உங்கள் வருகைக்கு நன்றி

நாம் தடம் மாறினால், நம் குழந்தைகளும் தடம் மாறும்.

திங்கள், 2 ஏப்ரல், 2018


இன்று,  40 வயதில் இருப்போர் தான், படிக்காத தாய், தந்தையரை பெற்ற கடைசி தலைமுறை. நம் குழந்தைகளுக்கு, 'நான்கு பேருக்கு நல்லது செய்கிற மாதிரி வாழ்' என்று சொல்லி வளர்ப்பதை தவிர, பெரிதாக ஒன்றுமே கொடுத்துவிட முடியாது. நம் குழந்தைகளை பசியில்லாமல் வளர்க்கலாம்; ஆனால், உழைப்பின் வலி தெரியாமல் வளர்க்கவே கூடாது. நம் குழந்தைகளுக்கு எதை கொடுக்கக் கூடாதோ, அதை கொடுக்கக் கூடாது; எதை கொடுக்க வேண்டுமோ, அதனுடைய உண்மையை எடுத்துச் சொல்லி, கொடுக்க வேண்டும். ஜெயிக்கிறோமா, தோற்கிறோமா என்பது முக்கியமில்லை. வாழ்க்கையில் விரும்பியது செய்தபடி இருக்கிறோமா... அது தான் முக்கியம். விரும்பியதை செய்யும்போது கிடைக்கும் பெரிய மகிழ்ச்சியை, குழந்தைகளுக்கு கொடுக்கக்கூடிய சூழ்நிலையை, நாம் உருவாக்க வேண்டும்.நீங்கள் கோபமாக இருந்தாலும் சரி, வருத்தமாக இருந்தாலும் சரி, குழந்தைகளை அலட்சியப்படுத்தக் கூடாது. நல்ல செய்திகளை, நல்ல இணையதளங்களை,  நல்ல விஷயங்களை ஆசிரியர்களும், பெற்றோரும் சொல்லவில்லை என்றால், பல கசடான விஷயங்கள், குழந்தைகள் மனதில் கொட்டப்படும். உங்கள் குழந்தைகள், நிறைய சம்பாதிக்கப் போகிறவர்களாக வளர்க்க வேண்டும் என்று விரும்ப வேண்டாம். நான்கு பேர், 'உங்கள் குழந்தையால் வாழ்கிறோம்' என்று சொல்வது போன்ற வாழ்க்கையை, அவர்களுக்கு வாங்கிக் கொடுங்கள். அது தான் பெற்றோராகிய நீங்கள், உங்கள் குழந்தைகளுக்கு செய்யும் மிகப்பெரிய கடமை. நம் குழந்தைகள், நாம் சொல்வதைக் கேட்டு வளர்வதில்லை. நாம் எப்படி வாழ்கிறோமோ, அந்த வாழ்க்கையைப் பார்த்து வளர்கிறது. நாம் தடம் மாறினால், நம் குழந்தைகளும் தடம் மாறும்.

Read more...

திட்டமிட்டு செயல்படுத்தினால் நேரத்தை கட்டுப்படுத்தலாம்.


மண்ணில் மனிதன் பிறந்ததிலிருந்து நேரத்தின் பங்கு முக்கியமானது. நேரத்தை பொறுத்து தான் அனைத்து செயல்களும் அரங்கேறுகின்றன. ஒன்றை நாம் அடைய வேண்டு மெனில்,நேரத்தின் போக்கிற்கேற்ப ஓடிக் கொண்டிருக்கிறோம். ஏதாவது ஒரு நேரத்தில் வாழ்க்கை வாழ்வதை மறந்துவிட்டு ஓடுகிறோமே என்று தோன்றும். இதற்கு காரணம் நேரத்தை முறையாக திட்டமிட்டு பயன்படுத்தாமல் இருப்பது தான். 
சமநிலைப்படுத்துங்கள்
சமநிலை என்பது எல்லாவற்றிலும் இருப்பதால் இப்பூவுலகம் அன்றாடம் இயங்கிக் கொண்டிருக்கிறது. நாம் வேலை செய்வதில் துவங்கி வேடிக்கை விளையாட்டுகளில் ஈடுபடுவது முடிய அனைத்து செயல்களுக்கும் இது பொருந்தும். ஒரு குறிப்பிட்ட நேரத்தில் ஒரு செயலை எந்த அளவு முடிக்க முடியும் என திட்டமிட்டு அதன் படி, நேரத்தை சமநிலைப்படுத்துங்கள். பின் அந்த செயலை துவங்கி வெற்றிகரமாக முடியுங்கள். 
உங்களை அறியுங்கள்
நேர மேலாண்மையில் மிகவும் முக்கியமான ஒன்று இது தான். உங்களை நீங்கள் முழுமையாக அறிந்திருந்தால் மட்டுமே நேரத்தை உரிய முறையில் கட்டுப்படுத்தி நிர்வகிக்க முடியும். ஒரு காரியத்தை உங்களால் செய்ய முடியுமா? செய்வதற்கான திறமை உள்ளதா? செயல் திறம் உள்ளதா? உள்ளிட்டவற்றை நீங்கள் அறிந்தால் மற்றவர்களின் புத்திமதியோ, உதவியோ உங்களுக்கு தேவையில்லை. உங்கள் நேரத்தை தரமாக நிர்ணயித்து காரியத்தை வெற்றிகரமாகவும் குறித்த நேரத்திலும் முடிப்பீர்கள். 
எதார்த்தமாக பழகுங்கள்
எதார்த்தமான விஷயங்களை உங்களிடம் இருந்து எதிர்பார்க்க கற்றுக்கொள்ளுங்கள். நீங்கள் செய்யும் செயல்களை உங்கள் திறமை மற்றும் செயல்திறம் ஆகியவற்றுடன் ஒப்பிட்டு பாருங்கள். கடினமான செயல்களை உங்கள் மீது சுமத்திக் கொள்ளாதீர்கள். 
செயலை பிரித்துக் கொள்ளுங்கள்
பெரிய அளவிலான ஒரு காரியத்தை செய்யத் துவங்கும் முன் அதை சிறு சிறு பாகங்களாக பிரித்துக் கொள்ளுங்கள். இல்லையெனில் வேலைப்பளு மற்றும் மனஅழுத்தம் உங்களை மூழ்கடித்து விடும். நேரத்திற்கு தகுந்தவாறு சிறு பாகங்களாக செயலை பிரித்து செய்தால் அதை முழுமையாகவும், பதட்டம் இல்லாமலும் பார்க்கலாம். 
திட்டமிட கற்றுக்கொள்ளுங்கள்
உங்களுடைய வேலைகளையும் அவற்றை தகுந்த நேரத்தில் முடிப்பதற் கான வழிகளையும் திட்டமிட கற்றுக் கொள்ளுங்கள். ஏனெனில் மேற்கூறியது போல், திட்டமிடும் பொழுதே ஒரு செயலுக்கான நேரமும், செயலை பாகங்களாக பிரித்து முடிப்பதற்கான முயற்சிகளும் நமக்கு தெரிந்துவிடும். இது போல் நாம் மேற்கொள்ளும் ஒவ்வொரு காரியத்தையும் திட்டமிட்டு செயல்படுத்தினால் நேரத்தை கட்டுப்படுத்தலாம்.         -     தினமலர்

Read more...

  © Blogger template Leaving by Ourblogtemplates.com 2008

Back to TOP  

Blogger Widgets