உங்கள் வருகைக்கு நன்றி

பள்ளி செல்லும் குழந்தை அடம்பிடிக்க காரணமும், அதற்கான தீர்வும்.

புதன், 27 ஜூன், 2018


சில குழந்தைகள், பள்ளிக்கு கிளம்பும் முன், வயிறு வலிக்கிறது அல்லது உடம்பு சரியில்லை எனக் கூறி, லீவு போட்டதும், ப்ரீயாகி, ஜாலி மூடுக்கு மாறி விடுவர்.மீண்டும் மறுநாள் காலை, பள்ளி செல்லும் போது இப்பிரச்னை தொடர்ந்தால், குழந்தையுடன் உட்கார்ந்து பேசுங்கள். அவர்கள் பேச வாய்ப்பு கொடுத்து, காது கொடுத்து கேளுங்கள். வீட்டில் பேச தயங்கும் குழந்தைகளை, வெளியே அழைத்து சென்று, பிரச்னையை கேட்டு அறிந்து களையுங்கள். இன்றைய பெற்றோரில் பலர், குழந்தைகளுக்கு அறிவுரை வழங்கும் பெயரில், தொடர்ச்சியாக பாடம் எடுத்து வருகின்றனர். இவ்வாறு அவர்களை குற்றம் சொல்லி வந்தால், பிரச்னை பெரிதாகுமே தவிர, தீர்வு கிடைக்காது.குழந்தைகளை, மிரட்டியோ, அதட்டியோ அல்லது அடித்தோ பள்ளிக்கு அனுப்பினாலும், பள்ளியில் நாட்டம் இல்லாமல் போய்விடும். இப்படி அனுப்பும்போது, அது, பெற்றோர் - குழந்தை இடையேயான உறவில் விரிசலை ஏற்படுத்தும்.சில குழந்தைகளுக்கு, உண்மையிலேயே உடம்பில் ஏதாவது பிரச்னை இருக்கலாம். இதை உறுதிப்படுத்த, மருத்துவரிடம் அழைத்து சென்று அவர், 'எந்த பிரச்னையும் இல்லை' என்றால், குழந்தையிடம் நெருக்கம் காட்டி, பிரச்னையை கண்டறியுங்கள்.பள்ளிக்குச் செல்ல மறுக்கும் குழந்தையை, தொடர்ச்சியாக கண்காணியுங்கள். குறிப்பாக, அவர்களுக்கு பயம் மற்றும் பதற்றம் ஏற்படுவது போல் தோன்றினால், முறையான கவுன்சிலிங் தர வேண்டும்.இன்று சில பெற்றோர், தங்கள் குழந்தைகள் பள்ளி செல்ல மறுத் தால், ஆசிரியர் மற்றும் பள்ளி நிர்வாகம் சரியில்லை என, அனுமானித்து விடுகின்றனர். இதுதவிர, படிப்பில் பிரச்னை, கேலிப் பிரச்னை மற்ற மாணவர்களிடம் சண்டை எனவும் இருக்கலாம். அதை சரியான முறையில் ஆராய்ந்து, சிந்தித்து செயல்படுங்கள்.குறிப்பாக, பெற்றோர் பள்ளி சென்று, ஆசிரியரிடம் பேச வேண் டும். ஒரு கூட்டு முயற்சியால், குழந்தையை இந்தப் பிரச்னையில் இருந்து சரி செய்யலாம்.உடல் நிலை சரியில்லாமல் வீட்டில் இருக்கும்போது, 'டிவி' பார்ப்பது, வீடியோ கேம் விளையாடுவது உள்ளிட்ட விஷயங்களை அனுமதிக்கக் கூடாது. மீறி பயன்படுத்தினால், அது அவர்களை மேலும் வீட்டோடு இருக்க வழி வகுக்கும்.நல்ல பழக்கத்தை ஊக்கப்படுத்துங்கள். உதாரணமாக, பள்ளிக்குச் செல்லாமல் தொடர்ச்சியாக இருந்து, ஒரு நாள் பள்ளி சென்று வரும்போது, அவர்களுக்குப் பிடித்த உணவை வீட்டில் செய்து கொடுங்கள். தொடர்ச்சியாக பள்ளிக்குச் சென்று வந்தால், சிறு பரிசு கொடுத்து ஊக்கப்படுத்துங்கள்.மேலே கூறியவற்றை பெற்றோர் கடைபிடித்தாலே, குழந்தையின் பிரச்னை நிச்சயம் சரியாகும். தேவையெனில், மனநல நிபுணரை கலந்தாலோசிக்கலாம்.

கருத்துரையிடுக

  © Blogger template Leaving by Ourblogtemplates.com 2008

Back to TOP  

Blogger Widgets