உங்கள் வருகைக்கு நன்றி

குழந்தைகளும், பிளே ஸ்கூலும்

புதன், 20 ஜூன், 2018


இன்றைய குழந்தைகள், 2 வயதிலேயே, 'பிளே ஸ்கூலில்' சேர்க்கப்படுகின்றனர். பள்ளி அட்மிஷனுக்கு முன், அந்தப் புதிய சூழலுக்கு ஈடுகொடுக்கும் அளவுக்கு அவர்களின் உடல் நலன் மற்றும் மனநலனை உறுதி செய்ய வேண்டியது அவசியம்.பயண துாரம் குறைவாக, வீட்டுக்கு அருகில் இருக்கும் பள்ளியில் குழந்தைகளை சேர்ப்பது நலம்; இதனால், அலைச்சல், அசதியைத் தவிர்க்கலாம். குழந்தைகளை தங்கள் அரவணைப்பில் மட்டுமே வைத்து வளர்க்கும் பெற்றோர், பள்ளியில் சேர்ப்பதற்கு முன், அவர்களை நண்பர், உறவினர் வீடுகளுக்கு சில மணி நேரம் அழைத்துச் சென்று, அங்கிருக்கும் பெரியவர், குழந்தைகளுடன் பழக வைக்க வேண்டும்.கிண்டர் கார்டன், கே.ஜி., வகுப்புகளில் குழந்தை களை மதிய வேளைகளில் சிறிது நேரம் உறங்க வைப்பதால், வீட்டிலும் அவர்களை அதே நேரத்தில் உறங்க வைத்துப் பழக்கலாம். ஆரம்பத்தில் சில வாரங்களுக்கு குழந்தைகள், பள்ளி செல்ல மறுத்து அடம் பிடித்து அழுவது இயல்பானது. அதுவே மாதங்களைக் கடந்தும் தொடர்ந்தால், என்ன பிரச்னை என, குழந்தையிடமும், பள்ளித் தரப்பிடமும் விசாரிக்க வேண்டும்; குழந்தைகளின் அன்றாட நடவடிக்கைகளையும் கூர்ந்து கவனிக்க வேண்டும்.தன் பார்வையில் படும் கவர்ச்சிகரமான பொருட்களை, தனக்கு சொந்தமாக்க நினைப்பது சில குழந்தைகளின் இயல்பு. இக்குழந்தைகளை, பள்ளியில் சேர்ப்பதற்கு முன், செய்முறையுடன் விளக்கி, 'இது தவறு' என்பதை, பெற்றோர் புரிய வைக்க வேண்டும்.பசித்தால் சொல்லத் தெரிவது, தானே சுயமாகச் சாப்பிடுவது, சிறுநீர் மற்றும் மலம் வந்தால் பாத்ரூமில் மட்டும் ெவளியேற்றுவது, மூக்கில் சளி ஒழுகினால், கைக்குட்டையில் துடைத்துக் கொள்வது, சாப்பிடும் முன், பின் கைகளைக் கழுவுவது உள்ளிட்ட அவசியமான பழக்கங்களை, பள்ளிக்கு அனுப்பும் முன் கற்றுக் கொடுக்க வேண்டும்.குழந்தையின் வயதுக்கு ஏற்றாற்போல, பெற்றோரின் மொபைல் எண், வீட்டு முகவரியை சொல்ல தெரிய வேண்டும்.வாரம் ஒரு முறை நகம் வெட்டுவது, குழந்தைக்கு தொந்தரவு தராத வகையிலான, 'ஹேர்கட்' போன்றவை முக்கியம். பெண் குழந்தைகளுக்கு தொங்கட்டான், ஜிமிக்கி, செயின் போன்ற அணிகலன்கள், விளையாடும்போது, சண்டையிடும்போது இழுக்கப்பட்டு விபரீதம் ஏற்பட வாய்ப்புள்ளதால், அவற்றைத் தவிர்க்க வேண்டும்.விடுமுறை நாட்களிலேயே கண் பரிசோதனை, காது வலி, பல் வலி, சரியாகச் சாப்பிடாமல் இருப்பது, மூச்சுத்திணறல், தொடர் இருமல் உள்ளிட்ட உடல் நலப் பிரச்னை இருந்தால், அதைக் கண்டறிந்து சரிபடுத்த வேண்டும்.'குட் டச், பேட் டச்' மற்றும் யாரிடம் எப்படி பழக வேண்டும் உள்ளிட்ட பாலினம், பாலியல் சார்ந்த விஷயங்களை, குழந்தைகளுக்கு புரியும் வகையில் சொல்லித் தர வேண்டும். பொதுவாக, 10 வயதுக்கு மேற்பட்ட குழந்தை களையே, ஹாஸ்டலில் சேர்க்க வேண்டும்.

கருத்துரையிடுக

  © Blogger template Leaving by Ourblogtemplates.com 2008

Back to TOP  

Blogger Widgets