நாம் தடம் மாறினால், நம் குழந்தைகளும் தடம் மாறும்.
திங்கள், 2 ஏப்ரல், 2018
இன்று,
40 வயதில் இருப்போர் தான், படிக்காத தாய், தந்தையரை பெற்ற கடைசி தலைமுறை.
நம் குழந்தைகளுக்கு, 'நான்கு பேருக்கு நல்லது
செய்கிற மாதிரி வாழ்' என்று சொல்லி வளர்ப்பதை தவிர, பெரிதாக ஒன்றுமே கொடுத்துவிட
முடியாது. நம் குழந்தைகளை பசியில்லாமல் வளர்க்கலாம்; ஆனால், உழைப்பின் வலி தெரியாமல்
வளர்க்கவே கூடாது. நம் குழந்தைகளுக்கு எதை கொடுக்கக் கூடாதோ, அதை கொடுக்கக் கூடாது; எதை கொடுக்க வேண்டுமோ, அதனுடைய உண்மையை எடுத்துச் சொல்லி, கொடுக்க வேண்டும்.
ஜெயிக்கிறோமா, தோற்கிறோமா என்பது
முக்கியமில்லை. வாழ்க்கையில் விரும்பியது செய்தபடி இருக்கிறோமா... அது தான்
முக்கியம். விரும்பியதை செய்யும்போது கிடைக்கும் பெரிய மகிழ்ச்சியை, குழந்தைகளுக்கு கொடுக்கக்கூடிய
சூழ்நிலையை, நாம் உருவாக்க
வேண்டும்.நீங்கள் கோபமாக இருந்தாலும் சரி,
வருத்தமாக இருந்தாலும் சரி, குழந்தைகளை அலட்சியப்படுத்தக்
கூடாது. நல்ல செய்திகளை, நல்ல இணையதளங்களை, நல்ல விஷயங்களை ஆசிரியர்களும், பெற்றோரும் சொல்லவில்லை
என்றால், பல கசடான விஷயங்கள், குழந்தைகள் மனதில்
கொட்டப்படும். உங்கள் குழந்தைகள்,
நிறைய சம்பாதிக்கப்
போகிறவர்களாக வளர்க்க வேண்டும் என்று விரும்ப வேண்டாம். நான்கு பேர், 'உங்கள் குழந்தையால் வாழ்கிறோம்' என்று சொல்வது போன்ற
வாழ்க்கையை, அவர்களுக்கு வாங்கிக்
கொடுங்கள். அது தான் பெற்றோராகிய நீங்கள்,
உங்கள் குழந்தைகளுக்கு
செய்யும் மிகப்பெரிய கடமை. நம் குழந்தைகள்,
நாம் சொல்வதைக் கேட்டு
வளர்வதில்லை. நாம் எப்படி வாழ்கிறோமோ,
அந்த வாழ்க்கையைப் பார்த்து
வளர்கிறது. நாம் தடம் மாறினால்,
நம் குழந்தைகளும் தடம் மாறும்.