உங்கள் வருகைக்கு நன்றி

பெரும்பாலான இளைஞர்களின் புலம்பல்?.

ஞாயிறு, 15 நவம்பர், 2015

படித்துள்ளேன், ஆனால், வேலை மட்டும் கிடைக்கவில்லை. இது பெரும்பாலான இளைஞர்களின் புலம்பல்.
தன்னம்பிக்கை, ஆளுமைத் திறன், மொழிப்புலமை ஆகிய மூன்றிலும் கவனம் செலுத்தாமல் இருப்பதுதான் வேலை கிடைக்காததற்கான அடிப்படைக் காரணங்கள். அதேபோல, மாணவப் பருவத்தில் பத்திரிகைகளை வாசிக்கும் பழக்கம் இல்லாமல், நாட்டு நடப்புத் தெரியாத தலைமுறை உருவாகும் நிலையும் ஏற்பட்டுள்ளது.
இந்தத் தலைமுறையினருக்கு இணையதளம் மூலம் அனைத்தையும் தெரிந்துகொள்ள முடியும் என்ற எண்ணம் மேலோங்கி நிற்கிறது. ஆனால், இணையதளத்தில் வெளியிடப்படும் தகவல்கள் அனைத்துமே நம்பகத்தன்மையுடையவை அல்ல என்பதை உணராதவர்களாக இருப்பது வேதனைக்குரியது.
அதேபோல, மாணவர்களின் தோல்விக்குத் தாய்மொழியாம் தமிழைச் சரளமாகப் பேசத் தெரியாமல் இருப்பதும் முக்கியக் காரணமாகும். இதே நிலை தொடர்ந்தால், வரும் காலங்களில் ஆங்கில மொழிக்குச் சிறப்புப் பயிற்சி மையங்கள் செயல்படுவதைப்போல, தமிழைப் பேசவும், படிக்கவும் பயிற்சி மையங்கள் தோற்றுவிக்கும் நிலை உருவாகும். கிட்டத்தட்ட இப்போதே அந்த நிலை வந்துவிட்டதாகக்கூட கூறலாம்.
மாணவரின் முதல்கட்டத் தோல்வி மொழியில் இருந்தே தொடங்குகிறது. உலக நாடுகள் சுதந்திரக் காற்றைச் சுவாசிப்பதற்கு அடிப்படைக் காரணம் பேச்சுரிமைதான். ஆனால், சுதந்திரம் பெற்று 63 ஆண்டுகள் கடந்த பிறகும், நமது இளைஞர்கள் பேசத் தயங்கியே வாழ்க்கையை இழந்துவிட்டனர். ஆனால், வீண் பேச்சு, விவாதங்களில் மட்டும் சளைப்பதில்லை.
 இதை உணராமல் - உணர முயற்சிக்காமல் படித்துவிட்டேன், எனக்கு அரசுதான் வேலை அளிக்க வேண்டும் என்று காலத்தைக் கழிப்பது சுய முன்னேற்றத்துக்கும், நாட்டின் முன்னேற்றத்துக்கும் உதவாது.
எனவே, ஆக்கப்பூர்வமாகவும், அறிவுப்பூர்வமாகவும் செயல்படுவார்களேயானால், இளைஞர்கள் யாரிடமும் வேலை கேட்டு நிற்க வேண்டிய நிலை ஏற்படாது.
ஆளுமைத் திறன் இருந்தால் பணம் சம்பாதிக்க முடியும். பணம் சம்பாதித்தால்தான் மனிதனைச் சம்பாதிக்க முடியும் என்ற சூழல் நிலவுவது என்பது உலகறிந்த உண்மை. இந்தச் சூழலில், ஆளுமைத் திறன் வளர்த்தலில் இன்றைய இளைஞர் சமுதாயம் அக்கறை செலுத்த வேண்டும். தாய் மொழி, தேசிய மொழி, பன்னாட்டு மொழிகளில் புலமையை வளர்த்துக்கொள்ள வேண்டும். இது புலம்பெயர்ந்து செல்லும் அனைவருக்கும் அடிப்படையானது, அவசியமானது. ஆனால், எத்தனை இளைஞர்கள் படிக்கும் காலத்தில் மொழி அறிதலில் கவனம் செலுத்துகின்றனர் என்ற கேள்விக்கு இல்லை என்று பதிலளிக்கும் நிலையே உள்ளது.
முதுநிலைப் பட்டம் பெற்றவருக்குக்கூட தான் வாங்கிய பட்டத்தில் இடம் பெற்றுள்ள வாசகங்களின் அர்த்தம் தெரியாமல் இருப்பது கசப்பான உண்மை. புதுக்கோட்டையில் இயங்கி வரும் ஆங்கிலப் பயிற்சி நிறுவனம், தமிழகம் முழுவதும் உள்ள தனது பயிற்சி மையங்களுக்குத் தேவையான ஆசிரியர்களைத் தேர்வு செய்ய அறிவிப்பு வெளியிட்டது. இதற்கு ஆசிரியர் பயிற்சி முடித்தவர்கள், பட்டம் பெற்றவர்கள் உள்பட சுமார் 13 ஆயிரம் பேர் விண்ணப்பித்தனர். ஆனால், இவர்களில் தேர்வானவர்கள் 2 பேர் மட்டும்தான் என்பதிலிருந்து, ஆங்கில மொழி அறிவில் நமது இடத்தைத் தெரிந்து கொள்ளலாம்.
வறுமையால் படிக்க இயலாத சூழலில் எந்த வேலையும் செய்யலாம் என்ற சூழல் இருந்தது. ஆனால், இன்று உலகமே உள்ளங்கைக்குள் வந்துவிட்ட நிலையில், ஆசிரியர் பட்டதாரிகள், முதுநிலைப் பட்டம் பெற்றவர்கள் சாராயக் கடைகளில் பணிக்குச் செல்வது அவர்கள் தகுதியை அவர்களே தாழ்த்திக் கொள்கிறார்கள் என்றுதானே அர்த்தம்.
நமது பள்ளிகளில் பாடங்கள் மட்டுமே போதிப்பது, தன்னம்பிக்கை, ஆளுமைத்திறன், உலக விஷயங்களைப் போதிக்காதது ஆகியனவே இதற்கெல்லாம் அடிப்படைக் காரணம்.
அந்தக் காலத்தில் இருந்ததைப்போல நீதி போதனை வகுப்புகளை பள்ளிகளில் மீண்டும் தொடங்க வேண்டும். அதில் கூறப்படும் நீதிக் கதைகளைக் கேட்காமல் பிள்ளைகள் வளர்வதால்தான் நேர்மை, நியாயம், நீதி, மனசாட்சி போன்றவை எங்கே கிடைக்கும்? என்ன விலை எனக் கேட்பதுடன், குறுக்கு வழியில் சம்பாதிப்பதை மட்டுமே குறிக்கோளாகக் கொண்டு இயங்கும் நிலை அதிகரித்துள்ளது.
பள்ளிகளில் பொது அறிவை வளர்க்கும் போக்கு அதிகரிக்க வேண்டும். தினமும் நாளிதழ்கள், வார இதழ்களைப் படித்து, அதில் உள்ள நல்ல விஷயங்களைத் தெரிந்துகொள்ள வேண்டும். இதற்கான களமாக நூலகங்களை உருவாக்க வேண்டும். அப்போதுதான் மாணவர்கள் அறிவுத் திறனுடன் ஆளுமைத் திறனையும் பெற முடியும். இந்தத் தகுதிகளை வளர்த்துக் கொண்டால்... யாருக்கும் வேலை இல்லை என்ற கேள்வி தானாகவே மறைந்துவிடும்.

கருத்துரையிடுக

  © Blogger template Leaving by Ourblogtemplates.com 2008

Back to TOP  

Blogger Widgets