உங்கள் வருகைக்கு நன்றி

இதை பெண் அடிமைத்தனம் என்று சொல்ல கூடாது.

செவ்வாய், 21 ஜனவரி, 2014


சமுதாயத்தைப் பொறுத்தவரை எந்த தவறையும் ஆண்கள் செய்யலாம். ஆனால் பெண்கள் செய்யக் கூடாது என்பது கட்டாயமாக்கப்பட்டுள்ள விதி. ஆனால் இதை பெண் அடிமைத்தனம் என்று சொல்ல கூடாது. சமுதாயத்தில் ஆண்கள் செய்யும் தவறுகளை விட பெண்கள் செய்யும் தவறுகள் தான் அதிக பிரச்சனைகளை உருவாக்குகிறது. 

உதாரணமாக, ஒரு பெண் திருமணத்திற்கு முன்பு உடலுறவில் ஈடுபடுவதால் கர்ப்பமடைய நேரிடும். இதனால் அவள் பெற்றெடுக்கும் பிள்ளையின் எதிர்காலம் கேள்விக்குறியாகலாம். இதேப்போல, திருமணத்திற்குப் பிறகு ஆண் வேறு ஒரு பெண்ணுடன் வாழ்ந்தாலும் சமுதாயத்தில் இரண்டாம் தாரம் என்று பெயர் வைத்து விடுவார்கள். 
ஆனால் இதே ஒரு பெண் வேறு ஆணுடன் தொடர்பு கொண்டால், அது அந்த பெண்ணின் குடும்பத்தையே சீர்குலைத்து விடும். ஒரு ஆண் பிடித்த பெண்ணை பெற்றோருக்குத் தெரியாமல் திருமணம் செய்து கொள்ளலாம். அதற்கு அவன் காதலிச்ச பொண்ணைக் கட்டிக்கிட்டான் என்று சொல்வார்கள். 

ஆனால், ஒரு பெண் இதைச் செய்தால் அவள் ஓடிப் போய்விட்டாள் என்று கூறுவார்கள். இது போல ஒரு குடும்பத்தில் வாழும் பெண், தான் காதலிக்கும் ஆணை நம்பி வீட்டை விட்டு வெளியேறுவதால், அவள் வாழ்க்கை மட்டும் பாதிக்கப்படுவதில்லை, அந்த பெண்ணின் குடும்பத்தாரும் பல வழிகளில் பாதிக்கப்படுகிறார்கள். 

பெண் வீட்டை விட்டு ஓடுவதால் ஏற்படும் துக்கத்தை விட, அதனால் ஏற்படும் அவமானமே அவர்களை நிலைகுலையச் செய்துவிடும். உற்றார், உறவினர்களுக்கும், அண்டை வீட்டாருக்கும், பெண் எங்கே என்று கேட்கும் கேள்விக்கு சொல்வதறியாது கலங்கும் பெற்றோரின் நிலை பரிதாபத்துக்குரியது. 

சிலர் இந்த அவமானத்தை தாங்க இயலாமல் தற்கொலை செய்து கொள்வதுமுண்டு. சிலர் ஊரை காலி செய்து கொண்டு சென்றுவிடுவதும், உண்டு. வீட்டை விட்டு செல்லும் பெண்ணிற்கு திருமணமாகாத சகோதரிகள் இருப்பின், அவர்களது வாழ்க்கை இன்னும் மோசமாகிறது. 

திருமணத்திற்காக வரன் தேடும் போது கேட்கும் முதல் கேள்வி அவர்களது குடும்பத்தைப் பற்றியதுதான். அதில் இப்படி ஒரு சிக்கல் இருப்பின், மாப்பிள்ளை வீட்டார் சற்று தயக்கம் காட்டத்தான் செய்வார்கள். அக்காள் இப்படி என்றால் தங்கை எப்படி இருப்பாளோ என்று வாய்விட்டு பேசுபவர்களும் உண்டு. 

சமுதாயத்தின் ஆணி வேரே பெண்தான். இதனால்தான் ஆணி வேர் எந்த வகையில் தவறு செய்ய நேர்ந்தாலும் அதனால் பாதிக்கப்படுவது முழு மரமும்தான் என்று பயந்துதான் பெண்களுக்கு இவ்வளவு கட்டுப்பாடுகளையும் இந்த சமுதாயம் விதித்துள்ளது.

கருத்துரையிடுக

  © Blogger template Leaving by Ourblogtemplates.com 2008

Back to TOP  

Blogger Widgets