உங்கள் வருகைக்கு நன்றி

சாக்லெட் தயாரிப்பில் சந்தோஷம் பொங்கும்!

வியாழன், 19 நவம்பர், 2015


வார்த்தைகளில் வெளிப்படுத்த முடியாத சந்தோஷத்தை ஒரு துண்டு சாக்லெட் நிறைவு செய்து விடும். ஆமாம்... எந்த ஒரு மகிழ்ச்சியையும் பகிர்ந்து கொள்ள சாக்லெட்டை விட சிறப்பானதொன்று இருக்க முடியுமா என்பது சந்தேகமே... மகிழ்ச்சியாக இருக்கும் போது மட்டுமின்றி, மனது சரியில்லாதவர்களுக்கும் சாக்லெட் நல்ல மருந்து.  மூடு சரியில்லாத போது, ஒரு நல்ல சாக்லெட்டை ருசித்துப் பாருங்கள்... சட்டென ஒரு உற்சாகம் ஊற்றெடுக்கும் உள்ளுக்குள்... குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை எல்லா வயதிலும் சாக்லெட் பிரியர்களைப் பார்க்கலாம். பிறந்தநாளோ, வெற்றிக்களிப்போ, வேறு கொண்டாட்டங்களோ... சாக்லெட் இருந்தால் சிறப்பாகும் எந்தத் தருணமும்.

‘‘ருசிக்க மட்டுமின்றி, பிசினஸாக எடுத்துச் செய்ய நினைப்போருக்கும் இனிப்பான அனுபவங்களைத் தரக்கூடியது சாக்லெட்’’ என்கிறார் சென்னையைச் சேர்ந்த கவுரி.  

Very turbulent in the preparation of chocolate!

‘‘வருடந்தோறும் தேவை இருக்கிற பொருள். சீசனுக்கேற்ற ஏற்ற, இறக்கம் இருக்குமோ என்கிற பயமில்லை. வித்தியாசமான சுவை மற்றும் வடிவம், புதுமையான பேக்கிங் எனக் கொஞ்சம் கற்பனையும், நிறைய கிரியேட்டிவிட்டியும் இருந்தால், போட்டிகளைக் கடந்து, இந்த பிஸினசில் நம்பர் 1 ஆகலாம்என்கிற கவுரி, தினம் தினம் குவிகிற ஆர்டரை சமாளிக்க முடியாத அளவுக்கு நிஜமாகவே இந்தத் தொழிலில் பிஸி!  நீங்களும் ரெடியா?

இது இப்படித்தான்!

மூலப்பொருள்கள்

சாக்லெட் பார் (டார்க், லைட் மற்றும் வெள்ளை பார்கள்), நட்ஸ், கிரன்ச்சீஸ், பேரீச்சம் பழம், உலர்ந்த திராட்சை, உலர்ந்த தேங்காய் பவுடர், வேஃபர், பிஸ்கட், மின்ட், வெனிலா மாதிரி விருப்பமான எசென்ஸ், மோல்ட், சாக்லெட்டை சுற்றிக் கொடுக்கிற ஃபாயில் பேப்பர், குட்டிக்குட்டி பைகள்... சாக்லெட் செய்வதற்கென பிரத்யேக பாத்திரங்கள் தேவையில்லை. அடி கனமான, அழுத்தமான ஒரு பாத்திரமும் கரண்டியும் அடுப்பும் போதும். ஃப்ரிட்ஜ் வேண்டும். மைக்ரோவேவ் அவன் கட்டாயமில்லை. இருந்தால் செய்முறையில் சில வேலைகளை அது எளிதாக்கும்.

எங்கே வாங்கலாம்? முதலீடு?

சென்னையில் பாரிமுனையில், சாக்லெட் தயாரிப்புப் பொருள் விற்பனைக்கென்றே மொத்தவிலைக் கடைகள் உள்ளன. மோல்டு உள்பட அனைத்தும் அங்கேயே கிடைக்கும். அரை கிலோ சாக்லெட் பாரில் 150 முதல் 200 குட்டிக்குட்டி சாக்லெட்டுகள் கிடைக்கும். 2 கிலோ சாக்லெட் செய்ய குறைந்த பட்ச முதலீடு 500 அவசியம். சாக்லெட்டின் சுவை எத்தனை முக்கியமோ, அதே அளவு அதன் வடிவமும் முக்கியம். அதனால், மோல்டு வாங்கும் போது, குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை எல்லோருக்கும் பிடிக்கிற வடிவங்களில் வாங்க வேண்டும். ஒரு முறை வாங்கினால் போதும். அடிக்கடி மாற்றத் தேவையில்லை. இதய வடிவம், மிக்கி மவுஸ் போன்ற கார்ட்டூன் வடிவங்கள், வட்டம், சதுரம், நீள்சதுரம், பூ வடிவம் என ஏழெட்டு வடிவங்களில் வாங்கி வைத்துக் கொள்ளலாம். ஒரு மோல்டு 20-25 ரூபாய்க்குள் கிடைக்கும்.

எத்தனை வகை?

கடைகளில் கிடைக்கிற அத்தனை வகைகளையும் வீட்டில் செய்யலாம். பார் சாக்லெட், நீரிழிவுக்காரர்களுக்கான இனிப்பு குறைவான டார்க் சாக்லெட், குழந்தைகளைக் கவரும் கிரன்ச்சீஸ், உலர் பழங்கள், நட்ஸ் வைத்த சாக்லெட், தேங்காய் சாக்லெட், வேஃபர் சாக்லெட், சாக்லெட் பை.... இப்படி அந்தப் பட்டியல் பெரியது. புதினா எசென்ஸ், பாதாம் எசென்ஸ், வெனிலா எசென்ஸ் என விதம் விதமான எசென்ஸ் மூலமும் வேறு வேறு சுவைகளைக் காட்டலாம்.

மார்க்கெட்டிங்?

பிறந்த நாள், கல்யாணம், பார்ட்டி ஆர்டர் பிடித்தாலே பெரிதாக லாபம் பார்க்கலாம். கல்யாண கான்டிராக்டர்களுடன் பேசி, சாக்லெட் பொக்கேவுக்கான ஆர்டரும் பிடிக்கலாம். பார்ட்டி, விசேஷங்களில் பூக்களால் செய்யப்படுகிற பொக்கே கொடுப்பதற்குப் பதில், சாக்லெட்டும், பூக்களும் சேர்த்து அல்லது வெறும் சாக்லெட்டுகளால் செய்யப்பட்ட பொக்கே கொடுப்பதுதான் லேட்டஸ்ட் ஃபேஷன். சாக்லெட் கூடைகள் செய்து கொடுப்பதும் லேட்டஸ்ட். சரியான தொடர்புகள் கிடைத்தால் கிறிஸ்துமஸ், புத்தாண்டு, காதலர் தினங்களுக்கெல்லாம் ஆர்டர் குவியும்.

மாத வருமானம்?

சீசன் இல்லாத பிசினஸ் என்பதால், வருடம் முழுக்க ஆர்டர் இருக்கும். 1 கிலோ சாதாரண சாக்லெட் செய்ய 300 ரூபாய் செலவாகும். அதை 500 ரூபாய்க்கு விற்கலாம். நட்ஸ், ட்ரை ஃப்ரூட்ஸ் போட்டதை 600 ரூபாய்க்கு கொடுக்கலாம். வெறும் 3 மணி நேரத்தில் 1 கிலோ சாக்லெட் தயார் செய்யலாம். அளவையும், வாடிக்கையாளர் கேட்கிற சாக்லெட் வகைகளுக்கும் ஏற்ப, குறைந்த பட்சமாக 300 ரூபாயில் இருந்து சாக்லெட் பொக்கே செய்யலாம்.  40 முதல் 50 சதவிகித லாபம் நிச்சயம்.

பயிற்சி?

ஒரு நாள் அடிப்படைப் பயிற்சியில் 15 விதமான சாக்லெட் செய்யக் கற்றுக் கொள்ள, தேவையான பொருள்களோடு கட்டணம் 500 ரூபாய்.
2 நாள் அட்வான்ஸ்டு பயிற்சியில் 25 வகையான சாக்லெட், வியாபார உத்தி, மார்க்கெட்டிங் என சகலமும் கற்றுக் கொள்ள, தேவையான பொருள்களோடுசேர்த்துக் கட்டணம் 1,000 ரூபாய்.

கருத்துரையிடுக

  © Blogger template Leaving by Ourblogtemplates.com 2008

Back to TOP  

Blogger Widgets