உங்கள் வருகைக்கு நன்றி

கதாநாயகர்கள்

வெள்ளி, 10 பிப்ரவரி, 2012


இன்றைய உலகில் தினமும் மாலைப்பொழுதில் சூரியன் மறைந்த பின்பு இரவிலும், பகலைப் போல மின்னுகிறதே. அதற்கு காரணம் தாமஸ் ஆல்வா எடிசன் தான்.
இவர் அமெரிக்கவின் மிலன் நகரில் 1847ல் பிப்.,11ல் பிறந்தார். தனது அரிய கண்டுபிடிப்பால் உலகுக்கே வெளிச்சம் கொடுத்தவர். இவர் மின் விளக்கு மட்டுமல்லாமல், போனோகிராப், டெலி பிரின்டர், பேட்டரி, சிமென்ட், நிலக்கரி, கேமரா, ஒலி நாடா உள்ளிட்ட ஏராளமான கண்டுபிடிப்புகளை உருவாக்கினார். இவர் அமெரிக்காவில மட்டும் தன் பெயரில் 1,093 கண்டுபிடிப்புகளுக்கான உரிமங்களை பதிவு செய்துள்ளார். இøத் தவிர பிரிட்டன், பிரான்ஸ் ஆகிய நாடுகளிலும் தனது கண்டுபிடிப்புகளை பதிவு செய்துள்ளார். சில படைப்புகள், ஏற்கனவே கண்டுபிடிக்கப்பட்டதை மேம்படுத்தி உருவாக்கப்பட்டவை.

அறிவியல் ஆர்வம்: பெற்றோருக்கு ஏழாவது குழந்தையாக பிறந்தவர் எடிசன். பள்ளிப்பருவத்தின் போது, காது கேளாமையால் பாதிக்கப்பட்டார். ஆசிரியர் இவரை திட்டியதால் பள்ளிக்கு செல்வதை நிறுத்தினார். இருப்பினும் இவரது தாயார் ஆசிரியை என்பதால், வீட்டிலேயே கல்வி கற்றார். 12வது வயதிலேயே படிப்புக்கு முடிவு கட்டினார். காரணம், அறிவியலில் கொண்ட ஆர்வம். டெட்ராய்ட் ரயில் நிலையத்தில் செய்தித்தாள், காய்கறி விற்கும் பணியில் ஈடுபட்டார். அப்போதெல்லாம், தந்திப்பதிவு (டெலிகிராப்) மூலம் ரயில் போக்குவரத்து நடந்தது. புள்ளிக்கோடுகளாக பதிவதை ஆங்கிலத்தில் மொழி பெயர்க்கும் தந்திப்பதிவு ஆபரேட்டர் வேலையில் எடிசன் சேர்ந்தார். 1871ல் திருமணம் செய்தார். மூன்று குழந்தைகள் பிறந்தனர்.

முதல் கண்டுபிடிப்பு: டெலிகிராப் ஆபரேட்டர் வேலையில் இருந்து விலகி, நியூயார்க் சென்றார். அங்கு தான் கண்டுபிடிப்பாளராக வாழ்க்கையை தொடங்கினார். "போனோகிராப்' எனும் ரிகார்டிங் கருவி, ஒலி நாடா, மின் டெலிகிராப் கருவிகளை கண்டுபிடித்தார். டெலிகிராப் மட்டும் 10 ஆயிரம் அமெரிக்க டாலருக்கு விலை போனது. இதன் மூலம் பெரிய தொழில் அதிபராக உயர்ந்தார்.

சரித்திர கண்டுபிடிப்பு: அக்காலத்தில் வாயு விளக்குகள் தான் பயன்பாட்டில் இருந்தன. மின் விளக்கு கண்டுபிடிப்பது பலரது கனவாகவும் இருந்தது. மின் விளக்கு ஆராய்ச்சிக்காக "எடிசன் மின்விளக்கு கம்பெனி' தொடங்கப்பட்டது. பிரான்சிஸ் அப்டன் என்பவரும் எடிசனின் ஆய்வுக்கூடத்தில் சேர்ந்தார். இவர்கள் சேர்ந்து 1879ல், பிளாட்டினம் கம்பிச்சுருளை, வெற்றிட பல்ப் ஒன்றில் பயன்படுத்தி கட்டுப்படுத்திய மின்னோட்டத்தில், உலகின் முதல் மின்விளக்கை எடிசன் குழுவினர் கண்டுபிடித்தனர். இதற்குப்பின் எலக்ட்ரிக் மோட்டார், சினிமா கேமரா உள்ளிட்ட பல கண்டுப்பிடிப்புகளை உருவாக்கினார். இவர் படித்து தெரிந்து கொள்வதை விட, ஒரு செயலை திரும்ப, திரும்ப செய்து செய்முறை மூலமே கற்றுக்கொண்டார். இவரிடம் எப்படி இவ்வளவு கண்டுபிடிப்புகளை உருவாக்கினீர்கள் என்று கேட்ட போது, "படைப்புக்கு தேவை ஒரு சதவீதம் ஊக்கமும், 99 சதவீதம் கடின உழைப்பும் தான்' என்றார்.

இறுதி மரியாதை: எடிசன், 1931 அக்., 18ல் வெஸ்ட் ஆரஞ்ச் நகரில் மறைந்தார். அப்போது அமெரிக்க அதிபராக இருந்த ஹெர்பர்ட் ஹூவர், எடிசனுக்கு மரியாதை செலுத்தும் விதமாக, நாடு முழுவதும் தேவையான விளக்குகள் தவிர மற்ற அனைத்தையும் ஒரு நிமிடம் அணைக்க உத்தரவிட்டார். இவரது கண்டுபிடிப்பை போற்றுவோம்.

கருத்துரையிடுக

  © Blogger template Leaving by Ourblogtemplates.com 2008

Back to TOP  

Blogger Widgets