உங்கள் வருகைக்கு நன்றி

மக்களே மனது வைப்பீர்களா?

வெள்ளி, 13 ஜூலை, 2012


உலகில் சீனாவுக்கு அடுத்ததாக அதிக மக்கள்தொகையைக் கொண்ட நாடு என்ற பெருமையைப்பெற்ற இந்தியாவில் மக்கள் நெருக்கம் நாளுக்குநாள் அதிகரித்து வருகிறது. அதற்கேற்ப சுகாதாரக்கேடு, புதுப்புது நோய்கள், குடிநீர்ப் பஞ்சம், உணவுப் பற்றாக்குறை என பல பிரச்னைகள் பெருகி வருகின்றன. இவற்றில் பெரும் ஆபத்தை விளைவிப்பவை பெருகிவரும் மாசுக்கள்தான்.
வழக்கம்போல மாசுபடுதலுக்கு முக்கிய காரணம் ரசாயனப் பொருள்களின் பயன்பாடு, மரங்களை அழித்தல் போன்றவற்றைக் கூறலாம். இப்படியே நிலைமை பூதாகரமாகிப் போவதால் புவிவெப்பமயமாதல், சுற்றுச்சூழல் சீர்கேடு என பல கடுமையான பின்விளைவுகளை எதிர்கொள்ள வேண்டிய கட்டாயத்தில் இருக்கிறோம்.
இன்றைய நிலையில் குப்பைகள் குவிந்த நாடு இந்தியாதான் என்பதை மறுப்பதற்கில்லை.
நாட்டில் நாளுக்குநாள் குப்பைகளின் பெருக்கம் அதிகரித்து வருகிறது. இதைத் தடுக்க பல்வேறு அதிரடி நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படுகின்றன. ஆனாலும் மக்கள் மனது வைத்தால் மட்டுமே இவற்றுக்கு முற்றுப்புள்ளி வைக்க முடியும்.
குப்பைகளைச் சேகரித்து அதை இயற்கை உரமாக மாற்றுதல், மின்சாரம் தயாரித்தல் என பல்வேறு ஆக்கப்பூர்வமான செயல்கள் ஆங்காங்கே நடைபெற்று வருகின்றன.
 
ஆனாலும், இதை அனைவரும் பின்பற்றினால்தான் குப்பைகள் இல்லா நல்லுலகம் அமையும். நம்மில் பலர் குப்பைகளை முறையாக
அகற்றுவதில் அலட்சியம் காட்டுகிறோம். இதனால் சுகாதாரச் சீர்கேடு ஏற்படுவது தவிர்க்கமுடியாத ஒன்றாகிவிட்டது. மக்கும் குப்பை, மக்காத குப்பை என பிரித்தால் மட்டுமே சுகாதாரத்தைப் பேணலாம். மக்காத குப்பைகள் என பார்த்தால் பிளாஸ்டிக், பாலிதீன் பைகளைக் கூறலாம். மக்காத குப்பையால் மண்ணில் மழைநீர் தேங்குகிறது. தண்ணீரை மண் உறிஞ்சாத நிலை ஏற்படுகிறது.
சிங்கப்பூர், மலேசியா, கொரியா போன்ற பல நாடுகளில் திடக்கழிவு மேலாண்மைத் திட்டம் தீவிரமாகச் செயல்படுத்தப்படுகிறது. குப்பைகளை எங்குமே பார்க்க முடியாது. ஆனால், நம் நாட்டிலோ குளம், குட்டை, ஆறு, நீர்த்தேக்கங்களில் கழிவுகள்தான் அதிகமாகக் காணப்படுகின்றன. நம் ஊரில் அவசரத்துக்கு டிரான்ஸ்பார்மர்களும் கூட ஒதுங்குமிடமாகிவிட்டது வேதனை தரும் விஷயம்.
எனவே, இதைத் தவிர்ப்பதில் ஒவ்வொருவருமே அக்கறை காட்ட வேண்டும். குறிப்பாக, வீட்டில் உள்ள குப்பைகளை உரமாக மாற்ற சிறிய கருவி தயாரிக்கப்பட்டுள்ளது. அதைப் பயன்படுத்தலாம். பாலிதீன் கவர்களைப் பயன்படுத்தக் கூடாது என்ற சட்டம் ஏட்டளவில்தான் உள்ளது. அதை எத்தனை பேர் பின்பற்றுகிறார்கள் என்பது கேள்விக்குறியாக உள்ளது. குமரி மாவட்டம் மட்டும் முன்னோடியாக தீவிர நடவடிக்கைகளை எடுத்து வருவது பாராட்டத்தக்கது.
பொதுவாக, சில கடைகளில் மட்டுமே காகிதத்தைப் பயன்படுத்துகின்றனர். இன்னும் பல கடைகளில் பாலிதீன் கவர்களின் உபயோகம் காணப்படுகிறது. இதை நிரந்தரமாகத் தடுக்க வேண்டும். புகை பிடிப்போருக்கு அபராதம், நடவடிக்கை என சில காலம் பரபரப்பான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டன. அப்புறம் பழைய மாதிரியாகி விட்டது. அதே நிலைதான் பாலிதீன் தடுப்பு நடவடிக்கையிலும் காணப்படுகிறது. எனவே மாற்றம் என்பது மக்கள் மனதில் தானாக ஏற்பட வேண்டும்.
 
கையில் துணிப்பைகளை எடுத்துச் செல்ல வேண்டும். இலைகளைப் பயன்படுத்தலாம். பிளாஸ்டிக் குடங்களுக்குப் பதில் மண் பானைகளைப் பயன்படுத்தலாம். வீடுகளில் உள்ள குப்பைகளைத் தோட்டங்களில் உரமாகப் பயன்படுத்தலாம்.
 
இதுபோல அலுவலகம், ஹோட்டல் உள்ளிட்ட அனைத்துத் தரப்பினருமே ஒன்றிணைந்து செயல்பட்டால் குப்பைகளை அறவே இல்லாது அகற்றலாம். சுகாதாரக்கேட்டையும் தவிர்க்கலாம். மேலும், தொண்டு நிறுவனங்கள், ரசிகர் மன்றங்கள், சுயஉதவிக் குழுவினர், விழாக்கள் கொண்டாடும் பிரபலங்கள் குப்பைகளை அகற்றுவதைச் சேவையாகச் செய்யலாம். சாலைப் பாதுகாப்பு வாரம், சுகாதார வாரம் என்பதைப் போல குப்பை ஒழிப்பு வாரம் கடைப்பிடிக்கலாம். நாட்டுநலப்பணித் திட்ட மாணவர்களைக் கொண்டு குப்பைகளை அகற்றலாம். இந்த விஷயத்தில் மக்களுக்குப் போதிய விழிப்புணர்வு மூலம் மனமாற்றத்தை ஏற்படுத்தினால் குப்பை இல்லா நல்லுலகு தொட்டுவிடும் தூரத்தில்தான் உள்ளது. மனது வைப்பார்களா?

கருத்துரையிடுக

  © Blogger template Leaving by Ourblogtemplates.com 2008

Back to TOP  

Blogger Widgets