உங்கள் வருகைக்கு நன்றி

அறிவீர்களா ஆக்சிடோசின் ஆபத்தை ?

வெள்ளி, 13 ஜூலை, 2012


பெருகி வரும் மக்கள்தொகையின் விளைவாக உணவுத் தேவை வேகமாக அதிகரித்து வருகிறது. இதைப் பயன்படுத்தி பல குறுக்குவழிகளில் உணவுப் பொருள்கள் தயாரிக்கப்பட்டு வருகின்றன. குறுகிய காலத்துக்குள் அதிக அளவில் உணவுப் பொருள்களைத் தயாரித்து லாபம் பார்க்கவேண்டும் என்ற எண்ணம் பெரும்பாலான தயாரிப்பாளர்களிடம் அண்மைக்காலமாக மேலோங்கி வருகிறது.
இதன் காரணமாக முன்பைப்போல உணவில் சுகாதாரத்தையோ, வளமிக்க சத்தையோ பெற முடிவதில்லை. இதனால் ஒருகாலத்தில் உணவே மருந்தாகிய காலம்போய், இன்று உணவே விஷமாகி வருகிறது. அந்த அளவுக்கு நாம் சாப்பிடும் பெரும்பாலான உணவுப் பொருள்களில் ஏதாவது ஒருவகையில் விஷத்தன்மை கலக்கிறது அல்லது கலக்கப்படுகிறது.
பசுமைப்புரட்சி என்ற பெயரில் பயிர்கள் அனைத்தும் விஷத்தன்மையோடு வளர்கிறது என்றால், அவை உணவுப் பொருளாக விற்பனைக்கு வரும்போது அவற்றில், மேலும் பல வகைகளில் கலப்படம் செய்யப்பட்டு விஷத்தன்மை சேர்க்கப்படுகிறது. இதனால் இப்பொருள்களைச் சாப்பிடும் நாமும், தொற்றுநோய்களின் களமாக மாற்றப்படுகிறோம். உணவு விஷமாகி வருவதால், இன்று மனிதர்களைப் பல்வேறு தொற்றுநோய்கள் தாக்குகின்றன.
பெண்கள் பிரசவத்தின்போது நஞ்சைப் பிரித்தெடுப்பதற்காக மருத்துவர்கள் பயன்படுத்தும் ஒருவகை ஹார்மோன் ஆக்சிடோசின். இந்த மருந்தை மிகவும் குறைந்தவிலைக்கு அனைத்து மருந்துக்
கடைகளிலும் வாங்கலாம். சில ஆண்டுகளுக்கு முன்புவரை பெண்கள் பிரசவத்துக்கும் மற்றும் சில நோய்களுக்கும் மருந்தாகப் பயன்படுத்தப்பட்ட ஆக்சிடோசின், இப்போது மாடுகளில் அதிகம் பால் சுரப்பதற்காகப் பயன்படுத்தப்படுகிறது.
இந்தப் பாலைச் சாப்பிடும் நபர்களைப் புற்றுநோய், குறைந்த ரத்த அழுத்தம் போன்றவை தாக்குவதற்கு அதிகம் வாய்ப்பு இருப்பதாகக் கூறப்படுகிறது. ஆனாலும் மாடு வளர்ப்போரில் சில பேராசைக்காரர்கள் மாடுகளுக்கு இந்த வகை மருந்தை ஊசியின் மூலமாகச் செலுத்துவதை நிறுத்தவில்லை. இந்த மருந்து ஊசி போடப்பட்ட மாட்டின் பாலைச் சாப்பிடும் மனிதர்களுக்கே புற்றுநோய் போன்றவை வருகிறதாம். அந்த மருந்தைத் தினமும் உட்கொள்ளும் மாடுகளின் நிலைமையோ அதைவிட மோசம்.
உதாரணமாக 10 ஆண்டுகள் வாழவேண்டிய மாடுகள், இந்த மருந்தால் 5 ஆண்டுகளுக்குள் மடிந்துவிடுவதாக சுகாதாரத் துறையினர் தெரிவிக்கின்றனர்.
அரசு மருத்துவப் பயன்பாட்டைத் தவிர்த்து வேறு எந்தப் பயன்பாட்டுக்கும் இந்த ஹார்மோனைப் பயன்படுத்தக் கூடாது என உத்தரவிட்டது. உத்தரவிட்டதோடு அரசு திருப்தியாகிவிட்டது எனலாம். ஆனால், இன்றும் நம் ஊரில் சிறிய மருந்துக்கடைகளில் இந்த மருந்தை மருத்துவரின் எந்தப் பரிந்துரைச் சீட்டும் இல்லாமல் வாங்கிவிடலாம். அந்த அளவுக்குத் தாராளமயமாக ஆக்சிடோசின் விற்பனை செய்யப்படுகிறது.
அதேவேளையில் ஆக்சிடோசின் ஆலகால விஷமாக, தனது விஷத்தன்மையை விஸ்தரித்து வருகிறது. மாடுகளுக்கு மட்டும் செலுத்தப்பட்ட இந்த மருந்து, இப்போது காய்கறிச் செடி வளர்ப்பிலும் பயன்படுத்தப்படுகிறது.

விவசாயிகள் அதிக மகசூலைப் பெறுவதற்கு ஆக்சிடோசினை செடிகளில் செலுத்துவதாக மத்திய சுகாதாரத் துறை கூறுகிறது. இந்த மருந்தால் காய்கறிகள் அதிக பருமனையும், அழகான வடிவத்தையும், பசுமை நிறத்தையும் பெறுகின்றன.

குறிப்பாக பரங்கிக்காய், சுரைக்காய், தர்பூசணி, வெள்ளரிக்காய், கத்திரிக்காய் ஆகிய காய்கறிகளில் அதிகம் செலுத்தப்படுவதாக சுகாதாரத் துறையே தெரிவிக்கிறது. ஆக்சிடோசின் செலுத்தப்பட்ட செடியின் காய்கறிகளைச் சாப்பிடும்போது, நரம்புத் தளர்ச்சி, புற்றுநோய், குறைந்த ரத்த அழுத்தம், மலட்டுத்தன்மை, ஆண்மைக் குறைவு ஆகிய நோய்கள் ஏற்படும் என மத்திய சுகாதாரத் துறை எச்சரிக்கும் அளவுக்கு நிலைமை மோசமாகச் சென்று கொண்டிருக்கிறது.

ஆக்சிடோசின் கொடுக்கப்படும் மாடுகளைக்கூட ஒருகாலகட்டத்தில் கண்டுகொள்ளலாம். ஆனால், காய்கறிகளை இனம் கண்டுபிடிப்பது மிகவும் கடினம். இந்த காய்கறிகளைச் சாப்பிட்டவுடன், நமக்கு எந்தவிதப் பாதிப்பும் தெரியாது. வெகுநாள்கள் சென்ற பின்னர்தான், ஆக்சிடோசின் மனித உடலுக்குள் தனது வேலையைக் காட்டத் தொடங்கும்.

விலங்குகளுக்கோ, தாவரங்களுக்கோ ஆக்சிடோசினைப் பயன்படுத்தக் கூடாது என தடை இருந்தாலும், இந்த மருந்து மிகவும் குறைந்த விலையில் கிடைப்பதே, விவசாயிகள் இதை அதிகம் பயன்படுத்துவதற்குக் காரணமாகக் கூறப்படுகிறது. இதன் விளைவாகவே இந்த குறுக்குவழியை விவசாயிகள் தேர்ந்தெடுக்கின்றனர். இன்றைய நிலவரப்படி 1 மில்லி ஆக்சிடோசின் 15-ல் இருந்து  20-க்கு விற்பனை செய்யப்படுகிறது.

இது தாவரங்களுக்கும், விலங்குகளுக்கும் கொடுக்கும் சத்தான உரப் பொருள்களைக் காட்டிலும், பலமடங்கு விலை குறைவாகும்.

பெரிய விளைவையும், பாதிப்பையும் ஏற்படுத்தும் இப் பிரச்னையின் ஆழத்தை அரசு உணரவில்லையென்றே கூற வேண்டும். அதன் காரணமாகத்தான், இன்றும் மக்களிடம் சாதாரணமாக ஆக்சிடோசின் நடமாடுகிறது. அரசு இனியும் ஆக்சிடோசின் விஷயத்தில் தெளிவான, கடுமையான நடவடிக்கையை எடுப்பதற்கு காலதாமதப்படுத்தினால், நாளைய தலைமுறையை நோயுள்ளதாக்கும் செயலில் அரசுக்கும் முக்கிய பங்கு இருக்கும்.
 

கருத்துரையிடுக

  © Blogger template Leaving by Ourblogtemplates.com 2008

Back to TOP  

Blogger Widgets