைகளை தவிர்த்து விட வேண்டும். வீட்டில் வேறு யாரையாவது அதை செய்ய சொல்லிவிட வேண்டும். மற்ற நேரங்களில் நண்பர்களை சந்தித்தல், விளையாடசெல்லுதல் மற்றும் வீட்டு வேலைகளை செய்தல் போன்றவைகளில் ஈடுபட்டாலும், படிக்கும் நேரத்தில் இடையூறுகள் எதுவும் இல்லாமல் பார்த்துக் கொள்ள வேண்டும். அப்போதுதான் படிப்பதின் பலன் நமக்கு முழுமையாக கிடைக்கும்.மேலும் தினமும் படிக்கும் நேரத்தை மாற்றாமல் ஒரே நேரத்தை பின்பற்றுவது நன்மை பயக்கும். ஏனெனில் நமது உடல் அதே நேரத்திற்கு பழக்கப்பட்டு விடுவதால் நன்கு ஒத்துழைக்கும். பரீட்சைக்கு முதல் நாளே ஹால் டிக்கெட், பேனா, ரீஃபில், பென்சில்,(தேவைப்பட்டால் கொஸ்டின் பேப்பரில், ச்சாய்ஸ் கேள்விகளை குறித்துக்கொள்ள)ரப்பர், கணித உபகரணங்கள், இன்னபிற (பிட் இல்லை) வற்றை சரிபார்த்து எடுத்து வைத்துக்கொள்ளவும்.காலையில எந்திரிச்சு, ஓடாதீங்க. எக்ஸாம் சென்டரில் குறைந்தது இருபது நிமிடம் முன்பே இருப்பதை வழக்கமாக்கிக் கொள்ளுங்க. தேவையற்ற டென்ஷனை இது தவிர்க்கும்.
முக்கியமான விஷயம், காலை ஆகாரத்தை தவிர்க்கவேண்டாம். ஏதாவது லைட்டாகவாவது எடுத்துக்கொள்வது நல்லது. அட்லீஸ்ட் ஃப்ரூட் சாலட்,வெஜிடபிள் சாண்ட்விச் ஏதாவது எடுத்துக்கோங்க.மூளை சோர்வடையாம இருக்கும். அணியும் உடைகள் இறுக்கமாக அசௌகரியமாக இல்லாம பாத்துக்கோங்க. கோடை ஆரம்பிச்சுட்டதால பரீட்சை எழுதும்போது வேர்த்து வழிஞ்சு,கவனம் சிதறி அவஸ்தைப்பட வேண்டாம்.
முக்கியமான ஒன்று.. வீட்டுக்கு வந்தப்புறம் கொஸ்டின் பேப்பரை கையில் வெச்சிக்கிட்டு,விடைகள் கரெக்டா தப்பான்னு, உங்களுக்கு நீங்களே மார்க் போடவேண்டாம் என்பது என் தாழ்மையான கருத்து. அடுத்த நாளே வேற பேப்பருக்கான எக்ஸாம் இருந்தா இது நம்ம மனவுறுதியை அசைச்சு பாக்க வாய்ப்பு இருக்கு. தைரியமானவங்களை இந்த லிஸ்டில் சேக்கலை ஆன்ஸர் ஷீட்டை திரும்ப கொடுக்கும்போது சரியா கட்டியிருக்கீங்களான்னு சரிபார்த்துக்கோங்க. பேப்பர் ஏதாவது விட்டுப்போச்சுன்னா அப்புறம் ஐயோன்னாலும் வராது.. அம்மான்னாலும் வராது. உங்க வாழ்க்கை உங்க கையில்.