உங்கள் வருகைக்கு நன்றி

ஏழைப் பெண்களின் திருமணத்துக்காக தமிழக அரசு, நலத்திட்டங்கள்

வியாழன், 22 டிசம்பர், 2016

ஏழைப் பெண்களின் திருமணத்துக்காக தமிழக அரசு, நலத்திட்டங்கள் சிலவற்றைச் செயல்படுத்தி வருகிறது. தகுதி உடைய ஏழைக் குடும்பத்தினர் அந்தத் திட்டங்களின்பலனைப் பெறுவது எப்படி?

மூவலூர் ராமாமிர்தம் அம்மையார் நினைவு திருமண உதவித் திட்டம்.

ஏழைத் தாய்மார்கள் தங்கள் பெண்களுக்குத் திருமணம் செய்யவும், பெண் கல்வியை மேம்படுத்தவும் தமிழக அரசு திருமண உதவித் திட்டம் ஒன்றைச் செயல்படுத்தி வருகிறது. இத்திட்டத்தின் கீழ் ஆண்டு வருவாய் 24 ஆயிரத்துக்குக் குறைவான ஏழைப் பெண்கள் பயனடையலாம்.

யாருக்கு வழங்கப்படுகிறது?
இந்தத் திட்டத்தில் இரண்டு வகை உண்டு. முதல் வகையில் பள்ளிகளில் பத்தாம் வகுப்பு வரை படித்துத் தேறிய, தேறாத மாணவிகள், பிரைவேட்டாக பத்தாம் வகுப்பு தேர்வு எழுதி பாஸ் ஆன பெண்களின் தாய் அல்லது தந்தைக்கு 25 ஆயிரம் ரூபாய் உதவித் தொகையும், தாலிக்கான அரை பவுன் 22 கேரட் தங்கக் காசும் அரசு வழங்குகிறது. மலைவாழ் இனத்தினர் எனில் ஐந்தாம் வகுப்பு பாஸ் பண்ணினாலே போதுமானது.

இரண்டாவது பிரிவில், அங்கீகரிக்கப்பட்ட கல்லூரிகளிலோ, தொலைதூரக் கல்வி அல்லது அரசு அங்கீகரித்த திறந்தவெளிப் பல்கலைக் கழகத்தில் பட்டப்படிப்பு அல்லது டிப்ளோமா முடித்த பெண்கள் திருமணத்துக்காக 50 ஆயிரம் ரூபாய் பணமும், அரை சவரன் தங்கக் காசும் வழங்கப்படுகிறது.
இத்திட்டத்தின் கீழ் பயன்பெற மணமகளுக்கு குறைந்த பட்சம் 18 வயது பூர்த்தியாகி இருக்க வேண்டும். அதிகபட்ச வயது வரம்பு கிடையாது. ஒரு குடும்பத்தில், ஒரு பெண்ணுக்கு மட்டுமே இந்த உதவி வழங்கப்படும்.
எப்போது விண்ணப்பிக்க வேண்டும்?
திருமண தினத்துக்கு முன்னதாக 40 நாட்களுக்குள் விண்ணப்பிக்க வேண்டும். விண்ணப்பித்த 15 நாட்களுக்குள் உதவி வழங்கப்படும். வெகு அபூர்வமான கேஸ்களில், திருமண நாளுக்கு முந்தைய தினம் விண்ணப்பித்தாலும் உதவி அளிக்கப்படும். திருமண நாளன்றோ, அல்லது அதன் பிறகோ வரும் விண்ணப்பங்கள் பரிசீலிக்கப்படமாட்டாது. 
யாருக்கு விண்ணப்பிக்க வேண்டும்?

மாநகராட்சி மற்றும் நகராட்சி எல்லைக்குட்பட்ட பகுதிகளில் அப்பகுதியின் தாலுகா அலுவலர், கிராமப் பகுதிகளில் ஊராட்சிஅல்லது சம்பந்தப்பட்ட மாவட்ட சமூக நல அலுவலர்கள், சமூக நல அபிவிருத்தி அதிகாரிகள், கிராம நல அதிகாரிகளுக்கு விண்ணப்பிக்கலாம். பள்ளிக்கூட மாற்றுச் சான்றிதழ், பத்தாம் வகுப்பு அல்லது டிகிரி / டிப்ளோமா மதிப்பெண் சான்றிதழ், வருமான சான்றிதழ், திருமண அழைப்பிதழ் இவற்றை இணைத்து விண்ணப்பித்தால் உதவித் தொகை வழங்கப்படும்.

டாக்டர் தர்மாம்பாள் அம்மையார் விதவைகள் மறுமண உதவித் திட்டம்:
கணவனை இழந்த பிறகு மறுமணம் செய்துக் கொள்ளும் எவரும் இந்தத் திட்டத்தில் பயன்பெற விண்ணப்பிக்கலாம். இதிலும் இரண்டு வகை உண்டு. முதல் வகையில், எந்தவிதமான கல்வித் தகுதியும் கிடையாது. அவர்களுக்கு 10 ஆயிரம் ரூபாய்க்கான காசோலை, 15 ஆயிரம் ரூபாய்க்கான தேசிய சேமிப்புப் பத்திரம், தாலிக்கு அரைப் பவுன் தங்கம் வழங்கப்படும்.
பட்டதாரிப் பெண்கள், டிப்ளோமா படித்தவர்களுக்கான இரண்டாவது வகையில், தாலிக்கு அரைப்பவுன் தங்கத்துடன், உதவித் தொகை 50 ஆயிரம் வழங்கப்படும். இதில் 30 ஆயிரம் ரூபாய் ரொக்கமாகவும், 20 ஆயிரம் ரூபாய் மதிப்புக்கு தேசிய சேமிப்புப் பத்திரமும் வழங்கப்படும்.
மறுமணம் செய்து கொள்ளும் விதவைப் பெண்ணுக்கு குறைந்த பட்சம் 20 வயதும், அவர் திருமணம் செய்து கொள்ளும் நபருக்கு அதிக பட்சம் 40 வயது என்றும் நிர்ணயிக்கப்பட்டுள்ளது. வருமான உச்சவரம்பு ஏதுமில்லை. மறுமணம் செய்து கொண்ட ஆறு மாதங்களுக்குள் விதவை என்பதற்கான சான்றிதழ், மறுமணத்துக்கான அழைப்பிதழ், கணவன், மனைவியின் வயது சான்றிதழ் ஆகியவற்றோடு இரண்டாம் பிரிவில் உதவி பெறுவதற்குரிய கல்வித் தகுதி சான்றிதழ் ஆகியவற்றோடு மாவட்ட சமூக நல அதிகாரி அல்லது சமூக நல விரிவாக்க அதிகாரியிடம் விண்ணப்பிக்க வேண்டும். 15 நாட்களுக்குள் உதவித் தொகை கிடைக்கும்.

ஈ.வெ.ரா. மணியம்மை நினைவு ஏழை விதவைகளின் பெண்கள் திருமண உதவித் திட்டம்.

24 ஆயிரம் ரூபாய்க்குக் குறைவாக ஆண்டு வருமானம் கொண்ட ஏழை விதவைத் தாய்மார்கள், தங்கள் பெண்ணின் திருமணத்தை நடத்திட மணியம்மை பெயரில் தமிழக அரசு உதவித் தொகை வழங்குகிறது. மணப்பெண்ணுக்கு 18 வயது நிறைந்திருக்க வேண்டும்; அதிக பட்ச வயது வரம்பு இல்லை. ஒரு குடும்பத்தில் ஒரு மகளுக்கு மட்டுமே இந்தத் திட்டத்தின் கீழ் உதவி பெற முடியும். இதர விதிமுறைகள் மூவலூர் ராமாமிர்தம் நினைவு திருமண உதவித் திட்டத்தைப் போன்றதே.

தாசில்தாரிடமிருந்து பெற்ற விதவைச் சான்றிதழ், வருவாய் சான்றிதழ், மகளின் வயதுச் சான்றிதழ், கல்வித் தகுதி சான்றிதழ் ஆகியவற்றுடன் விண்ணப்பிக்க வேண்டும். அரசாங்கத்தின் விதவை பென்ஷன் பெறும் பெண்கள் விண்ணப்பத்துடன் விதவை, வருவாய் சான்றிதழ் இணைக்கத் தேவை இல்லை.


அன்னை தெரசா ஆதரவற்ற பெண்கள் திருமண உதவித் திட்டம்

பெற்றோர்களை இழந்த ஆதரவற்ற பெண் குழந்தைகள், திருமண வயதை அடையும் நேரத்தில், அவர்களின் திருமணத்துக்காக தமிழக அரசு அன்னை தெரசாவின் பெயரால் ஒரு திட்டத்தைச் செயல்படுத்தி வருகிறது. இந்தத் திட்டத்திலும் கல்வித் தகுதி தேவையில்லாத ஒரு பிரிவு, பட்டப்படிப்பு, டிப்ளோமா படிப்பு முடித்த பெண்கள் என இரு பிரிவுகள் உண்டு. ஆதரவற்ற பெண் அல்லது அவரது பாதுகாவலரின் ஆண்டு வருமானம் 24 ஆயிரம் ரூபாய்க்குள் இருக்க வேண்டும். குறைந்த பட்ச வயது 18. அதிக பட்ச வயது வரம்பு இல்லை.
எப்படி விண்ணப்பிப்பது?
திருமண நாளுக்கு முன்னதாக 40 நாட்களுக்குள் அவர் வசிக்கும் தொகுதியின் எம்.எல்.ஏ. அல்லது எம்.பி.யின் சான்றிதழ் அல்லது தாய், தந்தை இருவரது இறப்புச் சான்றிதழ், தாசில்தாரிடமிருந்து பெற்ற மணமகளின் அல்லது பாதுகாவலரது வருமான சான்றிதழ், வயது சான்றிதழ், பிரிவு 2ல் பயன்பெற விரும்புகிறவர்கள் டிகிரி / டிப்ளோமா சான்றிதழ் இவற்றோடு மாவட்ட கலெக்டர் அல்லது மாவட்ட சமூக நல அதிகாரிக்கு விண்ணப்பிக்க வேண்டும். விண்ணப்பித்த 15 நாட்களுக்குள், தகுதியானவர்களுக்கு உதவித் தொகையும், தாலிக்குத் தங்கமும் வழங்கப்படும்.

கருத்துரையிடுக

  © Blogger template Leaving by Ourblogtemplates.com 2008

Back to TOP  

Blogger Widgets