மனநலத்தில் மட்டுமல்ல, உடல்நலத்திலும் தாக்கம்.
வெள்ளி, 12 ஏப்ரல், 2019
சோகமோ, மகிழ்ச்சியோ, கோபமோ, காதலோ...
மனிதன் வெளிப்படுத்தும் ஒவ்வோர் உணர்வுக்கும், மூளை நரம்பில் நடக்கும் ரசாயன மாற்றங்களே
காரணம். அந்த உணர்வுகள், மனநலத்தில் மட்டுமல்ல, உடல்நலத்திலும் தாக்கத்தை ஏற்படுத்தும்.நேர்மறை உணர்வுகள், மனதையும், உடலையும்
இலகுவாக்கி,
உடலுறுப்புகளின்
ஆரோக்கியத்தை பாதுகாக்கும். எதிர்மறை உணர்வுகளோ, மன அழுத்தத்தை கொடுத்து, உடல் நலன், மனநலனை
பாதிக்கும்.'ஒரு நாளில் வாய்விட்டு
சிரிப்பதுடன், நகைச்சுவை உணர்வுடனும் இருப்பவர்களுக்கு, அன்று இரவு
நிம்மதியான உறக்கம் வரும்' என்கிறது ஆய்வு. அதேபோல், எப்போதும் அதிக பதற்றத்துடன்
இருப்பவர்களுக்கு, இதயத் துடிப்பும் அதிகமாக இருக்கும் என்பதால், உயர் ரத்த
அழுத்தம் ஏற்பட வாய்ப்பு அதிகம்.-சோகத்தை, அழுகை அல்லது பிறரிடம் பேசுவதன் மூலம் வெளிப்படுத்தாமல்
தேக்கி வைத் தால், உடலுக்குள் அது தேங்கி, மன அழுத்தத்துக்கான ரசாயன மாற்றங்களை
அதிகரிக்கும். மன அழுத்தத்துக்கு உள்ளாகும் பலருக்கு உடல் வலி, கழுத்துவலி, சோர்வு ஆகிய
அறிகுறி இருக்கும்.'அதிகமாக கோபப்படுபவர்கள், தினமும் சண்டை போடுபவர்கள், அதிகமாக
வாக்கு வாதம் செய்பவர்களுக்கு, பொதுவாக, நோய் குணமாவதற்கான திறன், உடலில் குறைவாக இருக்கும்' என, ஆய்வுகளில்
கண்டறியப்பட்டுஇருக்கிறது. ஒருவரின் அன்பை உணரும்போது, மகிழ்ச்சிக்கான, 'ஹார்மோன்' உடலில்
அதிகரிக்கும். அப்போது, மூளை உள்ளிட்ட பிற உடலுறுப்புகளின் செயல்பாடு ஆரோக்கியமாக
இருக்கும்;
உடலும், மனமும்
எப்போதும் விழிப்புணர்வுடனும் இருக்கும்.ஏதோ காரணத்துக்காக தீவிர பயத்துக்கு
உள்ளானவர்களுக்கு, உடலில் தானாகவே மன அழுத்தத்துக்கான ஹார்மோனின் உற்பத்தி
அதிகரிக்கும். இது, கல்லீரல், இதயம், சிறுநீரகத்தில் தாக்கத்தை வெளிப்படுத்தும். அதனால், அந்தந்த
உறுப்புகள் சார்ந்த நோய் ஏற்படவும், ஏற்கனவே இருக்கும் நோய் தீவிரமாகவும் வாய்ப்பு அதிகம்.ஒரு
நாளை எடுத்து கொண்டால், அன்று முழுக்க மகிழ்ச்சியாகவோ அல்லது துக்கமாகவோ இருப்போம்
என்று கூற முடியாது. காலையில் மகிழ்ச்சியாகவும், மதியம் சோகத்திலும், மாலையில்
பயத் திலும் சிக்கி தவிக்கலாம். நேர்மறை உணர்வுகள் மட்டுமன்றி, எதிர்மறை
உணர்வுகளும் அவ்வப்போது வந்து போவது, மனித உடலில் அன்றாடம் நடக்கும் சாதாரண நிகழ்வே. ஆனால், எதிர்மறை
உணர்வுகளின் அளவு அதிகரித்தாலோ, அவை நீடித்தாலோ தான் பிரச்னைகள் துவங்கும். எனவே, எத்தகைய
எதிர் மறை உணர்வுகளையும் நீடிக்கவிட வேண்டாம்.