அனுபவ பாடம்
வெள்ளி, 28 ஏப்ரல், 2017
முன்பெல்லாம், பள்ளி விடுமுறை என்றாலே, தாத்தா, பாட்டி, மாமா,
அத்தை,
சித்தி, சித்தப்பா, பெரியப்பா மற்றும் பெரியம்மா என, நம்
உறவினர் வீடுகளுக்கு, குழந்தைகளை அனுப்பி வைப்போம். ஆனால்
தற்போதோ,
விடுமுறையிலும் குழந்தைகளை, சம்மர் கோர்சுக்கு அனுப்பி
வைக்கின்றனர். இப்போதைய திருமணங்களிலோ அல்லது விழாக்களிலோ இன்றைய உறவுகள் எப்படி
இருக்கின்றன என்றால், வரிசையில் நின்று தங்களின் பரிசுப்
பொருட்களை கொடுத்து, 'நானும், இந்த திருமணத்திற்கு, விழாவுக்கு வந்திருக்கிறேன்' என,
'அட்டெண்டன்ஸ்' போடுவதோடு
முடிந்து விடுகிறது.
நம் வீட்டில், என்ன தான் செல்லமாக வளர்ந்திருந்தாலும், உறவினர் வீட்டுக்கு போகும் போது, அந்த
வீட்டில்,
சிறு உள் கலாசார மாறுதல் இருக்கும். குழந்தைகள் அதைப்பற்றி எல்லாம், தெரிந்து கொள்ள முடியும். சில விஷயங்களை, 'அட்ஜஸ்ட்' செய்ய வேண்டும். அவ்வீட்டில், எத்தனை மணிக்கு சாப்பிடுவரோ, அதுவரை காத்திருக்க வேண்டும். அவர்களின் உணவு முறைக்கு, நாம் மாற வேண்டும். இந்த அனுபவங்கள் எல்லாம், அந்த குழந்தை வளர்ந்து, வேலைக்கு செல்லும் போதோ அல்லது திருமணமான
பின்போ நிச்சயம் உதவும். குழந்தைகளை, சந்தோஷமான நிகழ்வுகளுக்கு மட்டுமல்லாமல், துக்க
நிகழ்வுக்கும் அழைத்து செல்ல வேண்டும். ஏனென்றால், ஒரு இழப்பு என்றால் என்ன, அதிலிருந்து, அந்த குடும்பம் எப்படி மீண்டு வருகிறது என்பதை அந்த குழந்தை, உணர்வு பூர்வமாக தெரிந்து
கொள்ளும்.பொய்யான கட்டமைப்பில், குழந்தைகளை வளர்க்காமல், குடும்பத்தின் உண்மையான நிதி நிலைமையை பற்றி, அவர்கள் தெரிந்து கொள்ள வேண்டும். 'நம் பையன், வீட்டில் சொகுசாக வளர்ந்தவன், அவன் போய் கிராமத்து
சொந்தக்காரர் வீட்டில், கஷ்டப்பட வேண்டுமா...' என,
பெற்றோர் பலரும் நினைக்கின்றனர். ஆனால், கிராமத்துக்கு
போகும் குழந்தை, அங்குள்ளவர்களுடன் சின்ன சின்ன
விஷயங்களையும் ரசித்து, எப்படி சந்தோஷமாக வாழ்கின்றனர் என்பதை
பற்றி தெரிந்து கொள்ளும்; நம் வீட்டில், எல்லாம் இருந்தும், திருப்தி இல்லாமல் இருக்கிறோமே என்பதையும்
யோசிக்கும்.வீடு என்ற ஆலமரத்தை தாண்டி போகும் போது தான், சமூக நடத்தையை பற்றி, அந்த குழந்தை அறிந்து கொள்ளும். சில
விஷயங்களை சொல்லி புரிய வைப்பதை விட, அனுபவ
பூர்வமாக உணர்ந்து கொள்வது சால சிறந்தது; அனுபவ
பாடம், குழந்தைகள் மனதில் என்றுமே பசுமரத்தாணி போல இருக்கும்.