உங்கள் வருகைக்கு நன்றி

புதன், 20 மார்ச், 2019


வான்கோழி வளர்ப்பில் வருமானம் ஈட்டி வரும், திருவண்ணாமலை மாவட்டத்தைச் சேர்ந்த, சாலமன்: கல்லுாரி படிப்பை முடித்து, அப்பாவுக்கு ஓய்வு கொடுத்து, 4 ஏக்கரில், நெல், நிலக்கடலை என, சாகுபடி செய்து வந்தேன். அதே நேரத்தில், தரிசு நிலத்தில் நாட்டுக் கோழிகளை வளர்த்து, முட்டைகளை உற்பத்தி செய்ய நினைத்தேன்.அதற்காக, பல பண்ணைகளை பார்த்த போது தான், வான்கோழி பற்றி தெரிந்தது. தமிழகத்தில் அந்தளவு வான்கோழி பண்ணைகள் இல்லாததால், இதில் இறங்க முடிவு செய்தேன். அண்ணனுடன் சேர்ந்து, தரிசு நிலத்தை சீர்ப்படுத்தி, வான்கோழி பண்ணை ஆரம்பித்தோம்.ஆரம்பத்தில், ஒரு மாதமான, 550 வான்கோழி குஞ்சுகளை வாங்கி வந்து வளர்த்தோம். ஒரு மாத குஞ்சுகளை வாங்கினால், இறப்புகள் அதிகமாக இருக்காது. ஐந்தாறு மாதம் வளர்ந்தவுடன், ஆண் வான்கோழிகளை குறிப்பிட்ட அளவில் மட்டும் வைத்து, 300 வான்கோழிகளை விற்பனை செய்தோம். 15 கோழிகள், சண்டை மற்றும் வெப்பம் தாங்காமல் இறந்தன.இப்போது, 200 பெட்டை, 35 ஆண் வான்கோழிகள் உள்ளன. அத்துடன், 35 நிகோபாரி கோழிகளையும் வளர்த்து வருகிறோம்.வான் கோழிகள் எட்டு மாதத்தில், முட்டையிட ஆரம்பிக்கும். 30 மணி நேரத்துக்கு ஒருமுறை என, ஒரு வான்கோழியிலிருந்து, ஆண்டுக்கு, 60 முட்டை கிடைக்கும். இந்த முட்டைகளுக்கு, விற்பனை வாய்ப்பு அதிகம் இருக்கிறது.வான்கோழிகள் பொதுவாக அடை காப்பதில்லை என்பதால், 'இன்குபேட்டர்' கருவியில், முட்டைகளை வைத்து, குஞ்சுகளை வளர்க்க உள்ளோம். இரண்டாம் ஆண்டு கிடைக்கும் முட்டைகளுக்கு, குஞ்சு பொரிப்பு திறன் குறைவாக இருக்கும். எனவே, இந்த தாய்க்கோழிகளை, ஓராண்டு கழித்து, விற்பனை செய்து விடுவோம்.வான் கோழிகளுக்கு, 4 கிலோ சமச்சீர் உணவு கொடுத்தால், 1 கிலோ அதிகரிக்கும் என்பர். அதன்படி, தினமும் காலை, மக்காச்சோளம், தவிடு, அரிசி, கருவாட்டு துாளும்; மதியம், 'கோ-4, கோ5, சூப்பர் நேப்பியர்' மற்றும் அரைக்கீரை, பாலக்கீரை என, பசுந்தீவனங்களை கொடுக்கிறோம். மாலையில் மேய்ச்சலுக்கு அனுப்புவோம்.கொட்டகையில் எப்போதும் தண்ணீர் இருக்கும், தாகம் எடுக்கும் கோழிகள் தேவையான அளவு குடித்துக் கொள்ளும்.இறைச்சி மற்றும் முட்டை வாயிலாக, 2.49 லட்ச ரூபாய் வருமானம் கிடைத்தது. இதில், குஞ்சுகள் வாங்கியது, தீவனம், மருத்துவச் செலவு போக, 1.55 லட்ச ரூபாய் லாபம் கிடைத்துள்ளது.இப்போது, எங்களிடம் இருக்கும் வான் கோழிகளின் மதிப்பு, கிட்டத்தட்ட, 3 லட்ச ரூபாய்க்கு இருக்கும். இன்னும் ஓராண்டில், இந்த வான்கோழிகள் மூலமாக முட்டைகள் கிடைக்கும். அதெல்லாம் அப்படியே லாபம் தான்.தொடர்புக்கு: 89394 39480

கருத்துரையிடுக

  © Blogger template Leaving by Ourblogtemplates.com 2008

Back to TOP  

Blogger Widgets