உங்கள் வருகைக்கு நன்றி

வெளிநாடுகளுக்கு முருங்கை இலையை ஏற்றுமதி

புதன், 4 ஜூலை, 2018


வெளிநாடுகளுக்கு முருங்கை இலையை ஏற்றுமதி செய்து வரும், திருநெல்வேலி மாவட்டம், கடகுளம் கிராமத்தை சேர்ந்த டெல்சன்: 5 ஏக்கர் நிலத்தில், இயற்கை முறையில் முருங்கை போட்டுள்ளேன். இயற்கை விவசாயம் செய்யும், 30 ஏக்கர் முருங்கைத் தோட்டங்களை, கடந்தாண்டு குத்தகை எடுத்து, கீரை பறித்தோம். இந்தாண்டு, குத்தகையின்றி, அதே தோட்டங்களில் இருந்து, 1 கிலோ கீரை, 15 ரூபாய்க்கு வாங்கிக் கொள்கிறேன்.

ஒரு ஈர்க்கு முருங்கை இலையை பறித்து, ஒரு மணி நேரம் வைத்து, வேகமாக ஆட்டிப் பார்த்தால், இலை உதிரக்கூடாது. பறித்த இலைகளை தண்ணீர் தெளித்து, பாலித்தீன் கவரில் வைத்து, ஐஸ் பாக்சில், 24 மணி நேரம் வைப்போம். அப்போதும் இலைகள் வாடாமல், உதிராமல் இருக்க வேண்டும்.செடி முருங்கை கீரைகள், ஏற்றுமதிக்கு ஏற்றதல்ல; மர முருங்கை கீரை தான் பறிப்போம். பறித்த கீரைகளை பருத்தி துணியில் கட்டி, 'பேக்கிங்' கூடம் எடுத்து வருவோம். தார்பாலின் ஷீட்டில், தண்ணீர் தெளித்து கீரைகளை, அரை அடி உயரத்துக்கு அடுக்கி, லேசாக தண்ணீர் தெளிப்போம்.

அதன்பின், காய்ந்த மற்றும் பழுப்பு இலை, பூக்களை நீக்கி, 150 கிராம் அளவு, பாலித்தீன் கவருக்குள் வைத்து, ரப்பர் பேண்டு போடுவோம். அடுத்து, 65 லிட்டர் கொள்ளளவு கொண்ட தெர்மாகோல் பெட்டிகளில், மூன்று ஐஸ் கட்டிகளை வைத்து, அதன் மேல் தண்ணீர் உறிஞ்சாத பேப்பரை விரித்து, 25 கீரை பாக்கெட்டுகளை அடுக்குவோம். அதன் மேல் ஐஸ் கட்டி, 25 கீரை கட்டு, மூன்றாவது அடுக்காக, 10 கீரை கட்டு என, மேலேயும் ஐஸ் கட்டி வைத்து, ஒரு பெட்டியில், 60 கட்டு கீரை அடுக்குவோம்.
மாதத்தில், 10 நாட்கள் துபாய், எட்டு நாள் கத்தார், ஐந்து நாள் ஓமன், இரண்டு நாள், லண்டன் என, தினமும், 400 கிலோ முருங்கைக் கீரையை, வெளிநாடுகளுக்கு ஏற்றுமதி செய்து வருகிறேன். இவ்வாறு, 25 நாட்களில், 10 ஆயிரம் கிலோ முருங்கைக் கீரை ஏற்றுமதி வாயிலாக, நான்கு லட்ச ரூபாய் வருமானம் கிடைக்கிறது.
கீரை கொள்முதல், பறிப்பு, பேக்கிங் கூலி, வேன் வாடகை, விமான கட்டணம், தெர்மாகோல் பெட்டி, ஐஸ்கட்டி, மின் கட்டணம் அனைத்தும் சேர்த்து, 2.70 லட்சம் ரூபாய் செலவு போக, மாதம், 1.30 லட்சம் ரூபாய் வரை, லாபம் கிடைக்கிறது.
ஐரோப்பிய நாடுகளுக்கு ஏற்றுமதி செய்ய, கேரள மாநிலம், கொச்சின் பேக் ஹவுசுக்கு போய், சுங்கத்துறையிடம் அனுமதி வாங்க வேண்டியுள்ளது. இதனால், போக்குவரத்து நேரம், செலவு அதிகமாகிறது. 
தமிழகத்தின் விமான நிலைய பகுதிகளில், பேக் ஹவுசை கொண்டு வந்தால், ஏற்றுமதியாளர்களுக்கு வசதியாக இருக்கும்; ஏற்றுமதியை அதிகப்படுத்தவும் முடியும். அந்த வசதி கிடைத்தால், நானே, 100 பேருக்கு வேலை கொடுக்க முடியும். அந்தளவு முருங்கைக்கீரைக்கு தேவையுள்ளது.

தொடர்புக்கு: 90806 60084.

கருத்துரையிடுக

  © Blogger template Leaving by Ourblogtemplates.com 2008

Back to TOP  

Blogger Widgets