உங்கள் வருகைக்கு நன்றி

வாழ்கையில் வெற்றி பெற வேண்டும் என்றால்

ஞாயிறு, 29 நவம்பர், 2020

 

வாழ்வில் சாதனைகளைப் படைத்திட ஒருவருக்கு புத்திசாலித்தனம் மட்டும் போதும் என்று நம்பிவந்த எண்ணம் இன்று பொய்த்து, உணர்வுசார் நுண்ணறிவு அதிக முக்கியத்துவம் பெற்று வருகிறது.

 

மென் திறன், பேச்சு திறன் என்ற திறன்களுக்கு மத்தியில் இன்று தனிப்பட்ட வாழ்விலும் சரி தொழில் வாழ்விலும் சரி, உணர்வுசார் நுண்ணறிவு நம் வெற்றிக்கும், சந்தோஷத்திற்கும் முதன்மையாக விளங்குகிறது. சாதாரணமாக எல்லோருக்கும் மகிழ்ச்சி துக்கம், கோபம், பயம் , பொறாமை, அன்பு, பாசம், சினம், ஆசை, பொறாமை, வெறுப்பு, விரக்தி, கவலை, எதிர்பார்ப்பு, ஏமாற்றம்,எரிச்சல், சலிப்பு, மன உளைச்சல், அவநம்பிக்கை, தனிமை, வலி என்று பல்வேறு உணர்ச்சிகள் இருக்கும். அது அளவிற்கு மீறி வெளிப்படும் போது நம்மையும், நம் சுற்றத்தாரையும் பாதிக்கும் சூழ்நிலையை நாம் தினமும் பார்க்கிறோம்.

 

மன அழுத்தம்

 

உணர்ச்சிகளை கட்டுபடுத்தாததால் தேவையற்ற மன அழுத்தத்திற்கு ஆளாகிறோம். மன அழுத்தத்தின் பொழுது நம் நாவும், செயல்பாடுகளும் கட்டுப்பாட்டில் இருப்பதில்லை. அதன் விளைவாக பேசும் பேச்சும், நடவடிக்கைகளும் பெரிய நஷ்டத்தை ஏற்படுத்துகிறது. மன அழுத்தத்தின் பொழுது நாம் எடுக்கும் முடிவுகள் பெரும்பாலும் ஆக்கபூர்வமாக இருப்பதில்லை. ஆகையால் நம் வெற்றிக்கும், அமைதியான வாழ்விற்கும் உணர்வுசார் நுண்ணறிவு பெரிய பாலமாக அமைகிறது. அதை உணர்ந்து, அறிந்து செயல் பட்டால் வாழ்வில் வெற்றியை அடைவோம் என்பதில் எள்ளளவும் சந்தேகம் இல்லை. உணர்ச்சி நுண்ணறிவை எளிமையான முறையில் விளக்க முடியும். உணர்ச்சி நுண்ணறிவை நம்மிலும் மற்றவர்களிடமும் உள்ள உணர்ச்சிகளை அடையாளம் கண்டு புரிந்து கொள்ளும் திறன் என வரையறுக்கலாம்

 

உணர்ச்சி நுண்ணறிவு

 

உணர்ச்சி நுண்ணறிவு என்பது உணர்ச்சி புரிதலைப் பயன்படுத்தி முடிவுகளை எடுக்கவும், சிக்கல்களைத் தீர்க்கவும், மற்றவர்களுடன் தொடர்பு கொள்ளவும் உதவுகிறது. உணர்ச்சி நுண்ணறிவில் உணர்ச்சிகளை உணர்வது, பகுத்தறிவது, புரிந்துகொள்வது, நிர்வகிப்பது என நிலைகள் உள்ளன. கடந்த காலங்களில் உணர்ச்சிகளும் புத்திசாலித்தனமும் ஒன்றுக்கொன்று எதிர்ப்பாகவே கருதப்பட்டன. ஆனால் சமீபத்திய ஆராய்ச்சிகளில், உணர்ச்சி நுண்ணறிவு முழுமையான, மகிழ்ச்சியான வாழ்க்கைக்கான பாதையில் நம்மை வழிநடத்த முடியும் என்று கண்டறியப்பட்டுள்ளது, உணர்ச்சிபூர்வமான மேற்கோள்(EQ) ஏன் வெற்றிக்கு முக்கிய காரணமாக அமைகிறது? அதிக உணர்ச்சி நுண்ணறிவு (EI) உள்ளவர்கள் பணியமர்த்தப்படுவதற்கும், பதவி உயர்வு பெறுவதற்கும், சிறந்த சம்பளத்தைப் பெறுவதற்கும் அதிக வாய்ப்புள்ளது.

 

மேம்படுத்துவது எப்படி

 

1.நீங்கள் அனைவரிடமும் எவ்வாறு நடந்துகொள்கிறீர்கள் என்பதைக் கவனியுங்கள்

2.துக்கம், பயம் போன்ற உணர்ச்சிகளுக்கு இடம் கொடுக்காதீர்கள்

3.மன அழுத்த சூழ்நிலைகளுக்கு எவ்வாறு பிரதிபலிக்கிறீர்கள் என்பதை ஆராயுங்கள்

4.தோல்வி உணர்வை விரட்டுங்கள்.

5.உங்கள் பணிச்சூழலில் இருப்பவர்கள் உங்களிடம் எவ்வாறு நடந்து கொள்கிறார்கள் என்பதை உணருங்கள்

6.தன்னம்பிக்கை ஊட்டும் விஷயங்களை பற்றி யோசிக்கவோ பேசவோ பழகுங்கள்

7.உங்கள் செயல்களுக்கு பொறுப்பேற்கிறீர்களா என்று யோசியுங்கள்

8.உங்கள் செயல்கள் மற்றவர்களை எவ்வாறு பாதிக்கும் என்பதை ஆராயுங்கள்

9.&' கோபம் நம்மை ஆக்கிரமிப்பு செய்யாமல் கட்டுக்குள்வைத்திருங்கள்

10.உணர்ச்சிவசப்பட்டு எதையும் கூறவோ, செய்யவோ வேண்டாம்

11.ஏமாற்றத்தை தாங்கி கொள்ளும் மனப்பக்குவத்தை வளருங்கள்

12.தியானம் செய்து பழகுங்கள்.

13.எவரிடமும் உங்கள் வெறுப்பை காட்டாதீர்கள்

14.மன நிலையை கட்டுக்குள் கொண்டு வாருங்கள்.

15.சுய மதிப்பீடு செய்யுங்கள்.

 

பணி இடத்தில் சாதிக்க

 

நெருங்கியவர்கள் செய்யும் செயல்களால் நம் மனம் நொறுங்கி போகும். அந்த சமயத்தில் எதையும் யோசிக்காமல் நாம் எடுக்கும் முடிவுகள் அந்த உறவை அறவே அழிக்கும். அவர்கள் என் அப்படி நடந்து கொண்டார்கள், காரணம் இருக்கும் என்று நாம் யோசிக்க கற்று கொண்டால் அந்த முடிவை தவிர்க்கலாம். எல்லோருக்கும் அவர்கள் செயல்களுக்கு ஒரு காரணம் இருக்கும் என்பதை உணர வேண்டும். அதை அவர்களிடம் பேசினால் நியாயமாக தோன்றும். உணர்ச்சி நுண்ணறிவு மதிப்புமிக்க திறமையாக அங்கீகரிக்கப்பட்டுள்ளது. 

 

பயிற்சி மூலம் மேம்படுத்த முடியும் என்று ஆராய்ச்சியாளர்கள் நம்புகின்ற திறமையும் இதுதான். பணியிடத்தில் பலங்களையும் பலவீனங்களையும் அடையாளம் காணுங்கள். சக ஊழியர் உங்களை எரிச்சலடையச் செய்யலாம் அல்லது உங்கள் முதலாளி கடினமான பணியைத் தரக்கூடும். நீங்கள் எதிர்வினையாற்றுவதற்கு முன், இவை தற்காலிகமானவை என்பதை நினைவில் கொள்ளுங்கள். பணியிடத்தில் பிடித்த விஷயங்களில் மனதை செலுத்துங்கள். முடிவுகளை எடுப்பதற்கு முன் சிந்தியுங்கள். மற்றவர்கள் சொல்ல வருவதை பொறுமையோடு கேட்க பழகுங்கள்.

 

சொற்களற்ற தகவல்தொடர்புக்கு கவனம் செலுத்துங்கள். ஒருவர் தங்கள் உடல் மொழி மூலம் அனுப்பும் சமிக்ஞைகள் அவர்கள் உண்மையில் என்ன நினைக்கிறார்கள் என்பதைப் பற்றி நிறைய தெரிவிக்க முடியும். அலுவலக அரசியலில் இறங்குவதைத் தவிர்க்கவும்.பணி இடமாக இருந்தாலும் நம் தனிப்பட்ட வாழ்வாக இருந்தாலும், பிறரோடு இணைந்து செயல்பட்டு, பிறரைப் பாராட்டி, குறைகளை ஏற்றுக் கொண்டு, நம் உணர்ச்சி நுண்ணறிவைப் பயன்படுத்துவதின் மூலமாக வாழ்வில் வெற்றி மீது வெற்றிகளை குவிக்கலாம்.

 

-முனைவர் உஷா ஈஸ்வரன், தனித்திறன் மேம்பாட்டு ஆலோசகர்

 

Read more...

  © Blogger template Leaving by Ourblogtemplates.com 2008

Back to TOP  

Blogger Widgets