உங்கள் வருகைக்கு நன்றி

டீன்-ஏஜ் பிள்ளைகளின் பெற்றோரா நீங்கள்?

சனி, 21 டிசம்பர், 2013


டீன்-ஏஜ் பிள்ளைகளின் பெற்றோரா நீங்கள்? உங்கள் குழந்தைகள் நீங்கள் சொல்வதை காது கொடுத்து கேட்பதில்லையா? நீங்கள் கோபப்பட்டால், உங்களை விட அவர்கள் அதிக டென்ஷன் ஆகின்றனரா? இந்த பிரச்சனையை சமாளிக்க சில எளிய வழிமுறைகள்... 

* உங்கள் குழந்தை பிறந்த போது, அதன் மீது எவ்வளவு அக்கறையும், பாசமும் காட்டினீர்களோ, அதே அளவு, இந்த பருவத்திலும் காட்ட வேண்டும். இது, அவர்களின் முக்கியமான பருவம். நல்லது எது, கெட்டது எது என்று தெரியாமல் அவர்கள் தங்களுக்குள்ளாக குழம்பி தவிக்கும் பருவம் இந்த டீன் ஏஜ்.. இந்த வயதில் அவர்களுடன் அன்பாக இருப்பது மட்டுமின்றி, தோழமையுடனும் பழகுங்கள். அப்போது தான், அவர்களது வீண் பயம், குழப்பம் போன்றவற்றை உங்களிடம் பகிர்ந்து கொள்ள முன்வருவர். ஏனெனில், இது, மன உளைச்சலுடனும், சோர்வுடனும் காணப்படும் பருவம். 


* உங்கள் பிள்ளைகள், நீங்கள் கூறுவதுபடி தான் செய்ய வேண்டும் என்று அவர்களை கட்டாயப்படுத்தாதீர்கள். உதாரணமாக, "இந்த உணவை தான் நீ சாப்பிட வேண்டும், இன்றைக்கு இந்த டிரஸ் தான் போட்டுக் கொள்ள வேண்டும்` என்பது போன்ற, அவர்களது சிறு சிறு விஷயங்களில் நீங்கள் தலையிடாதீர்கள். அவர்கள் உணர்ச்சிகளுக்கும், விருப்பங்களுக்கும் இடம் கொடுங்கள். இதற்கு, முதலில் நீங்கள் உங்களைத் தயார் செய்து கொள்ள வேண்டும். 


* இந்த டீன் ஏஜ் பருவத்தில் உள்ள அனைவருமே பொதுவாக, தங்கள் அழகு குறித்து கவலைப்படுவர். அதிலும், பெண்களை கேட்கவே வேண்டாம். எனவே, கண்ணாடி முன் நிற்கும் உங்கள் பெண்ணை, அனாவசியமாக திட்டாதீர்கள். சந்தேகக் கண் கொண்டு அவர்களைப் பார்க்காதீர்கள். இப்படி நீங்கள் நடந்து கொள்ளும் போது, அது அவர்களை எதிர்மறையாக சிந்திக்கத் தூண்டும். எனவே, உங்களை நீங்கள் மாற்றிக் கொள்ளுங்கள். 


* குழந்தைகளின் மன நிலையை புரிந்து கொள்ளுங்கள். முடிந்த வரை அவர்களிடம் அன்பாக இருங்கள். டீன் ஏஜ் பருவத்தில் இருக்கும் பிள்ளைகளிடம், கோபப்பட்டு உங்களால் எதையும் சாதிக்க முடியாது. அன்பால் மட்டுமே அவர்களை திருத்த முடியும். நீங்கள் கோபப்பட்டால், அவர்கள் டென்ஷன் ஆவர். உதாரணத்திற்கு, அவர்கள் குறைந்த மதிப்பெண் எடுத்தால், அவர்களை வாய்க்கு வந்தபடி திட்டுவதை நிறுத்துங்கள். இப்படி செய்வதால், அவர்களுக்கு, உங்கள் மீது மட்டுமின்றி, படிப்பின் மீதும் வெறுப்பு வரும். எனவே, நீங்கள் அவர்கள் படிப்பிற்காக ஆகும் செலவு பற்றியும், படிப்பின் அவசியத்தைப் பற்றியும் அன்பாக எடுத்துக் கூறுங்கள். 


* உங்கள் பிள்ளைகளின் நடவடிக்கையை அவர்கள் அறியாதவாறு கண்காணியுங்கள். சிலர், இந்த பருவத்தின் போது, சரியாக சாப்பிட மாட்டார்கள், தூங்க மாட்டார்கள். இது, டீன்-ஏஜ் வயதுள்ள அனைவரிடமும் காணப்படும் பொதுவான விஷயம். இதுகுறித்து, நீங்கள் கவலைப்பட வேண்டாம். என்றாலும், பிரச்னை அளவுக்கு அதிகமாக போகும் போது, மருத்துவரை அணுகுவது நல்லது.

கருத்துரையிடுக

  © Blogger template Leaving by Ourblogtemplates.com 2008

Back to TOP  

Blogger Widgets