தயிரை விட மோர் நல்லதா?.
வெள்ளி, 18 செப்டம்பர், 2020
தயிர் நல்லதா, மோர் நல்லதா என்பதை கூறும், இயற்கை மருத்துவர், ஒய்.தீபா: பாலில் இருந்து கிடைத்தாலும், மோர், தயிருக்கு தனித்தனி குணாதிசயங்கள் உள்ளன. தயிரை, தண்ணீர் கலந்து, மோராக மாற்றும் போது, 'அல்கலைன்' உணவாக மாறுகிறது; எளிதாக ஜீரணமாகிறது. இரண்டும், ஒரே மாதிரியான ஊட்டச் சத்துகளையே கொண்டுள்ளன. ஆனால், கலோரி கணக்கு பார்த்தால், ௧௦௦ கிராம் தயிரில், ௯௦ கிராம் கலோரி இருக்கும்; ௧௦௦ கிராம் மோரில், ௪௦ கிராம் கலோரிகள் தான் இருக்கும். இரண்டிலும் கால்சியம் இருந்தாலும், தயிரை விட, மோரில் உள்ள கால்சியம் தான், உடல் கிரகித்துக் கொள்ள ஏதுவாக உள்ளது. மோரில், விட்டமின் பி ௧௨, ஜிங்க், புரதம் போன்றவை, உடலை வலுப்படுத்தும். தயிரில் கொழுப்புச் சத்து அதிகம் உள்ளது. தயிர் சேர்த்த உணவுகளை, தினமும் உண்ணும் போது, செரிமான சக்தி வெகுவாகக் குறைந்து, உடலில் கபம் அதிகமாகும். கொழுப்பாக, உடலில் தங்கி விடும். தயிர் அதிகமாக எடுத்துக் கொண்டால், மலச்சிக்கல் கூட ஏற்படலாம். நாம் சாப்பிடும் உணவு, அமிலத் தன்மையோடு இருந்தாலும், நம் உடலில் உள்ள சோடியம், நாம் சாப்பிட்ட உணவை, அல்கலைனாக மாற்றும். அதிகமாக அமிலத் தன்மை உள்ள உணவை எடுத்துக் கொள்ளும் போது, நம் உடலில் உள்ள சோடியம் தீர்ந்து போகும். அப்போது, எலும்பில் சேர்ந்திருக்கும் கால்சியம் தான், நம் உணவை, அல்கலைனாக மாற்றும்; உடல் பலமற்று இருக்கும்.இதை சரி செய்ய, அதிகமாக மோர், காய்கறி, பழங்களை சாப்பிட வேண்டும். இதன் மூலம், அசிட்டிக்கை, அல்கலைனாக மாற்றக் கூடிய சோடியம், கால்சியம் உடலில் அதிகரிக்கும். தயிரை அதிகமாக எடுத்துக் கொண்டால், உடலானது, அசிட்டிக்காக மாறும். அதே நேரத்தில், மோர் அதிகம் சாப்பிட வேண்டும் என்பதற்காக, தயிரை புறக்கணிக்கக் கூடாது. எடுத்துக் கொள்ளும் அளவை குறைத்துக் கொள்ள வேண்டும். உணவுக்கு பின், மோர் எடுத்துக் கொள்வதால், செரிமான சக்தி அதிகரிக்கும். உடலில் உள்ள தேவையில்லாத கெட்ட கொழுப்புகளை நீக்கும். உடல் எடையை அதிகரிக்க நினைப்பவர்கள், மோருக்குப் பதில், தயிரை அதிகம் சேர்த்துக் கொள்ள வேண்டும். வெயில் நேரங்களில், தயிரை தவிர்த்து, மோர் அதிகமாக சாப்பிட வேண்டும். இந்த காலத்தில், நம் உடலில் உள்ள நீர்ச்சத்துகள் குறையும். அப்போது மோர் குடிப்பதால், உடலில் நீர் வறட்சி ஏற்படாது; உடலும் புத்துணர்ச்சியாக இருக்கும். மோரில் கறிவேப்பிலை, பச்சை மிளகாய், இஞ்சி, கொத்தமல்லித் தழை, உப்பு சேர்த்து அருந்தினால், அமிர்தமாக இருக்கும்; உடலுக்கும் மிக நல்லது; பசியின்மை சரியாகும்.