உங்கள் வருகைக்கு நன்றி

வாழ்க்கையை தொலைக்காமல் பாதுகாப்போம்.

சனி, 4 ஜூன், 2016

இன்றைய கால கட்டத்தில் மொபைல் போன் நம் வாழ்க்கையின் அன்றாட தேவைகளில் ஒன்றாகி விட்டது. இளைஞர்கள் முதல் குழந்தைகள் வரை, கைபேசி கட்டுக்குள் கொண்டு வந்து விட்டது. 
கை கால்கள் போல நம் உடலின் ஓர் அங்கம் போலவே மாறிவிட்ட மொபைல் போனின் மாய வளையத்தில், நம் அனைவரும் கட்டுண்டு கிடக்கிறோம். இதிலிருந்து மீள்வது சற்று கடினம்தான். ஆரம்ப காலங்களில் நாம் பேசுவதற்கு மட்டுமே பயன்படுத்திய இது, அறிவியல் மற்றும் தகவல் தொழில்நுட்ப வளர்ச்சியால், உலகமே ஒரு மொபைல் போனிற்குள் அடங்கி விட்டது. சில ஆண்டுகளுக்கு முன், நம் இணைத் தேடல்களை, 'ப்ரவுசிங் சென்டர்'களில்தான் செலவழித்தோம். இப்போது ஒரு கை அடக்க மொபைல் போனிலேயே அனைத்துவிதமான இணைய வழி சேவைகளை பயன்படுத்தும் அளவிற்கு அறிவியல் வளர்ச்சியடைந்து விட்டது. 
'பேஸ்புக், வாட்ஸ் ஆப், வைபர், வீடியோ காலிங், ஸ்கைப், டப்ஸ் மேஷ்' போன்ற பல நுாற்றுக்கணக்கான, 'ஆப்'கள், கொட்டிக் கிடக்கின்றன. பேஸ்புக், வாட்ஸ்ஆப் போன்றவை மிகப் பிரபலமாக பயன்படுத்தப்படுகின்றன. இவற்றில் சமூகம் சார்ந்த பல நல்ல கருத்துக்கள் பரப்பப்படுவது ஒரு பக்கம் இருந்தாலும், சில சமூக விரோதிகள் மூலமாக ஆபாச வீடியோக்களும், புகைப்படங்களும் பரப்பப்படுகின்றன. விடலைப் பருவத்தில் உள்ளவர்கள் இதனால் பாதிக்கப்படுகின்றனர். 

படிப்பில் நாட்டமின்மை, மன உளைச்சல். பாலியல் வக்கிர எண்ணங்கள் உருவாகி, அவர்கள் வாழ்க்கையில் பல தவறுகள் செய்ய துணை போகின்றன. இப்போது பல அலைபேசி நிறுவனங்கள் போட்டி போட்டு, மொபைலில், 'இன்டர்நெட்' சலுகைகளையும், 'டாக் டைம்' சலுகைகளையும் தாரளமாக வழங்கி வருகின்றன. இப்போதைய கணக்குப்படி இந்தியாவில் மொபைல் போன் பயன்படுத்துவோரின் எண்ணிக்கை, 100 கோடியை தாண்டியுள்ளது. இது, இனி வரும் காலங்களில் மேலும் அதிகரிக்கக்கூடும். அப்போது இணைய வழி குற்றங்களும் 
அதிகரிக்கக்கூடும். 

இன்று ரோட்டில் சென்றால் பசை ஒட்டியது போல மொபைல் போனை காதில் ஒட்டிக்கொண்டே பேசிச் செல்கிறோம். அதோடு விட்டோமா எதிரே வரும் வாகனங்கள் வருவது கூட தெரியாமல், மொபைலில் முகம் புதைத்து நடக்கிறோம், வாகனம் ஓட்டும்போது மொபைலை காதில் அணைத்தபடியே பேசிக்கொண்டு விபத்துக்கு உள்ளாகிறோம் அல்லது மற்றொருவரை விபத்துக்கு உள்ளாக்குகிறோம். மாணவர்களுக்கு தாங்களின் பெற்றோர், உயர்வகை மொபைல் போன்களை வாங்கி கொடுத்துவிட்டு, படிப்பையும், வாழ்க்கையையும் குட்டிச்சுவராக்கி விடுகின்றனர். அவர்கள் சிந்தனையை சிதறடித்து, வக்கிர எண்ணங்களை துாண்டும் சந்தர்ப்பங்கள் ஏராளம். 

பேசுவதற்கு மட்டும் பயன்படும் மொபைல் போனை வாங்கி கொடுப்பதில் என்ன தவறு? பள்ளி மாணவர்களில், 75 சதவீதத்தினர் மற்றும் பிளஸ் 2 மற்றும் கல்லுாரி மாணவர்களில், 45 சதவீதம், மாணவியரில், 30 சதவீதம் பேர், பாலியல் உறவு காட்சிகளை மொபைல் மற்றும் கம்ப்யூட்டர் போன்ற கருவிகளின் மூலம் பார்க்கின்றனர் என, ஒரு புள்ளி விவரம் தெரிவிக்கிறது. 
வகுப்பு நடக்கும் போதே மொபைலில் ஆபாச படம் பார்த்த மாணவியர்; உயர்ரக மொபைல் போன் வாங்கித் தராததால் தான் சொந்த மாமனையே கொன்ற மருமகன்; பேஸ் புக்கில் வலைவிரித்து பல ஆண்களை ஏமாற்றிதோடு மட்டுமல்லாமல், அவர்களிடம் பணம் பறித்த பெண்கள்; இதே போல ஆசைவார்த்தை கூறி பெண்களை ஏமாற்றிய ஆண்கள்; தவறான மிஸ்டு கால் மூலம் அரங்கேறும் கள்ளக்காதல் என, பதற வைக்கும் செய்திகள் தினமும் வெளியாகின்றன. 

இணையத்தில் சில லட்சங்களுக்கு ஆசைப்பட்டு, பல கோடிகளை இழந்த கோமான்களும் உண்டு. மொபைல் பேங்கிங், இன்டர்நெட் பேங்கிங் போன்றவற்றில் கவனக்குறைவால் பணத்தை இழந்த படித்த மேதைகளும் உண்டு. மொபைல் போனில், 'செல்பி' எடுக்கிறேன் பேர்வழி என்று, பின்னால் சென்று மாடியில் இருந்து விழுந்து மாய்ந்தவரும் உண்டு. இந்த இயந்திர வாழ்வில், மொபைல் மற்றும் இணைய பயன்பாடு முக்கியமானது. இச்சேவைகளை ஆக்கப்பூர்வமான வழியில் பயன்படுத்துவோம், சமுதாய முன்னேற்றத்திற்கு பயன்படுத்துவோம். அம்மா, அப்பா, பாட்டி, தாத்தா, அண்ணன், சகோதரி, மனைவி, மக்கள் உயிருள்ள இவர்களோடு கூடி மகிழாமல், ஒருகை அளவே உள்ள உயிரற்ற ஜடப்பொருளின் மேல் ஏன் இவ்வளவு பாசம், பைத்தியம்? 
நம் மூதாதையர்கள் தாத்தா, பாட்டி கதைகள் கேட்டுத் தானே நல்லொழுக்கமுடன் வளர்ந்தனர். அப்போது பாசமும், நேசமும் நிரம்ப இருந்தது. ஆனால் இப்போது, இது போன்ற ஜடப்பொருட்களின் மீது நாம் பாசம் காட்டுவதால், நாமும் கல்நெஞ்சர்களாகி பாசத்தையும், நேசத்தையும் மறந்து உயிர் இருந்தும் ஜடங்களாய் திரிகிறோம்.மொபைல் மற்றும் இணையத்தை அளவுடன் பயன்படுத்தி, அதில் நம் பெரும்பகுதி வாழ்க்கையை தொலைக்காமல் நம் உறவுகளோடு கூடி மகிழ்வோம். 

கருத்துரையிடுக

  © Blogger template Leaving by Ourblogtemplates.com 2008

Back to TOP  

Blogger Widgets