ஒவ்வொரு குடும்பமும் அழகானது
சனி, 12 ஜூன், 2021
என் மகன் பள்ளியில் படித்த போது, ஒரு நாள் வந்து, 'அம்மா, என் நண்பன் தன் பிறந்த நாளை, நட்சத்திர ஓட்டல் ஒன்றில் கொண்டாடினான். அதில் நான் பங்கேற்றேன்; மகிழ்ச்சியாக இருந்தது. அதுபோல, என் பிறந்த நாளையும், அந்த நட்சத்திர ஓட்டலில் கொண்டாட வேண்டும்' என்றான்.'அதற்கு எவ்வளவு பணம் செலவாகும்?' எனக் கேட்டேன். '8,000 ரூபாய் ஆகும்' என்றான். அவனிடம் நான், 'அந்த பணத்தை நம் வீட்டில் வேலை பார்க்கும் அல்லது தெருவோரத்தில் சிரமமான முறையில் வாழ்க்கை நடத்தும் ஒருவரின் மகளுக்கோ அல்லது மகனுக்கோ கல்வி செலவுக்காக கொடுத்தால், ஓராண்டுக்கு அந்த பணம் உதவும். 'அதை நீ சில மணி நேரத்தில் ஆடம்பரமாக செலவழித்தால், அதனால் எந்த பயனும் இருக்காது' என்றேன்.மகனும் கேட்டுக் கொண்டான். எனவே, பணம் தொடர்பான விஷயங்களை குழந்தைகளுடன் அமர்ந்து பேசுங்கள். வீட்டில் பணத்திற்கு என்ன கஷ்டம் இருக்கிறது; பணம் எப்படி செலவாகிறது; எவ்வளவு வருமானம் உள்ளது போன்ற விபரங்களை குழந்தைகளுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.குழந்தைகளை உங்களுடன் சேர்த்து வீட்டு வேலைகளில் பழக்குங்கள். நிறைய பெற்றோர் வீட்டு வேலைகளை குழந்தைகளுக்கு கற்றுக் கொடுக்காமல் இருக்கின்றனர்; அது தவறு. செல்லமாக வளர்க்க வேண்டியது தான். அதற்காக, துணி துவைப்பது, வீட்டை சுத்தம் செய்வது, சமையலில் சிறிய அளவில் உதவி போன்றவை கூட செய்யாமல் இருக்கக் கூடாது. குழந்தைகளுக்கு சமைக்க கற்றுக் கொடுக்கும் போது, அவர்கள் பெரியவர்களாக வளர்ந்த பிறகு, தேவைப்பட்டால் தனியாக சமைத்து சாப்பிட முடியும்.என் குழந்தைகள் சிறியவர்களாக இருந்த போது, அவர்களை பார்த்துக் கொள்வதற்காக, வேலைக்கு சென்ற நான், மூன்று மணி நேரம் மட்டுமே பணியாற்றினேன். அதன் பிறகு, அவர்கள் பள்ளிக்கு சென்ற போது, ஐந்து மணி நேரம் பணியாற்றினேன். அவர்கள் வெளிநாடுகளில் படிக்க, பணியாற்ற சென்ற போது, 'ஓவர் டைமில்' நான் பணியாற்றினேன்.எனவே, வாழ்க்கை சூழலுக்கு ஏற்ப வேலை பார்க்க வேண்டும். வெற்றி பெற்ற ஒவ்வொரு பெண்ணின் பின்னணியிலும் ஒரு ஆண் இருப்பார். அவர் கணவராகவோ, மகனாகவோ, தந்தையாகவோ கூட இருக்கலாம். எனவே, ஆண்களை பெண்கள் மதிக்க வேண்டும்.ஒவ்வொரு குடும்பமும் அழகானது தான். அவர்களை போல இல்லையே என, ஒப்பிட்டு பார்க்காதீர்கள். நம் குடும்பத்தை அழகாக வைப்பது நம் கையில் தான் உள்ளது!
'இன்போசிஸ்' கம்ப்யூட்டர்
நிறுவனத்தின் தலைவர் நாராயண மூர்த்தியின் மனைவி சுதா மூர்த்தி: