நெயில்பாலிஷ் பயன்படுத்தும் பெண்களுக்கு
வெள்ளி, 20 ஜூலை, 2012
அமெரிக்காவின் பாஸ்டன் நகரில் உள்ள ப்ரிகாம்
மருத்துவமனையின் பெண்கள் நலப்பிரிவு சார்பில் டாக்டர் தமரா ஜேம்ஸ் டாட் தலைமையில்
சமீபத்தில் ஒரு ஆய்வு நடந்தது. தேசிய ஊட்டச்சத்து மற்றும் சுகாதாரம் என்ற பெயரில்
ஒரு சர்வே மற்றும் அதனுடன் இணைந்து ஆய்வும் நடத்தப்பட்டது. ஆய்வு முடிவில்
கூறப்பட்டுள்ளதாவது:
2,350 பெண்கள்
சிறுநீர் தொற்றால் அவதிப்படுவது முதல்கட்ட ஆய்வில் கண்டுபிடிக்கப்பட்டது. தாலேட்ஸ்
வகை ரசாயனம் அவர்களது சிறுநீரில் அதிக அளவில் இருந்ததே இதற்கு காரணம் என்பது
பல்வேறு பரிசோதனைகளில் உறுதிப்படுத்தப்பட்டது. தாலேட்ஸ் ரசாயனம் அதிக அளவில்
இருந்தவர்கள் சர்க்கரை நோய் தாக்குதலுக்கு ஆளாகியிருந்தனர். நாளமில்லா சுரப்பிகளை
பாதிக்கும் தாலேட்ஸ் ரசாயனப் பொருள் மாயிஸ்சரைசர், சோப்புகள், ஹேர் ஸ்பிரே ஆகியவற்றில் உள்ளது. மேலும், நாம் அதிகம் பயன்படுத்தும் பசைப் பொருட்கள், எலக்ட்ரானிக் பொருட்கள், விளையாட்டு சாதனங்களில்கூட இந்த ரசாயனம் அதிக அளவில் உள்ளது. நெய்ல்பாலிஷ், பாடி ஸ்பிரே, சென்ட் உள்ளிட்ட பர்ப்யூம்களில் அதிகமாக
உள்ளது. தாலேட்ஸ் வகைகளான மோனோ பென்சைல் தாலேட் மற்றும் மோனோ ஐசோபியூட்டைல் தாலேட்
ஆகியவை சிறுநீரில் அதிகரிக்கும் போது சர்க்கரை நோய் தாக்கும் வாய்ப்பு அதிகம்.
தாலேட்ஸ் அதிகம் உள்ள ரசாயன பொருட்களை நாம் அதிகம் பயன்படுத்தினால், நம் உடலில் இவை அதிகம் ஊடுருவும். நாள்பட
பயன்படுத்தும்போது சர்க்கரை நோய்க்கு ஆளாகும் அபாயம் உண்டாகும். எனவே, முடிந்தவரை இந்த வகை பொருட்களை
பயன்படுத்துவதை தவிர்க்கலாம். அவ்வப்போது முழு உடல் பரிசோதனைகள் மேற்கொண்டால், நோய்களை ஆரம்ப கட்டத்திலேயே கண்டறிந்து
கட்டுப்படுத்த உதவும். இவ்வாறு ஆய்வு முடிவில் கூறப்பட்டுள்ளது.