உங்கள் வருகைக்கு நன்றி

துாங்கும் போது வியர்ப்பது.

வியாழன், 5 மார்ச், 2020


உடல் உழைப்பில் ஈடுபட்ட பின், வியர்ப்பது இயல்பு. உடல் வெப்பம் அதிகமாகும் போது, நரம்பு மண்டலத்தின் துாண்டுதலால், வியர்வை சுரப்பிகள், தங்கள் பணியை செய்ய துவங்கும்; அதைத்தான், 'வியர்க்கிறது' என்கிறோம். ஆனால், உடல் உழைப்பில்லாமல் ஓய்வில் இருக்கும்போது வியர்வை அதிகரிக்கிறது என்றால், அது இயல்பானதல்ல. குறிப்பாக, சிலருக்கு இரவில் உறங்கும்போது, அதிகமாக வியர்வை வெளியேறும். இப்படி, தவறான நேரத்தில் உடல் வெப்பம் அதிகரிப்பது, ஆரோக்கிய குறைபாடின் அறிகுறி. உடலில், 'ஹார்மோன்' மாற்றம் நிகழ்பவர்களுக்கு, அதன் காரணமாக வியர்வை வெளியேற்றம் அதிகரிக்கும். பூப்பெய்திய துவக்க காலம், கர்ப்பிணிகள் மற்றும் 'மெனோபாஸ்' நிலையிலிருக்கும் பெண்களுக்கு, ஹார்மோன் சமச்சீரின்மை ஏற்படும் வாய்ப்பு அதிகம் என்பதால், அவர்களுக்கும் இந்தப் பிரச்னை ஏற்படலாம். பொதுவாக, காய்ச்சலோடு தொடர்புடைய நோய்த்தொற்று பாதிப்புகள், அதிக வியர்வைக்கு காரணமாக இருக்கும். தொற்று பாதிப்புகள் ஏற்படும்போது, உடல் வெப்பம் அதிகரிக்கத் தொடங்கும். இயல்பை விட, இரவில் தான் அது அதிகமாக இருக்கும். காசநோய், எலும்பு அழற்சி போன்றவை இருந்தால், துாக்கத்தின்போது அதிகம் வியர்க்கும்.ஒருவர் உறங்கும்போது, உடலில் ரத்தச் சர்க்கரை அளவு குறையத் துவங்கினால், வியர்வை அதிகம் வெளியேறும். ஒவ்வாமை உள்ள மருந்துகளை உட்கொண்டால், பக்கவிளைவாக, வியர்வை வெளியேறுவது அதிகமாகும். உடலில் அமிலத் தன்மை அதிகரிக்கும்போது, செரிமானக் கோளாறு ஏற்பட்டு, நெஞ்செரிச்சல் உண்டாகும். அதோடு துாங்க சென்றால், எரிச்சல் அதிகரித்து வியர்க்க ஆரம்பிக்கும்.
ஏற்கெனவே நரம்பு சார்ந்த பிரச்னை இருப்பவர்கள், அடிக்கடி பதற்றமடைவர். பக்கவாதம் இருப்பவர்களுக்கு, அது தீவிரமடைந்தால், உறக்கத்தில் வியர்ப்பது அதிகரிக்கும். இந்த பாதிப்பு உள்ளவர்கள், உடல்நலச் சிகிச்சையோடு சேர்ந்து, உளவியல் சிகிச்சையும் எடுக்க வேண்டும். முறையான மருத்துவ ஆலோசனையைக் கட்டாயம் பெற வேண்டும்.


கருத்துரையிடுக

  © Blogger template Leaving by Ourblogtemplates.com 2008

Back to TOP  

Blogger Widgets