உங்கள் வருகைக்கு நன்றி

குழந்தை ஆரோக்கியமாக இருப்பதற்கான அறிகுறி.

புதன், 20 ஜூன், 2018

8 மதிப்பெண்வாங்கினால், 'பாஸ்!'
குழந்தை நல மருத்துவர், தனசேகர் கேசவலு: குழந்தை பிறந்ததும், தலை உச்சி நன்றாக மூடியிருக்கிறதா; சிசுவின் கண்களில் சிவப்பு நிறம் இல்லாமல் இருக்கிறதா; இதயத் துடிப்பு, கை மற்றும் கால்களில் நாடித் துடிப்பு; ஆணோ, பெண்ணோ, பாலின உறுப்பு சரியாக இருக்கிறதா; மலத் துவாரம் இருக்கிறதா; இடுப்பெலும்பு, கால் மூட்டு, பாதம், தொப்புள், முதுகெலும்பு, தோள்பட்டை எலும்பு சரியாக இருக்கின்றனவா என, மருத்துவர், 'செக்' செய்வார்.பிறந்த குழந்தைக்கு மஞ்சள் காமாலை வருவது, நார்மலான விஷயம் தான். இது, சராசரியாக ஒரு வாரம் வரை இருந்து சரியாகி விடும். பிறந்த குழந்தையின் உச்சந்தலை வழியாக வெப்பம் வெளியேறும் என்பதால், தலையையும், கூடவே பாதத்தையும் மூடியே வைக்க வேண்டும்.பிறந்த, 48 மணி நேரத்துக்குள் குழந்தை கறுப்பாக, முதல் மலம் கழிக்க வேண்டும். இது, குழந்தை ஆரோக்கியமாக இருப்பதற்கான அறிகுறி. அப்படிப் போகவில்லை எனில், மலத் துவாரத்தை, 'செக்' செய்ய வேண்டும். தாயின் உடல் சூட்டிலேயே குழந்தையை வைத்திருக்க வேண்டும்; சீம்பால் கொடுப்பதை தவற விடக்கூடாது.ஒரு குழந்தை பிறந்த உடனேயே, அதன் சருமத்தின் நிறம், இதயத் துடிப்பு, அழுகை, கை, கால்களை உதைப்பது, மூச்சு விடுதல் என, இரண்டு மதிப்பெண் வீதம், 10 மதிப்பெண் வழங்குவர் மருத்துவர்கள்.சருமத்தின் நிறம், 'பிங்க்'காக இருந்தால், இரண்டு மதிப்பெண். உடல் முழுக்க, 'பிங்க்' நிறம்; ஆனால், கை கால்களில் மட்டும் நீல நிறம் இருந்தால், ஒன்று; உடல் முழுக்க நீல நிறம் இருந்தால், ஜீரோ.ஒரு நிமிடத்துக்கு, 100 இதயத் துடிப்புகளுக்கு மேலே இருந்தால், இரண்டு மதிப்பெண். 100க்கும் குறைவாக இருந்தால், ஒன்று; துடிப்பு இல்லையென்றால், ஜீரோ. சத்தமாக அழுதால், இரண்டு; சத்தமில்லாமல் முகத்தில் மட்டும் அழுகை தெரிந்தால், ஒன்று; அழுகையே இல்லையென்றால், ஜீரோ.கை, கால்களை நன்கு உதைத்துக் கொண்டால், இரண்டு; பலவீனமாக உதைத்துக் கொள்கிறது என்றால், ஒன்று; கை, காலை அசைக்கவே இல்லை எனில், ஜீரோ.சத்தமாக அழுகிற பிள்ளை மூச்சு விடுவதிலும், இரண்டு மதிப்பெண் வாங்கி விடும். பலவீனமாக அழுகிற குழந்தையின் மூச்சும் பலவீனமாக இருக்கும் என்பதால், ஒன்று; மூச்சில்லை என்றால், ஜீரோ மதிப்பெண்.இதில், குறைந்தபட்சமாக, எட்டு மதிப்பெண் வாங்கினால், அந்த குழந்தை, 'பாஸ்' என அர்த்தம். இதற்கும் மேல், ஒன்பது - 10 என்றால், அன்றைய, 'ஹாஸ்பிடல் டாப்பர்' அந்தக் குட்டி தான்.ஆனால், இந்த மதிப்பெண் டெஸ்டில், குழந்தை முதலில், 10 வாங்கி, அடுத்த, ஐந்து நிமிடத்தில், ஆறு வாங்கினால், பிரச்னை இருப்பதாக அர்த்தம். இதுவே முதல் நிமிடத்தில், ஆறு வாங்கி, ஐந்து நிமிடத்தில், 10 மதிப்பெண் வாங்கினால், குழந்தையை அம்மாவிடம் பால் குடிக்க அனுப்பி விடலாம்.ஆனால், தொடர்ந்து, குழந்தை, ஐந்து - ஆறு மதிப்பெண்ணிலேயே இருந்தால், 'எமர்ஜென்சி கேர்' சிகிச்சை அளிக்கப்படும். இதை பச்சிளம் குழந்தை நிபுணர் பார்த்துக் கொள்வர்; எனவே கவலை வேண்டாம்.

கருத்துரையிடுக

  © Blogger template Leaving by Ourblogtemplates.com 2008

Back to TOP  

Blogger Widgets