உங்கள் வருகைக்கு நன்றி

நாட்டுக் கோழிகளை வளர்ப்பு.

ஞாயிறு, 23 பிப்ரவரி, 2020


சென்னை ஆலப்பாக்கத்தில், தன் வீட்டின் மொட்டை மாடியில், நாட்டுக் கோழிகளை வளர்த்து, கூடுதல் வருமானம் பார்த்து வரும், சினிமா ஒளிப்பதிவாளர் ராஜேந்திரன்: புதுக்கோட்டை மாவட்டம், கல்லுார் என்ற ஊர் தான் பூர்வீகம். சிறு வயது முதல், இயற்கை மீது ஆர்வம் அதிகம். சினிமா படப்பிடிப்புகளுக்காக வெளியிடங்களுக்குச் செல்லும் போது, அங்கிருக்கும் விவசாயிகளை சந்தித்து பேசுவேன். ரசாயன விவசாயத்தின் தீங்கையும், இயற்கை விவசாயத்தின் தேவையையும் நன்கு உணர்ந்துள்ளேன்.ஒரு கட்டத்தில், இயற்கை விவசாயம் மீதான ஆர்வத்தால், சினிமாவிலிருந்து விலகி, இயற்கை அங்காடி நடத்தினேன். ஆறு ஆண்டுகளுக்கு முன், வீட்டின் மொட்டை மாடியில், நாட்டுக் கோழி வளர்க்க முடிவு செய்து, கடக்நாத் கோழி குஞ்சுகளை வாங்கினேன்.
துவக்கத்தில், எங்கள் தேவைக்கு போக, மீதமிருந்த முட்டைகளை, பக்கத்தில் இருப்பவர்களிடம் விற்று வந்தோம். கொஞ்சம் கொஞ்சமாக கோழிகள் எண்ணிக்கை பெருகி விட்டன. இப்போது, ஏழு சேவல்களும், 43 பெட்டை கோழிகளும் உள்ளன. தினமும், 20 முட்டைகள் கிடைக்கும். அவற்றில் பாதியை விற்று விடுவோம்; மீதியை குஞ்சு பொரிக்க வைத்துக் கொள்கிறோம்.எங்கள் வீட்டு மாடி, 800 சதுர அடி கொண்டது. 200 கோழிகளை தாராளமாக வளர்க்கலாம். 3 அடி தடுப்புச் சுவருக்கு மேலே, 3 அடிக்கு நிழல் வலையை ஏற்படுத்தி, கோழிகள் பறந்து போகாமல் பார்த்துக் கொள்கிறோம். பெரும்பாலும், என் மனைவி தான், இந்த கோழிகளை பராமரிக்கிறார். தினமும் காலை, மாலையில், அரை மணி நேரம், கோழிகளை பார்த்துக் கொள்வோம். மற்ற நேரங்களில் அவை, தானாக சுற்றித் திரியும்.கோழிகளுக்கு மூலிகைகள் கலந்த சாதம், வாழைத்தண்டு, அரிசி, கம்பு, சோளம், கோதுமை தவிடு, வெங்காயத் தோல், காய்கறி கழிவுகளை உணவாக கொடுப்போம். வாரம் இரண்டு நாட்கள், மொட்டை மாடியை சுத்தம் செய்வோம். கோழி கழிவுகளை, எங்கள் தோட்டத்திற்கு உரமாகவும், கேட்பவர்களுக்கும் விற்று விடுகிறோம்.கோழி முட்டையிலிருந்து குஞ்சுகள் பொரிக்க, 'இன்குபேட்டர்' கருவியை பயன்படுத்துகிறோம். இயற்கை முறையில், எவ்வித ரசாயன கலப்பும் இல்லாமல், இந்த கோழிகள் வளர்வதால், இதன் முட்டைகள் மற்றும் கோழிகளுக்கு கிராக்கி உள்ளது. கடக்நாத் கோழி முட்டையை, 30 ரூபாய்க்கும், சிறுவிடை கோழி முட்டையை, 20 ரூபாய்க்கும் விற்கிறோம். இவை தவிர, கோழிகளையும் விற்கிறோம். ஒரு கோழி மூலம், ஆண்டுக்கு, 70 - 100 கோழிகளை உருவாக்கலாம். செலவுகள் தவிர்த்து, மாதத்திற்கு, 20 ஆயிரம் ரூபாய்க்கு மேல் வருமானம் கிடைக்கிறது. ஓய்வு நேரத்தை பயனுள்ள விதத்தில் கழிப்பதோடு, நிலையான வருமானமும் கிடைக்கிறது!

Read more...

  © Blogger template Leaving by Ourblogtemplates.com 2008

Back to TOP  

Blogger Widgets