யார் குற்றவாலி ?. பெற்றோரா, மாணவ, மாணவிகளா ?
வியாழன், 9 பிப்ரவரி, 2012
அமெரிக்காவில்தான் இப்படிப்பட்ட சம்பவங்கள் அடிக்கடி நடக்கும். பள்ளியில் புகுந்து சக மாணவர்களை, ஆசிரியர்களை கண்மூடித்தனமாக சுட்டுக்கொல்லும் குற்றச் செயல்கள் அரங்கேறும். அப்படிப்பட்ட ஒரு சம்பவம், சென்னை மாநகரில் நடந்திருக்கிறது என்றால் நம்ப முடியவில்லை என்பதை விட, உச்சகட்ட அதிர்ச்சியை ஏற்படுத்தியிருக்கிறது என்பதே உண்மை.
அது ஒன்றும் சாதாரண பள்ளி அல்ல; ஆண்டுதோறும் நல்ல தேர்ச்சி விகிதம் காட்டும் பள்ளி. மாணவர்களை படிக்க வைத்து, சாதிக்க வைக்க போராடும் ஆசிரியர்கள் கொண்ட பள்ளி என்பதை, அதன் வயது 100ஐ தாண்டியதை வைத்தே தெரிந்து கொள்ளலாம். நகரின் மிக முக்கிய பகுதியில் அமைந்த அந்த பள்ளியில் இப்படி ஒரு கொடூரம் நடக்கும் என்று யாரும் துளிக்கூட கற்பனை செய்து பார்க்க முடியாத அளவுக்கு மிக கொடூரமாக அந்த ரணகள கொலை நடந்துள்ளது.
வகுப்பறைக்குள் ரத்த வெள்ளத்தில் துடிதுடிக்கும் ஆசிரியையை பார்த்து கொஞ்சமும் கலங்காமல், மனம் இரங்காமல், ரத்தத்தை பார்த்து சிறிதும் அஞ்சாமல், ஆத்திரம் அடங்கும் அளவுக்கு குத்தி தீர்த்துள்ளான், ஒன்பதாவது படிக்கும் ஒரு மாணவன். இந்த சின்ன வயதில் இப்படி ஒரு கொடூரமா என ஒட்டுமொத்த பெற்றோரையும் யோசிக்க வைத்துள்ளது. ‘படிக்காததை கண்டித்து கேட்டதால் ஆத்திரத்தில் கொலை செய்தான்...’ என்று போலீஸ் தரப்பு காரணம் சொல்கிறது. மன அழுத்தம்தான் காரணம் என்று மனோதத்துவ நிபுணர்கள் தரப்பு கூறுகிறது. ஒன்று மட்டும் புரிகிறது.
இன்றைய கல்வி சூழலில் மாணவர்கள் & ஆசிரியர்கள் இணக்கம், ஒழுக்க முறை போன்றவற்றில் நாம் இழப்பை சந்தித்து வருகிறோம் என்பது மட்டும் நிச்சயமாக தெரிகிறது. கல்லூரி கல்வி மட்டுமல்ல, பள்ளிக்கல்வியும் கூட வியாபாரமாகி விட்டது என்பது வெட்ட வெளிச்சம். ஆனால், கல்வியை தாண்டி வகுப்பறைக்குள் கற்றுத் தர வேண்டிய சில முக்கிய போதனைகள் எல்லாம் மறைந்து விட்டதன் விளைவுதான் இதுபோன்ற கோரச் செயல்களுக்கு விதை போடுகின்றன. அரசோ, ஆசிரியர்களோ, பள்ளி நிர்வாகமோ இதில் அக்கறை காட்டினால் போதாது; அல்லும் பகலும் சம்பாதிக்க ஓடிக்கொண்டிருக்கும் பெற்றோரும் சிந்திக்க வேண்டிய தருணம் வந்து விட்டது.
மதிப்பெண் குறைவாக எடுக்கிறாயே..' என்று கண்டித்த ஆசிரியை சரமாரியாக கத்தியால் குத்திக்கொல்லப்பட்டார். பள்ளி வகுப்பறையில் 9ம் வகுப்பு மாணவன் நடத்திய இந்த கொடூர வெறிச்செயல், சென்னையில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. பாரிமுனை அரண்மனைகாரன் தெருவில் உள்ள செயின்ட் மேரீஸ் ஆங்கிலோ இந்தியன் பள்ளியில் இந்த பயங்கர சம்பவம் நடந்துள்ளது.
இந்தி பாடம் எடுக்கும் ஆசிரியை உமா மகேஸ்வரி(38) வழக்கம் போல, நேற்று காலை, 9ம் வகுப்பில் உள்ள பல பிரிவு மாணவர்களுக்கு தனித்தனியாக பாடம் எடுத்துக்கொண்டிருந்தார். 11.30 மணி அளவில் 9ம்வகுப்பு ஏ பிரிவு மாணவர்களுக்கு பாடம் எடுக்க முதல் மாடியில் உள்ள ஒரு வகுப்பறையில் உமா உட்கார்ந்திருந்தார்.அப்போது பள்ளி மணி அடித்ததும் வகுப்பறைக்குள் முதல் ஆளாக 9ம் வகுப்பு ஏ பிரிவில் படிக்கும் அந்த மாணவன் ஓடி வந்தான். அவனை பார்த்ததும் உமா மகேஸ்வரி, “ஹோம் ஓர்க் செய்துட்டாயா, ரிமார்க் நோட்டில் பெற்றோரிடம் கையெழுத்து வாங்கினாயா' என்று சேரில் உட்கார்ந்தபடியே கேட்டார்.
பதில் சொல்லாமல் கோபமாக உமாவை முறைத்தபடியே இருந்தான் அந்த மாணவன். அவனை பார்த்த ஆசிரியைக்கு லேசாக பயம் வந்தது. தன் அருகே நெருங்கி வருவதைப் பார்த்த ஆசிரியை, ‘சரி போய் உட்கார்; நோட்டை பார்க்கிறேன்’ என்று கூறினார். ஆனால் மாணவன் நகரவில்லை. திடீரென அவன், தன் பைக்குள் கையை விட்டு கத்தி ஒன்றை எடுத்து உமாமகேஸ்வரியை நோக்கி பாய்ந்தான். நடுங்கிப்போன உமா, ‘என்னப்பா இது...’ என்று இருக்கையில் இருந்து எழுந்து ஓட முயன்றார். ஆனால், நொடிப்பொழுதில் அந்த பயங்கரம் நடந்து விட்டது. கண் இமைக்கும் நேரத்தில் உமா மகேஸ்வரி கழுத்தில் கத்தியை ஓங்கி பலமாக குத்தினான். ரத்தம் கொப்பளிக்க அவர் அலறி துடித்தார். சத்தம் போட முயன்றபோது, தொண்டையில் சரமாரியாக குத்தினான். பேச முடியாத ஆசிரியை ரத்தம் சொட்டச்சொட்ட, மாணவனைப் பார்த்து கையை எடுத்து கும்பிட்டபடி கண்களால் கெஞ்சினார். கழுத்தில் இருந்து ரத்தம் பீறிட அப்படியே சரிய ஆரம்பித்தார். அப்போது, அவரது நெஞ்சிலும், முதுகிலும் குத்தி னான். கைகளை குறுக்கே நீட்டியபோது, கைகளிலும் குத்தினான். இதனால், ரத்த வெள்ளத்தில் ஆசிரியை பரிதாபமாக இறந்தார்.
அதேநேரத்தில் அறைக்குள் மற்ற மாணவர்கள் நுழைந்தனர். ஆசிரியை உமா மகேஸ்வரி ரத்த வெள்ளத்தில் இருக்கையில் சரிந்து கிடப்பதை கண்டு அதிர்ந்தனர். சீருடை முழுவதும் ரத்தமாகவும் கையில் கத்தியுடனும் நின்ற சக மாணவனை பார்த்து மாணவர்கள் விக்கித்து நின்றனர். அவனை சில மாணவர்கள் தைரியமாக பிடிக்க முயன்றனர். ஆனால் அவர்களிடம் கத்தியை காட்டி மிரட்டி, ‘கிட்ட வராதீங்க, வந்தா குத்திடுவேன்' என்று மிரட்டினான்.
இதனால் மாணவர்கள் கூச்சல் போட்டனர். பக்கத்து அறையில் பாடம் நடத்திக்கொண்டிருந்த ஆசிரியை சசிகலா ஓடி வந்து, கத்தியுடன் ஓடிய அந்த மாணவனை பிடிக்க முயன்றார். ஆனால் அவரையும் கத்தியை காட்டி மிரட்டியபடியே வெளியே ஓடினான். படியில் இறங்கி தப்பி ஓடும் போது பள்ளி ஆசிரியர்கள், ஊழியர்கள் மடக்கி பிடித்தனர். கத்தியையும் பிடுங்கினர். எல்லோரும் சேர்ந்து அவனை சரமாரியாக அடித்தனர்.
எஸ்பிளனேடு போலீசுக்கு தகவல் கொடுத்தனர். போலீஸ் துணை கமிஷனர் (பொறுப்பு) லட்சுமி, உதவி கமிஷனர் முரளி, இன்ஸ்பெக்டர் செல்லப்பா ஆகியோர் விரைந்து வந்தனர். ஆசிரியை உமாவை வெறித்தனமாக குத்திக்கொன்ற மாணவனை போலீசில் ஒப்படைத்தனர். இருக்கையில் அமர்ந்தபடியே இறந்து கிடந்த உமாவின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர் போலீசார். மாணவனை போலீஸ் நிலையத்திற்கு கொண்டு சென்று விசாரணை நடத்தினர். வகுப்பறையில் பள்ளி ஆசிரியையை மாணவனே குத்திக் கொன்ற இச் சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
2 நாட்களாக திட்டம்போட்டு கொலை செய்தேன்
சென்னை : கடந்த 2 நாட்களாக திட்டம்போட்டு ஆசிரியரை கொலை செய்ததாக மாணவன் பரபரப்பு வாக்குமூலம் கொடுத்துள்ளான். ஆசிரியை உமா மகேஸ்வரியை கொன்ற மாணவன் முத்தியால்பேட்டை ஏழுகிணறு தெருவில் வசித்து வருகிறான். தந்தை முகமது ரபீது. மண்ணடியில் உள்ள ஏற்றுமதி நிறுவனத்தில் மேலாளராக உள்ளார். இவருக்கு 3 மகள்கள், 1 மகன்.
கைது செய்யப்பட்ட மாணவன் போலீசில் அளித்த வாக்குமூலம்: எனக்கு இந்தி பாடம் என்றாலே பிடிக்காது. எவ்வளவோ படித்தும் மண்டையில் ஏறவில்லை. இதனால் எல்லா தேர்விலும் பெயிலாகி வந்தேன். எனவே டீச்சர் உமா மகேஸ்வரி என்னை கண்டித்து ஒழுங்காக படிக்கச் சொன்னார். ஆனால் என்னால் முடியவில்லை. அவர் திட்டுவார் என்பதற்காக அடிக்கடி பள்ளிக்கு லீவு போட்டு வீட்டிலேயே இருப்பேன். மறுநாள் பள்ளிக்கு சென்றதும் டீச்சரிடம் உடம்பு சரியில்லை என்று ஏதாவது சாக்குப்போக்கு சொல்லி ஏமாற்றுவேன்.
முந்தாநாள் என்னோட ரிமார்க் நோட்டில், ‘உங்கள் மகன் ஒழுங்காக படிக்கவில்லை, ஹோம்ஓர்க் செய்யவில்லை. நோட்டில் நீங்கள் கையெழுத்திட்டு அனுப்பவும்' என்று எழுதி கொடுத்தாங்க. இதனால, எனக்கு அவர் மேல ரொம்ப கோபம் வந்தது. எப்ப பார்த்தாலும் என்னை கண்டிக்கறாரேன்னு ஆத்திரம் ஆத்திரமா வந்தது. எங்கப்பா கிட்டே நோட்டை காட்டினா திட்டுவாரு; அதனால, கையெழுத்து வாங்கலே. என்ன செய்வது என்று தெரியவில்லை.
இதனால் டீச்சர் மீது ஆத்திரம் ஏற்பட்டது. டீச்சரை கொல்ல முடிவு செய்தேன். ஏழுகிணறு தெருவில் உள்ள ஒரு கடையில் 60 ரூபாய் கொடுத்து இரண்டு நாட்களுக்கு முன் சமையல் கத்தி வாங்கினேன். அதை பையில், புத்தகத்திற்குள் வைத்துக்கொண்டு பள்ளிக்கு வந்தேன். ஆனால் வகுப்பறையில் நிறைய மாணவர்கள் இருந்ததால் என்னால் கொலை செய்யமுடியவில்லை. அப்போது ஆசிரியர்கள் என்னிடம் ஏன் ஒரு மாதிரியாக இருக்கிறாய் என்றனர்.
ஒன்றும் சொல்லாமல் வீட்டுக்கு சென்று விட்டேன். நேற்று காலை வழக்கம்போல பள்ளிக்கு வந்தேன். ஆசிரியர்கள் பாடம் எடுத்தனர். ஆனால் எதுவும் என் மண்டையில் ஏறவில்லை. டீச்சரை கொல்ல வேண்டும் என்றே தோன்றிக் கொண்டிருந்தது. எப்படிக் கொல்வது என்பதை இரண்டு நாட்களாக திட்டம்போட்டு வைத்திருந்தேன்.
அதன்படி இந்தி பீரியட் தொடங்குவதற்காக பள்ளி அலாரம் அடித்ததும் எல்லா மாணவர்களுக்கும் முன்பே உமாமகேஸ்வரி இருந்த வகுப்புக்கு சென்று அவரை சரமாரியாக குத்திக்கொலை செய்தேன். இப்போது நான் செய்தது தவறு என்று தோன்றுகிறது. தப்பு செய்து விட்டேன். ஆத்திரத்தில், கோபத்தில் இந்த முடிவை எடுத்தேன். ஆனால், இப்போது மனதுக்கு கஷ்டமாக இருக்கிறது. எனக்கு என்ன தண்டனை வேண்டுமானாலும் கொடுங்கள். பெற்றோர் உட்பட யாரையும் நான் பார்க்க விரும்பவில்லை. நான் தவறு செய்து விட்டேன். எனக்கு மன்னிப்பே கிடையாது. நான் செய்த தவறை வேறு மாணவர்கள் யாரும் செய்ய வேண்டாம். அவர் கதறியது என் கண்ணுக்குள்ளேயே இருக்கிறது.இவ்வாறு தனது வாக்குமூலத் தில் மாண வன் கூறியுள்ளான்.
மனஅழுத்தம் காரணமா? மனநல மருத்துவர் பேட்டி
கீழ்ப்பாக்கம் அரசு மனநல மருத்துவமனை முன்னாள் இயக்குனர் சத்தியநாதன் கூறுகையில், “பள்ளி ஆசிரியையை மாணவன் வகுப்பறையில் கொலை செய்த சம்பவம் பற்றி தொலைக்காட்சியில் பார்த்து அதிர்ந்தேன். கோபம் ஆத்திரம் எல்லா வயதினருக்கும் உண்டு. ஒரு ஆசிரியர் மாணவனை திட்டினால் அந்த மாணவனுக்கு மனஅழுத்தம் ஏற்படும். தான் அவமானப்படுத்தப்பட்டதாக நினைப்பான்.
இதனால் மனநிலை மாற்றம் ஏற்பட்டு பள்ளி செல்லும் எண்ணமே வராமல் போய் விடும். இது ஒரு விதமான கோபம். ஆனால் இந்த மாணவன் செய்த செயல் ஒரு வெறித்தனமானது. இது போன்றவர்கள் அடிக்கடி பொய் சொல்லுவார்கள். தில்லுமுல்லு வேலை செய்வார்கள். தான் செய்த தவறை எப்போதுமே நியாயப்படுத்த முயல்வார்கள். இதற்கு காரணம் வீட்டில் பெற்றோர், மகன் கண்முன்னே சண்டை போடுவது, ஏதாவது பொருட்களை தூக்கி அடித்துக்கொள்வது, இதையெல்லாம் பார்ப்பதால்தான் இதுபோன்ற கொடூர செயலுக்கு ஆளாகிறார்கள். இதற்கு பெற்றோர்களின் முறையற்ற வளர்ப்பே காரணம்“ என்றார்.
160 ஆண்டு பழமையான பள்ளி
பாரிமுனை அரண்மனைகாரன் தெருவில் உள்ள செயின்ட் மேரீஸ் ஆங்கிலோ இந்தியன் பள்ளி 160 ஆண்டுகள் பழமையானது. இங்கு 1200க்கும் மேற்பட்ட மாணவர்கள் படித்து வருகிறார்கள். 1ம் வகுப்பு முதல் 5ம் வகுப்பு வரை ஒரு கட்டிடத்திலும், 6ம் வகுப்பு முதல் 12ம் வகுப்பு வரை மற்றொரு கட்டிடத்திலும் பள்ளி இயங்கி வருகிறது.
சிறுவர் சிறையில் அடைப்பு
மாணவனை தனியாக விசாரித்த போலீசார், அவன் சிறுவன் என்பதால் ஸ்டான்லி மருத்துவமனைக்கு அழைத்துச் சென்று பரிசோதனை செய்தனர். அவன் சிறுவன்தான் என்று மருத்துவமனையில் உறுதி செய்த பிறகு, புரசைவாக்கத்தில் உள்ள சிறுவர்களுக்கான நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தினர். பின், அந்த மாணவன் சைதாப்பேட்டையில் உள்ள சிறுவர் சீர்திருத்தப் பள்ளியில் அடைக்கப்பட்டான்.
ஆசிரியை உடலை பார்த்து கணவர் கதறல்
கொலை செய்யப்பட்ட உமா மகேஸ்வரி மந்தவெளி 2வது வடக்கு மெயின் ரோட்டில் உள்ள அப்பார்ட் மென்ட்ஸ்சில் வசித்து வந்தார். இவரது கணவர் ரவிக்குமார்(42). இவர்களுக்கு 2 மகள்கள் உள்ளனர். ரவிக்குமார் மயிலாப்பூரில் உள்ள பிரபல எலெக்ட்ரானிக் நிறுவனத்தில் மண்டல அதிகாரியாக பணியாற்றி வருகிறார். உமா மகேஸ்வரி கடந்த 5 ஆண்டுகளாக செயின்ட் மேரீஸ் பள்ளியில் வேலை பார்த்து வந்தார். 9, 10ம் வகுப்பு மாணவர்களுக்கு அறிவியல், இந்தி பாடங்கள் எடுத்து வந்தார்.
இவரது பிணம் பிரேத பரிசோதனைக்காக அரசு பொது மருத்துவமனையில் வைக்கப்பட்டுள்ளது. மனைவி கொலை செய்யப்பட்ட தகவல் கணவர் ரவிக்குமாருக்கு தெரிவிக்கப்பட்டது. அவர் தனது 2 மகள்களை அழைத்துக்கொண்டு அரசு மருத்துவமனைக்கு வந்தார். மனைவி கொடூரமாக குத்தி கொலை செய்யப்பட்டு இருப்பதை கண்டு கதறி அழுது புரண்டார். 2 மகள்களும் கண்ணீர் விட்டு கதறினர். உமா மகேஸ்வரி முன்னாள் போலீஸ் கமிஷனர் நாஞ்சில் குமரனின் உறவினர் ஆவார். இதனால் தகவல் அறிந்து அவரும் மருத்துவமனைக்கு விரைந்து வந்தார். கதறி அழுத ரவிக்குமார், அவரது மகள்களுக்கு ஆறுதல் கூறினார். போலீஸ் அதிகாரிகளிடம் அவர் விவரங்களை கேட்டறிந்தார்.
மாணவர்களிடம் அன்பு காட்டுவார் ஆசிரியை உமா
பத்திரிகை, தொலைக்காட்சி நிருபர்களை பள்ளிக்குள் விடாமல் நிர்வாகிகள் வாசலில் நின்று கொண்டு வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். பின்னர் இறுதியாக கொலை நடந்தது குறித்து பள்ளி நிர்வாகி போஸ்கோ நிருபர்களிடம் கூறுகையில், “காலையில் 10ம்வகுப்பு சி பிரிவில் அறையில் ஆசிரியை உமா மகேஸ்வரியை 9ம்வகுப்பு மாணவன் குத்திக்கொலை செய்துள்ளான். உமா மகேஸ்வரி ரொம்பவும் நல்ல ஆசிரியை. எந்த மாணவரையும் அடித்தது கூட கிடையாது. மாணவர்களை அன்பாகத் தான் நடத்துவார். இந்த மாணவன் ஒழுங்காக படிப்பது இல்லை. பலமுறை அவனது பெற்றோரை பள்ளிக்கு அழைத்து மாணவன் ஒழுங்காக படிப்பது இல்லை என்று கூறியிருக்கிறோம்.
இந்நிலையில் கடந்த சில நாட்களாக தொடர்ந்து மாண வன் ஹோம்ஓர்க் செய்யாமல் வந்திருந்தான். இதனால் உமா மகேஸ்வரி ரிமார்க் நோட்டில் அவனது படிப்பை பற்றி எழுதியுள்ளார். பெற்றோரிடம் கையெழுத்து வாங்கி வரும்படி கூறி கண்டித்துள்ளார். ஆனால் மாணவன் இப்படி கொடூரமான காரியத்தை செய்வான் என்று நினைத்துக்கூட பார்க்க வில்லை. ஒரு நல்ல ஆசிரியரை பள்ளி இழந்து விட்டது“ என்றார்.
கொலை செய்த மாணவனுக்கு பாக்கெட் மணி ரூ. 100
கொலை செய்த மாணவன் வீட்டில் கடைசி மகன் என்பதால் மிகவும் செல்லமாக வளர்க்கப்பட்டுள்ளான். அவன் என்ன கேட்டாலும் அவரது தந்தை உடனே வாங்கி கொடுத்துவிடுவார். தினமும் அவன் காரில் தான் பள்ளிக்கு வருவான். ஒரு நாளைக்கு அவனுக்கு பாக்கெட் மணியாக ரூ.100 கொடுத்து அவரது தந்தை அனுப்புவார். மாணவனின் வீட்டுக்கு அருகில் வசிப்பவர்கள் கூறுகையில், “மாணவனின் தந்தை முகமது ரபீது, 3 மகள்களையும் நன்றாக படிக்க வைத்து விட்டார். மகன் மட்டும் ஒழுங்காக படிக்க வில்லை என்று வருத்தப்பட்டுள்ளார். எப்படியாவது அவன் பிளஸ் 2வரை இங்கு படிக்க வைத்து விட்டு மேல்படிப்பிற்காக வெளிநாட்டிற்கு அனுப்ப அவர் திட்டமிட்டிருந்தார். ஆனால் அவன் இதுபோன்ற கொடூரமான செயலை செய்வான் என்று நினைத்துக் கூட பார்க்கவில்லை“ என்றனர்.
ஆசிரியர் சங்கம் அறிக்கை
தமிழ்நாடு ஆசிரியர் சங்க தலைவர் பி.கே.இளமாறன் நேற்று வெளியிட்ட அறிக்கை: ஆசிரியை உமா மகேஸ்வரி (38) பாடம் நடத்திக் கொண்டு இருந்தபோது, 9ம் வகுப்பு மாணவன் இர்பான் கத்தியால் குத்திக் கொலை செய்துள்ளான். இந்த செயல் ஆசிரியர் சமுதாயத்தை மட்டும் அல்லாமல், அனைவரையும் அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது. இறந்த ஆசிரியையின் குடும்பத்துக்கு உரிய உதவித்தொகை வழங்க வேண்டும். மேலும், இதுபோன்ற சம்பவங்கள் எதிர்காலத்தில் நடக்காமல் இருக்க, கலந்துரையாடல் போன்ற நடவடிக்கை எடுக்க வேண்டும்.
நன்றி - தினகரன்