உங்கள் வருகைக்கு நன்றி

எந்த ஒரு இடத்துக்கும் நிச்சயமாக மாற்று வழி இருந்தே ஆக வேண்டும்.

வியாழன், 23 அக்டோபர், 2014

சூழ்நிலைகள் மனிதர்களை உருவாக்குவது அல்ல. மாறாக தான் யார், எவ்வாறு நிகழ்வுகளை எதிர்கொள்கின்றோம் என்பதை அறிந்து கொள்ள உதவும் காரணியே. நாம் ஒவ்வொருவரும் வெவ்வேறு வகையான சூழ்நிலைகளில் பல்வேறு வகையான நிகழ்வுகளை சந்திக்கின்றோம். சாதாரணமான நிகழ்வுகளை எளிதானவை என்று சொல்லி எதிர்கொள்கின்றோம். சிக்கலான நெருக்கடியான நிகழ்வுகளை எதிர்கொள்ள பெரிதும் அஞ்சுகின்றோம். ஆனால் அது போன்ற சிக்கலான, நெருக்கடியான நிகழ்வுகளை எதிர்கொள்ளுவது எப்படி?  .
வாழ்விலும், வியாபாரத்திலும் திட்டமிட்ட நிகழ்வுகள் எப்போதாவது நிகழ்கின்றன. எந்த அளவு கீழே விழுவோம் என்பதை விட எந்த அளவு விரைவாக மேலே எழுவோம் என்பது தான் முக்கியம்.  
ஒவ்வொரு தனிநபரின் வாழ்விலும் ஏற்புடையதாகும். வியாபாரத்திலும் இது போன்றே எதிர்பாராத மாற்றங்களும், ஆக்கிரமிப்புகளும் நிகழ்கின்றன. இது போன்ற நேரங்களில் தலைவர்களாக இருப்பவர்கள் சரியான முடிவு மற்றும் நடவடிக்கை இவற்றின் மூலமாக எதிரிகளை வென்று தங்களை வலுப்படுத்திக் கொள்கிறார்கள்.
இதற்கு மங்கோலிய சாம்ராஜ்யம் சரியான எடுத்துக்காட்டாகும். விடாமுயற்சியை போல வெற்றிக்கு வித்திடும் குணாதிசயம் வேறு ஏதும் இல்லை, விடாமுயற்சி தன்னம்பிக்கையை வளர்க்கும், தன்னம்பிக்கை இலக்கை அடைய வழிகாட்டும்.
உணர்வுகளை கட்டுப்படுத்தி சரியான கேள்விகள் கேட்பதன் மூலம் தீர்வுகள் காண வேண்டுமே தவிர உணர்வு பூர்வமாக ஒரு தீர்வை அடைய முடியும் என நம்புவர்கள் கானல் நீரை அடைய முயற்சிப்பதற்கு சமமாகும்.
ஏற்கனவே நடந்த நிகழ்ச்சிகளை நினைவு கூர்ந்து எந்த சூழ்நிலையிலும் எந்த பிரச்சினைகளையும் சமாளிக்க கூடிய திறமையை வளர்த்துக்கொள்ள வேண்டும். எந்த ஒரு மோசமான முடிவும் ஏற்படுவதற்கான சாத்திய கூறுகளை ஏற்றுக் கொண்டு அவை நிகழாவண்ணம் செயல்படவேண்டும். வெற்றியும் தோல்வியும் தொடர்ச்சியாக நிகழ்வன அல்ல. மாறி மாறி நடக்கும்போது வேறு வேறு விளைவுகள் ஏற்படும் என்பதை உணர வேண்டும்.
நடந்ததை எண்ணி அவைகளை மேற்கோள் காட்டி பேசுவதைத் தவிர்க்க வேண்டும். நூறு விழுக்காடு எந்த ஒரு பிரச்சினையையும் எதிர்கொண்டு அடுத்தவரை குறை கூறாமல் நிகழ்வுகளை நம் கட்டுப்பாட்டுக்குள் வைத்திருக்க வேண்டும்.
‘கவிழ்ந்த பால் கலயம் ஏறாது’, ‘இழப்பதற்கு இனி எதுவும் இல்லை’ என்ற மனப்பான்மை இருந்தால், எந்த சூழலிலும் நமக்கு தேவை இல்லை என்றால் விட்டு விலகுதலே சரியாகும்.
நெருக்கடிகளை எதிர்கொள்ளும்போது ஒரே ஒரு வழிதான் என்ற எண்ணத்தை மாற்றவேண்டும் அந்த பிரச்சினைக்கு எந்த அளவு விதவிதமான வித்தியாசமான தீர்வுகள் இருக்கும் என்பதை உணர வேண்டும் அதற்கான நடவடிக்கைகளை மேற்கொள்தல் நன்று. ஏனென்றால் எந்த ஒரு இடத்துக்கும் நிச்சயமாக மாற்று வழி இருந்தே ஆக வேண்டும்.
நம்மில் சிலர் பிரச்சினைகளை தீர்ப்பதற்கு மாறாக, அதை இடியாப்ப சிக்கலாக்குவதில் மிக தீவிரமாக இருப்பார்கள். பிரச்சினைகளுக்கு சாதாரண தீர்வுகள் உண்டு. ஆனால் சாதாரண தீர்வுகள் பிரச்சினைகளையும் நெருக்கடிகளையும் தீர்க்க உதவாது. இந்த எண்ணத்தில் பிரச்சினைகளை சிக்கலாக்குபவர்களே அதிகம். எனவே எந்த பிரச்சினையையும் அளவுக்கு அதிகமான கற்பனை செய்து அதனால் ஏற்படும் நெருக்கடிகளை தவிர்ப்பது இன்றியமையாதது ஆகும்.
உள்மனதின் கருத்துகள் பெரும்பான்மையான நேரங்களில் கேட்கப்படுவதில்லை. மாறாக ஆழ் மனதில் தோன்றும் சிறிய கருத்து செறிவையும் முக்கியமானதாக எடுத்துக்கொள்ள வேண்டும். அவ்வாறு எடுத்துக்கொள்ளும் கருத்துச் செறிவுகள் நெருக்கடிகளை நேர்காண உற்ற துணையாக இருந்து உதவும்.
இறைவன் நல்லவர்களை மட்டுமே அதிகம் சோதிப்பார் என்று அக்கம் பக்கத்தில் பேசும் செய்தியை நாம் புறம் தள்ளுகின்றோம். ஆனால் அதில் உள்ள கருத்து ஒழுக்கமும், சிறந்த குணமும் எதையும் எதிர்கொள்ள உதவும் என்பதே ஆகும். எனவே, ஒழுக்கமும், சிறந்த குணமும் நெருக்கடி நேரங்களில் அவற்றை அதிரடியாக தீர்க்க உதவுகின்றன.
வெல்லும்வரை விடக்கூடாது என்ற மனப்பாங்கு வெகுவானவர்களிடம் இருப்பதில்லை. இன்னும் சிறிது தூரம் மேலே ஏறி இருந்தால் பள்ளத்தில் இருந்து நிலப்பரப்புக்கு வந்து விடலாம். ஆனால், அந்த கடைசி நான்கு அல்லது ஐந்து அடி உயரம் ஏறுவதில் மனம் தளரும்போது நிலப்பரப்பை அடைவது கனவாக முடிகிறது. ஆக வெல்லும் வரை விடக்கூடாது என்பது நெருக்கடிப் பணியை உருகச் செய்யும் மனப்பாங்காகும்.
பலம் மற்றும் பலவீனம் என்பது இரு கூறுகளாக மனிதர்களை பிரிக்கின்றது. பலம் என்பது ஒருவர் விடாப்பிடியாய் ஒரு கருத்தை ஏற்பது. பலவீனம் என்பது ஒரு கருத்தை தயக்கத்துடனும், தடுமாற்றத்துடனும், அற்ப காரணங்களுக்காகவும் தவிர்த்து பிரச்சினைகளில் மூழ்கிவிடுதல் ஆகும்.
எதை, எப்பொழுது, எங்கே, எவ்வாறு சரியாக செய்வது என்பதில் தான் வெற்றியின் சூட்சமம் அடங்கி உள்ளது. அவ்வாறு செய்பவர்கள் நெருக்கடிகளை நேர்கொண்டு பஞ்சாக ஊதிவிடுவார்கள்.
முயற்சி இல்லாத லாபம், பயம் இல்லாத அனுபவம், வெகுமதி இல்லாத வேலை இவை அனைத்தும் பிறக்காமலே வாழ்வதற்கு ஒப்பாகும். இது மிகைப்படுத்தபட்ட கூற்று அல்ல.


கருத்துரையிடுக

  © Blogger template Leaving by Ourblogtemplates.com 2008

Back to TOP  

Blogger Widgets