உங்கள் வருகைக்கு நன்றி

மூளையை ஆரோக்கியத்திற்கான வழிகள்.

புதன், 27 ஜூன், 2018


மனிதன் வளர வளர, மூளையும் வளரும். ஆனால், 45 வயது முதல், மூளை தன் வேகத்தை கொஞ்சம் கொஞ்சமாக இழக்கத் துவங்கும்.கருத்தரித்த நான்காவது வாரத்திலேயே, குழந்தையின் மூளை வளர துவங்கி விடும். அப்போது, தாய் ஆரோக்கியமான சூழலில் இருந்தால், குழந்தைக்கு மூளை குறைபாடு ஏற்படாமல் தவிர்க்கலாம்.கருவுற்ற நான்காவது வாரத்தில், நிமிடத்திற்கு 2.50 லட்சம் நரம்பணுக்கள் குழந்தையின் உடலில் உருவாகின்றன. இவ்வாறு, நமக்கு தேவையான அனைத்து நரம்பணுக்களும், பிறப்பதற்கு முன்பே உருவாகி விடும். குறைப்பிரசவத்தால் மூளை வளர்ச்சி தடைபட வாய்ப்புள்ளதால், பிற்காலத்தில் மூளை சார்ந்த பல பிரச்னை வர வாய்ப்புள்ளது.குழந்தையின் மூளை, ஆறு வயதுக்குள்ளேயே, 95 சதவீத வளர்ச்சியை எட்டி விடும். இந்த பருவத்தில் மூளை மிகவும் ஆற்றல் நிறைந்ததாக இருக்கும். குழந்தை பருவத்தில், மூளை தனக்கு தேவையானதை விட, இரண்டு மடங்கு நியூரான்களை உற்பத்தி செய்யும். 20 வயதாகும் போது, மூளை நன்றாக வளர்ந்து விடும். அதனால், மூளையில் உள்ள வரிப் பள்ளங்கள் விரிவடையும். 20 - 90 வயது வரை, மூளை அதன் எடையிலிருந்து, 5 - 10 சதவீதத்தை இழக்கிறது.நம் மூளையின் உச்சக்கட்ட செயல்திறன், 22 வயதில் துவங்கி, ஏறக்குறைய ஐந்து ஆண்டுகளே நீடிக்கும். அதன்பின், ஞாபக சக்தி, பணி ஒருங்கிணைப்பு திறன், திட்டமிடல் திறன் குறைந்து விடும்.மேலும், 45 - 49 வயதுக்குள் ஆண்களும், பெண்களும், 3.6 சதவீத மூளைத்திறனை இழந்து விடுகின்றனர். அதன்பின், காரணத்தை ஆராயும் திறன், புரிந்து கொள்ளும் திறன், ஞாபகசக்தி ஆகியவை, வெகுவாக குறைய துவங்கும்.வயதான பருவத்தில், நாம் தொடர்ச்சியாக மூளையின் செல்களை இழந்தபடியே இருப்போம். நரம்பணுக்களில் செய்திகளை கடத்தும் பகுதியான, 'டெண்ட்ரைட்ஸ்' அதிக அளவில் சிதைவடையும். 65 - 70 வயதுக்குள் ஆண்களுக்கு, 9.6 சதவீதமும், பெண்களுக்கு, 7.4 சதவீதமும் மூளை இழப்பு ஏற்படும்.இதுதவிர, 80 வயதில், நம் மூளை சிறிது எடையை இழந்து, அளவிலும் சிறிது சுருங்கி விடும். மூளை சுருங்கு வதால், அறிவாற்றல் சார்ந்த திறமைகள் குறையும். வயதானவர்களுக்கு ஞாபக சக்திக்கு உதவும், 'ஹிப்போ காம்பஸ்' சுருங்குவதால், அவர்களுடைய நினைவாற்றல் குறைய துவங்கும்.தொடர்ந்து ஏதாவது படித்துக் கொண்டிருப்பது, மூளையை ஆரோக்கியமாக வைக்க உதவும். வாரத்தில் குறைந்தது மூன்று நாட்கள், தொடர்ந்து, 45 நிமிடம் நடப்பது, மூளைக்கு நல்லது. தினமும், எட்டு மணிநேரம் உறங்குவது, ஞாபக மறதி அபாயத்தை குறைக்கும்.உயர் ரத்த அழுத்தம், மூளை சுருங்குவதை வேகப்படுத்துவதுடன், மூளைத்திறன் குறைபாட்டுக்கும் வழிவகுக்கும் என்பதால், ரத்த அழுத்தத்தை கட்டுக்குள் வைத்திருப்பது நல்லது.

கருத்துரையிடுக

  © Blogger template Leaving by Ourblogtemplates.com 2008

Back to TOP  

Blogger Widgets