அரசை மட்டுமே குறைகூறிப் பயனில்லை.
சனி, 28 ஜூலை, 2012
நாட்டில் சாலை
விபத்துகளும், அவற்றில் உயிரிழப்போரின் எண்ணிக்கையும்
பெட்ரோல்-டீசல் விலையைப் போலவும், வாகனங்களின் எண்ணிக்கையைப் போலவும்
அதிகரித்துக்கொண்டே செல்கிறது. இப்போது சாலை விபத்துகளில் மணிக்கு 15-க்கும் மேற்பட்டோர் உயிரிழப்பதாகவும், அதிக விபத்துகள் நிகழும் மாநிலங்களுக்குள் தமிழகத்துக்கும் ஒரு தனியிடம்
உள்ளதாகவும் புள்ளிவிவரங்கள் தெரிவிக்கின்றன.
சாலை விபத்துகளை
முழுவதும் தடுப்பதென்பது இயலாத காரியமே. ஆனால், குறைந்தபட்சமாகக்
குறைக்கலாம். அதைப் பொதுமக்கள் குறிப்பாக, வாகன ஓட்டிகள்
ஒவ்வொருவரும் நினைத்துச் செயல்பட வேண்டும்.
விபத்துகளால்
ஏற்படும் உயிரிழப்பு குறித்த செய்திகளைப் பத்திரிகைகளிலும், ஊடகங்களிலும் படிக்கும்போதும், பார்க்கும்போதும் மட்டும் அனுதாபப்படுவதும், அடுத்த வினாடி மறந்துவிடுவதும் வாடிக்கையாகிவிட்டது. மற்றவர்களுக்கு அது ஒரு
செய்தி, அவ்வளவே. ஆனால், உறவுகளையோ, உடல் உறுப்புகளையோ இழந்து தவிக்கும் சம்பந்தப்பட்டோருக்குத்தான் தெரியும்
வலியும், இழப்பும், தொடரும்
வேதனையும்.
எதற்கெடுத்தாலும்
அரசைக் குறைகூறுவதைப்போல இந்த விஷயத்திலும் அரசை மட்டுமே குறைகூறிப் பயனில்லை.
சாலை விபத்துகளுக்கும், அவற்றில் அதிக உயிரிழப்பு ஏற்படவும் முக்கிய
காரணம் விதிகளை முறையாகக் கடைப்பிடிக்காததே. மதுபோதை, தலைக்கவசம் அணியாமை, சாலையில் திரியும் கால்நடைகள், தேவையான இடங்களில் இல்லாமலும், தேவையற்ற
இடங்களில் இருப்பதுமான வேகத்தடைகள், குடிநீர்க்
குழாய்கள், பாதாள சாக்கடை போன்ற திட்டங்களுக்காக
தோண்டப்பட்ட அல்லது தோண்டி மூடமறந்த பள்ளங்கள், முக்கியப்
பிரமுகர்களுக்காக வைக்கப்படும் பிரமாண்ட வரவேற்பு வளைவுகள், பதாகைகளுக்காகத் தோண்டப்படும் பள்ளங்கள் என காரணங்களை அடுக்கிக்கொண்டே
போகலாம்.
இவை மட்டுமன்றி, செல்போன் பேசிக் கொண்டு வாகனங்களை ஓட்டுதல், சாலை நடுவிலோ, சாலையோரத்திலோ பழுதாகி நின்றிருக்கும் வாகனங்களும் அதிக விபத்துகள்
நேரிடுவதற்குக் காரணமாகின்றன.
மித வேகம் மிக
நன்று' என சாலையோர அறிவிப்புப் பலகைகள்
அறிவுறுத்தினாலும், அதிக வேகம் ஆணுக்கு அழகு' என்பதே இன்றைய இளைய சமுதாயத்தின் புதுமொழியாக இருக்கிறது. இளைஞர்கள் பலரும்
தார்ச்சாலைகளைப் பந்தய மைதானத்தைப் போலவே பாவித்துக் கொள்கின்றனர். அவர்கள் தங்கள்
வாகன ஓட்டும் திறமையையும், சாகசத்தையும், இளமைக்
குறும்புகளையும் காட்ட சாலைகளே சிறந்த இடம் எனத் தேர்வு செய்துவிட்டதைப்போலத்
தோன்றுகிறது.
பரந்து விரிந்த
தேசிய நெடுஞ்சாலைகள் என்றில்லை; முட்டுச் சந்துகளில்கூட பலர் தங்கள் வாகனத்தின்
வேகத்தைக் குறைப்பதில்லை. மேலும் வாகனங்களுக்குப் பொருந்தாத வகையில் ஒலியெழுப்பும்
விதவிதமான ஹாரன்களைப் பொருத்தி, அதை "கொலைவெறி' கொண்டதுபோல அழுத்தி, சாலையோரம் நடந்து செல்லும் அப்பாவி மக்களை
அலறவைப்பதும், சிலர் இருசக்கர வாகனங்களில் அதிக ஆள்களை
ஏற்றிக்கொண்டு உயிரோடு விளையாடுவதும் தொடர்கதையாக உள்ளது.
சில நேரங்களில் வாகனங்களில் அதிக வேகத்தில்
செல்வோரைக் கண்டால் இவர்கள் எல்லாம் ஒரு வினாடியைக்கூட வீணாக்காத மனிதர்கள் என நினைப்போம்.
ஆனால், அவர்களின் வேகமெல்லாம் மதுக்கடையை நோக்கியோ, திரையரங்குகளை நோக்கியோ, சாலையோரக் கட்டைச்சுவரில் அமர்ந்தபடி
வெட்டிக்கதைகள் பேசிப் பொழுதைப்போக்கவோதான் பயன்படும் எனத் தெரியவந்தால் வேதனையால்
அழுவதா, சிரிப்பதா என்ற நிலைதான் நமக்கு.
விபத்துகளால்
ஏற்படும் உயிரிழப்பைத் தடுக்க தலைக்கவசம் அணிய வேண்டும் என வலியுறுத்தும் காவல்
துறையினர், அரசும், விபத்துகளை
ஏற்படுத்தும் பஸ் ஓட்டுநர்களின் உரிமங்களை ரத்துசெய்வது உள்ளிட்ட பல்வேறு
நடவடிக்கைகளை எடுத்துவருகிறது. ஆனாலும், விபத்துகளை
ஏற்படுத்தி உயிர் பலிக்குக் காரணமாவோருக்கு அதிகபட்ச தண்டனை, அதிக அபராதம் விதித்தல் போன்ற நடவடிக்கைகளை மேற்கொண்டால்தான் வாகன
ஓட்டிகளுக்கும் அச்சம் ஏற்படும். விபத்துகளின் எண்ணிக்கையும் குறையும்.