உங்கள் வருகைக்கு நன்றி

விதிவிலக்காக நிற்கிறார் டாக்டர் வித்யா.

செவ்வாய், 16 ஏப்ரல், 2013


பெரும்பாலான மருத்துவர்களும் வசூல் ராஜாக்களாக, ராணிக்களாக மாறிக் கொண்டிருக்கிற காலமிது. மருத்துவத்தை சேவையாகப் பார்த்தமனோபாவம்  மாறி, இன்று அது மாபெரும் பிசினஸ்! 

தேவையற்ற பரிசோதனைகள், அனாவசிய மருந்துகள், அவசியமே இல்லாத கன்சல்ட்டேஷன் என மக்களின் பணத்தைப் பறிப்பதிலேயே பல  மருத்துவர்களும் குறியாக இருக்க, சென்னை முகப்பேர் டாக்டர் வித்யா, விதிவிலக்காக நிற்கிறார். பல் மருத்துவரான வித்யாவின் வித்தியாசமான  அணுகுமுறை வியக்க வைக்கிறது. வயதான மற்றும் உடல்நலமில்லாதவர்களின் பல் மருத்துவத்துக்காக அவர்களது இருப்பிடத்துக்கே போய் சிகிச்சை  செய்து வருகிறார் வித்யா!

Mobile Clinic!

மருந்து, மாத்திரைகள், உபகரணங்கள் அடங்கிய சின்னப் பெட்டி, வெள்ளை கோட், கழுத்தைச் சுற்றிய ஸ்டெத்தஸ்கோப் என வித்யாவின் தோற்றம்பழைய கருப்பு-வெள்ளை சினிமாக்களில் வரும் மருத்துவ முகங்களை ஞாபகப்படுத்துகின்றன. டாக்டருக்கான எந்த அலட்டலும் இல்லாமல், தனது டூ  வீலரிலோ, தேவைப்பட்டால் மட்டுமே காரிலோ, சிகிச்சைக்காக சென்னையை வலம் வருகிறார் வித்யா.

‘‘நர்ஸா இருந்த எங்கம்மா கலிங்கராணிதான் எனக்கு முதல் இன்ஸ்பிரேஷன். மருத்துவத்தை சேவையா பார்க்கக் கத்துக் கொடுத்தவங்க அவங்கதான்.  விருப்பப்பட்டுதான் பல் மருத்துவம் படிச்சேன். என்னைப் பொறுத்தவரை அது ஒரு கலை. ரொம்ப ரொம்ப கவனமா, அக்கறையா, அன்போட அணுக  வேண்டிய ஒரு துறை. பல் மருத்துவம்கிறது இன்னிக்கு மிகப்பெரிய பிசினஸா வளர்ந்திட்டிருக்கு. 

ஆஸ்பத்திரியோட பிரமாண்டம், அங்கே உபயோகிக்கப்படற பெரிய பெரிய மெஷின், வைத்திய செலவுன்னு எல்லாமே மக்களை பயமுறுத்துது.  அதுக்குப் பயந்து, பல் ஆரோக்கியத்தை அலட்சியப்படுத்தறவங்களும், சுய மருத்துவம் செய்துக்கிறவங்களும்தான் நிறைய பேர்...  பணம்  பிரச்னையில்லைங்கிற நம்பிக்கையைக் கொடுக்கத்தான், ரொம்ப ரொம்ப குறைஞ்ச கட்டணத்துல சிகிச்சை கொடுக்க, 10 வருஷங்களுக்கு முன்னாடி  கிளினிக் தொடங்கினேன். 

என்னோட கிளினிக்ல ஏழை, பணக்காரங்கன்னு எல்லோருக்கும் ஒரே மாதிரியான ட்ரீட்மென்ட்தான். ஒரு முறை இலங்கையைச் சேர்ந்த பேஷன்ட்தன்னோட மாமியாரைப் பத்திச் சொன்னாங்க. படுத்த படுக்கையா இருந்த அவங்களுக்கு, பல் எல்லாம் விழுந்திருந்தது. பல் இல்லாததால சரியா  சாப்பிட முடியலை. ரொம்ப பலவீனமா இருந்தாங்க. நோயாளிங்கிறதால ஆஸ்பத்திரிக்கு கூட்டிட்டுப் போய் பல் செட் கட்டவும் முடியாத நிலையில,  ‘அவங்களுக்கு ஏதாவது செய்ய முடியுமான்னு கேட்டாங்க. 

அவங்க வீட்டுக்குப் போய், அந்தம்மாவுக்கு பல் செட் கட்டறதுக்கான 5 கட்ட சிகிச்சைகளையும் வீட்லயே செய்து, நல்லபடியா கட்டி விட்டேன்.  அதுக்குப் பிறகு அவங்க நல்லா சாப்பிட ஆரம்பிச்சு, உடம்பும் மனசும் தேறினாங்க. அந்த வாழ்த்தும் அதுல கிடைச்ச மன திருப்தியும்தான் என்னோட  ‘மொபைல் கிளினிக்ஐடியாவுக்கு அஸ்திவாரம்...பின்னணி சொல்கிற டாக்டர் வித்யா, ரொம்பவும் வயதானவர்கள், நடமாடவே முடியாத  நோயாளிகள், மனநலம் சரியில்லாதவர்கள் ஆகியோருக்கு வீட்டுக்கே சென்று சிகிச்சை தருகிறார். 

மற்றவர்களுக்கு தனது கிளினிக்கில். வீட்டுக்குச் சென்று சிகிச்சையளிப்பதற்காக உபரிக் கட்டணமெல்லாம் வாங்குவதில்லை!  பற்களை சுத்தம்  செய்வது, எடுப்பது, கட்டுவது, கிளிப் போடுவது, வேர் சிகிச்சை உள்ளிட்ட 90 சதவிகித சிகிச்சைகளை வீட்டிலேயே செய்யலாம் என்கிறார் வித்யா. ‘‘பெரும்பாலும் நான் தனியாவே போயிடுவேன். கொஞ்சம் பெரிய ட்ரீட்மென்ட்டுன்னா மட்டும்தான் அசிஸ்டென்ட்ஸ் கூட்டிட்டுப் போவேன். 

வயசானவங்களுக்கும், மனநலம் சரியில்லாதவங்களுக்கும் ட்ரீட்மென்ட் கொடுக்கிறப்ப, அசாத்திய பொறுமை வேணும். தன்னையறியாம  கடிச்சிடுவாங்க. வாந்தி எடுப்பாங்க. முரட்டுத்தனமா நடந்துப்பாங்க. மனநலம் பாதிக்கப்பட்ட குழந்தைங்களுக்கு சிகிச்சை கொடுக்கிறது அதைவிடக்  கஷ்டம். அத்தனை சுலபத்துல நம்மகிட்ட வரவே மாட்டாங்க. 

முதல் ரெண்டு விசிட் சும்மா அவங்களோட பேசிப் பழகுவேன். கிஃப்ட் கொடுப்பேன். மூணாவது விசிட்லதான் ட்ரீட்மென்ட் ஆரம்பிப்பேன். சிகிச்சை  முடியறபோது, அவங்கக்கிட்டருந்து கிடைக்கிற அந்த அன்பும் வாழ்த்தும், கோடி ரூபாய் கொட்டிக் கொடுத்தாலும் கிடைக்காதது...’’ - அன்பொழுகப்  பேசுகிற டாக்டருக்கு, குடிசைவாழ் மக்களிடம் பல் ஆரோக்கியம் பற்றிய விழிப்புணர்வைப் பிரபலப்படுத்துவதே அடுத்த திட்டமாம்! (தொடர்புக்கு - 9941664635)  


நன்றி -தினகரன் 

கருத்துரையிடுக

  © Blogger template Leaving by Ourblogtemplates.com 2008

Back to TOP  

Blogger Widgets